புதிய வெளியீடுகள் :

காவி – கார்ப்பரேட் பிடியில் சித்த மருத்துவம்

ந்திய ஒன்றியத்தின் பல்வேறு தேசிய இனங்கள் தத்தம் தனித்த தேசிய வளங்களுடன், அது சார்ந்த சமூக, பொருளியல் மற்றும் பண்பாட்டு உறவுகளுடன் இயங்கி வருகின்றன. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நகர நாகரீகம் கண்டு தழைத்தோங்கிய தமிழ்ச் சமூகம் அதன் ஊடாக மொழி, கல்வி, மருத்துவம், இலக்கியங்கள், அறிவியல், அறம் என தேர்ந்த பட்டறிவின் மூலம் பல்வேறு துறைகளில் பல நிலை முன்னேற்றத்தை கண்ட இனமாக இருந்தது என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம்.

தமிழினத்தின் முதன்மையான அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் நம் சித்த மருத்துவமும் இதையே பறைசாற்றுகிறது. இந்திய ஒன்றியத்தில் தனக்கென ஒரு தனி மருத்துவத்தைக் கடுமையான பார்ப்பனிய ஊடுருவலைத் தாண்டி, தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதில் தமிழ்ச் சமூகம் தனிச்சிறப்பை பெற்றிருக்கின்றது. “உணவே மருந்து, மருந்தே உணவு” என்ற வாழ்வியல் மருத்துவ அறநெறியை தனது மருத்துவத்தின் தனித்தன்மையாகக் கொண்டிருகின்ற சித்த மருத்துவம் எனும் தமிழ் மருத்துவம் இன்று எப்படி படிப்படியாக, கார்ப்பரேட் நலன்களுக்கு சமஸ்கிருதத்தின் வழி பலியிடப்படுகிறது என்பதை இந்நூல் சரியாக அம்பலப்படுத்துகிறது. ‘தமிழ்ச் சமூகம்’ எப்படி வாழ்ந்தது என்பதைவிட என்னவாக இருக்கின்றது என்ற பார்வையும், அதற்கான அரசியலும் மிக அவசியமானது.

முடக்கப்பட்டு வரும் தமிழ் மருத்துவத்தைக் காப்பதற்கு மருத்துவத்தைத் தொடர்ந்து நாசமாக்கி வரும் கார்ப்பரேட் காவி கட்டமைப்பை எதிர்த்து களம் காண்பதற்கு இந்நூல் ஒரு கருவியாகப் பயன்படும் என உறுதியாக நம்புகிறேன். இந்நூலை வெளிக்கொண்டு வந்திருக்கின்ற பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவிற்கு (நெல்லை) எனது வாழ்த்துக்கள். (தொ. பரமசிவன், (மேனாள் தமிழ் துறைத் தலைவர், ம. சு. பல்கலைக்கழகம், திருநெல்வேலி), அவர்கள் எழுதியுள்ள மதிப்புரையிலிருந்து…)

மருந்து நிறுவனங்கள் நோய்களுக்கான மருந்துகளை தயாரிப்பதற்கான அடிப்படை மூலக்கூறுகளை இயற்கையிடமிருந்தே பெறுகின்றன. அவற்றைத் தன்னுடையச் சொத்தாக அறிவுசார் சொத்துடைமைச் சட்டத்தின் மூலம் பாதுகாத்துக் கொள்வதின் வாயிலாகக் கொள்ளை லாபம் ஈட்டுகின்றன. பல நூற்றாண்டுகளாக மனித சமூகம் இயற்கையுடன் நடத்திய போராட்டத்தின் மூலமும் நோய்களுக்கான சரியான மருந்துகளையும் உணவு முறைகளையும் கண்டறிவதற்கான போராட்டத்தின் மூலமும் பெற்ற அறிவை சித்த மருத்துவம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகள் பாதுகாத்து வைத்துள்ளன. அதனை நவீன அறிவியல் – தொழில்நுட்ப உதவியுடன் ஆராய்ந்து பெரும்பான்மை மக்களுக்கானதாக்க முடியும். எதார்த்தத்திலோ இந்திய மருத்துவச் சந்தை ஏகாதிபத்தியங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. சித்த மருத்துவமோ பார்ப்பனிய மேலாதிக்கத்தினால் தொடர்ந்து நசுக்கப்பட்டு கொண்டே வருகிறது. இந்தக் கார்ப்பரேட் – காவி கூட்டுப் பிடியிலிருந்து சித்த மருத்துவம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவத்தை மீட்பதென்பது பெரும்பான்மை மக்களுக்கான தரமான மருத்துவக் கட்டமைப்பை உருவாக்குவதில் ஒரு முக்கியப் பணியாகும். இவ்வகையில் இந்நூல் சித்த மருத்துவம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளும் இந்திய மருத்துவ சந்தையும் கார்ப்பரேட்- காவிக் கும்பலின் பிடியில் சிக்கியுள்ளது எவ்வாறு? என்பது பற்றிய கண்ணோட்டத்தை வாசகர்களுக்கு உருவாக்கும் என்று நம்புகிறோம்.

படிக்க :
சென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் !
கீழைக்காற்று வெளியீட்டகத்தின் புதிய நூல்கள் அறிமுகம் !

