Saturday, April 19, 2025
முகப்புசெய்திஇந்தியா“போராட்டக்காரர்களை பார்த்தவுடன் சுட்டுத்தள்ளுங்கள்” : ரயில்வே அமைச்சர் !

“போராட்டக்காரர்களை பார்த்தவுடன் சுட்டுத்தள்ளுங்கள்” : ரயில்வே அமைச்சர் !

ரயில்வே இழப்புக்களை எதிர்கொள்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி, போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்றுவிட்டால் சரிசெய்துவிடலாம் என கூறியுள்ளார் .

-

‘பொது சொத்தை சேதப்படுத்துகிறவர்களை பார்த்தவுடன் சுட்டுத்தள்ளுங்கள்’ என மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமாக நடந்துவருகின்றன. இந்தப் போராட்டங்களின்போது ரயில்களுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அவர்களை கண்ட இடத்தில் சுடும்படி ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்.

“சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் ரயில்வே அதிகாரிகளை நான் கண்டிப்பாக எச்சரிக்கிறேன், ரயில்வே உள்ளிட்ட பொது சொத்துக்களை யாராவது அழித்தால், அமைச்சராக நான் ஆணையிடுகிறேன்; அவர்களை பார்த்தவுடன் சுட்டுத்தள்ளுங்கள்” என செய்தி முகமை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்காடி கூறியுள்ளார்.

மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்காடி.

மேற்கு வங்கம் மற்றும் பிற மாநிலங்களில் ரயில்வே இழப்புக்களை எதிர்கொள்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்றுவிட்டால் இழப்புகளை சரிசெய்துவிடலாம் என கூறியுள்ளார்.

நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கும் சில சமூக விரோத சக்திகளை, எதிர்க்கட்சிகள் ஆதரிப்பதாக அமைச்சர் குற்றம் சாட்டினார். புதிய சட்டம் எந்தவொரு குடிமகனுக்கும் தீங்கு விளைவிக்காது என்று அவர் கோடிட்டுக் காட்டினார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதே இந்த சட்டம் என்று அமைச்சர் கூறினார்.

“உள்ளூர் சிறுபான்மையினர், சில சமூகம் சேர்ந்து நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க தேவையின்றி பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றன. காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகளால் இது ஆதரிக்கப்படுகிறது. எனவே இதை நான் கண்டிக்கிறேன்”என்றார் அமைச்சர்.

“வல்லபாய் படேலைப் போல” எதிர்ப்பாளர்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.

பொருளாதார மந்தநிலை குறித்த செய்திகள் வெளியானபோது, ‘பொருளாதாரம் நன்றாக உள்ளது. விமான நிலையங்களும் ரயில்களும் நிரம்பியுள்ளன, மக்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள்’ என “திருவாய் மலர்ந்தவர்” இந்த அமைச்சர்தான்.

படிக்க:
’அறிவிக்கப்படாத அவசரநிலை’ : மாணவர்கள் மீது காவி போலீசின் தாக்குதல் !
♦ முசுலீம்களை மட்டுமல்ல இந்துக்களையும் செல்லாக்காசாக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் !

இப்போது, குடியுரிமை சட்டம் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. ஜாமியா பல்கலை மாணவர்களுக்கு எதிராக போலீசின் வெறியாட்டத்தைக் கண்டித்து, நாடு முழுவதும் உள்ள பல பல்கலைக்கழக வளாகங்கள் போராட்ட களமாகியுள்ளன.

டெல்லி போராட்டத்தின்போது பேருந்துகளுக்கு போலீசே தீ வைத்தது ஆதாரங்களுடன் வெளியான நிலையில்,போராட்டக்காரர்களை கண்டவுடன் சுட உத்தவிடுகிறார் மத்திய அமைச்சர். அசாமில் நான்கு பேரை சுட்டுக்கொன்ற இந்த அரசு அதையும் செய்யவே துணியும். ஆனால், சுட்டுக்கொல்வதன் மூலம் போராட்டங்களை நசுக்க முடியுமா?


அனிதா
நன்றி : இந்துஸ்தான் டைம்ஸ்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க