அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 52

“பொருளாதார மனிதன்”

அ.அனிக்கின்

டம் ஸ்மித் 1765-ம் வருடம் டிசம்பர் மாதத்திலிருந்து 1766 அக்டோபர் மாதம் வரை ஒரு வருட காலம் பாரிஸ் நகரத்தில் இருந்தார். எனினும் அங்கேயுள்ள வரவேற்புக் கூடங்களில் அவருடைய நண்பர் ஹியூம் முந்திய மூன்று வருடங்களாகப் பெற்றிருந்த இடம் அவருக்குக் கிடைக்கவில்லை; அல்லது இனி பத்து வருடங்களுக்குப் பிறகு பிராங்கிளின் பெறப்போகின்ற இடம் அவருக்குக் கிடைக்கவில்லை. சமூகத்தில் நடுநாயகமாக விளங்குவதற்குரிய தனித் தகுதிகள் அவரிடம் இல்லை, அது அவருக்கே நன்றாகத் தெரியும்.

அவர் ஹெல்வெடியஸ் என்பவரிடம் கொண்டிருந்த நட்பு அவருடைய வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொண்டதாகும். அதிகமான அளவுக்குத் தனிப்பட்ட கவர்ச்சியும் மிகச் சிறப்பான அறிவும் கொண்டவர் ஹெல்வெடியஸ். அவர் தன்னுடைய தத்துவஞானத்தில் அறவியலை அதன் மீது மாட்டப்பட்டிருந்த மத, நிலப்பிரபுத்துவ விலங்குகளிலிருந்து விடுவிக்க முயன்றார். தன் முனைப்பு என்பது இயற்கையான மனித குணம், சமூக முன்னேற்றத்தில் அது ஒரு காரணி என்று அவர் கூறினார். ஒவ்வொரு மனிதனும் இயற்கையாகவே தன்னுடைய சொந்த லாபத்துக்காகப் பாடுபடுகிறான்; மற்ற மனிதர்களுடைய இதே போன்ற முயற்சிகள் மட்டுமே அதைக் கட்டுப்படுத்த முடியும் என்ற முன்னனுமானத்தின் பேரில் புதிய அறவியல் (சாராம்சத் தில் முதலாளித்துவ அறவியல்) வளர்ச்சியடைந்தது. சமூகத்தில் சுயநலத்தின் பாத்திரத்தை இயற்கையில் புவி ஈர்ப்புச் சக்தியின் பாத்திரத்துக்கு அவர் ஒப்பிட்டார். இயற்கையான சமத்துவம் என்ற கருத்தோடு இது தொடர்புடையது. அதாவது ஒவ்வொரு நபருக்கும் அவருடைய பிறப்பும் நிலையும் எப்படிப்பட்டதாக இருந்த போதிலும் – தன்னுடைய சொந்த லாபத்தைத் தேடுவதற்குச் சமமான உரிமை கொடுக்கப்பட வேண்டும், அதன் மூலம் மொத்த சமூகமுமே பயனடையும்.

ஸ்மித் இந்தக் கருத்துக்களை வளர்த்து அரசியல் பொருளாதாரத்தில் அவற்றைக் கையாண்டார். மனிதனுடைய இயல்பு, மனிதனுக்கும் சமூகத்துக்குமுள்ள உறவு பற்றிய அவருடைய கருத்து மூலச் சிறப்புடைய மரபின் கருத்துக்களின் மூலவேராக அமைந்தது. ”பொருளாதார மனிதன்” என்ற கருதுகோள் ஓரளவுக்குப் பிற்காலத்தில் தான் தோன்றியது; ஆனால் அதைக் கண்டுபிடித்தவர்கள் ஸ்மித்தைத் தங்களுக்கு அடிப்படையாகக் கொண்டார்கள். நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்தில் “கண்ணுக்குத் தெரியாத கரத்தைப்” பற்றிய சிறந்த பகுதி மிக அதிகமான அளவுக்கு மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் பகுதியாகும்.

