Wednesday, April 16, 2025
முகப்புசெய்திஇந்தியாCEO - வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம் |...

CEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம் | ஆக்ஸ்ஃபாம் அறிக்கை !

இந்தியாவில் நிலவும் பாலின பாகுபாடு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதான உழைப்புச் சுரண்டல் குறித்தும் இந்த அறிக்கை பல திடுக்கிடும் உண்மைகளை அம்பலப்படுத்துகிறது.

-

“அக்கறை செலுத்த வேண்டிய நேரமிது” என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையை உலக பொருளாதார மன்றத்தின் 50-வது ஆண்டுக் கூட்டத்தில் ஆக்ஸ்ஃபாம் என்ற உரிமைகள் அமைப்பு வெளியிட்டது.

ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் இக்கூட்டத்தில் வெளியிடப்படும் ஆக்ஸ்ஃபாம் அறிக்கைகள் முக்கியத்துவமுடையவையாகக் கருதப்படுகின்றன. உலக அளவிலும், ஒவ்வொரு நாடுகளின் அளவிலும் நிலவும் சமத்துவமின்மையையும், பொருளாதார நிலைமைகளையும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த ஆண்டு வெளியிடப்பட்டிருக்கும் இந்த அறிக்கையின்படி, உலக அளவில் பில்லியனர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இருக்கும் முதல் 2153 பில்லினியர்களிடம் (100 கோடி டாலர் மற்றும் அதற்கும் அதிகமான சொத்துடையவர்கள்) இருக்கும் சொத்து மதிப்பு, உலகில் இருக்கும் ஏழ்மையான 60% மக்கள் தொகையினரிடம் – அதாவது சுமார் 460 கோடி பேரிடம் உள்ள சொத்துக்களின் மதிப்பை விட அதிகமாக இருக்கிறது.

உலகப் பணக்காரர்களின் பட்டியலில் முதல் 22 பணக்காரர்களின் சொத்து மதிப்பு, ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவில் உள்ள பெண்கள் அனைவரிடமும் உள்ள சொத்துக்களின் மதிப்பை விட அதிகமானதாக இருப்பதாகத் தெரிவிக்கிறது இந்த அறிக்கை.

இந்தியாவின் நிலைமைகளைப் பற்றியும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தியாவின் அனைத்து பில்லினியர்களின் சொத்துக்களின் மதிப்பைக் கூட்டினால், அத்தொகை இந்திய அரசு போடும் ஆண்டு பட்ஜெட்டை விட அதிகமானது.

அதே போல இந்தியாவின் சொத்துமதிப்பு வரிசைப் பட்டியலில் முன்னணியில் இருக்கும் 1% பணக்கார இந்தியர்களிடம் இருக்கும் சொத்து, இந்தியாவில் ஏழ்மை நிலையில் இருக்கும் 70% மக்களின் சொத்துக்களை விட 4 மடங்கு அதிகமாக இருக்கிறது.

படிக்க :
ஆக்ஸ்ஃபாம் அறிக்கை : இந்திய பட்ஜெட்டோடு போட்டி போடும் பில்லியனர்கள் !
தொடர் பஞ்சம் – வறுமை : ஆப்பிரிக்க கொம்பு நாடுகளைக் கைவிடும் அமெரிக்கா | படக் கட்டுரை

அதாவது சராசரியாக 80 கோடி மக்களின் சொத்துக்களுக்கு நிகரான சொத்தை விட 4 மடங்கு அதிகமான சொத்தை 1.2 கோடி பேர் வைத்துள்ளனர். இந்த மிகப்பெரும் இடைவெளி, இந்தியாவில் நிலவும் மிகப்பெரிய ஏற்றத் தாழ்வையும், அடித்தட்டு மக்கள் சுரண்டப்படும் அளவையும் பகிரங்கமாக கோடிட்டுக் காட்டுகிறது.

மேலும், இந்திய பில்லினியர்களில் முதல் 63 பேரின் மொத்த சொத்து மதிப்பானது, மத்திய அரசின் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தொகையாகிய ரூ. 24,42,200 கோடியை விட அதிகம்.

இத்தகைய புள்ளிவிவரங்களோடு, நாளுக்குநாள் பெருகிவரும் பொருளாதார ஏற்றத்தாழ்வைக் குறித்தும் பேசுகிறது அந்த அறிக்கை.

ஒரு பெரும் கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியின் ஒரு வருடச் சம்பளத்தை, வீட்டு வேலை செய்யும் ஒரு பெண் தொழிலாளர் சம்பாதிக்க 22,277 ஆண்டுகள் தேவைப்படும் என்கிறது இந்த அறிக்கை.

ஒரு நொடிக்கு ரூ. 106 என்ற வகையில் சம்பாதிக்கும் ஒரு தொழில்நுட்ப நிறுவன தலைமைச் செயல் அதிகாரி, வீட்டுவேலை செய்யும் ஒரு பெண்ணின் ஓராண்டு வருமானத்தை வெறும் பத்தே நிமிடத்தில் பெற்றுவிடுகிறார். இந்த ஏற்றத்தாழ்வு  மிகப் பெருமளவில் விரிவடைந்துள்ளது.

