Saturday, April 19, 2025
முகப்புசெய்திஉலகம்அமித் ஷா-வே பதவி விலகு : 19 அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் !

அமித் ஷா-வே பதவி விலகு : 19 அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் !

“போலீசு மிருகத்தனத்தை தடுங்கள், உடனடியாக தேவையான நடவடிக்கை எடுங்கள் அல்லது ராஜினாமா செய்யுங்கள் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.”

-

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள், அலிகார் முசுலீம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட மிருகத்தனமான போலீசு வன்முறையைக் கண்டித்து, ஹார்வர்டு, யேல், கொலம்பியா, ஸ்டான்போர்ட் மற்றும் டஃப்ட்ஸ் உட்பட அமெரிக்காவில் உள்ள 19 பல்கலைக்கழகங்களின் 400 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

பெரும்பான்மையான இந்திய மாணவர்களைக் கொண்ட இந்த குழுவின் அறிக்கையில், “காவல்துறையினர் வன்முறையை நிறுத்தவும், பல்கலைக்கழக வளாகத்திலிருந்து அவர்கள் முழுமையாக விலகவும் நாங்கள் கோருகிறோம். அதைத் தொடர்ந்து பல்கலைக் கழகத்தில் காவல்துறையினரின் அப்பட்டமான அதிகாரத்தை துஷ்பிரயோகம் குறித்து முழுமையான மற்றும் சுயாதீனமான விசாரணையை நடத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.

இந்திய அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை தங்களுடைய அமைதியான ஆர்ப்பாட்டங்களைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

“ஊடகவியலாளர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் (இணையத்தில் பகிரப்பட்ட நம்பகமான தகவல்கள் உட்பட) ஆகியோர் தங்களுக்கு நேர்ந்த கொடூர மாணவர்களுக்கு எதிராக போலீசு மற்றும் துணை ராணுவத்தினர் மிக மோசமாக நடந்துகொண்டது தெரிகிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அசாமில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்தியதன் விளைவாக ஐவர் கொல்லபட்டதற்கும் மாணவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி இந்த ஆர்ப்பாட்டங்களை ‘கலவரங்கள்’ என்று குறிப்பிடுவதையும், எதிர்ப்பாளர்களின் உரிமைகள் மீறப்படுவதை அங்கீகரிக்காமல் காவல்துறையினரின் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினையாக நிலைமையை வகைப்படுத்துவதற்கும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.

“போலீசு மிருகத்தனத்தை தடுங்கள், உடனடியாக தேவையான நடவடிக்கை எடுங்கள் அல்லது ராஜினாமா செய்யுங்கள் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.” எனவும் அவர்களுடைய அறிக்கை கூறுகிறது.

இதற்கிடையில், நெதர்லாந்து, அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்திய சட்ட மாணவர்கள் குழு, 2019 குடியுரிமை (திருத்த) சட்டம் நிறைவேற்றப்பட்டதையும், அமைதியான போராட்டங்களுக்கு அரச வன்முறை மூலம் பதிலளித்ததையும் கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

படிக்க:
“இப்போதாவது எழுந்து நில்லுங்கள்” : அருந்ததி ராய் அறிக்கை !
’அறிவிக்கப்படாத அவசரநிலை’ : மாணவர்கள் மீது காவி போலீசின் தாக்குதல் !

இந்த அறிக்கையில் 700 -க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்கள்.

டிசம்பர் 15-ம் தேதி காவல்துறையினர் ஜாமியா மிலியா இஸ்லாமியா வளாகத்திற்குள் நுழைந்து நடத்திய வெறியாட்டத்தைக் கண்டித்துள்ள மாணவர்கள், “கருத்து வேறுபாடுகளைத் தடுக்கும் முயற்சிகளை நாங்கள் நிராகரிக்கிறோம். ஜனநாயகத்தின் ஆதரவாளர்களாக, வன்முறையை சட்ட அமலாக்கத்திற்கான பினாமியாகப் பயன்படுத்துவதை நாங்கள் கண்டிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

“முதலாவதாக, மதத்தின் அடிப்படையில் குடியுரிமை சலுகைகளுக்கு தகுதியுள்ள சட்டவிரோத குடியேறியவர்களை இது தேர்வு செய்கிறது, அது தானே அனுமதிக்க முடியாதது. இரண்டாவதாக, பட்டியலிடப்பட்ட நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினரை மதத்தின் அடிப்படையில் துன்புறுத்தலிலிருந்து பாதுகாப்பதாக இந்தச் சட்டம் கூறுகிறது.

ஆயினும், இந்த நியாயப்படுத்தலானது பாகிஸ்தானில் பெரும்பான்மை வன்முறையை எதிர்கொள்ளும் அஹ்மதியாக்கள் மற்றும் ஷியாக்கள் அல்லது பங்களாதேஷில் துன்புறுத்தப்படும் நாத்திகர்களை ஏன் விலக்குகிறது என்பதை இந்த சட்டம் முழுமையாகக் குறிப்பிடவில்லை. . ” என மாணவர்களின் அறிக்கை கேள்வி எழுப்புகிறது.


 கலைமதி
நன்றி : அவுட்லுக் இந்தியா.