ஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு ! | பாகம் – 3
பட்டமளிப்புவிழா போராட்டம் காத்திருந்த அமைச்சர்
பல நாட்கள் துணை வேந்தருக்காகக் காத்திருந்த மாணவர்கள் இவர் பங்கேற்க இருந்த பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை இவரைச் சந்திப்பதற்கு ஒரு வாய்ப்பாகக் கருதினார்கள். ஜே.என்.யூ தொடங்கி முதல் இரண்டு ஆண்டுகளிலேயே பட்டமளிப்பு விழா கைவிடப்பட்டது. இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. முக்கியமாக, கல்வியில் பட்டம் என்பது அதை கொண்டாடுவதில் இல்லை. கற்ற கல்வியால் நாட்டிற்கும் சமுகத்திற்கும் ஆற்றும் பணி வெறும் காகிதமான பட்டத்தைவிடச் சிறந்தது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
அதுபோல் வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெறுவோருக்குப் பதக்கம் கொடுத்துக் கொண்டாடும் பழக்கமும் ஜே.என்.யூ-வில் இல்லை. ஒவ்வொருவருடைய சமூக, குடும்ப, பொருளாதார சூழ்நிலை, பள்ளிப் பருவ வாய்ப்புகள் அவர்கள் தங்கள் உயர்கல்வியில் அடையும் தரத்தையும் நிர்ணயிக்கின்றது. இந்நிலையில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கொண்டு மாணவர்களைத் தரம் பிரித்து கொண்டாடுவது சரியாகாது என்ற கருத்தும் நிலவிவந்தது.
இந்நிலையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட தற்போதைய துணைவேந்தர் பட்டமளிப்பு விழாவை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவந்ததோடு மட்டும்மல்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதைப் பெரும் கேலிக்கூத்தாகவும் கொண்டாடினார். இதுவரை மாணவரை சந்திக்காத துணைவேந்தர், மாணவர்களின் போராட்டத்திற்குப் பயந்து, இந்தாண்டு பட்டமளிப்பு விழாவை ஜே.என்.யூ-வுக்கு அருகாமையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி மன்றம் (all india council for technical education) கலைஅரங்கில் நடத்தினார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் போன்றோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

துணைவேந்தரைச் சந்திப்பதற்காக மாணவர்கள் இந்த அரங்கை முற்றுகையிடும் நடை பயணத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதனை அறிந்த நிர்வாகம் முன்கூட்டியே காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்ததனால், பல நூற்றுக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டு ஆங்காங்கு தடுப்பு அரண்களும் போடப்பட்டிருந்தன. பல்கலைக்கழத்தைவிட்டு அமைதியாக வெளிவந்த மாணவர்களை அதன் நுழைவாயிலிலேயே தடுத்து நிறுத்தினர். இத்தடைகளைத்தாண்டி, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டமளிப்புவிழா நடைபெறும் இடத்திற்கு வந்தபோது திரு.வெங்கையாநாயுடு தன் உரையை முடித்துக்கொண்டு ஏற்கெனவே விடைபெற்று இருந்தார். துணைவேந்தரும் அமைச்சரும் உள்ளிருந்தார்கள்.
பட்டம் வாங்கச் சென்ற முன்னாள் மாணவர்களும் உள்ளுக்குள்ளேயே தம் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். வெளிவர முடியாத சூழ்நிலையால், பல மணிநேரங்களுக்குப் பிறகு, காவலர்கள் இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர். துணைவேந்தர் தாம் மாணவர்களுடன் பேசத் தயாராக இல்லை என்று கூறியபோதிலும், அமைச்சர் மாணவப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்தை நடத்தி அவர்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று கூறியதால், அவர் அரங்கைவிட்டு வெளியே செல்ல முடிந்தது. அதன்பின், பலமணிநேரம் காத்திருந்த துணைவேந்தர், மாணவர்கள் அசந்து இருந்த நேரத்தில் காவலர் துணையுடன் ஓடி மறைந்தார். இது நடந்தது நவம்பர் மாதம் 11-ம் தேதி (2019) .
