Wednesday, April 16, 2025
முகப்புசெய்திஇந்தியாமோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு !

மோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு !

வருமான வரி ஏய்ப்புச் சட்டம் மற்றும் பண மோசடி தடுப்புச் சட்டம் ஆகியவற்றில், மாற்றங்கள் கொண்டுவரப் போவதாகத் தெரிவித்திருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

-

ந்தியாவை விரைவில் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற பல ‘அதிரடியான’ அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். வருமான வரி ஏய்ப்புச் சட்டம் மற்றும் பண மோசடி தடுப்புச் சட்டம் ஆகியவற்றில் குறிப்பிடப்படும் மோசடிகளைக் குற்றமற்றவையாக மாற்றப் போவதாகத் தெரிவித்திருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சென்னையில் நடைபெற்ற நானி பல்கிவாலா நூற்றாண்டுவிழா கொண்டாட்டங்களில் மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் “5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர்வதற்கான வழித்தடத் திட்டம்” என்னும் தலைப்பில் உரையாற்றினார்.

முதலாளிகளுக்கு சலுகை, மக்களுக்கு அல்வா…!

தனது உரையில் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை அடைய, கார்ப்பரேட் சட்டங்களின் கீழ் நடக்கும் மோசடிகளைக் குற்றமற்றவையாக மாற்றுவது, வரிச் சிக்கல்களை பேசித் தீர்ப்பது, அரசால் நடத்தப்படும் நிறுவனங்களை தனியார்மயப்படுத்தலை துரிதப்படுத்துவது, ஆகிய நடவடிக்கைகளின் மூலம் அரசாங்கம் இந்த இலக்கை அடையும் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே மோடி அரசு, நிறுவனங்கள் சட்டத்தில் முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான பல்வேறு வழிமுறைகளை அடையாளங்கண்டிருந்தது. செய்முறைக் குறைபாடுகளை குற்றமற்றவையாக்குவது, பொது நலனைப் பாதிக்காத விவகாரங்களைக் குற்றமற்றவையாக்குவது ஆகிய நடவடிக்கைகள் அதில் அடங்கும். வியாபாரம் செய்வதை மேம்படுத்துவதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறுகிறது அரசு.

இதற்காக சுமார் 46 தண்டனை விதிகளில் திருத்தங்கள் கொண்டு வரப்படவிருக்கின்றன. குற்றத்தன்மையை நீக்குவது, தண்டனையை வெறும் அபராதம் எனும் அளவுக்கு சுருக்குவது அல்லது மாற்று வழிகளில் சரிசெய்து கொள்ள வாய்ப்பளிப்பது, என்ற வகையில் அவை திருத்தப்படவுள்ளன. இந்த திருத்தங்களை வருமான வரிச் சட்டங்களுக்கும், பண மோசடி சட்டங்களுக்கும் விரிவுபடுத்தவிருக்கிறது மோடி அரசு.

அதாவது 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவதற்காக பண மோசடியையும் வருமான வரி மோசடியையும் அனுமதிக்கத் தயாராக இருப்பதாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வெளிப்படையாக அறிவித்திருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

படிக்க :
பொருளாதார வீழ்ச்சி : மறைக்கும் நிர்மலா ! வீதிக்கு வரும் ஆதாரங்கள் !
♦ நூல் அறிமுகம் : முதலாளிய அமைப்பின் நெருக்கடியும் நம் முன் உள்ள கடமைகளும்

கருப்புப் பணத்தையும், வருமானத்துக்கு அதிகமாக பதுக்கி வைத்துள்ள பணத்தையும் மீட்பதற்காக நம்மை வரிசையில் நிற்கச் சொன்ன அதே மோடி கும்பல், இன்று பணமோசடியை சட்டரீதியாகவே குற்றமற்றதாக மாற்ற எத்தனிக்கிறது.

இந்த 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் இனி எத்தனை வங்கிகள் திவாலாகப் போகின்றன என்பதும் எத்தனை மல்லையாக்களும் நீரவ் மோடிக்களும் தப்பியோடப் போகின்றனர் என்பதும் அந்த நரேந்திர மோடிக்குத் தான் வெளிச்சம் !


 நந்தன்

செய்தி : லைவ் மிண்ட்.