இந்நூலின் முதற்பகுதியில் இந்திய மருத்துவச் சந்தையை ஏகாதிபத்தியங்கள் கட்டுப்படுத்துவது குறித்து விளக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பகுதி சித்த மருத்துவம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவம் எவ்வாறு பார்ப்பனியமாக்கப்படுகிறது என்பதை விளக்குகிறது. இறுதியில் 1920, 1955-ம் ஆண்டுகளில் சித்த மருத்துவம் குறித்து பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நூல் உருவாக்கத்திற்கு உறுதுணையாய் இருந்த பேராசிரியர்கள் மற்றும் நண்பர்களுக்கு CCCE-ன் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். (நூலின் பதிப்புரையிலிருந்து…)

பக்கங்கள் : 32
விலை: ரூ.25.00


நவீன காலனியாதிக்கத்தின் தோற்றம் !

காதிபத்திய காலனியாதிக்கத்தின் சூறையாடலுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் உலகெங்கும் தீவிரமடைந்து வரும் சூழலில், நவீன காலனியாதிக்கத்தைப் பற்றிய தொகுப்பான புரிதல் நமக்கு அவசியமாகியுள்ளது. இதற்கு உதவும் வகையில், மார்க்சிய அரசியல் – பொருளாதாரக் கண்ணோட்டத்தில், ஏகாதிபத்தியத்தின் நவீன காலனியாதிக்கத்தைப் பற்றி தோழர் பி.ஜே. ஜேம்ஸ் “நவீன காலனியக் கட்டத்தில் ஏகாதிபத்தியம்” (Imperialism in the Neo colonial Phase)  என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

இந்நூலின் முதல் அத்தியாயமான, நவீன காலனியாதிக்கத்தின் தோற்றம்” (Genesis of Neo colonialism) என்ற பகுதியை மட்டும் மொழியாக்கம் செய்து வெளியிடுகிறோம். இப்பகுதியைத் தமிழில் வெளியிட ஒப்புதல் அளித்த மாஸ் லைன் பதிப்பகத்தாருக்கு (Massline Publication) எமது நன்றி.

தோழர் ஜேம்ஸ் எழுதியுள்ள இந்நூலின் முதல் அத்தியாயமானது, நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவமும், முதலாளித்துவத்திலிருந்து ஏகாதிபத்தியமும் காலனியாதிக்கமும் வளர்ச்சியடைந்துள்ளதைப் பற்றி வரலாற்று ரீதியாகவும் கோட்பாட்டு ரீதியாகவும் விரிவாகத் தொகுத்தளிக்கிறது. தலைமை தாங்கும் ஏகாதிபத்திய வல்லரசாக வளர்ந்துள்ள அமெரிக்காவின் காலனியாதிக்கக் காட்டுமிராண்டித்தனங்களையும், உலகையே அடிமைப்படுத்திவரும் நிதி மூலதனம் மற்றும் நிதியாதிக்கக் கும்பல்களின் வளர்ச்சியையும் விளக்குவதோடு, சமூக – பொருளாதாரக் கட்டமைப்பு என்ற வகையில் முதலாளித்துவத்தின் தோல்வியையும், கீனிசியவாதம் உள்ளிட்ட அதன் சித்தாந்த – கோட்பாட்டு ஓட்டாண்டித்தனத்தையும் அம்பலப்படுத்திக் காட்டுகிறது. முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், காலனியாதிக்கம் பற்றியும், அவற்றின் இரத்தம் தோய்ந்த வரலாறையும் கற்றறிய முயற்சிக்கும் இளைய தலை முறையினருக்கு, ஒருங்கிணைந்த கண்ணோட்டத்தைத் தரும் ஒரு பாடப்புத்தகம் போல இந்த அத்தியாயம் எளிமையாக விளக்குகிறது.

ஏகாதிபத்தியத்துக்கும் நவீன காலனியாதிக்கத்துக்கும் எதிராகப் போராடிவரும் புரட்சிகர – ஜனநாயக சக்திகளுக்கு இந்நூல் பெரிதும் பயனளிக்கும் என்று நம்புகிறோம். (நூலுக்கான பதிப்புரையிலிருந்து…)

தோழர் பி.ஜே.ஜேம்ஸ், தற்போது இ.பொ.க. (மா-லெ), ரெட் ஸ்டார் குழுவின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக இயங்கி வருகிறார். இதற்குமுன் அவர் பொருளாதாரத் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். கேரளத்தின் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் கல்விச்சாலையில் அவர் முனைவர்ர பட்டம் பெற்றுள்ளார். ”நேரு முதல் ராவ் வரை: இந்தியாவில் நவீன காலனியாதிக்கத்தின் நிகழ்முறை” (1995), ”உலகளாவிய நிதி ஒதுக்கலும் அரசுசாரா நிறுவனங்களின் வலைப்பின்னலும்: செயல்முறைத் திட்டத்தின் உண்மையான பணி” (2004) ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ரெட் ஸ்டார் இதழில் தொடர்ந்து அரசியல் – பொருளாதார – சித்தாந்தக் கட்டுரைகளை எழுதி வருகிறார். (நூலாசிரியரை பற்றிய அறிமுகக் குறிப்பிலிருந்து…)

(அச்சில்… விரைவில் விற்பனைக்கு)


சென்னை புத்தகக்காட்சியில் கீழைக்காற்று !

நாள் : 09.01.2020 முதல் 21.01.2020 வரை
நேரம் : வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 மணி
விடுமுறை நாட்கள் : முற்பகல் 11 – இரவு 9 மணி
இடம் : ஒய்.எம்.சி.ஏ. உடற் கல்வியியல் கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை–35

கடை எண் : 182, 183

அனைத்து முற்போக்கு நூல்களும் ஒரே கூரையின் கீழ் உங்களுக்காக காத்திருக்கிறது …

புதிய முகவரி :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க