புர்கா போட்டிருந்த காரணத்தால், கல்லூரியில் முதல் மதிப்பெண் எடுத்த பெண் ஜனாதிபதியிடமிருந்து பதக்கம் பெறுவதை தடுத்து அப்பெண்ணை அரங்கை விட்டு வெளியேறச் செய்திருக்கிறது பாண்டிச்சேரி பல்கலைக்கழகம். இதன் மூலம் தன்னை இந்துத்துவத்தின் சேவகனாக அறிவித்துக் கொண்டுள்ளது அப்பல்கலைக் கழக நிர்வாகம்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பெண் ரபீஹா. இவர் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பெருந்திரள் தகவல் தொடர்புப் (Mass Communication) பிரிவில் கடந்த 2018-ம் ஆண்டு தனது படிப்பை முடித்துள்ளார். பாண்டிச்சேரி பல்கலை மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா கடந்த டிசம்பர் 23, 2019 அன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி, பாண்டிச்சேரி கவர்னர் கிரண் பேடி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களில் முதல்நிலை மதிப்பெண்கள் மற்றும் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு மட்டும் ஜனாதிபதி பட்டம் வழங்கிவிட்டு அங்கிருந்து கிளம்புவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. அந்த வகையில் பெருந்திரள் தகவல் தொடர்புத் துறையில் தலை சிறந்த மாணவியாக தங்கப் பதக்கம் வென்ற ரபீஹாவும் ஜனாதிபதி கையில் பதக்கமும் பட்டமும் வாங்கும் மாணவர்கள் பட்டியலில் இருந்தார்.

நிகழ்ச்சி தொடங்கும் தருவாயில் உள்ளே அமர்ந்திருந்த ரபீஹாவை ஒரு போலீஸ் அதிகாரி, வெளியில் வந்து பேசவருமாறு அழைத்துச் சென்றார். வெளியில் சென்ற ரஹீபாவிடம் எந்தக் காரணமும் சொல்லாமல் அவரை அமரச் செய்து விட்டது போலீசு. பின்னர் ஜனாதிபதி பட்டமளித்துவிட்டு கிளம்பிய பின்னர்தான் அவரை உள்ளே செல்ல அனுமதித்தது.
ஜனாதிபதி கிளம்பிய பிறகு பல்கலை பேராசிரியர் ஒருவர் பதக்கங்களையும் பட்டங்களையும் கொடுக்கத் தொடங்கினார். தனது பெயர் அழைக்கப்பட்ட போது மேடைக்குச் சென்ற ரபீஹா தனக்கு வழங்கப்பட்ட தங்கப் பதக்கத்தைப் புறக்கணித்துவிட்டு, பட்டத்தை மட்டும் வாங்கினார். தம்மை மத அடிப்படையில் புறக்கணித்ததைக் கண்டித்தும் இந்தியா முழுவதும் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் தமது எதிர்ப்பைப் பதிவு செய்ததாக தெரிவித்தார்.
பின்னர் வெளியில் வந்து பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”எனது உரிமைகள் பறிக்கபட்டதாகவே நான் உணர்கிறேன். அப்பட்டமான பாகுபாடு காட்டப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரையில் இதுவே அமைதியான வழியில் எதிர்ப்பைக் காட்டுவது. கற்றறிந்த இளைஞர்களால் என்ன செய்யமுடியும் என்பதை ஒவ்வொருவரும் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார்.
படிக்க:
♦ பட்டமளிப்பு விழாவில் குடியுரிமை சட்ட நகலை கிழித்த மாணவி !
♦ குடியுரிமை திருத்தச் சட்டம் : உத்தர பிரதேசத்தில் போலீசு நடத்திய படுகொலைகள் !
முன்னதாக பாண்டிச்சேரி பல்கலைக் கழக மாணவர் சங்கம், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்வைப் புறக்கணிக்குமாறு அழைப்பு விடுத்திருந்தது. அதனடிப்படையில் பல மாணவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்காமல் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது எதிர்ப்பை வேறுவகையில் பதிவு செய்த ரபீஹா, பல்கலைக் கழகத்தில் செயல்பட்டுவரும் அம்பேத்கர் மாணவர் கழகத்தின் இணைச் செயலராக செயல்பட்டுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மாதத்திற்கு முன்பு ஐ.ஐ.டி.-யில் முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காக ஆசிரியரால் ஓரங்கட்டப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதன் காரணமாக ஃபாத்திமா லத்தீஃப் என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
இன்று ஒரு மாணவி புர்கா அணிந்திருந்த ஒரே காரணத்திற்காக அவரை வெளியில் அனுப்பியிருக்கிறது இந்துத்துவக் கும்பலும் அதன் அடியாட்களும். இவர்கள்தான், நாடெங்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புக் கிளம்பியவுடன், நாங்கள் இந்திய முஸ்லீம்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்று நீலிக் கண்ணீர் வடித்தவர்கள்.
காவி பாசிஸ்டுகளின் நீலிக் கண்ணீரை மாணவர் சமுதாயம் ஏற்கவில்லை என்பதற்கு ரபீஹா-வின் எதிர்ப்பே ஒரு சான்று !
நந்தன்
செய்தி : தி வயர்