அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 47

டியுர்கோ – அமைச்சர்

அ.அனிக்கின்

புர்போன் அரசர்கள் பிற்கால சந்ததியினருக்குச் சில பிரபலமான பொன்மொழிகளை விட்டுச் சென்றிருக்கின்றனர். “பாரிஸ் ஒரு பெரும் சொத்து” என்ற சொற்றொடரை நான்காம் ஹென்ரி சொன்னதாக ஒரு கதை சொல்லப்படுவதுண்டு. “நானே அரசு” என்று பதினான்காம் லுயீ சொன்ன பொழுது அவர் வரம்பில்லாத முடியாட்சியை ரத்தினச் சுருக்கமாக எடுத்துக் கூறினார். பதினைந்தாம் லுயீ அதைப் போலவே பிரபலமான, “எனக்குப் பிறகு ஊழிப் பெருவெள்ளம் பொங்கட்டும்” என்ற பொன் மொழியைச் சொன்னார். பதினாறாம் லுயீ ஒரு பொன் மொழியைக் கூட விட்டுச் செல்லவில்லை; சீக்கிரத்திலேயே அவர் சிரச்சேதம் செய்யப்பட்டது அதற்குக் காரணமாக இருக்கலாம், ஒருவேளை அவர் முட்டாளாக இருந்தது கூடக் காரணமாகலாம். மிராபோ (பிஸியோகிராட்டுகள் குழுவைச் சேர்ந்த பிரபுவின் மகன்) கேலியாகச் சொன்னது போல, பதினாறாம் லுயீயின் குடும்பத்திலிருந்த ஒரே ஒரு ஆண் மகன் அவர் மனைவியான மேரி அன்டுவனேட்தான்.

பதினைந்தாம் லுயீ 1774-ம் வருடம் மே மாதத்தில் அம்மை நோயினால் மரணமடைந்தார். அவருடைய ஆட்சிக் காலத்தின் கடைசி வருடங்களில் ஏற்பட்ட நிதித்துறை நெருக்கடியும் குரூரமான அடக்குமுறையும் குறிப்பிடத்தக்கவையாகும். சர்வாதிகாரியான அரசர் மரணமடைந்ததும்அவருக்குப் பிறகு ஒரு கொடுங்கோலர் ஆட்சி பீடத்திலேறினாலும் கூட- மிதவாதப் போக்குகள் வழக்கமாகத் தொடரும். பழைய அரசரின் மரணச் செய்தியைக் கேட்டதும் பிரான்ஸ் நாடு முழுவதுமே நிம்மதியைக் காட்டிப் பெருமூச்சு விட்டது. அவருடைய வாரிசுக்கு இருபது வயதாகியிருந்தது; அவர் கடுமையில்லாதவர், நெகிழ்ச்சியான சுபாவமுடையவர். ஆகவே இனி ”அறிவுயுகம்” தோன்றும், நம்முடைய கருத்துக்கள் நடைமுறைக்கு வரும் என்று தத்துவஞானிகள் நம்பினார்கள்.

டியுர்கோ முதலில் கடற்படை அமைச்சராகவும் அதற்குச் சில வாரங்களுக்குப் பிறகு நிதித் துறையின் பொதுப் பொறுப்பாளராகவும் மிகவும் உயர்ந்த பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட பொழுது இந்த நம்பிக்கைகள் வேரூன்றின. டியுர்கோ நாட்டின் உள்விவகாரங்கள் அத்தனைக்குமே நிர்வாகப் பொறுப்பை வகித்தார்.

பதினாறாம் லுயீ

டியுர்கோ தற்செயலாகவே அமைச்சரானார் என்று வழக்கமாகச் சொல்வதுண்டு. அவருடைய நண்பரான அபே ட விரி, மொரெபா சீமாட்டியிடம் சொன்னார்; அந்தச் சீமாட்டி தன் கணவனை வற்புறுத்தினாள்; அவள் கணவர் அரசருக்கு மிக நெருக்கமாக இருந்தார்; இதரவை. இவற்றில் ஓரளவுக்குத்தான் உண்மை உண்டு. அரண்மனைச் சூழ்ச்சியின் விளைவாகவே டியுர்கோவுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. அரசவையைச் சேர்ந்தவர்களில் சூழ்ச்சி மிக்கவரான மொரெபா டியுர்கோவின் நேர்மையும் செல்வாக்கும் பிரபலமடைந்திருந்த படியால் அவற்றைத் தன்னுடைய சொந்த நோக்கங்களுக்கு உபயோகித்துக்கொள்ள விரும்பினார். அவருடைய கருத்துக்கள், திட்டங்களைப் பற்றி அவருக்குச் சிறிதும் அக்கறை இல்லை.

