ஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் ! | பகுதி 3

முதல் பாகம்  படிக்க

ற்றைக் கற்களை இடுவது ஒரு பழமையான முண்டா ஆதிவாசி பாரம்பரியம் என்றாலும், 1990 -களில் ஆர்வலர்கள் கிராமவாசிகளுக்கு பஞ்சாயத்து (விரிவாக்கம்) திட்டமிடப்பட்ட பகுதிகள் சட்டம் மற்றும் பிற கூறுகளான – அரசாங்கத் திட்டங்களை நிராகரித்தல், தேர்தல்களைப் புறக்கணித்தல் போன்றவைகளை குஜராத்தில் உள்ள சதிபதியின் மில்லினேரிய வழிபாட்டு முறையிலிருந்து இவர்கள் கிரகித்துக் கொண்டனர்.

இத்தகைய கருத்துக்கள் அவர்களிடையே கலப்பதற்கான கூடுதல் தெளிவைப் பெற வேண்டுமானால் நீங்கள், மே 2018 இல் சமூகவியலாளர் நந்தினி சுந்தர் கலந்துகொண்ட பத்தல்கடி அனுபவத் தொகுப்பையோ அல்லது தற்போது தலைமறைவு வாழ்வை நோக்கி இருக்கும் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான முன்னாள் அரசுக் கல்லூரி விரிவுரையாளர் ஜோசப் பூர்த்தியின் நேர்காணலைப் பாருங்கள்.

குன்த்தி மாவட்டத்தில் ஒரு கிராம சந்திப்பில் ஒற்றைக் கல்வெட்டு.

ஒடுக்குமுறை இருந்தபோதிலும், ஜார்க்கண்டின் பிற மாவட்டங்களில் ஒற்றைக் கல்வெட்டுகள் தொடர்ந்து வளர்ந்தன. காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் இருக்கும் அண்டை மாநிலமான சத்தீஸ்கரிலும் இந்த இயக்கம் பரவியது.

பெரும்பாலான பத்தல்கடி தலைவர்கள் படித்த நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், பலர் அரசாங்க வேலைகளில் இருந்தவர்கள். ஆனால் ஜார்கண்ட் அரசாங்கம் இவர்களின் விரிவான வேண்டுகோளை நிராகரித்து இந்த இயக்கத்திற்கு மாவோயிஸ்டுகள், கிறிஸ்தவ மிஷனரிகள் மற்றும் அபின் சாகுபடியாளர்கள் நிதியளிப்பதாக முத்திரை குத்துகிறது.

தனது வாழ்க்கை அனுபவத்தோடு இந்த இயக்கம், அவருடன் ஏன் ஒன்று கலந்தது என்பதை குன்த்தி மாவட்டத்தில் கக்ரா கிராமத்தில் வசிக்கும் ஒரு இளைஞர் விவரிக்கிறார்.

இளைஞர் : அரசாங்கம் எங்கள் நிலத்தை எடுத்துக் கொண்டு எங்களுக்குத் தேவையில்லாத திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்கள் எங்களுடன் கலந்தாலோசிக்காமல் கிராமத்திற்கு வந்தன. நிர்வாகம் மக்களின் விருப்பதிற்கு எதிராக செயல்படுகிறது. ஒப்பந்தக்காரர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள்.

ஒரு ஒற்றைக் கல்வெட்டு போடுவதற்கான தனது கிராமத்தின் முடிவு மிகக் கவனமாக விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்டது என்கிறார் அவர்.

இளைஞர் : முதல் விழா பாந்த்ரா தரப்பில் நடந்த பிறகு, நாங்கள் அனைத்து பத்தல்கடி கூட்டங்களிலும் கலந்து கொள்ள ஆரம்பித்தோம். அங்கு சொல்லப்படுவதை நாங்கள் கவனித்தோம், நாங்கள் கோரும் உரிமை சரிதானா என்பதை உறுதி செய்து கொள்ள சொந்த முறையில் ஆராய்ச்சி செய்தோம். இதற்காக நாங்கள் ஒரு ஆண்டு எடுத்துக் கொண்டோம். ஒற்றைக் கல்வெட்டில் உள்ளவை அரசியலமைப்பின் தவறான விளக்கம் என அரசாங்கம்  கூறிக்கொண்டிருந்தது. ஆனால் கல்வெட்டில் உள்ள கூற்றுக்கள் சரியானவை என்று நாங்கள் உறுதியாக நம்பினோம்

