மேற்கு வங்கம் ஜாதவ்பூர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம் வென்ற மாணவி டெப்ஸ்மிதா சவுத்ரி குடியுரிமை சட்ட திருத்த நகலை விழா மேடையில் கிழித்தெறிந்து, பாசிச அரசின் முகத்தில் வீசியிருக்கிறார்.
துணைவேந்தர் பிரதீப் கோஷிடமிருந்து, முதுகலை சர்வதேச உறவுகள் படிப்பில் தங்கப் பதக்கம் வென்றதற்கான சான்றிதழ்களைப் பெற்ற மாணவி டெப்ஸ்மிதா, அவரிடம் ஒரு நிமிடம் அனுமதி கோரினார்.
குடியுரிமை திருத்த மசோதாவின் ஒரு பக்கத்தின் நகலை எடுத்து, அதை மேடையிலேயே கிழித்து எறிந்த அவர், “நாங்கள் ஆவணங்களைக் காட்ட மாட்டோம்” என அறிவித்து, “இன்குலாப் ஜிந்தாபாத்” (புரட்சி ஓங்குக) என கை உயர்த்தி முழக்கமிட்டார். பின்னர் அவருடைய பட்டத்தையும் பதக்கத்தையும் மேடையிலிருந்து எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.
Debsmita Chowdhury rips the vile Citizenship Amendment Act & chants 'Inquilab Zindabad' on the stage after receiving the Gold medal (Dept of International Relations) at Jadavpur University Convocation, 2019.
The youth continue to inspire.#CAA_NRCProtests#NRC_CAA_Protest pic.twitter.com/vztEMlMwx5— Bodhisattva Sen Roy (@insenroy) December 24, 2019
இதன் வீடியோ துணுக்கு சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. “எனது எதிர்ப்பு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்ல. மோடி அரசாங்கத்தின் பாரபட்சமான, மாணவர் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும்தான்” என டெலிகிராப் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தனது செயல்பாடு குறித்து தெரிவித்துள்ளார்.
“மோடி அரசாங்கத்தின் மீது மாணவர்களின் வெறுப்பு மற்றும் அதிருப்தியின் உச்சக்கட்டத்தை காட்டவே இந்த எதிர்ப்பை வெளிப்படுத்தினேன். அத்துடன் மைய அரசின் வெறும் ரப்பர் ஸ்டாம்பாக மாறிய ஆளுநரின் பங்குக்கும் சேர்த்ததே. அவர் மாநில அரசுகளின் செயல்பாடுகளில் குறுக்கிடும் நிறுவனமாக மாறிவிட்டார்”

ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் மாணவர்கள் மீதான மிருகத்தனமான தாக்குதல் தன்னை பாதித்ததாகவும், அவரது எதிர்ப்பு மோடி அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற தன்மைக்கு”எதிரானது என்றும் டெப்ஸ்மிதா கூறியுள்ளார்.
தான் ஒரு தனிப்பட்ட மாணவராகத்தான் இதைச் செய்ததாகவும், வளாகத்துக்குள்ளும் வெளியேயும் எந்தவொரு அரசியல் அமைப்புடனும் தொடர்பில் இல்லையென்றும் அவர் கூறியுள்ளார். “தங்கப் பதக்கம் வென்றதற்காக மேடையில் எனக்கு சிறுது நேரம் கூடுதலாகக் கிடைத்தது. எனது எதிர்ப்பு குரலை உயர்த்த அதைப் பயன்படுத்திக்கொண்டேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
படிக்க:
♦ பத்தல்கடி இயக்கம் : ஆதிவாசிகளின் அதிகாரத்துக்கு எதிரான பிரகடனம் !
♦ பாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா !
கடந்த திங்கள்கிழமை அன்று புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கத்தை வாங்க மறுத்து தனது எதிர்ப்பைக் காட்டினார் மாணவி ரபீஹா அப்துரஹிம். போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக குடியரசு தலைவர் பட்டமளிப்பு அரங்கத்தில் இருக்கும்வரை இவரை அரங்கத்துக்கு வெளியே அனுப்பியது புதுவை போலீசு. அதன்பின் அனுமதிக்கப்பட்ட ரபீஹா, தனது தங்கப் பதக்கத்தை வாங்க மறுத்தார்.
மோடி அரசின் பாசிசத்தை, மாணவர்களுக்கு எதிரான அதன் திட்டங்களை உணர்ந்திருக்கும் மாணவர் சமூகம் எழுச்சியுடன் தனது எதிர்ப்புக் குரலை பதிவு செய்துவருகிறது.
அனிதா
நன்றி: டெலிகிராப் இந்தியா.