ஆனால் இதுதான் முழுக்கதை என்று சொல்ல முடியாது. மாற்றம் அவசியம் என்பதை இதற்கு முன்பு எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு பிரான்ஸ் முழுவதுமே உணர்ந்தது. இதை உச்சியில் உட்கார்ந்து கொண்டிருந்த நிலப்பிரபுத்துவ மேன்மக்களும் கூடப் புரிந்து கொண்டார்கள். அரசவையிலிருந்த கும்பலோடு சம்பந்தமில்லாத, பொதுப் பணத்தை ஏப்பமிட்டதாகக் கெட்ட பெயர் வாங்காத ஒரு புது மனிதர் தேவைப்பட்டார். அந்த மனிதரைக் கண்டுபிடித்தார்கள் அவர்தான் டியுர்கோ, பிரான்சின் நிதி, பொருளாதாரத் துறைகளில் யுகக்கணக்காகக் குவிந்திருந்த குப்பைகளை அகற்றுகின்ற பெரும் பொறுப்பை மேற்கொண்ட பொழுது அது சுலபமான வேலை என்று டியுர்கோ நினைக்கவில்லை. அவர் விரும்பியே அந்தப் பொறுப்பை மேற்கொண்டார்; சிறிதும் தளர்ச்சியடையாமல் அந்தப் பணியைச் செய்தார். துணிச்சலான முதலாளித்துவச் சீர்திருத்தங்களைச் செய்கின்ற பாதையை அவர் பின்பற்றினார். மனிதனுடைய பகுத்தறிவு, முன்னேற்றம் என்ற கோணத்தில் பார்க்கும் பொழுது அவை அவசியமானவை என்று டியுர்கோ கருதினார்.

“பழைய ஆட்சியை ஒழித்த அறிவுத்துறையின் வீர புருஷர்களில் அவர் ஒருவர்”(1)  என்று மார்க்ஸ் டியுர்கோவைப் பற்றி எழுதினார்.

படிக்க:
நவீன வேதியியலின் கதை | பாகம் 02
♦ திராவிடம் | திமுக – அதிமுக | பஞ்சமி நிலம் | பாபர் மசூதி தீர்ப்பு | கேள்வி – பதில் !

அமைச்சர் என்ற முறையில் டியுர்கோ செய்தது என்ன? அவர் குறைந்த காலத்துக்கே பதவியிலிருந்தார், அந்தக் குறைவான காலத்திலும் ஏராளமான நெருக்கடிகள் அவருக்கு ஏற்பட்டன என்பதை நினைத்துப் பார்க்கும் பொழுது அவர் நம்ப முடியாத அளவுக்கு அதிகமானவற்றைச் செய்தார் என்று சொல்ல வேண்டும். ஆனால் நெடுந்தொலைவு நோக்கில் இறுதி முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் மிகக் குறைவாகவே சாதித்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அவருடைய தோல்விக்கே புரட்சிகரமான முக்கியத்துவம் இருந்தது. டியர்கோவைப் போன்ற ஒருவரால் கூட சீர்திருத்தங்களைச் செய்ய முடியவில்லை என்றால், இனிமேல் யாரும் சீர்திருத்தங்களைச் செய்ய முடியாது, புரட்சியால் தான் அது முடியும் என்ற முடிவுக்குத்தான் வர வேண்டும். எனவே டியுர்கோவின் சீர்திருத்தங்களிலிருந்து 1789-ம் வருடத்தில் பாஸ்டிலி கோட்டை தகர்க்கப் பட்டதற்கும் 1792-ம் வருடத்தில் டியுல்லரீ அரண்மனை முற்றுகையிடப்பட்டதற்கும் ஒரு நேர்கோட்டைக் காண முடியும்.