கூட்டங்களில் கலந்துகொள்வது மக்களுக்கான கல்வி போன்றது :

இளைஞன் : “அபுவா டிஸம், அபுவா ராஜ்” [எங்கள் நிலம், எங்கள் ஆட்சி – 19 ஆம் நூற்றாண்டில் பிர்சா முண்டாவால் உருவாக்கப்பட்ட ஒரு முழக்கம்] கேள்விப்பட்டோம். ஆனால் அரசியலமைப்பு மூன்று வெவ்வேறு ஆளுகைத் திட்டங்களை வழங்குகிறது என்று யாரும் எங்களிடம் கூறவில்லை – ஒன்று பொதுப் பகுதிகள், மற்றொன்று ஆறாவது அட்டவணை மற்றும் ஐந்தாவது அட்டவணையின் கீழ் பழங்குடிப் பகுதிகளுக்கு, மூன்றாவது ஜம்மு-காஷ்மீருக்கான 370 வது பிரிவின் கீழ் உள்ளது. பத்தல்கடி இயக்கத்தின் மூலம், இதைப் பற்றி அரசாங்கத்திற்கு நினைவூட்ட விரும்பினோம். நாங்கள் புதிய சட்டங்களைக் கூட கேட்கவில்லை, ஏற்கனவே உள்ள சட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றுதான் நாங்கள் கேட்டுக்கொண்டிருந்தோம்.

காவல்துறையின் இலக்கில் தான் சேர்க்கப்படக்கூடும் என்பதாலும், தனது பெயர் எந்த முதல் தகவல் அறிக்கையிலும் சேர்க்கப்படலாம் என அஞ்சியதாலும், தனது அடையாளத்தை பாதுகாக்குமாறு அந்த இளைஞர் கேட்டுக் கொண்டார். குறிப்பாக தனது கிராமமான கக்ராவின் மக்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்று அவர் கூறினார்.

2018 ஜூன் 26 அன்று அங்கு நடைபெற்ற பத்தல்கடி விழா ஒரு பெரிய ஒளிரும் இடமாக மாறியது. பத்தல்கடி இயக்கத்தின் சில தலைவர்கள் மீது காவல்துறையினர் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்த சில நாட்களில் இந்த விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான ஆதிவாசிகள் கிராமத்தில் கூடியிருந்தபோது, ​​காவல்துறையினர் தலைவர்களைத் தேடினர்.

காவல்துறையினர் தங்களை லத்திகளால் தாக்கி, சிலரை சிறைபிடித்ததாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் ஏற்பட்ட கோபத்தில், அருகிலுள்ள கிராமத்தில் உள்ளூர் எம்.எல்.ஏ.வின் வீட்டில் பாதுகாப்புப் பணியில் இருந்த மூன்று போலீசாரை கிராம மக்கள் தடுத்து வைத்தனர். அடுத்த நாள் காலை வரை இந்த மோதல் தொடர்ந்தது.

போலீசார் சொன்னதை யாரும் கேட்காததால், கூட்டத்தில் ஒரு தடியடி நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக ஜூன் 27, 2018 அன்று தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் காவல்துறையினர் கூறி உள்ளனர்.

பங்கேற்பாளர்களை காவல்துறையினர் லத்தியால் தாக்கியது மட்டுமல்லாமல், வீடுகளில் இருந்து மக்களை வெளியே இழுத்து அடித்து உதைத்ததாக கிராமவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

படிக்க :
இந்த அடக்குமுறை காலனிய ஆட்சியில்கூட கிடையாது : வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப் !
♦ ஜார்கண்ட் : தொடரும் இந்திய அரசின் பட்டினிப் படுகொலைகள் !