பாராளுமன்றம் நோக்கி நெடும் நடைபயணம்
இதன்பின், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக முழு ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தனர். இதுவரை மாணவர்கள் வழக்கமான வகுப்புகளை மட்டும் புறக்கணித்தனர், ஆனால் வகுப்புகள் வகுப்பறைகளுக்கு வெளியே நடைபெற்றன. வீட்டில் எழுதவேண்டிய கட்டுரைகள் போன்றவை ஈமெயில் மூலம் சமர்ப்பிக்கப்பட்டன. பெரும்பாலும் அனைத்துக் கல்வி தொடர்பான வேலைகளும் நடைபெற்றன. ஒத்துழையாமை இயக்கப் போராட்டம் அறிவித்தபிறகு இவை அனைத்தும் நிறுத்தப்பட்டன. துறை அலுவலகங்கள், ஆசிரியர்களின் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
படிக்க:
♦ ஜே.என்.யூ : விடுதி கட்டண உயர்வைக் கண்டித்து தேர்வு புறக்கணிப்பு !
♦ குடியுரிமைச் சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரத்தை நோக்கிய அடுத்த பாய்ச்சல் !
இந்நிலையில், நடப்பு பாராளுமன்றக் கூட்டம் தொடங்கியதால், மாணவர் அமைப்பு நாடாளுமன்றம் நோக்கிய நடைபயணத்திற்கு அழைப்பு விடுத்தது. என்றும் இல்லாத அளவிற்கு, பல்லாயிரம் மணவர்கள் கலந்துக்கொண்ட இந்தப் போராட்டம் காவலர்களின் காட்டுமிராண்டித்தனமான தடியடியுடன் நிறைவுக்கு வந்தது. ஆனால், ஜே.என்.யூ மாணவர்கள் கொண்டிருந்த உறுதியை, தியாகத்தை பார்த்து நாடே வியந்தது.
முன்புபோல், பலகட்ட காவல்துறை அரண்களைத் தாண்டி ஜேஎன்யுவுக்கும் பராளுமன்றத்திற்கும் இடையில் உள்ள ஜோர்பாக் என்ற இடம்வரை, மாணவர்கள் அமைதியாகச் சென்றடைந்தனர். அதற்குமேல் நகர முடியாத நிலையில் அங்கே அமர்ந்து போரட்டத்தைத் தொடர்ந்தனர். பெரும்பாலான மணவர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, டெல்லியில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். இதை அடுத்து சுமார் இரவு 8 மணிவாக்கில் காவல் துறையினர் மாணவர்கள் கூடியிருந்த வீதியின் தெருவிளக்கை அணைத்துவிட்டு தடியடியில் ஈடுபட்டுக் கூட்டத்தை கலைத்தனர்.
இதில் உடல் ஊனமுற்ற, பார்வையற்ற மாணவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். தொலைக்காட்சி ஊடகங்கள் இக்காட்சிகளை உலகம் முழுதும் எடுத்துச்சென்ற அதே வேளையில், அவற்றுள் சில இது தேசத்துரோகிகளின் போராட்டமென பொய்யுரை பரப்பின. இது நடந்தது நவம்பர் மாதம் 18-ம் தேதி (2019)
இருகுழுக்கள் வெவ்வேறு பரிந்துரைகள்
இதுவரை ஜேஎன்யூவில் நடைபெறும் இத்தகைய போராட்டங்களை ஒருசில மாணவர்கள் ஏற்படுத்தும் கூச்சல் என்று ட்விட்டர் மூலம் நாட்டிற்கு தெரிவித்துவந்த துணைவேந்தரின் கருத்தை இந்த நெடும் நடைபயணம் பொய்யென நிருபித்தது. இதன்பின், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஜேஎன்யூ கல்விக் கட்டணப் பிரச்சினையை விசாரித்து முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு முன்னாள் பல்கலைக்கழக மானியக்குழுத் தலைவர், வி.எஸ்.சவுகான் தலைமையில் ஒரு உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்தது.