பிரான்சின் நிதி நிலைமையில் ஒழுங்கை ஏற்படுத்துவதை டியுர்கோ மிகவும் அவசரமான வேலையாகக் கருதி அதை முதலில் எடுத்துக் கொண்டார். அவருடைய நீண்ட காலத் திட்டத்தில் நிலவுடைமையிலிருந்து கிடைக்கின்ற வருமானத்துக்கு வரி விதிப்பது, வரிவேட்டையை ஒழிப்பது போன்ற தீவிரமான சீர்திருத்தங்கள் இடம் பெற்றிருந்தன. தன்னுடைய திட்டத்தைப் பொதுவான முறையில் எல்லோருக்கும் அறிவிக்க வேண்டுமென்று அவர் அவசரப்படவில்லை. ஏனென்றால் சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் அதற்கு எதிராக என்ன செய்வார்கள் என்பது அவருக்குத் தெரியும். அப்போதைக்கென்று தனிப்பட்ட சில சீர்திருத்தங்களைச் செய்வதில் அவர் அதிகமாகப் பாடுபட்டார்.

டியுர்கோ

வரிவிதிப்பு முறையிலிருந்த அப்பட்டமான கோளாறுகளையும் அநீதிகளையும் அகற்றுவதற்கும் தொழில்துறை, வர்த்தகம் ஆகியவற்றின் மீது விதிக்கப் பட்டிருந்த வரிச்சுமையைக் குறைப்பதற்கும் வரிவேட்டைக்காரர்கள் மீது அதிகமான நிர்ப்பந்தத்தைக் கொண்டு வருவதற்கும் அவர் பாடுபட்டார். மறுபக்கத்தில் வரவு செலவுத் திட்டத்தில் அரண்மனைச் செலவுகள் பிரதான இனமாக இருந்த காரணத்தால் அந்தச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கு முயற்சித்தார். அதன் விளைவாக, ஊதாரிச் செலவுகளைச் செய்து கொண்டிருந்த மேரி அன்டு வனேட்டின் சபலம், ஆத்திரம் ஆகியவற்றோடு அவர் வெகு சீக்கிரத்தில் மோதிக் கொள்ள நேர்ந்தது.

அவருடைய முயற்சிகளின் பலனாக வரவு செலவுத் திட்டத்திலும் அரசுக் கடன் வசதிகளிலும் இலேசான அபிவிருத்தி ஏற்பட்டது. ஆனால் அமைச்சரின் எதிரிகள் வேகமாகப் பெருகிக் கொண்டிருந்தனர், அவர்கள் அதிகமான சுறுசுறுப்போடு வேலை செய்யத் தொடங்கினார்கள்.

டியுர்கோ செய்த பொருளாதார சீர்திருத்தங்களில் தானியம், மாவு வியாபாரத்தில் வர்த்தக சுதந்திரத்தை ஏற்படுத்தியதும் இதற்கு முன்பிருந்த ஒரு அமைச்சரின் உதவியோடு சில சூழ்ச்சிக்காரர்கள் ஏற்படுத்திக் கொண்ட ஏகபோகத்தை ஒழித்ததும் முக்கியமாகும். இந்த சீர்திருத்தம் அடிப்படையில் முற்போக்கானதுதான்; எனினும் அதன் காரணமாகப் பெரும் நெருக்கடிகள் அவருக்கு ஏற்பட்டன. 1774-ம் வருடத்தில் அறுவடை மோசமாக இருந்தது . அதனைத் தொடர்ந்து வந்த வசந்த காலத்தின் போது தானிய விலை கணிசமாக அதிகரித்தது. சில நகரங்களில், குறிப்பாக பாரிசில் பொதுமக்கள் கலகம் செய்தார்கள்.