ஸ்மித்தின் வாதத்தைப் பின் வரும் விதத்தில் சுருக்கிக் கூறலாம். மனிதனுடைய பொருளாதார நடவடிக்கைக்குப் பின்னால் உள்ள முக்கியமான நோக்கம் சுயநலமே. ஆனால் மற்றவர்களுக்குச் சேவை புரிவதன் மூலமாக, தன்னுடைய உழைப்பையும் அந்த உழைப்பின் உற்பத்திப் பொருள்களையும் பரிவர்த்தனை செய்ய முன் வருவதால் மட்டுமே அவன் தன்னுடைய சுய நலத்தைத் தொடர முடியும். ஆகவே உழைப்புப் பிரிவினை வளர்ச்சியடைகிறது. மக்கள் ஒவ்வொரு வரும் தன்முனைப்புக் கொண்டிருந்த போதிலும், தன்னுடைய சொந்த நலனுக்காக மட்டுமே பாடுபட்ட போதிலும், அவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்கிறார்கள், அப்படி உதவி செய்து கொள்ளும் பொழுது சமூகத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறார்கள். தன்னுடைய பொருளாயத நிலையை அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டும் என்ற வகையில் மனிதன் இயற்கையாகச் செய்கின்ற முயற்சி மிகவும் வன்மையான தூண்டுதலாகும்; அதைத் தங்கு தடையில்லாமல் இயங்க அனுமதித்தால் அது சமூகத்தை வளப்பெருக்கத்தை நோக்கிக் கொண்டு செல்லக் கூடியதாகும்.

மேலும் எது முக்கியமென்றால், ஒரு ருஷ்யப் பழமொழி சொல்வதைப் போல ”கதவு வழியாக இயற்கையை விரட்டியடித்தால், அது சன்னல் வழியாக உள்ளே வந்துவிடும்”; இந்தத் தூண்டுதல் “குறைபாடுகளைக் கொண்ட மனிதனுடைய சட்டங்கள் அதன் நடவடிக்கைகளில் மிகவும் அடிக்கடி ஏற்படுத்துகின்ற வரம்புகடந்த நூறு தடைகளையும் கூட எதிர்த்துச் சமாளிக்கும்…” (1) தகுதியைக் கொண்டது. மனிதனின் “இயற்கையான சுதந்திரத்தைக்” கட்டுப்படுத்துகின்ற, வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும், வாடகைக்கு விடுவதற்கும் வேலைக்குச் சேர்த்துக் கொள்வதற்கும், உற்பத்தி செய்வதற்கும் நுகர்வு செய்வதற்கும் மனிதனுடைய சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகின்ற வாணிப ஊக்கக் கொள்கையை ஸ்மித் இங்கே தாக்குகிறார்.

படிக்க :
♦  நான் பிறந்தபோது இந்தியா என்ற நாடில்லை பாகிஸ்தானுமில்லை பங்களாதேசுமில்லை !
கனமாகப் பஞ்சு வைத்து கிழியாதபடி தைத்த மேல்கோட்டுத்தான் அவனது தோழி !

ஒவ்வொரு தனி நபரும் தன்னுடைய மூலதனத்தை அதன் உற்பத்திக்கு அதிகமான மதிப்பு ஏற்படும் வகையில் உபயோகிக்க முயற்சி செய்கிறார் (ஸ்மித் பொதுவாக மனிதனைப் பற்றிப் பேசவில்லை, அடிப்படையில் முதலாளியைப் பற்றியே பேசினார் என்பதை நாம் காண முடியும்). வழக்கமாகவே பொது நன்மையைப் பற்றி அவர் சிந்திப்பதில்லை, தான் அதை எந்த அளவுக்கு ஊக்குவிக்கின்றோம் என்பதையும் உணர்ந்து கொள்வதில்லை. அவருடைய கருத்தில் தன்னுடைய சொந்த லாபம் மட்டுமே இருக்கின்றது; ஆனால் “அவருடைய உள்ளக் குறிப்பில் இடம் பெறாத ஒரு நோக்கத்தை நிறைவேற்றுமாறு காண முடியாத கரம் (அழுத்தம் கொடுத்திருப்பது நான்-ஆ-ர்) அவரை இட்டுச் செல்கிறது… அவர் தன்னுடைய சொந்த லாபத்துக்காகப் பாடுபடுவதன் மூலம் சமூக நலனை ஊக்குவிக்க உண்மையாகவே முடிவு செய்தால் ஏற்படுவதைக் காட்டிலும் அதிகமான பயனோடு அநேகமாக பெரும்பாலும் அதை ஊக்குவிக்கிறார்”. (2) 