இக்குழு, முதன்முறையாக ஒரு முறையான கலந்தாலோசனையை மேற்கொண்டு, மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள், ஆசிரியர் அமைப்பின் பிரதிநிதிகள் , ஜேஎன்யூ நிர்வாகத்தில் இருப்போர் போன்றோருடன் சந்தித்து அவர்களது கருத்துக்களைப் பெற்றது. வழக்கம்போல் துணைவேந்தர் இக்குழுவையும் சந்திக்க மறுப்புத் தெரிவித்துவிட்டார்.
உயர்மட்டக்குழு விசாரணையை முடித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஒருநாளுக்கு முன்பு, இக்குழுவின் பரிந்துரைகள் தமக்குச் சாதகமாக இருக்காது என அறிந்துக்கொண்ட நிர்வாகம், தம் ஆதரவாளர்களைக் கொண்டு மற்றொரு விசாரணைக் குழுவை அமைத்து ஒரு நாளில் தன் முடிவைத் தரவேண்டும் என வேண்டியது. மாணவர் அமைப்புடன் எவ்விதப் பேச்சு வார்த்தையும் இல்லாமல் வெறும் பெயரளவில் சிலரிடம் கருத்துக்கேட்டு முன்பு அறிவிக்கப்பட்ட திருத்திய கட்டணத்தில் நலிவடைந்த குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களுக்குக் கட்டணச் சலுகைகள் வழங்குமாறு இக்குழு பரிந்துரைத்தது. மாணவர்கள் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக்கோரி இக்குழுவின் பரிந்துரைகளை நிராகரித்தனர்.
இதற்கிடையில் அரசு அமைத்த உயர்மட்டகுழு தன் அறிக்கையை அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது. ஆனால், இந்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. சில செய்தித் தாள்கள் இக்குழு கல்வி மற்றும் விடுதி கட்டணங்களைத் திருத்தியதில் ஜேஎன்யூ நிர்வாகம் சரியான முறைகளைப் பின்பற்றவில்லை எனவும், எனவே கல்விக் கட்டண உயர்வு திரும்பிப் பெறப்பட வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகச் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
இதன்பின், மாணவர்களும் ஆசிரியர்களும் இந்த அறிக்கையை வெளியிடக் கோரி மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு முன்பு இருவேறு போராட்டங்களை மேற்கொண்டனர். மாணவர்களின் பிரதிநிதிகளைச் சந்தித்த அமைச்சகச் செயலர், ஆசிரியர்களுக்கு அந்த வாய்ப்பை அளிக்கவில்லை. இதற்கிடையில் திரு. தொல் திருமாவளவன், டாக்டர். ரவிக்குமார் உட்பட பல்வேறு கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர வேண்டி அமைச்சகத்திற்கு வேண்டுகோள் கொடுத்துள்ளனர்.
படிக்க:
♦ மோடி – அமித்ஷாவுக்கு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது : போராட்டக்களத்தில் பேசும் பதாகைகள் !
♦ “இந்த முறை உங்களால் எங்களைத் தடுக்க முடியாது” – அருந்ததிராய்
இறுதி கோரிக்கைகள்
இன்றைய நிலையில் மாணவர்களின் கோரிக்கை கீழ்கண்டவையாக இருக்கின்றன.
- உயர்மட்டக்குழு அறிக்கையை வெளியிட வேண்டும்.
- கல்விக் கட்டண உயர்வு மற்றும் புது விடுதி நெறிகள் முற்றிலுமாக கைவிடப்பட்டு, பின் முறையான நடைமுறைகளைப் பின்பற்றி இவை திருத்தப்பட்வேண்டும்.
- இதுவரை மாணவர் அமைப்பு பிரதிநிதிகளுக்கு கொடுக்கப்பட்ட பல்வெறு குழுக்களில் பங்கேற்பதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும்.
- நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று ஜே.என்.யூ மாணவர் அமைப்பை அங்கீகரிக்கவேண்டும்.
- சமூகத்தில் நலிவடைந்தோரின் நலனுக்கு எதிராக இருக்கும் புதியக் கல்வி கொள்கையைக் கைவிடவேண்டும்.