இளைஞன் : அவர்கள் எங்களைத் துரத்திச் சென்று மோசமாக அடித்தார்கள். தப்பி ஓடிய ஆதிவாசிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி, சாம்தி கிராமத்தில் வசிக்கும் பிர்சா முண்டா என்பவரை படுகொலை செய்தனர் என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மல்லாக்கப் படுத்திருக்கும் நிலையில் கொல்லப்ட்ட ஒருவரின் தலையின் பின்புறத்திலிருந்து இரத்தம் வெளியேறியதை ஒரு புகைப்படம் காட்டுகிறது. அவர் நெரிசலில் இறந்ததாக போலிசார் கூறுகின்றனர், ஆனால் அவரது சகோதரர் சனிகா முண்டா இதை மறுக்கிறார்.

சனிகா முண்டா : அவரது தலையில் ஏற்பட்ட காயம் ஒரு தோட்டாவால் மட்டுமே ஏற்பட்டிருக்கக்கூடும் என ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில், ஒரு பெண் மருத்துவர் சொன்னதைக் கேள்விப்பட்டேன். மருத்துவமனையிலிருந்து நாங்கள் உடலை வீட்டிற்கு கொண்டு வந்தபோது, ​​அவரது தலை காதுக்கு மேலே எவ்வளவு மோசமாக சிதைந்தது என்று பார்த்தேன்.

தொலைபேசியில் காணப்பட்ட புகைப்படம், தலையில் இருந்து இரத்தம் வழிந்து தரையில் கிடக்கும் பிர்சா முண்டா.

பல முறை முயற்சித்த போதும், பிரேத பரிசோதனை அறிக்கையின் நகலை சகோதரரால் பெற முடியவில்லை. ஸ்க்ரால்.இன் குந்த்தி போலீசாரிடம் ஒரு நகலைக் கேட்டது, ஆனால் எந்தப் பதிலும் இல்லை.

இதற்கிடையில், கொலை மற்றும் தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் காக்ரா கிராமத்தின் வழக்கமான தலைவர் கரம் சிங் முண்டாவும் ஒருவர். அவர் 145 கி.மீ தூரத்தில் உள்ள ஹசாரிபாக் சிறைக்கு மாற்றப்பட்டதாக அவரது மனைவி கூறினார். அவரது குடும்பத்தார் அவரைப் பார்ப்பதுகூட மிகவும் கடினமாக உள்ளது என்கின்றனர்.

கரம் சிங் முண்டாவின் மனைவி கக்ரா கிராமத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு வெளியே கரம் சிங் முண்டாவின் புகைப்படத்தை வைத்திருக்கிறார்.

ஸ்க்ரால்.இன் பகுப்பாய்வு செய்த 19 முதல் தகவல் அறிக்கைகளில் இருந்த 132 பெயர்களில், 43 பேர் கிராமப் பிரதான் அல்லது கிராமத் தலைவர்கள் என்பது வியப்பாக இருந்தது. முழு கிராமங்களையும் மிரட்டி அமைதியாக்குவதற்கான ஒரு தந்திரம் இது என்று பாந்த்ரா கிராமத்தின் தலைவர் பிர்சா முண்டா கூறினார்.

பாந்த்ராவிலிருந்து 20 கி.மீ தொலைவில், மற்றொரு கிராமத் தலைவரான கெவ்ரா கிராமத்தைச் சேர்ந்த பைஜ்நாத் பஹான், எட்டு மாத சிறைவாசம் கழித்து வீடு திரும்பினார். அவரது கிராமத்தில் கல் பலகை போடுவதற்கு முன்பே காவல்துறையினர் அவரை தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு உட்படுத்தியிருந்தனர். கிராமப் பள்ளி கட்டிடத்திற்குள் போலீசார் முகாம் ஒன்றை அமைத்த பின்னர் கிராமவாசிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையிலான முரண்பாடு குறித்து பஹான் கண்டுபிடித்தார்.

அரசு நடுநிலைப்பள்ளியின் வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள போலிஸ் முகாம்.

பைஜ்நாத் பஹான் : சில பெண்கள் சந்தையில் இருந்து திரும்பி வந்தபோது போலீஸ்காரர்கள் அவர்களிடம் தவறாக நடந்து கொண்டனர். பின்னர், அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் வீட்டிற்கு சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, ​​காவல்துறையினர் தங்கள் முகாமுக்கு விறகுகளை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். சுமை அதிகம் என்று அவர் மறுத்துவிட்டார், ஆனால் அவர்கள் அவரை கட்டாயப்படுத்தினர். அதிக சுமை ஏற்றியதால் அவரது சைக்கிள் சேதமடைந்தது. எனது கிராமத்தில் முகாம் அமைக்க காவல்துறையை ஏன் அனுமதித்தேன் என்று கேள்வி கேட்டு அவரின் கிராமத்திலிருந்து எனக்கு ஒரு அறிவிப்பு வந்தது.