இங்கே ”காண முடியாத கரம்’ என்பது புறவயமான பொருளாதார விதிகள் தாமாகவே இயங்குவதாகும். இந்த விதிகள் மனிதனுடைய விருப்பத்துக்குச் சம்பந்தமில்லாத வகையில், அடிக்கடி அதற்கு எதிராக இயங்குகின்றவையாகும். இந்த விஞ்ஞானத்தில் இத்தகைய வடிவத்தில் பொருளாதார விதிகளைப் பற்றிய கருதுகோளை அறிமுகம் செய்ததன் மூலம் ஸ்மித் முன்னேற்றப் பாதையில் முக்கியமான காலடி எடுத்து வைத்தார். அவர் அரசியல் பொருளாதாரத்தை விஞ்ஞான அடிப்படையில் ஏற்படுத்தினார். சுயநலனும் பொருளாதார வளர்ச்சியின் இயற்கையான விதிகளும் மிகவும் வெற்றிகரமாக இயங்கக் கூடிய நிலைமைகளை ஸ்மித் “இயற்கையான அமைப்பு” என்று குறிப்பிட்டார்.

ஸ்மித்துக்கும் அடுத்து வருகின்ற தலைமுறைகளைச் சேர்ந்த அரசியல் பொருளியலாளர்களுக்கும் இந்தக் கருதுகோள் இரட்டை அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கத்தில் இது பொருளாதாரக் கொள்கையின் கோட்பாடாகவும் இலட்சியமாகவும் இருந்தது. அந்தக் கொள்கை உற்பத்தி சுதந்திரமாகும் (அடுத்துவரும் பகுதியைப் பார்க்கவும்). மறுபக்கத்தில் அது ஒரு தத்துவ ரீதியான அமைப்பாகவும் இருக்கிறது, பொருளாதார யதார்த்தத்தை ஆராய்வதற்கான “மாதிரிப் படிவமாக” இருக்கிறது.

பௌதிகத்தில் இலட்சிய வாயு, இலட்சிய நீர்மம் பற்றிய சூக்குமமான கருதுகோள்கள் அறிவைப் பெறுவதற்குப் பொருத்தமான வழியாகப் பயன்படுத்தப்படுகின்றன. உண்மையான வாயுக்களும் நீர்மங்களும் “இலட்சியத் தன்மையோடு” நடந்து கொள்வதில்லை அல்லது சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே அப்படி நடந்து கொள்கின்றன. எனினும் நிகழ்வுகளை “அவற்றின் பரிசுத்தமான வடிவத்தில்” ஆராய்வதற்கு இந்தத் திரிபுகளைப் புறக்கணிப்பது பயனுள்ளதாக இருக்கிறது. அரசியல் பொருளாதாரத்தில் ஓரளவுக்கு “பொருளாதார மனிதன்” மற்றும் சுதந்திர (முழு நிறைவான) போட்டி பற்றிய கருத்தாக்கங்கள் இதைப் போன்றவையே. உண்மையான மனிதனை வெறும் சுயநலம் என்று வகைப்படுத்திவிட முடியாது. இதைப் போல, முதலாளித்துவத்தின் கீழ் முற்றிலும் சுதந்திரமான போட்டி என்பது ஒருபோதும் இருந்ததில்லை, அப்படி இருக்கவும் முடியாது.

எனினும் இந்த விஞ்ஞானம் இப்படிப்பட்ட சில அனுமானங்களைச் செய்து கொள்ளாமல் பெருந்திரளான அளவில் நடைபெறுகின்ற பொருளாதார நிகழ்வுகளையும் நிகழ்வுப் போக்குகளையும் ஆராய முடியாது. ஏனென்றால் இந்த அனுமானங்கள் முடிவில்லாத அளவுக்குப் பன்முகத் தன்மையும் வேறுபாடுகளும் கொண்ட யதார்த்தத்தை எளிமைப்படுத்தி மாதிரிப் படிவமாக்குகின்றன, அதிலடங்கியிருக்கும் முக்கியமான கூறுகளுக்கு அழுத்தம் கொடுத்து வலியுறுத்துகின்றன. இந்தக் கருத்து நிலையிலிருந்து பார்க்கும் பொழுது “பொருளாதார மனிதன்” மற்றும் சுதந்திரமான போட்டி பற்றிய கருத்தாக்கங்கள் முற்றிலும் நியாயமானவையாகும், அவை பொருளாதார விஞ்ஞானத்தில் முக்கிய மானபாத்திரத்தை வகித்தன. 18, 19-ம் நூற்றாண்டுகளில் முதலாளித்துவத்தின் உண்மையான இயல்புக்கு அவை குறிப்பாகப் பொருந்திவந்தன.

