காவி மாணவர்கள் போராட்ட எதிரொலி : பணியை ராஜினாமா செய்தார் முசுலீம் பேராசிரியர் !
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத பேராசிரியராக நியமிக்கப்பட்ட ஃபெரோஸ் கானை பணியிலிருந்து நீக்கக்கோரி, இந்துத்துவ காவி மாணவர்கள் போராட்டம் நடத்திவந்த நிலையில், அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இராஜஸ்தானைச் சேர்ந்த பெரோஸ் கான், சிறு வயது முதலே இந்து பக்திப் பாடல்களைப் பாடுவதில் ஆர்வம் கொண்டவர். இதன் விளைவாக, சமஸ்கிருதத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்துள்ளதோடு, பி.எட்., பி.எச்டி. படிப்புகளையும் முடித்துள்ளார்.
நவம்பர் 7-ம் தேதி சமஸ்கிருத பேராசிரியராக நியமனம் பெற்றதிலிருந்து, காவி கும்பல் பெரோசுக்கு எதிராக போராட்டம் நடத்தியது; கல்லூரிக்குள் யாகம் நடத்தியது.

“இரண்டாம் வகுப்பு முதல் சமஸ்கிருதம் படித்து வருகிறேன். எங்கள் பகுதியில் 30 சதவீதம் முசுலீம்கள் இருக்கிறார்கள், ஒருவர்கூட இதைச் சுட்டிக்காட்டியதில்லை. இன்னும் சொல்லப்போனால், குரான் பற்றி பெரிதாக தெரியாது. ஆனால், சமஸ்கிருத இலக்கியத்தை நன்றாக அறிவேன். என் பகுதியில் உள்ள இந்துக்கள்கூட ஒரு முசுலீமாக இருந்துகொண்டு, சமஸ்கிருதத்தில் உள்ள புலமையைக் கண்டு புகழ்ந்திருக்கிறார்கள். என்னுடைய முழு வாழ்க்கையிலும் சமஸ்கிருதத்தை கற்றுக்கொண்டிருக்கிறேன். நான் முசுலீம் என்பதை ஒருபோதும் உணர்ந்ததில்லை. இப்போது கற்றுக்கொடுக்க முயற்சிக்கும்போது, இது பிரச்சினைக்குரிய விசயமாகியிருக்கிறது” என பேசியிருந்தார் அவர்.
ஒரு மாத காலம் தொடர்ந்து போராட்டம் என்ற பெயரில் மதவெறுப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக வேறு வழியில்லாமல் தனது பேராசிரியர் பணியை ராஜினாமா செய்துள்ளார் ஃபெரோஸ் கான். சமஸ்கிருத பிரிவிலிருந்து கலை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பனாரஸ் பல்கலைக்கழக ஊடக தொடர்பு பிரிவு தெரிவித்துள்ளது.
ஃபெரோஸ் கான் துரத்தப்பட்டதுபோல, ஃபெரோஸ் கானை ஆதரித்து பேசிய தலித் பேராசிரியருக்கு எதிராக சாதி காழ்ப்பை உமிழ்ந்துள்ளது காவி மாணவர் கும்பல்.
“என்னுடைய அலுவலகத்தில் அமர்ந்திருந்த மதிய நேரத்தில், வெளியிலிருந்து வந்திருந்த சிலருடன் சேர்ந்து மாணவர்கள் சிலர் எனக்கெதிராக முழக்கத்தை எழுப்பினர். இதில் பல மாணவர்கள் சேர்ந்துகொண்டு சாதிவெறியுடன் பேசினர். ஒருகட்டத்தில் என்னை தாக்கத் தொடங்கினர். அலுவலகத்திலிருந்து வெளியேறி ஓடி தப்பித்தேன். ஒரு மாணவர் என் மீது செங்கல்லை எரிந்தார், அதிலிருந்து தப்பினேன்” என தனக்கு நேர்ந்தது குறித்து பல்கலை நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார் பேராசிரியர் சாந்தி லால் சால்வி. வழக்கம்போல நிர்வாகம், புகார் கடிதத்தை விசாரித்து தக்க தண்டனை தரப்படும் என தெரிவித்துள்ளது.
படிக்க:
♦ முசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை நீக்கக் கோரி யாகம் வளர்க்கும் காவிகள் !
♦ ஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு ! | பாகம் – 1
மருத்துவம், கல்வி, கலை போன்ற பணிகளுக்கு யூதர்கள் வரக்கூடாது என ஹிட்லர் சட்டம் கொண்டுவந்தார். ஹிட்லர் வழியைப் பின்பற்றும் இந்துத்துவ பாசிஸ்டு அரசு, சட்டம் இயற்றும் முன் அதற்கான களத்தை தயார் செய்ய தனது காவி குண்டர்களைப் பயன்படுத்துகிறது.
முதலில் எதிப்பார்கள், பிறகு தொடர்புடையவர் வெறுத்து போய் ஒதுங்குவார்கள், அதன்பிறகு சட்டம் இயற்றப்பட்டு எதிர்ப்பது அதிகாரப்பூர்வ சட்டமாகும். முசுலீம்களை இரண்டாம் நிலை குடிமக்களாக்க இப்படியான வழிமுறைகளை கையாண்டு வருகிறது பாசிச அரசு. இன்னும் இது அனைவருக்குமான அரசு என சொல்லிக் கொள்வதை இந்த பாசிஸ்டுகளே ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
கலைமதி
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்.