ஆடம் ஸ்மித் : 18-ம் நூற்றாண்டு பொருளாதாரச் சிந்தனையின் உயர்ந்த சிகரம்
டியுர்கோவுக்கு பின்னர் அரசியல் பொருளாதாரத்தில் ஆடம் ஸ்மித் எனும் ஸ்காட்லாந்து அறிஞர், தடம் பதிக்கிறார். அவர் முதலாளித்துவ சமூகத்தின் உள்ளமைப்பை ஊடுருவிப் பார்க்க முயற்சி செய்தார்
டியுர்கோவுக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லை. ஆனால் அவர் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு வந்தார். அவருக்கு ஏற்பட்டிருந்த வாதநோய் அதிகமான வேதனையை ஏற்படுத்தியது. அவர் இருபது மாதங்கள் பதவியிலிருந்தார். அவற்றில் ஏழு மாதங்களைப் படுக்கையில் கழித்தார். ஆனால் அவருடையய வேலை சிறிதும் தடைப்படவில்லை, ஒரு நாள் கூட நின்றுவிடவில்லை.
அவர் படுக்கையிலிருந்தபடியே நகல் சட்டங்களையும் அறிக்கைகளையும் கடிதங்களையும் சொல்ல மற்றவர்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள். அவர் படுக்கையறையிலேயே அதிகாரிகளுக்குப் பேட்டியளித்தார், உதவியாளர்களிடம் உத்தரவுகளைத் தெரிவித்தார். சில சமயங்களில் அரசரின் தனி அறைக்குள் அவரை சோபா நாற்காலியில் வைத்துத் தூக்கிக் கொண்டு போவார்கள்.
அவர் தன்னுடைய நோயை அலட்சியமாகக் கருதினார். ஆனால் நோய் அவரைப் பிடிவாதமாகத் துன்புறுத்தி வந்தது. சில சமயங்களில் அவர் முட்டுக் கட்டைகளைப் பயன்படுத்தியே நடமாட முடிந்தது; அவர் தமது முட்டுக் கட்டைகளைப் பற்றி கிண்டலாகக் ”கால்கள்” என்று சொல்வதுண்டு. அவர் பதவியிலிருந்து ஓய்வு கொடுக்கப்பட்டுச் சரியாக ஐந்து வருடங்களுக்குப் பிறகு 1781 -ம் வருடம் மே மாதத்தில் ஈரல் நோயினால் மரணமடைந்தார்.
டியுர்கோ பதவியிலிருந்து கீழே இறக்கப்பட்டதையும் தம்முடைய சீர்திருத்தங்கள் கைவிடப்பட்டதையும் அமைதியோடு பொறுத்துக் கொண்டது அவருடைய நண்பர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவருடைய கடிதங்கள் தணிக்கையாவது பற்றிக் கூட அவர் கேலியாகப் பேசினார். பதவியிலிருந்து ஓய்வு கிடைத்தது ஒரு வகையில் அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது போலும். அவர் சப்ளை அதிகாரியாகவும் அமைச்சராகவும் சுமார் பதினைந்து வருடங்களைக் கழித்துவிட்டார். இந்தக் காலமுழுவதும் படிக்கவோ, விஞ்ஞான ஆராய்ச்சி செய்யவோ நண்பர்களைச் சந்திக்கவோ அவருக்கு ஓய்வு கிடையாது. இப்பொழுது அவருக்கு நேரம் கிடைத்தது. டியுர்கோ தன்னுடைய கடிதங்களில் இலக்கியத்தையும் இசையையும் விவாதிக்கிறார், பௌதிகத்திலும், வான இயலிலும் தான் செய்துவரும் ஆராய்ச்சிகளைப் பற்றி எழுதுகிறார்.