இந்தக் கலகங்களைப் பெருமளவுக்கு டியுர்கோவின் எதிரிகள் தூண்டினர், திட்டமிட்டு நடத்தினர் என்று நிரூபிக்க முடியாவிட்டாலும் அவ்வாறு நம்புவதற்குப் போதிய காரணங்கள் உண்டு. அவருடைய பதவிக்கு ஆபத்தை ஏற்படுத்துவது அவர்களுடைய நோக்கம். அமைச்சர் கலகங்களை உறுதியாக அடக்கினார். தங்களுடைய சொந்த நலன்கள் யாவை என்பது மக்களுக்குத் தெரியவில்லை, இந்த நலன்களை வேறு விதமான வழியில் தான் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்று அவர் கருதியிருக்கக் கூடும். இவைகளையெல்லாம் டியர்கோவின் எதிரிகள் அவருக்கு விரோதமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். இப்பொழுது மொரெபா அவருடைய எதிரிகளோடு இரகசியமாகச் சேர்ந்திருந்தார்; நாளாக ஆக அவர் டியுர்கோவைக் கண்டு அதிகமாக அஞ்சினார், அதிகமாகப் பொறாமைப்பட்டார்.

எனினும் டியுர்கோ சிறிது கூடத் தயங்காமல் காரியங்களைத் தொடர்ந்தார். 1776-ம் வருடத் தொடக்கத்தில் அவருடைய பிரபலமான ஆறு ஆணைகளுக்கு அரசருடைய ஒப்புதலைப் பெற்றார்; இதற்கு முன்பு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எல்லாவற்றையும் விட இவை நிலப்பிரபுத்துவத்தின் அஸ்திவாரத்தைத் தகர்த்தன. அவற்றில் விவசாயிகள் கட்டாயமாகச் சாலை அமைக்கும் முறையை ஒழித்ததும், தனிச் சலுகைகளைக் கொண்ட நிறுவனங்களான வர்த்தக, கைவினைஞர்கள் சங்கங்களை ஒழித்ததும் முக்கியமான இரு நடவடிக்கைகளாகும்.

படிக்க:
பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு | ராஜு – கருணானந்தன் – முத்துகிருஷ்ணன் உரை | காணொளி
♦ சிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46

இரண்டாவது ஆணை தொழில் துறை மற்றும் முதலாளித்துவத் தொழில் அதிபர்களின் வேகமான வளர்ச்சிக்கு மிகவும் அவசியமென்று டியுர்கோ கருதினார்; அது நியாயமானதே. இந்த ஆணைகளுக்குக் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது; அந்த எதிர்ப்பின் மையமாகப் பாரிஸ் நாடாளுமன்றம் இருந்தது. இவற்றைப் பதிவு செய்வதற்கு நாடாளுமன்றம் ஒத்துக் கொண்டால்தான் அவை சட்டமாக முடியும். இந்தப் போராட்டம் இரண்டு மாதங்களுக்கு மேல் நடைபெற்றது. மார்ச் மாதம் 12-ம் தேதியில் டியுர்கோ அவற்றைப் பதிவு செய்வதில் வெற்றி பெற்றார்; அந்த ஆணைகள் சட்டமாயின.

அது மாபெரும் முயற்சிக்குப் பிறகு கிடைத்த சிறு வெற்றியே. பழைய ஆட்சிமுறைக்கு ஆதரவான சக்திகள், அரசவைக் கும்பல், திருச்சபையின் மேல்தட்டினர், பிரபுக்கள், நீதித் துறையினர், தொழில் நிறுவன முதலாளிகள் அனைவரும் சீர்திருத்தங்களில் குறியாக இருந்த அமைச்சருக்கு எதிராகத் திரண்டெழுந்தனர்.

டியுர்கோ கொண்டுவந்த சீர்திருத்தங்களின் ஜனநாயகத் தன்மையை மக்கள் ஓரளவுக்குப் புரிந்து கொண்டனர். எல்லோராலும் வெறுக்கப்பட்ட கூலி இல்லாமல் சாலை அமைக்கும் கட்டாய முறையிலிருந்து விடுதலையடைந்த விவசாயிகள் அதிகமாக மகிழ்ச்சியடைந்தனர், ஆனால் அவர்களுக்கு டியுர்கோவின் பெயர் கூட அநேகமாகத் தெரியாது. பாரிஸ் நகரத்தில் எழுதப் படிக்கத் தெரிந்த கைவினைஞர்களும் கைத்தொழிற் பயிற்சியாளர்களும் ஆனந்தமடைந்தனர்; டியுர்கோவைப் புகழ்ந்து பாட்டுக்களை எழுதினார்கள். ஆனால் மக்கள் வெகு தூரம் கீழேயிருந்தார்கள், எதிரிகளோ டியர்கோவுக்குப் பக்கத்திலேயே இருந்தார்கள்.

