Saturday, April 19, 2025
முகப்புசெய்திஇந்தியாஇந்திய ஹிட்லர் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெர்மன் மாணவரின் கல்வி முடக்கம் !

இந்திய ஹிட்லர் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெர்மன் மாணவரின் கல்வி முடக்கம் !

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்த போராட்டத்தில் சென்னை ஐஐடி -யில் பயிலும் ஜெர்மன் மாணவர் கலந்து கொண்ட காரணத்தால் அவரை திருப்பி அனுப்பியது மோடி அரசு.

-

டந்த வாரம் சென்னையில் நடந்த குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தில் ‘1933 – 1945 நாங்கள் அங்கே இருந்தோம்’ என்ற பதாகையை உயர்த்திப் பிடித்திருந்த ஜெர்மனி மாணவரின் புகைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட ஜெர்மன் மாணவர்.

ஹிட்லரின் பாசிச ஆட்சியை நினைவுபடுத்தும் மோடி – ஷா ஆட்சியின் கொடுங்கோல் சட்டங்களை எதிர்க்கும் வகையில் தனது முழக்கத்தை எழுப்பியிருந்தார் ஐ.ஐ.டி. -யில் பயிலும் ஜெர்மனியைச் சேர்ந்த ஜேக்கப் லிண்டிந்தல். மேலும், ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் மற்றும் அலிகார் முசுலீம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட போலீசு வன்முறையைக் கண்டித்து ஐஐடி வளாகத்துக்குள் முற்போக்கு மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்திலும் கலந்துகொண்டார் இவர். அப்போது, ‘சீருடை கிரிமினல்கள் = கிரிமினல்கள்’ என எழுதப்பட்ட பாதகையை பிடித்திருந்தார். இந்தப் படமும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

இந்நிலையில், மாணவர்களின் போராட்டங்களை ஒடுக்குவதில் முனைப்பாக உள்ள மோடி அரசு, விசா விதிகளை மீறியதாகக் கூறி உடனடியாக ஜெர்மனி திரும்பும்படி மாணவரை மிரட்டியுள்ளது.

மாணவர் பரிமாற்ற திட்டத்தின் கீழ் ஓராண்டு படிப்பிற்காக சென்னை ஐஐடியில் சேர்ந்த ஜேக்கப்பின் படிப்பு முடிய இன்னும் ஆறு மாதங்கள் உள்ள நிலையில், உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற சொல்லியிருக்கிறது உள்ளூர் குடியேற்றத்துறை.

அவரது குடியிருப்பு அனுமதி குறித்து பேச இருப்பதாக அழைத்த அதிகாரிகள், பிறகு குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம் குறித்து கருத்து கேட்டதாகவும், தன்னுடைய கருத்தை சொன்ன நிலையில் மன்னிப்புக் கேட்க வலியுறுத்தியதாகவும் ஜேக்கப்பின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜேக்கப் மன்னிப்பு கேட்காத நிலையில், உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறும்படி அதிகாரிகள் அவரை மிரட்டியுள்ளனர். எனவே, இன்று அவர் வெளியேற உள்ளதாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

படிக்க :
எனது தேசத்தை வெறுக்காதீர்கள் ! அடால்ஃப் மோடி | கேலிச்சித்திரம்
♦ என் உருவ பொம்மையை எரியுங்கள் ! பாசிச மோடியின் நீலிக் கண்ணீர் | கேலிச்சித்திரம்

வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் உள்ளூர் போராட்டங்களில் கலந்துகொள்ளவது பல நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைதான் என்றாலும், இந்திய அரசால் அதை சகித்துக்கொள்ள முடியவில்லை.

“இந்திய அரசியலமைப்பு மதச்சார்பற்ற ஒன்று. ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் செய்வது தெளிவான ஒடுக்குமுறை. நான் ஜெர்மனியிலிருந்து வந்தவன். எனவே, எனக்கு இத்தகைய ஒடுக்குமுறை எந்த எல்லைவரை செல்லும் என்பது நன்கு தெரியும்” என போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது ஜேக்கப் தெரிவித்திருந்தார்.
நிச்சயம் இந்த கருத்து பாசிசவாதிகளை அசைத்திருக்கும். எனவே, பாசிசத்தின் அடியாட்கள் மூலம் ஜெர்மன் மாணவர் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.


கலைமதி
நன்றி : டெலிகிராப் இந்தியா, நியூஸ் மினிட்.