1778 -ம் வருடத்தில் பிரெஞ்சு இலக்கியப் பேரவையின் தலைவர் என்ற முறையில் அவர் தன்னுடைய புதிய நண்பரான பெஞ்ஜமின் பிராங்க்ளினைப் பேரவையின் உறுப்பினராக்கி கௌரவித்தார். புரட்சி செய்த அமெரிக்கக் குடியேற்றங்களின் தூதராக வந்த பிராங்க்ளினுக்காக வரிவிதிப்பதைப் பற்றிய குறிப்புகள் என்ற தமது கடைசிப் பொருளாதார நூலை எழுதினார். பிரெஞ்சு சமூகத்தின் மற்ற பகுதியினரைப் போலவே அவரும் இந்தக் காலகட்டத்தில் அமெரிக்க விவகாரங்களில் தீவிரமான அக்கறை எடுத்துக் கொண்டார். அட்லாண்டிக் மாகடலுக்கு அப்பால் ஏற்பட்டிருக்கும் புதிய குடியரசு நலிவுற்ற நிலப்பிரபுத்துவ ஐரோப்பாவில் செய்யப்பட்ட தவறுகளையும் குறைகளையும் தவிர்க்கக் கூடும் என்று மனமார்ந்த நம்பிக்கையோடு எதிர்பார்த்தார்.
டியுர்கோ.
அவருடைய பழைய நண்பரான ட அன்வில் கோமகள், திருமதி ஹெல்வெடியஸ் (காலஞ்சென்ற தத்துவஞானியின் விதவை) ஆகியோருடைய வரவேற்புக் கூடங்களுக்கு அவர் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தார். அங்கே அதிகமான சுதந்திரச் சிந்தனை கொண்டவர்களும் அறிவு இயக்கத்தினரும் கூடுவது வழக்கம். மனிதனின் பகுத்தறிவைப் போற்றிய இந்த மாமனிதரின் அறிவு கடைசிவரையிலும் கூர்மையாகவும் தெளிவாகவும் இருந்தது.
டியுர்கோ தன்னுடைய சொந்த வாழ்க்கையில் ஓரளவுக்குக் கடுகடுப்பாகவும் கவர்ச்சியற்றவராகவும் இருந்தார். அவரிடம் நெகிழ்ச்சி இல்லை; அளவுக்கு மீறி ஒரே நோக்கமுடையவராக இருந்தார் என்று அவரைக் குறை சொல்வதுண்டு. இதனால் அவரோடு தனிமுறையில் பழகுவது அவருக்கு நெருக்கமானவர்களுக்குக் கூட கடினமாக இருந்தது; அவரை நன்கு அறியாதவர்களுக்கோ அது அச்சமூட்டுவதாக இருந்தது.
அவர் மனிதர்களிடமுள்ள இரட்டை வேடத்தையும் சிந்தனையின்மையையும் முரண்பாட்டையும் கண்டு ஆத்திரமடைந்தார். டியுர்கோ அரசவைக்குரிய வழக்க மரபுகளை ஒரு போதும் கற்றுக் கொள்ளவில்லை. வெர்சேய் அரண்மனையைச் சேர்ந்தவர்கள் அவருடைய ஊடுருவிப் பார்க்கின்ற பழுப்பு நிறக் கண்கள், அகன்ற நெற்றி, மாண்பார்ந்த உருவம், அவருடைய தலையின் சமநிலை, ரோமாபுரிச் சிலையைப் போன்ற அவருடைய “வீறமைதியான” தோற்றத்தைக் கண்டு தடுமாற்றமடைந்தார்கள், மிகவும் அதிகமாக பயந்தார்கள் என்று அவருடைய வாழ்க்கை வரலாற்றாசிரியர் எழுதுகிறார்.
வெர்சேய் அரசவைச் சூழலுக்குள் அவர் பொருந்தவில்லை. அவரிடம் பல திறமைகள் இருந்தன, டாலைரான் வர்ணிக்கின்ற ஒரு திறமை அவரிடம் இல்லை. சிந்தனையை வெளிப்படுத்துவதற்கல்ல – அதை மறைப்பதற்கே மொழியை உபயோகிக்க வேண்டும் என்பது அந்தத் திறமை. அது அவரிடம் சிறிதும் கிடையாது.
அரசியல் பொருளாதாரத்தை நிறுவிய அறிஞர்களில் ஒருவரின் வாழ்க்கையோடு தொடர்புடைய இரண்டு விழாக்கள் சமீபத்தில் கொண்டாடப்பட்டன. 1973-ம் வருடத்தில் ஆடம் ஸ்மித்தின் 250வது பிறந்த தின விழாவும் 1976-ம் வருடத்தில் அவர் எழுதிய நாடுகளின் செல்வம் என்ற மாபெரும் புத்தகம் வெளியிடப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்ததும் கொண்டாடப்பட்டன. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த அந்த மாபெரும் அறிஞர் மீதும் பொருளாதார விஞ்ஞானத்தில் அவர் வகித்த அதிகச் சிறப்பான பாத்திரத்தின் மீதும் உலகத்தின் கவனம் திருப்பப்பட்டது.