மார்க்சியப் பொருளாதாரத் தத்துவத்திலிருந்து இரண்டு உதாரணங்களை மேற்கோள் காட்டுவோம்.

தனிச் சொத்துரிமையை ஆதாரமாகக் கொண்ட பண்டப் பொருளாதாரத்தில் உற்பத்தியின் தூண்டுவிசையாகவும் தானாகவே ஒழுங்குபடுத்துகின்ற சக்தியாகவும் மதிப்பு விதி இயங்குகின்றது. உதாரணமாக, ஏதாவதொரு தொழில்நுட்ப அபிவிருத்தியின் காரணமாக ஒரு பண்ட உற்பத்தியாளர் ஒவ்வொரு பண்ட அலகையும் உற்பத்தி செய்வதற்குரிய உழைப்பு நேரச் செலவைக் குறைத்துவிடுவதாக வைத்துக்கொண்டால் பண்டத்தின் தனிப்பட்ட மதிப்பு குறைந்துவிடும்; ஆனால் மற்ற எல்லா அம்சங்களும் சமமாக இருக்குமானால், உழைப்பு நேரத்தின் சராசரியான சமூகச் செலவால் நிர்ணயிக்கப்படுகின்ற சமூக மதிப்பு குறைவது கிடையாது. திறமையுள்ள பண்ட உற்பத்தியாளர் தன்னுடைய பண்டத்தின் ஒவ்வொரு அலகையும் அதன் முந்திய விலைக்கு கோட்பாட்டளவில் முந்திய விலையை நிர்ணயிப்பது அதன் சமூக மதிப்பு விற்பனை செய்து கூடுதலான வருமானத்தைப் பெறுவார். ஏனென்றால் அவர் ஒரு உழைப்பு நாளில் மற்ற எல்லோரையும் விட 25 சதவிகிதம் அதிகமான பண்ட அலகுகளை உற்பத்தி செய்வார் எனலாம். அவரோடு போட்டியிடுகின்ற பண்ட உற்பத்தியாளர்கள் இந்தப் புதிய தொழில் நுட்பத்தைப் பின்பற்றுவதற்கு முயற்சிப்பார்கள் என்பது தெரிந்ததே. “தொழில் நுட்ப முன்னேற்றத்தைத் தூண்டுதல்” என்ற அமைப்பியலின் முதல் கோட்பாடு இதுவே. தானாகவே செயல்படும் காரணிகளின் இயங்கு முறையை நாம் வர்ணித்தோம். இவை மனிதனுடைய விருப்பத்திலிருந்து தனித்து நிற்பவை. இவை பண்டத்தின் ஒவ்வொரு அலகையும் உற்பத்தி செய்வதற்குத் தேவையான சமூகத்துக்கு அவசியமான உழைப்பு நேரச் செலவைக் குறைத்து அவற்றின் சமூக மதிப்பு கீழே இறங்கும்படி செய்கின்றன. இங்கே பண்ட உற்பத்தியாளர் தன்னுடைய வருமானத்தை உச்ச அளவுக்குக் கொண்டு போக விரும்புகின்ற நபராக, ”பொருளாதார மனிதனாக” இயங்குகிறார். இது சுதந்திரமான போட்டிச் சூழ்நிலைகளில் நடைபெறுகிறது.

படிக்க :
♦ கீழைக்காற்று வெளியீட்டகத்தின் புதிய நூல்கள் அறிமுகம் !
♦ அகமதாபாத் : NSUI மாணவர்களைத் தாக்கிய ABVP குண்டர்கள் !