டியுர்கோவை ஆத்திரமாகக் கண்டனம் செய்த பிரசுரங்களும் ஏளனம் செய்த பாடல்களும் கேலிச் சித்திரங்களும் வெள்ளம் போல வெளிவந்தன, அவற்றில் பாரிஸ் நகரமே மூழ்கியது. டியர்கோவை ஆதரித்துக் கைவினைஞர்கள் எழுதிய உற்சாகமான பாடல்களையும் பிஸியோகிராட்டுகள் எழுதிய செய்முறைக் கட்டுரைகளையும் இந்த வெள்ளம் அடித்துக் கொண்டு போனது. நையாண்டிப் பாடல்களை எழுதியவர்கள் டியர்கோவைச் சில சமயங்களில் பிரான்சின் கெடுதலான மேதை என்றும் சில சமயங்களில் என்ன செய்வதென்று புரியாத, செய்முறை அனுபவமில்லாத தத்துவஞானி என்றும் சில சமயங்களில் “பொருளியலாளர்கள் குழுவின்” கைகளில் அகப்பட்ட பொம்மை என்றும் சித்தரித்தார்கள். டியுர்கோ நேர்மையானவர், எத்தகைய ஊழலும் செய்யாதவர் என்பவற்றை மட்டுமே அவர்கள் சந்தேகிக்கவில்லை. ஆனால் யாரும் அவற்றை ஒருக்காலும் சந்தேகிக்க மாட்டார்கள்.

மேரி அன்டுவனேட்

இந்த எதிர்ப்பு இயக்கம் முழுவதையும் அரண்மனைக் கும்பல் பண உதவி செய்து நடத்தியது. மற்ற அமைச்சர்களும் டியுர்கோவுக்கு எதிராகச் சதிகள் செய்தார்கள். அவரை பாஸ்டிலி சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று அரசி லுயீயிடம் வெறிகொண்டு கத்தினாள். அரசரின் சகோதரர் டியுர்கோவைப் பற்றி மோசமான அவதூறுகளைப் பரப்பியவர்களில் ஒருவர்.

இத்தகைய கொந்தளிப்புக்கு நடுவே டியுர்கோ தன்னந் தனியாக நின்றார்; உறுதியோடும் கௌரவத்தோடும் நின்றார். உண்மையான மாண்பும் அவலத் தன்மையும் சூழ்ந்து புகழோடு நின்றார்.

இனி அவர் வீழ்ச்சியடைவது தவிர்க்க முடியாததாகும். கடைசியில் பதினாறாம் லுயீ எல்லாத் திசைகளிலுமிருந்தும் வந்த வற்புறுத்தலை ஒத்துக் கொள்ள நேர்ந்தது. டியர் கோவை பதவியிலிருந்து விடுவித்திருப்பதை அவரிடம் நேரில் சொல்ல அரசருக்குத் துணிச்சல் கிடையாது. அந்த உத்தரவை அரண்மனை ஊழியர் மூலம் டியுர்கோவுக்குக் கொடுத்தனுப்பினார். 1776-ம் வருடம் மே மாதம் 12-ம் தேதியன்று இந்த சம்பவம் நடைபெற்றது. டியுர்கோ தொடங்கிய பல நடவடிக்கைகள் குறிப்பாக முன்னர் கூறப்பட்ட ஆணைகள்- சீக்கிரத்திலேயே முழுமையாகவோ, பகுதியாகவோ ரத்துச் செய்யப்பட்டன.

இதன் பிறகு அநேகமாக எல்லாக் காரியங்களுமே பழைய மாதிரியில் நடைபெற்றன. டியுர்கோவின் ஆதரவாளர்களும் அவரால் அரசாங்க வேலைகளுக்கு வந்த உதவியாளர்களும் அவரோடு சேர்த்து ஓய்வு கொடுக்கப்பட்டார்கள்; சிலர் பாரிசை விட்டே போக நேர்ந்தது. பிஸியோகிராட்டுகள், கலைக்களஞ்சியவாதிகளின் நம்பிக்கைகள் அழிந்தன.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

 (1)  K. Marx, F. Engels, Werke, Bd. 15, Berlin, 1969, S. 375.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க