விக்டோரியா காலத்தைச் சேர்ந்த ஆங்கிலப் பொருளியலாளரும் கட்டுரையாளருமான வா. பேஜ்காட் 1876-ம் வருடத்தில் பின் வருமாறு எழுதினார்: ”ஆடம் ஸ்மித்தின் அரசியல் பொருளாதாரத்தைப் பற்றி அநேகமாக முடிவில்லாத அளவுக்கு எழுதப்பட்டிருக்கிறது; ஆனால் ஆடம் ஸ்மித்தைப் பற்றி அநேகமாக எழுதப்படவில்லை. இத்தனைக்கும் அவர் மனிதப் பிறவிகளில் அதிகமான அளவுக்கு விசித்திரம் நிறைந்தவராக இருந்தார். மேலும், அவர் எப்படிப்பட்ட மனிதர் என்பதைப் பற்றி ஒன்றுமே தெரிந்து கொள்ளாமல் அவருடைய புத்தகங்களை அநேகமாகப் புரிந்து கொள்ள முடியாது”.(1)
இதற்குப் பிறகு ஆடம் ஸ்மித் பற்றிய ஆராய்ச்சி அதிகமாக வளர்ச்சியடைந்துவிட்டது என்பது உண்மையே. எனினும் 1948-ம் வருடத்தில் ஆங்கில நிபுணரான அ. கிரேய் பின்வருமாறு கூறினார்: “ஆடம் ஸ்மித் 18-ம் நூற்றாண்டின் ஒப்பற்ற மேதைகளில் தலை சிறந்தவர், 19-ம் நூற்றாண்டில் அவருடைய நாட்டிலும் அதற்கு வெளியேயுள்ள உலகத்திலும் வன்மையான தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்பதும் சுலபமாகப் புரிந்து கொள்ளக் கூடியதே. எனவே அவருடைய வாழ்க்கை விவரங்களைப் பற்றி நமக்கு மிகவும் குறைவான செய்திகளே தெரிந்திருப்பது ஓரளவுக்கு வியப்பைத் தருவதே…. அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதுபவருக்குச் செய்திகள் குறைவாகவே இருப்பதனால் ஆடம் ஸ்மித்தின் வாழ்க்கை என்ற பெயரில் அந்தக் காலத்தின் வரலாற்றை எழுத வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்படுகிறது. (2)
ஒவ்வொரு யுகமும் தன்னுடைய தேவைகளுக்கேற்ப மனிதனை உருவாக்குகிறது. முதலாளித்துவப் பொருளாதாரத்தின் நடைமுறை வளர்ச்சியால் நிர்ணயிக்கப்பட்ட இங்கிலாந்தின் அரசியல் பொருளாதாரம் தன் வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டியிருந்தது. அந்தக் கட்டத்தில் பொருளாதார அறிவை முறைப்படுத்திப் பொதுமையாக்குவது. ஒரு பொருளாதார முறையை உருவாக்குவது அவசியமாயிற்று. இந்தப் பணியை நிறைவேற்றுவதற்கு ஸ்மித் தனிப்பட்ட முறையிலும் அறிவுத்துறையிலும் மிகச் சிறந்த தகுதிகளைக் கொண்டிருந்தார்.
அவரிடம் சூக்குமமாகச் சிந்திக்கும் திறமையும் ஸ்தூலமான விஷயங்களைப் பற்றி கவர்ச்சிகரமாகப் பேசக் கூடிய ஆற்றலும் அதிர்ஷ்டவசமாக இணைந்திருந்தன; கலைக்களஞ்சியத்தைப் போன்ற விரிவான புலமையும் அறிவுத்துறையில் அதிகமான நேர்மையும் மனச்சான்றிலிருந்து இம்மியளவும் விலகாத தன்மையும் கொண்டிருந்தார்; மற்றவர்களுடைய கருத்துக்களை அதிகமான சுதந்திரத்தோடும் விமர்சனக் கண்ணோட்டத்தோடும் எடுத்தாள்கின்ற திறமையைக் கொண்டிருந்தார். அறிவுத்துறையிலும் பொது விவகாரங்களிலும் அவரிடமிருந்த ஒரு வகையான துணிச்சல் பேராசிரியர்களுக்குரிய நிதானம், ஒழுங்கு முறையோடு கலந்து வெளிப்பட்டது.