அடுத்த உதாரணம் சுதந்திரமான முதலாளித்துவப் போட்டியில் சராசரி லாப விகிதத்தின் உருவாக்கத்தைப் பற்றியதாகும். ஏதாவதொரு நீண்ட காலப் பகுதியில் தொழிலின் வெவ்வேறு துறைகளில் லாப விகிதம் கணிசமான அளவுக்கு வெவ்வேறாக இருப்பதைக் கற்பனை செய்யமுடியாது. லாப விகிதத்தைச் சரிமட்டமாக்குவது ஒரு புறவயத் தேவையாகும். இந்தச் சரிமட்டமாக்குதலைச் செய்கின்ற அமைப்பு வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையே உள்ள போட்டியும் குறைவான லாபவிகிதம் உள்ள பிரிவுகளிலிருந்து அதிகமான லாபவிகிதம் உள்ள பிரிவுகளுக்கு மூலதனம் பாய்வதுமாகும். இங்கே முதலாளி ஒரு கோணத்திலிருந்து லாபத்தைப் பெறுவதற்கான முயற்சியின் உருவகம் என்பதாக மட்டுமே பார்க்கப்படுகிறார் என்பது தெளிவாகும். மூலதனம் தங்குதடையில்லாமல் பாய்வதற்கான சாத்தியத்தைப் பற்றிய நிபந்தனை சுதந்திரமான போட்டியைப் பற்றிய நிபந்தனையைப் போன்றது தான். உண்மையில் மூலதனத்தின் சுதந்திரமான பாய்ச்சலைக் கட்டுப்படுத்துகின்ற கூறுகள் எப்போதுமே இருந்து வந்திருக்கின்றன, மார்க்ஸ் அவற்றை நன்கு அறிந்திருந்தார். ஆனால் அந்த மாதிரியை “அதன் இலட்சிய வடிவத்தில்” ஆராய்ந்த பிறகு தான் அதற்குள் இக்கூறுகளை நுழைக்க வேண்டும்.

முதலாளி என்பவர் மூலதனத்தின் உருவகம் என்று மார்க்ஸ் கூறினார். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் ஒரு தனிப்பட்ட முதலாளியின் சொந்த குணங்கள் அரசியல் பொருளாதாரத்துக்கு எத்தகைய முக்கியத்துவமும் கொண்டிருக்க முடியாது. அவர் மூலதனத்தின் சமூக உறவுகளை எடுத்துரைக்கின்றார் என்பதால், அந்த அளவுக்கு மட்டுமே அந்த விஞ்ஞானம் அவரைப் பற்றி அக்கறை எடுத்துக் கொள்கிறது. இங்கே மார்க்சுக்கும் ஸ்மித்தின் கருத்துக்களுக்கும் ஒரு வகையான உறவை நாம் உணர முடிகிறது. ஆனால் முடிவு முற்றிலும் வேறுவிதமாக இருக்கிறது. முதலாளி தன்னுடைய சுயநலத்துக்காகப் பாடுபடுகின்ற பொழுது தன்னை அறியாமலேயே முதலாளித்துவத்தைப் பலப்படுத்துவதாக ஸ்மித் கருதுகிறார்.

ஆனால் மார்க்சின் முடிவு இப்படி இருந்தது: முதலாளி அதே போக்கில் இயங்குவதன் மூலம் முதலாளித்துவத்தின் உற்பத்திச் சக்திகளை வளர்ப்பது மட்டுமல்லாமல், புற நிலையில் அதன் தர்க்க ரீதியான வீழ்ச்சியையும் தயாரிக்கிறார். இதனோடு தொடர்புடைய வேறோரு அடிப்படையான வேறுபாடும் இருக்கிறது. மார்க்ஸ் மனிதனை ஒரு நீண்ட வரலாற்று ரீதியான வளர்ச்சியின் உற்பத்திப் பொருள் என்ற அடிப்படையில் வரலாற்றுப் பொருள்முதல் வாதத்தின் கருத்து நிலையிலிருந்து ஆராய்கிறார். இந்த மனிதன் அரசியல் பொருளாதாரத்தின் பொருள் என்ற வகையில் ஒரு குறிப்பிட்ட வர்க்க சமூகத்தின் சுற்றுவட்டத்துக்குள் மட்டுமே இருக்கிறான், அதன் விதிகளுக்கு ஏற்ப இயங்குகிறான். எனினும் ஸ்மித்துக்குப் பொருளாதார மனிதன் என்பது மனித இயல்பின் இயற்கையான தன்மையின், எக்காலத்துக்கும் உரிய தன்மையின் வெளியீடாகும். மனிதன் வளர்ச்சியினால் ஏற்பட்ட விளைவல்ல, அந்த வளர்ச்சியில் திருப்பு முனையாக இருக்கிறான். மனித இயல்பைப் பற்றிய இந்தக் கருத்து வரலாற்றுக்கு அப்பாற்பட்டது என்பதால் போலியான கருத்தாகும். ஆனால் ஸ்மித் காலத்தைச் சேர்ந்த சிறப்புமிக்க எல்லாச் சிந்தனையாளர்களும், குறிப்பாக ஹெல்வெடியசும் இந்தக் கருத்தைக் கொண்டிருந்தார்கள்; அவர்களோடு சேர்ந்து ஸ்மித்தும் இந்தக் கருத்துடையவராக இருந்தார்.