- நாட்டின் அனைவருக்கும் தரமான, எளிதில், குறைந்த செலவில் கிடைக்ககூடிய வகையில் பொதுக் கல்வி நிறுவனங்கள் பாதுகாக்கப்படவேண்டும்.
- கல்வியைத் தனியார் மயமாக்குதல் கைவிடப்படவேண்டும்.
- ஜே.என்.யூ அது இதுவரை பேணிப்போற்றி வந்த விழுமியங்களுடன் பாதுகாக்கப்படல் வேண்டும்.
- அதுபொருட்டு, ஜேஎன்யு-வை அழித்தொழிக்க நினைக்கும் இந்தத் துணைவேந்தர் பதிவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், மாணவர்கள் முழுத் தீவிரத்துடன் தம் போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
நிர்வாகக் கட்டிடம் மற்றும் நூல்நிலையம் இவற்றைத் தவிர்த்து ஏனைய கட்டிடங்களில் நுழைய ஆசிரியர்கள் உட்பட எவருக்கும் அனுமதி இல்லை. இந்தக் கடும் குளிரிலும், ஒவ்வொரு கட்டிடத்தின் நுழைவாயில்களிலும் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுழற்சி முறையில் அமைதியாக அமர்ந்துள்ளனர். இரவில் அங்கேயே படுத்துறங்குகின்றனர். மேலும், டிசம்பர் 4-ம் தேதி இரவு 10 மணிக்குத் தொடங்கி மறுநாள் கலை 7.30 மணிவரை நடைபெற்ற ஒரு நீண்ட பொதுக்குழுக் கூட்டத்தில் போரட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்றும், இந்தப் போராட்டத்தை எடுத்துச் செல்ல மாணவர் அமைப்புக்கு முழு உரிமையையும் வழங்குவதாகவும் தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர்.
இத்தோடு, பல்கலைக் கழகத்தின் வேந்தரான ஜனாதிபதியை சந்திப்பதற்கான ஒரு புதிய நடைப் பயணத்திற்காக 8-12-2019-க்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்தப் போராட்டத்தின் விளைவு என்னவாக இருக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
உலகப்போராட்டம்; ஒன்றிணையும் மாணவர் அமைப்புகள்
ஜே.என்.யூ மாணவர்களின் இந்தப் போரட்டம் உலகமெங்கும் பொதுக்கல்வி நிறுவனங்களைக் காக்கும் பொருட்டும், கல்விக் கட்டண உயர்வு, குறைந்த செலவிலான விடுதி வசதி, மற்றும் கல்வி வியபாராமாக்கப்படுதல் போன்றவற்றிற்கு எதிர்ப்பாக ஒலிக்கும் மாணவர்களின் ஒரு பகுதியாக பார்க்க வேண்டும்.
ஜேஎன்யூவில் இந்தப் போராட்டங்கள் நடைபெற்ற இதே காலகட்டத்தில் பாகிஸ்தானும் ஒரு பெரும் மாணவர் புரட்சியை எதிர்கொண்டதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஹாங்காங்கில் நடைபெறும் சனநாயகத்திற்கான புரட்சியில் மாணவர்கள் முன்நிற்கின்றார்கள். இதுபோன்று, பல்வேறு நாடுகளிலிருந்தும் அண்மைக் காலங்களில் மாணவர் போராட்டம் குறித்த செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
இந்தியாவில், ஜேஎன்யூ மாணவர்களுக்கு ஆதரவாக வெவ்வேறு பல்கலைக்கழகம், மற்றும் தொழில் நுட்ப நிறுவனங்களைச் ( IITs) சார்ந்த மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதைத் தொடர்ந்து டெல்லி தொழில் நுட்ப நிறுவனத்தில் 10 மடங்கிற்குமேல் உயர்த்த இருந்த கல்விக் கட்டணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. இன்று கல்விக் கட்டணம் என்பது ஏழை பணக்காரர் என வேறுபாடு இன்றி அனைவருக்கும் ஒரு பெரும் சுமையாக உள்ளது. மக்கள் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்காதவரை, அரசு கல்வியை வியபாரமாகத்தான் விற்பனை செய்ய முயற்சிக்கும்.
