திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள கிராம பகுதிகளில் விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுத்து நிறுத்தக்கோரி டிசம்பர்-17 அன்று உடுமலை வனச்சரக அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து உடுமலை பகுதியின் மக்கள் அதிகாரம் அமைப்பு இப்போராட்டத்தில் பங்கேற்றது.
சின்னமனூர் தொடங்கி உடுமலை வரையில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள வனவோரக் கிராமங்களில் வனவிலங்குகளால் ஏற்படும் விவசாய பாதிப்பு பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சினையாக நீடித்து வருகிறது.
”தொடர்ந்து நாங்கள் காட்டுப் பன்றிகளால் பெருத்த சேதத்தை சந்தித்து வருகிறோம். மாலை ஆறு மணி ஆனால் வயல்வெளிகளில் நூற்றுக்கணக்கான பன்றிகள் படையெடுத்து நிற்கின்றன. விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகிறோம். நாங்கள் எங்கள் பயிர்களை காப்பாற்ற ஏதாவது வேலி அமைத்தால், பன்றிகளைத் தாக்கினால் வனத்துறையினர் உடனடியாக எங்கள் மீது பொய் வழக்கு போடுகின்றனர். காட்டு பன்றிகளின் படையெடுப்பைக் கட்டுப்படுத்த வேண்டும் என பலமுறை புகார் கொடுத்தும் வனத்துறையினர் கண்டுகொள்ளவில்லை.” என்கின்றனர், இப்பகுதி விவசாயிகள்.

விவசாயிகள் தொடர்ச்சியாக போராடும்பொழுது, நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளிப்பதும் பெயருக்கு ஒரு சில கூண்டுகளை வைத்து பன்றிகளைப் பிடிக்கிறோம் என்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுப்பதுமாகத்தான் வனத்துறை இப்பிரச்சினையை அணுகி வருகிறது. நிரந்தர தீர்வு காணும் நோக்கில் வனத்துறையோ அரசோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முன்வருவதில்லை என்பதுதான் விவசாயிகளின் மிக முக்கியமான குற்றச்சாட்டாக இருக்கிறது. ஏற்கெனவே, விவசாயம் நலிவடைந்து வரும் சூழலில் அதனையும் சமாளித்து விவசாயம் செய்ய முற்பட்டால் வனவிலங்குகளால் பயிர்செய்ய செலவிட்ட பணத்தைக்கூட திரும்ப எடுக்க முடியாமல் நட்டத்தை சந்திக்க வேண்டியிருப்பதாகவும் கூறுகின்றனர்.
வனப்பகுதியில் வேட்டை மிருகங்களான புலி, கழுதைப் புலி, சிறுத்தை, செந்நாய் போன்ற விலங்கினங்கள் அழிந்து போனதால், காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை பல்மடங்கு பெருகியிருப்பதாகவும்; பல்வேறு காரணங்களால் வனத்திலுள்ள இயற்கை வளங்கள் அழிந்துபோனதால், உணவுத்தேவைக்காக மலையடிவாரங்களிலுள்ள விவசாய நிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் படையெடுத்து வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
படிக்க:
♦ மீண்டும் திறக்கப்படும் நோக்கியா ஆலை : தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கொடு !
♦ முசுலீம்களை மட்டுமல்ல இந்துக்களையும் செல்லாக்காசாக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் !
காட்டுப்பன்றிகள் மட்டுமின்றி, பெருங்கூட்டமாக படையெடுத்துவரும் மயில் போன்ற வனவிலங்குகளாலும் மலையடிவாரத்தில் பயிரிடப்படும் நிலக்கடலை, சோளம், மக்காசோளம் உள்ளிட்ட பயிர்களை பாதுகாக்க முடியாமல் விவசாயிகள் பெருத்த நட்டத்தை சந்தித்து வருகின்றனர். வனவிலங்குகளால் விவசாய நிலங்களில் பாதிப்பு ஏற்பட்டதை ஆதாரங்களுடன் முறையிட்டால், வனத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்ற நடைமுறை இருந்த போதிலும் பல்வேறு காரணங்களால் வனத்துறையினர் இழப்பீடு வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதாகவும் குற்றஞ்சுமத்துகின்றனர், விவசாயிகள்.
மிக முக்கியமாக, தமிழகத்தில் காட்டுப்பன்றிகள் வனவிலங்குகள் என்ற பட்டியலில் இடம்பெற்றிருப்பதால் விவசாய நிலங்களுக்குள் நுழைந்து நாசப்படுத்தும் காட்டுப்பன்றிகளிடமிருந்து தம்மை தற்காத்துக் கொள்ளும் நோக்கில்கூட அவற்றை விவசாயிகளால் தாக்கிவிட முடியாது. அவ்வாறு விவசாயிகளால் காட்டுப்பன்றிகள் தாக்கப்படும்பொழுது, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மீது வனப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் கொடுமையையும் சந்தித்து வருகின்றனர், வனவோர விவசாயிகள்.
மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் காட்டுப்பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதால், அவற்றால் பிரச்சினை ஏற்படும் போது விவசாயிகள் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுகின்றனர். ஆனால், இங்கே அது சட்டவிரோதம்.
இந்நிலையில்தான், “வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் நுழையாதவாறு வனத்துறையின் சார்பில் வேலி அமைக்க வேண்டும்; உணவுத் தேவைக்காக வனத்தை விட்டு வெளியேறும் நிலையை மாற்றுவதற்கு வனச்சூழலை பராமரிக்க வேண்டும்; வனவிலங்குகள் பட்டியலிலிருந்து காட்டுப்பன்றிகளை நீக்கவேண்டும்” என்ற விவசாயிகளின் தொடர் போராட்டத்தின் ஓர் அங்கமாக, உடுமலை வனச்சரகர் அலுவலக முற்றுகைப்போராட்டத்தை உடுமலை வட்டார விவசாயிகள் நடத்தியிருக்கின்றனர்.
தகவல்:
மக்கள் அதிகாரம்,
உடுமலை.