Saturday, April 19, 2025
முகப்புசெய்திஇந்தியாகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : பரவும் போராட்டம் - கொதிப்பில் வடகிழக்கு !

குடியுரிமை சட்ட திருத்த மசோதா : பரவும் போராட்டம் – கொதிப்பில் வடகிழக்கு !

அரசு அதிகாரத்தை எதிர்த்துப் போர் புரிவதில் முன்னணியில் நிற்கும் வட கிழக்கு மாநிலத்தினருக்கு இந்த மசோதா மூலம் சவால் விட்டிருக்கிறது மத்திய அரசு !

-

குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் அமித்ஷா நிறைவேற்றியுள்ளதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அதற்கு எதிராகக் கடுமையான போராட்டங்கள் எழுந்துள்ளன.

குடியுரிமை திருத்த மசோதா -2019,  டிசம்பர் 9, 2019 அன்று மக்களவையில் அமித்ஷாவால் அறிமுகப்படுத்தப்பட்டது. பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முசுலீம் அல்லாத மதச் சிறுபான்மையினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்கிறது இந்த மசோதா.

அதாவது இந்நாடுகளைச் சேர்ந்த இந்து, சீக்கிய, பௌத்த, ஜைன, பார்சி மற்றும் கிறித்துவ சமூகத்தினர் மதரீதியான ஒடுக்குமுறையைச் சந்திக்கும் பட்சத்தில், அவர்கள் டிசம்பர் 31, 2014-க்குள் இந்தியாவிற்குள் வந்திருந்தால், அவர்களை சட்டவிரோதக் குடியேறிகளாக கருதாமல் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க தற்போது கொண்டுவரப்படும் இந்த சட்டத் திருத்தம் ஆவன செய்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இந்தச் சட்ட திருத்தத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்திய ஒன்றிய முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்னர் போராட்டம் நடத்தினர். அனைத்து இந்திய ஒன்றிணைந்த ஜனநாயக முன்னணியைச் (AIDUF) சேர்ந்தவர்கள் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அஸ்ஸாம் மாநில தூப்ரி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும் AIDUF கட்சியைச் சேர்ந்தவருமான பத்ருதின் அஜ்மல் “இந்த மசோதா இந்தியா என்ற கருத்தாக்கத்திற்கு எதிரானது. இந்த மசோதாவை நாங்கள் நிராகரிக்கிறோம். இது இந்திய அரசியல்சாசனத்துக்கும் இந்து – முஸ்லீம் ஒற்றுமைக்கும் எதிரானது”  என்று தெரிவித்தார்.

வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மிசோராம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் இன்று காலை 5 மணி முதல் மாலை 4 மணி வரை 11 மணிநேரக் கடையடைப்புக்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த 5 மாநிலங்களிலும் படையினரைக் குவித்திருக்கிறது அரசு.

படிக்க:
குடியுரிமை சட்ட திருத்த மசோதா : முசுலீமாக மாறுவேன் – செயல்பாட்டாளர் ஹர்ஸ் மந்தர்
குடிமக்கள் மசோதா நிறைவேறினால் இந்தியாவிலிருந்து அசாம் வெளியேறும் : விவசாயிகள் எச்சரிக்கை

காங்கிரஸ் கட்சி, அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, அனைத்து அஸ்ஸாம் மாணவர்கள் சங்கம், க்ரிஷக் முக்தி சங்ராம் சமிதி, அனைத்து அருணாச்சலப்பிரதேச மாணவர் சங்கம், காசி மாணவர் சங்கம் மற்றும் நாகா மாணவர் கூட்டமைப்பு ஆகிய அமைப்பினர் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆதரிக்கின்றனர். இவர்கள் தவிர இடது சாரி அமைப்புகளான SFI, DYFI, AIDWA, AISF, AISA மற்றும் IPTA ஆகிய அமைப்புகள், அஸ்ஸாமில் 12 மணிநேர பந்த்-ற்கு அழைப்பு விடுத்துள்ளன. அசாமில் உள்ள கவுகாத்தி பல்கலைக்கழகம் மற்றும் திப்ருகர் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்கள் தங்களது தேர்வுகளைத் தள்ளி வைத்துள்ளன.

அரசு அதிகாரத்தை எதிர்த்துப் போர் புரிவதில் முன்னணியில் நிற்கும் வட கிழக்கு மாநிலத்தினருக்கு இந்த மசோதா மூலம் சவால் விட்டிருக்கிறது மத்திய அரசு! காஷ்மீர் போலே விசயத்தை ஆறப் போட்டு பொறுமையாக கையாள நினைக்கிறார் அமித் ஷா. வடகிழக்கு தனது முகத்தைக் காட்டத் தொடங்கியிருக்கிறது.


நந்தன்
செய்தி ஆதாரம் : டெலிகிராப் இந்தியா, நியூஸ் 18.