காவல்துறையினர் அவரிடம் அனுமதி கேட்கவில்லை என்பது மற்றொரு விஷயம். ஆனால் கிராம சபையுடன் கலந்தாலோசித்த பின்னர், காவல்துறையினரிடம் சென்று இந்தக் கவலைகளை எழுப்ப முடிவு செய்தார். கூட்டம் சூடாக மாறியது.

பைஜ்நாத் பஹான் : அங்கு நேரடி மோதல் எதுவும் இல்லை, உரத்த வார்த்தைகள் மட்டுமே. ஆனால் காவல் நிலையத்திற்குள் கட்டைகள் மற்றும் ஆயுதங்களை எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டி காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

மார்ச் 13, 2018 தேதியிட்ட முதல் தகவல் அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டு உண்மையில் மிகவும் மோசமானது. பஹான் மற்றும் 300 பேர் காவல் நிலையத்தைக் கைப்பற்றியதாகவும், காவல்துறை அதிகாரிகளின் கைகளில் இருந்து ஆயுதங்களை அவர்கள் பறித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர், இவை அனைத்தும் பத்தல்கடி இயக்கத்தினர் மீதான தேசத்துரோக வழக்கின் ஒரு பகுதியாகும்.

பஹானைத் தவிர, கெவ்டா கிராமத்தில் வசிக்கும் நேதா நாக் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் 400 கி.மீ தூரத்தில் உள்ள டும்காவில் இன்னமும் சிறையில் இருக்கிறார்.

படிக்க :
கல்விக் கடன் பயனாளிகளில் 10% மட்டுமே பட்டியலின, பழங்குடியின மாணவர்கள் | சாதிய அவலம்
♦ CAB – NRC : மோடி அமித்ஷாவை தீண்டாமை குற்றத்தில் கைது செய் ! காணொளி

பைஜ்நாத் பஹான் : அவர் எப்போதாவதுதான் கிராமக் கூட்டங்களில் கலந்துகொள்வார். அவர் படிப்பறிவற்றவர். ஏன் அவருக்கு இந்திகூடத் தெரியாது, அவரால் என்ன செய்திருக்க முடியும்? விறகுகளை விற்று வாழும் அவர் என்ன செய்வார் பாவம்?

தந்தையைச் சந்திக்க டும்காவுக்குச் செல்லக்கூட தன்னிடம் வசதி இல்லை என்கிறார் நேதா நாகின் மகன்.

நேதா நாகின் மகன், கெவ்டா கிராமத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு வெளியே.

மாவட்டத்தில் அச்சம் பரவி வருவதால், கல் போடும் விழாக்கள் பெரும்பாலும் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் ஒரு அமைதியான எதிர்ப்பு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது: முழு கிராமங்களும் தங்கள் ஆதார் அட்டைகள் மற்றும் ரேஷன் அட்டைகளை ஒப்படைத்துவிட்டு, அரசாங்க உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ள மறுத்து வருகின்றன. சில கிராமங்களில் ஆதார் மற்றும் ரேசன் அட்டைகளை எரித்த போது, மற்றவர்கள் அட்டைகளை சேகரித்து தபால் மூலம் ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளனர். ஆதிவாசிகள் மேற்கொண்ட மற்றொரு எதிர்ப்பு தேர்தல் புறக்கணிப்பு. கோடையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பல கிராமங்கள் வாக்களிக்கவில்லை.

மங்கள் முண்டா : காந்திஜி ஒத்துழைமை இயக்கம் போன்றே நாங்களும் செய்து கொண்டிருந்தோம்.