இந்தியாவில் நிலவும் பாலின பாகுபாடு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதான உழைப்புச் சுரண்டல் குறித்தும் இந்த அறிக்கை பல திடுக்கிடும் உண்மைகளை அம்பலப்படுத்துகிறது.

இந்தியாவில் ஊதியமளிக்கப்படாமல் குடும்பப் பெண்களின் கடமையாக சுமத்தப்படும் வீட்டுவேலை மற்றும் பணிவிடை வேலைகளைச் செய்துவரும் பெண்களும் பெண் குழந்தைகளும், ஒவ்வொரு நாளும் மொத்தமாக 3.26 பில்லியன் மணி நேரங்கள் (326 கோடி மணிநேரங்கள்) இலவச உழைப்பை சமூகத்துக்குச் செலுத்தி வருகின்றனர்.

பெண்கள் செய்துவரும் இந்த இலவசப் பணிக்கு முறையான ஊதியமளிக்கப்பட்டால், அது இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம் சுமார் ரூ. 19 லட்சம் கோடி அளவிற்குப் பங்களிக்கும். இது 2019-ம் ஆண்டில், இந்தியாவின் ஒட்டுமொத்தமாக கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும் 20 மடங்கு அதிகமான தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஆக்ஸ்ஃபாம் இந்தியாவின் தலைவர், அமிதாப் பெஹர் கூறுகையில், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இந்தப் பெரும் இடைவெளியை, சமனற்ற தன்மையை ஒழிக்கவல்ல கொள்கைகள் இன்றி சாத்தியமில்லை என்கிறார்.

அமிதாப் பெஹர் கூறுவது போல அப்படி ஒரு கொள்கையை தற்போது இருக்கும் எந்த ஒரு நாட்டின் அரசாங்கமும் முன்வைக்கப் போவதில்லை. நிலவும் முதலாளித்துவ பொருளாதாரக் கட்டமைப்பில், அப்படி ஒரு திட்டத்தை முன் வைக்க சாத்தியமே இல்லை.

படிக்க :
”இருப்பதைப் பிரித்துக் கொடு” என்பது இந்த நாட்டின் தேசிய கீதமாக வேண்டும் | அருந்ததிராய்
ஆக்ஸ்ஃபாம் சர்வே : ஏழை இந்தியாவை ஒழிக்கும் பணக்கார இந்தியா !

அமிதாப் பெஹர் இது இந்திய நிலைமைகள் குறித்து மேலும் பேசுகையில், “தற்போதைய பொருளாதார அமைப்பில் பெண்கள்தான் மிகவும் குறைவான அளவிற்கு நலன்களைப் பெறுபவர்கள்; அவர்கள் பில்லியன்கணக்கான மணிநேரங்களை சமைத்தல், துவைத்தல், குழந்தைகளையும் முதியோர்களையும் பராமரித்தல் ஆகிய பணிகளில் செலவிடுகின்றனர். இவர்களது இந்த ஊதியமற்ற உழைப்புதான் நமது பொருளாதாரத்தையும், தொழில் மற்றும் சமூகத்தையும் முன்நகர்த்திச் செல்லும் மறைமுக இயங்குகலன்களாக இருக்கின்றன.” என்றார்.

இந்த அறிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அம்பலப்படும் இத்தகைய பொருளாதார ஏற்றத்தாழ்வையும், சுரண்டலையும் கண்டு வெறும் வியப்போடும், குழப்பத்தோடும் கடந்து செல்கிறோம்.

பணம் என்பது வெறுமனே அச்சிடப்படும் ஒரு பொருள் அல்ல. அது சமூகத்திற்கான உற்பத்தியில் பங்கேற்கும் ஒவ்வொருவரின் உழைப்பும் உருவாக்கும் செல்வத்திற்கான ஒரு மாற்றீடு. ஓரிடத்தில் பணம் குவிகிறது என்றால், அது மற்றொரு இடத்தில் இருந்து சுரண்டப்படுகிறது என்றுதானே பொருள். 12 மணிநேரத்திலிருந்து 15 மணிநேரம் வரை சராசரியாக உழைக்கும் நம்மை விடக் குறைவாக உழைக்கும் வெகுசிலரிடம் மட்டும் செல்வம் குவிவது எப்படி ?

அறிந்து கொள்ள :

♦ சிறப்புக்கட்டுரை : மூலதனத்தின் வரலாறும் வரலாற்றில் மூலதனமும்
♦ அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது !
♦ சிறப்புக் கட்டுரை : மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !
♦ மாவோவின் சீனாவில் மக்களை பட்டினியில் தள்ளிய முதலாளித்துவ பாதையாளர்கள்


 நந்தன்

செய்தி : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க