17.3 லட்சம் இராணுவ பதக்கங்கள் கிடப்பில் : பிளாஸ்டிக் பதக்கங்களை வாங்கி அணியும் இராணுவ வீரர்கள் !
ஓய்வு பெற்ற இந்திய இராணுவ படைத் தலைவர் தர்ஷன் சிங் தில்லான் தன்னிடம் ஏழு பதக்கங்கள் இருப்பதாகச் சொல்கிறார். அதில் ஒன்று மட்டும்தான் உண்மையானது; மற்றவை கடைத்தெருவில் வாங்கிய பிளாஸ்டிக் பதக்கங்கள்.

“பெரும்பாலும் என்னுடைய பணி காலத்தில் இந்த பொய்யான பதக்கங்களை அணிந்திருந்தேன்” என்கிற 59 வயதான தில்லான், உடல்நிலை காரணமாக முன்பு முன்கூட்டியே ஓய்வு பெற்றவர். தன்னுடைய பதக்கங்களுக்காக 13 ஆண்டுகள் வரை காத்திருந்தவர், பொறுமை இழந்து கடந்த ஏப்ரல் மாதம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதக்கங்களில் நிலைமை என்னவென்று அரசிடம் விசாரித்திருக்கிறார்.
இதில், 17.3 லட்சம் பதக்கங்கள் இன்னும் இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படவில்லை என்று இராணுவ அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இராணுவ ஒழுங்குமுறைகள் மற்றும் படிவங்களின் இயக்குனரகம் மேற்சொன்ன பதிலைத் தெரிவித்திருக்கிறது. அதேசமயம் 2014, 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு 20 கோடி ரூபாய் பதக்கங்கள் செய்வதற்காக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறது.
இந்த ஆண்டு ஓய்வு பெற்ற மற்றொரு படைத் தலைவர் நாகிந்தர் சிங் கில் 8 பதக்கங்களை பெற்றிருக்கிறார். அதில் ஒரு பதக்கம் மட்டுமே அசலானது. மற்ற ஏழு பதக்கங்களும் கடைவீதியில் வாங்கியவை. ஜம்மு காஷ்மீரில் பணியாற்றியதற்காக வழங்கப்பட்ட பதக்கங்களும் அதில் அடங்கும்.
“வேறு வழியில்லாமல்தான் கடைத்தெருவில் வாங்கப்பட்ட பதக்கங்களை அணிந்துகொண்டேன்” என்கிற தில்லான், குண்டுகளை செயலிழக்கச் செய்யும் நிபுணர்.
படிக்க :
♦ நாட்டைப் பாதுகாக்க ரஃபேல் ! ரஃபேலை பாதுகாக்க எலுமிச்சை !
♦ கார்கில் போர் வீரரை சட்டவிரோதக் குடியேறியாக்கி கைது செய்த மோடி அரசு !
“நான் எட்டு ஆண்டுகள் வட கிழக்கிலும் ஆறு ஆண்டுகள் ஜம்மு காஷ்மீரிலும் சேவை செய்திருக்கிறேன். பதக்கங்கள் வழங்கப்படவேண்டும்; கடைத்தெருவில் வாங்கக்கூடாது. அவை பொக்கிசங்கள், பொருட்கள் அல்ல. எங்கள் மார்பின் மீது இருக்கும் அவை, உலோகங்கள் அல்ல. எங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த வரலாற்றின் ஒரு பகுதி. நம் நாட்டிற்காக நாங்கள் செய்ததைப் பற்றிய ஒரு பார்வையை அளிக்கிறது. எனது ஏழு பதக்கங்களில் ஒரு முறைகூட சரியான நேரத்தில் எனக்கு பதக்கம் வழங்கப்படவில்லை” என்கிறார் அவர்.
தனது கோரமுகத்தை பெரும்பான்மை மக்களிடமிருந்து ம்றைக்க இராணுவத்தின் தியாகத்தை முன்னிறுத்தும் இந்துத்துவக் கும்பல், இராணுவத்தின் பதக்கங்களிலும் மோசடி செய்திருக்கிறது !
கலைமதி
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்.