Saturday, April 19, 2025
முகப்புசெய்திஇந்தியாகுடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு !

குடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு !

குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்படுவது குறித்து, கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளது சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம்.

-

குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டால் இந்தியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்கவும்: அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு !

குடியுரிமை திருத்த மசோதா தவறான திசையில் ஒரு ஆபத்தான திருப்பத்தை அடைந்திருப்பதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (US Commission on International Religious Freedom – USCIRF) தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஆணையம், மசோதாவின் மத அளவுகோல் ‘ஆழ்ந்த கலக்கத்திற்குரியது’ என்று கூறியுள்ளதுடன், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பது குறித்து அமெரிக்க அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்படுவது குறித்து கடுமையான அதிருப்தியை தெரிவித்து யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “புலம்பெயர்ந்தோருக்கான குடியுரிமைக்கான பாதையை குடியுரிமை சட்ட திருத்த மசோதா வகுக்கிறது. ஆனால், முசுலீம்களை விலக்கி, மதத்தின் அடிப்படையில் குடியுரிமைக்கான சட்ட அளவுகோலை அமைக்கிறது. குடியுரிமை சட்ட திருத்தம் என்பது தவறான திசையில் ஒரு ஆபத்தான திருப்பம்; இது மதச்சார்பற்ற பன்மைத்துவ இந்தியாவின் வளமான வரலாறு மற்றும் சட்டத்தின் முன் சமத்துவத்தை உறுதி செய்யும் இந்திய அரசியலமைப்பை எதிர்ப்பதாக உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட சட்ட திருத்தத்தின்படி, டிசம்பர் 31, 2014 வரை மத ரீதியான துன்புறுத்தல்களை எதிர்கொண்டு பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் சட்டவிரோத குடியேறியவர்களாக கருதப்பட மாட்டார்கள். அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் . ஆனால், இந்த மசோதா முஸ்லிம்களை புறக்கணிக்கிறது.

சர்வதேச மத சுதந்திரம் குறித்த மத்திய அமெரிக்க ஆணையம், தற்போது நடைபெற்று வரும் தேசிய குடிமக்களின் பதிவு (NRC) செயல்முறையோடு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவும் கொண்டுவருவது மில்லியன் கணக்கான முஸ்லிம்களின் குடியுரிமையை நீக்கும் என்பதோடு, ‘மத சோதனை’யாக இது அமையும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறியுள்ளது.

“அசாமில் நடந்து வரும் தேசிய குடிமக்கள் பதிவு (என்.ஆர்.சி) மற்றும் உள்துறை அமைச்சர் முன்மொழிய விரும்பும் தேசிய அளவிலான என்.ஆர்.சி ஆகியவற்றுடன் இணைந்து, இந்திய அரசு குடியுரிமைக்கான ஒரு மத சோதனையை உருவாக்குகிறது என்று USCIRF அஞ்சுகிறது, இது மில்லியன் கணக்கான முஸ்லிம்களிடமிருந்து குடியுரிமையை பறிக்கும்.”

படிக்க:
கார்கில் போர் வீரரை சட்டவிரோதக் குடியேறியாக்கி கைது செய்த மோடி அரசு !
♦ குடியுரிமை சட்ட திருத்த மசோதா : பரவும் போராட்டம் – கொதிப்பில் வடகிழக்கு !

மத பன்மைவாதம்தான் இந்தியா மற்றும் அமெரிக்காவின் அஸ்திவாரங்கள் என ட்விட்டரில் பதிவிட்டுள்ள USCIRF “குடியுரிமைக்கான எந்தவொரு மத சோதனையும் இந்த மிக அடிப்படையான ஜனநாயகக் கொள்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது” என்றும் அது தெரிவித்துள்ளது.

திங்களன்று மக்களவையில் சர்ச்சைக்குரிய மசோதாவை அறிமுகப்படுத்திப் பேசிய அமித் ஷா, ‘1947 ஆம் ஆண்டில் காங்கிரஸ் மதத்தின் அடிப்படையில் நாட்டை பிரித்ததால் பாஜக இந்த மசோதாவை கொண்டு வந்ததாக’ அபத்தமான காரணம் கூறினார்.

சர்வதேச சமூகம் மட்டுமல்ல, நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பினாலும்கூட பாசிச அரசு தனது நீண்ட நாள் ‘அகண்ட பாரத’ கனவை கைவிடாது என்பதையே அமித் ஷாவின் பேச்சு உணர்த்துகிறது.


கலைமதி
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்.