சாதாரணமாகவும் எளிமையாகவும் தோன்றுகின்ற ஆனால் மனிதனுக்கு மிகவும் அடிப்படையான நிகழ்வுகளின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதையும் விளக்குவதையும் பொருளாதார விஞ்ஞானம் சாத்தியமாக்குகிறது, அல்லது அவ்வாறு புரிந்து கொள்வதற்கு முயற்சிகளைச் செய்கிறது.
பணம் அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு ஆகும். அதைத் தன்னுடைய கைகளால் தொடாதவர்கள் அல்லது அது என்ன என்று தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் பணம் பல இரகசியங்களைக் கொண்டிருக்கிறது. பொருளியலாளர்களுக்கு இந்தப் பிரச்சினை முடிவில்லாத அளவுக்குப் பன்முகத் தன்மையைக் கொண்டதாகும்; இது இன்னும் பல வருடங்களுக்கு அவர்களுடைய கவனத்துக்கு உரியதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆடம் ஸ்மித் அன்றாடம் நடைபெறுகின்ற பொருளாதார நிகழ்வுகளைப் புத்தார்வக் கற்பனையோடு பார்க்கின்ற குறிப்பிடத்தக்க உணர்ச்சியைக் கொண்டிருந்தார். வாங்குவதும் விற்பனை செய்வதும், நிலத்தைக் குத்தகைக்கு விடுவதும் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதும், வரிகளைக் கட்டுவதும் உறுதிச் சீட்டுகளைக் கழிவோடு பெற்றுக் கொள்கின்ற எல்லா நடவடிக்கைகளுமே அவருடைய பேனாவில் ஒருவித விசேஷமான அர்த்தத்தையும் அக்கறையையும் பெற்றன.
அவற்றைப் புரிந்து கொள்ளாமல் ”கௌரவமான” மேல் வட்டாரங்களான அரசியல் மற்றும் அரசாங்கத் துறைகளில் நடப்பது என்ன என்பதைத் தெரிந்து கொள்ள முடியாது என்பது வெளிப்பட்டது. பைரனும் பூஷ்கினும் வாழ்ந்த காலத்தில் அரசியல் பொருளாதாரத்தின் மீது அதிகமான அக்கறை ஏற்பட்டதற்குக் காரணமே ஆடம் ஸ்மித் என்பது உண்மையாகும்.
ஸ்மித் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த தொழில்துறை முதலாளி வர்க்கத்தின் நலன்களை வெளிப்படுத்தினார், ஆனால் அவர் நிபந்தனையற்ற முறையில் அதற்காக ஒரு போதும் வாதாடவில்லை என்பது முக்கியமான அம்சமாகும். அவர் தன்னைப் பொறுத்தவரை, அறிவுத்துறையில் பாரபட்சமின்றி ஆராய்வதற்கும் சுதந்திரமான முடிவுகளுக்கு வருவதற்கும் முயற்சி செய்தார் என்பது மட்டுமல்லாமல், பெருமளவுக்கு அவற்றைச் சாதிக்கவும் செய்தார். இந்த குணாம்சங்களே அவர் ஒரு பொருளாதார முறையை உருவாக்குவதற்குத் துணை புரிந்தன. அவர் முதலாளித்துவ சமூகத்தின் உள்ளமைப்பை ஊடுருவிப் பார்க்க முயற்சி செய்தார் (3)
என்று மார்க்ஸ் ஆடம் ஸ்மித்தைப் பற்றி எழுதுகிறார். அவருடைய புத்தகம் மனிதகுலப் பண்பாட்டின் மகத்தான சாதனையாகும், 18-ம் நூற்றாண்டில் பொருளாதாரச் சிந்தனையின் உயர்ந்த சிகரமாகும்.
(தொடரும்…)
அடிக்குறிப்புகள் :
(1) Bageliot’s Historical Essays, N.-Y., 1966, p. 79. (2) A. Gray, Adam Smith, London, 1948, p. 3. (3) K. Marx, Theories of Surplus-Value, Part 1/1, Moscow, 1968, P. 165.
நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983