புரட்சியில் கரையும் பொன்விழா – கனவென நிற்கும் சமத்துவ உலகு
இந்த மாணவப் புரட்சி வெடித்திருக்கும் இந்த ஆண்டு ஜே.என்.யூ வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டு. இது இந்தப் பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆண்டு. பொன்விழா ஆண்டைக் கொண்டாட ஒவ்வொரு தரப்பினரும் வெவ்வேறு திட்டங்களைக் கொண்டிருந்தனர். மாணவர் அமைப்பு, ஆசிரியர் அமைப்பு, மற்றும் ஜேஎன்யு நிர்வாகம் தனக்கான நிகழ்வுகளை திட்டமிட்டிருந்தன. குறிப்பாக, ஜேஎன்யூ நிர்வாகம் பொன்விழாவை ஜேஎன்யூ இதுவரை நடந்த பாதையி்லிருந்து ஒரு புதிய பாதையை, இந்துத்துவ பாதையைக் குறிப்பதைப்போல் சில நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது. விவேகானந்தர் சிலை ஒன்று நிர்வாகக் கட்டிடத்திற்கு எதிரில் கட்டப்பட்டு இதுவரை மூடியே வைக்கப்பட்டுள்ளது. ஜேஎன்யூ இணையதளத்தில் உள்ள பொன்விழாக் கொண்டாட்டப் பட்டியலில் சிலவற்றைத் தவிர மற்றவை ஏதும் நிகழ்த்தப்படவில்லை.
மாறாக, ஜேஎன்யூ மாணவர்கள், ஜேஎன்யூ-வுக்கே உரித்தான முறையில் இதை ஒரு புரட்சி ஆண்டாக மாற்றியுள்ளார்கள். கடந்த ஒரு மாதமாக ஜேஎன்யு பற்றியும் இந்தப் பல்கலைக்கழகம் கடந்துவந்த பாதையைப் பற்றியும், இதன் சமூகத்திற்கான, தேசத்திற்கான பங்களிப்பைப் பற்றியும் தொடர்ந்து செய்தி தாள்களிலும், இதழ்களிலும் கட்டுரைகள் வந்த வண்ணம் உள்ளன. இது இந்தப் பொன்விழா ஆண்டில் ஜேஎன்யூ பற்றிய நினைவுகள் மீண்டும் பொதுபுத்திக்கு கொண்டுவர உதவி செய்துள்ளன.
இந்தப் போராட்டம் இத்தோடு நின்றுவிடப் போவதில்லை என்றே தோன்றுகின்றது. நிர்வாகம் பல்வேறு அடக்குமுறைக்கான ஆயுதங்களை ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றது. பல மாணவர்களின் கல்வி வேலைவாய்ப்புகள் இதன்மூலம் பாதிக்கப்படலாம். ஆனால், இம்மாணவர்கள் காட்டும் உற்சாகமும், துணிவும், சமூகத்தைப்பற்றிய ஆழ்ந்த புரிதலும் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றைப் பார்க்கும்போது 1960-களில் இந்தப் பல்கலைக்கழகத்தை நிறுவ முயன்றோர் எதிர்பார்த்த சனநாயகம், சமத்துவம், அறிவியல் பார்வை இவற்றைக் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த இந்தியச் சமூகத்திற்கான கனவு இன்றும் வீழ்ந்துவிடவில்லை என்றே தோன்றுகின்றது. மாணவர்களின் கண்களில் தெரியும் ஒளி இதை உறுதிபடுத்துகின்றது.
ஜே.என்.யூ மாணவர்களுக்கு செவ்வணக்கம் !
(முற்றும்)
தொடரின் முந்தைய பாகங்களுக்கு :
- ஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு ! | பாகம் – 1
- ஜே.என்.யூ : வலதுசாரிகளின் பிடியில் நிர்வாகம் !
சௌ. குணசேகரன்
(ஆசிரியர் பற்றி : ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகத்தில், வரலாற்று ஆய்வுகளுக்கான மையத்தில் துணைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்)