“பொருளாதார மனிதன்” என்ற கருதுகோளை உருவாக்கியதன் மூலம் தத்துவ ரீதியிலும் செய்முறையிலும் அதிகமான முக்கியத்துவம் கொண்ட ஒரு பிரச்சினையை ஸ்மித் எழுப்பினார். மனிதனுடைய பொருளாதார நடவடிக்கையின் நோக்கங்கள் என்ன? அதன் தூண்டுதல் எது என்பவை அந்தப் பிரச்சினையாகும். அவர் குறிப்பிட்ட “இயற்கையான மனிதன்” என்பவன் முதலாளித்துவ சமூகத்தின் உண்மையான மனிதனுடைய மாறு வேடத்தில் இருப்பதைக் கருத்தில் கொள்ளும் பொழுது, அவர் இந்தக் கேள்விகளுக்குக் கொடுத்த பதில் அவர் காலத்துக்கு ஆழமானது, பலன் மிக்கது என்பது தெரியும்.

சோஷலிசம் விஞ்ஞானத் தத்துவம் என்ற நிலையிலிருந்து சமூக பொருளாதார நடைமுறை என்ற நிலைக்கு மாறிய பொழுது, நோக்கங்களையும் தூண்டுதலையும் பற்றிய இந்தப் பிரச்சினை அங்கும் ஏற்பட்டது. முதலாளித்துவம் வீழ்ச்சியடைந்து மனிதனை மனிதன் சுரண்டுகிற நிலை முற்றிலும் ஒழிக்கப்பட்டதும் மனிதனுடைய பொருளாதார நடவடிக்கைகளுக்கு முதலாளித்துவத் தூண்டுதலும் ஒழிந்தது.

கடைசியாகப் பார்க்கும் பொழுது, பணக்காரனாக வேண்டும் என்று மக்களிடம் ஏற்படுகின்ற ஆசையே முதலாளித்துவ உற்பத்தியை இயக்குகின்றது என்று ஆடம் ஸ்மித் கூறினார்; அந்த ஆசைக்குப் பதிலாக இப்பொழுது ஏற்பட்டிருக்கும் தூண்டுதல் என்ன? அது சோஷலிஸ்ட் உணர்வு, உழைப்பில் உற்சாகத்தைக் காட்டுதல், தேசபக்தி ஆகியவை மட்டும் தானா? ஏனென்றால் அங்கே முதலாளிகள் இல்லை, வயல்களும் தொழிற்சாலைகளும் மக்களுக்குச் சொந்தம், மக்கள் தங்களுக்காகவே உழைக்கிறார்கள்…

ஆம், வேலைக்கும் உழைப்புக்கும் சோஷலிசம் புதிய வன்மையான தூண்டுதல்களை உற்பத்தி செய்கிறது. முதலாளித்துவத்தின் மீது சோஷலிசத்துக்குள்ள மாபெரும் சாதகம் இதுவே. எனினும் இந்தத் தூண்டுதல்கள் சூனியத்திலிருந்து உருவாகிவிடவில்லை; சமூகத்திலும் மக்களிடமும் சோஷலிச மாற்றம் ஏற்படுகிற பொழுது, அவர்களுடைய உளவியல், அறப் பண்புகள், உணர்வு ஆகியவை அந்த மாற்றத்துக்கு உட்படும் பொழுது இந்தத் தூண்டுதல்கள் வளர்ச்சியடைகின்றன. உழைப்புக்குத் தகுந்த வினியோகம் என்ற கோட்பாடு இயங்குகின்ற சமூகத்தில் பொருளாயத நலன் உழைப்புக்கு மிக முக்கியமான தூண்டுதலாக இருப்பது சரியானதே. லெனினுடைய கருத்துக்களை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பொருளாதாரக் கணக்கியல் கோட்பாடுகள் சோஷலிஸ்ட் பொருளாதார நிர்வாகத்தின் முக்கியமான முறையாகியிருக்கின்றன. சோவியத் யூனியனில் சமீப வருடங்களில் நிறைவேற்றப்பட்டிருக்கும் பொருளாதார சீர்திருத்தம் வளர்ச்சியடைந்த சோஷலிஸ்ட் சமூகம் என்ற புதிய நிலைமைகளில் இந்தக் கோட்பாடுகளை வளர்த்துச் சென்றிருக்கின்றது.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

 (1) A. Smith, The Wealth of Nations, Vol. II, London, 1924, p. 40.
 (2)  Ibid., Vol. 1, p. 400.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க