சம்பர் துட்டி : எங்களது பாரம்பரிய உரிமைகளுக்கு மதிப்பு கொடுக்கவோ அல்லது எங்களைப் பற்றியோ அல்லது எங்களது கிராம சபையைப் பற்றியோ; யாரும் பேச மறுப்பதால் தேர்தல் எனும் ஜனநாயகத் திருவிழாவிலிருந்து நாங்கள் விலகியே இருந்தோம். பாரதிய ஜனதாக் கட்சிக்கு எதிராக வாக்களிக்கும் பல ஆதிவாசிகள் தேர்தலில் விலகியே இருந்ததால் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 1,100 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் தேர்தல் புறக்கணிப்பு பாஜகவின் நலன்களுக்கே உதவியது என்று பலர் நம்புகின்றனர்.

நாங்கள் தேர்தலில் பங்கேற்கவில்லை, ஆனால் பா.ஜ.க தோற்கடிக்கப்படும், காங்கிரஸ் வெற்றி பெறும் என்று நாங்கள் நம்பினோம், ஆனால் முடிவுகள் அதற்கு மாறாக இருந்தன, எப்படி என்று எங்களுக்குத் தெரியவில்லை. காங்கிரஸ் வென்றால், அது எங்கள் பிரச்சனையை சீர்தூக்கிப் பார்க்கக்கூடும் என்று நாங்கள் நினைத்தோம்.

சுப்ரியா சர்மா : இந்த மாநிலம் முன்பு காங்கிரஸ் மற்றும் பிறகு பா.ஜ.க அல்லாத கட்சிகளால் ஆளப்பட்டது. அந்த அரசாங்கங்கள் ஆதிவாசிகள் மீது அதிக அக்கறையுடன் இருந்தனரா?

சம்பர் துட்டி : அவர்களும் எங்களைப் பொருட்படுத்தவில்லை, ஆனால் குறைந்தபட்சம் அவர்கள் எங்களை குறைவாகக் கொள்ளையடித்தனர். பா.ஜ.க அரசு ஆதிவாசிகளை மிகவும் மோசமாக நடத்தியது. பத்தல்கடி ஆதரவாளர்களான எங்களை விடுங்கள், பெண்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள்கூட போலீஸ்காரர்களால் விலங்குகளைப் போல தாக்கப்பட்டனர், இடஒதுக்கீடு கேட்கும் இளைஞர்கள் தாக்கப்பட்டனர்

பாஜக-வுக்கு எதிரான கோபம் இருந்தபோதிலும், தேர்தல் புறக்கணிப்பு பா.ஜ.கவுக்கு உதவும் என்பதை நன்கு அறிந்திருந்தாலும், குந்த்தியில் உள்ள பல ஆதிவாசி கிராமங்கள் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் இருந்தும் விலகி இருக்க முயற்சிப்பதாகத் தெரிகிறது.

காக்ரா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் : பழங்குடியினர் ஆலோசனைக் குழுவின் ஆலோசனையின் பேரில் திட்டமிடப்பட்ட பகுதிகளில் தேர்தல்களுக்கு ஆளுநர் ஒரு தனி அறிவிப்பை வெளியிட வேண்டும். அவர் அவ்வாறு செய்யாவிட்டால், இங்கே நடத்தப்படும் தேர்தல்கள் சட்டவிரோதமானவை.

தேர்தல் புறக்கணிப்பு பா.ஜ.க. -வுக்கு உதவுவதால் மட்டுமல்ல அது ஒரு மோசமான யோசனை என்று நம்புகிறார் குந்த்தியில் சட்டசபை தேர்தலில் ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சாவின் சார்பில் போட்டியிடும் ஆதிவாசி சமூக ஆர்வலர் தயாமணி பார்லா. தயாமணி பார்லா – அன்று ஜெய்பால் சிங் முண்டா (ஹாக்கி வீரர்) அரசியலமைப்பு சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கவில்லை என்றால், எங்களுக்கு ஐந்தாவது அட்டவணை கூட இருந்திருக்குமா எனத் தெரியவில்லை?

அடுத்த தொடரில், பத்தல்கடி மற்றும் இந்திய ஜனநாயகம் குறித்து தயாமனி பார்லாவுடனான உரையாடலில் தேர்தல் புறக்கணிப்பு பற்றிய கேள்வியை மிக நெருக்கமாக ஆராய்வோம்.

(தொடரும்)

தொடரின் முந்தைய பாகத்துக்கு :


கட்டுரையாளர் : சுப்ரியா சர்மா
தமிழாக்கம் :
ஊரான்
நன்றி : ஸ்க்ரால்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க