சுதந்திர உற்பத்திக் கொள்கை அல்லது ஸ்மித் குறிப்பிட்டது போல இயற்கைச் சுதந்திரக் கொள்கை என்பது மனிதன், சமூகம் ஆகியவை பற்றிய அவருடைய கருத்துக்களின் நேரடியான வளர்ச்சியாகும். ஒவ்வொரு மனிதனுடைய பொருளாதார நடவடிக்கையும் கடைசியில் சமூகத்தின் நன்மைக்கே அடிகோலுமென்றால் இந்த நடவடிக்கையில் எவ்விதமாகவும் குறுக்கிடக் கூடாது என்பது தெளிவாகும்.
பண்டங்களும் பணமும், மூலதனமும் உழைப்பும் சுதந்திரமாக எங்கும் செல்ல அனுமதிக்கப்பட்டால் சமூகத்தின் செல்வாதாரங்கள் இயன்ற அளவுக்கு அதிகப் பகுத்தறிவுடைய வழியில் உபயோகிக்கப்படும் என்று ஸ்மித் நம்பினார். அவருடைய பொருளாதாரப் போதனையின் முதலும் முடிவும் சுதந்திரமான போட்டி என்பதாகும். நாடுகளின் செல்வம் என்ற புத்தகம் நெடுகிலும் அந்தக் கருத்து காணப்படுகிறது. அவர் மருத்துவர்களுக்கும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கும் மதகுருக்களுக்கும் கூட இந்தக் கோட்பாட்டைக் கையாண்டார். எல்லா மதங்களையும் மதப்பிரிவுகளையும் சேர்ந்த மதகுருக்களுக்கும் தங்களுக்கிடையே சுதந்திரமான போட்டியில் ஈடுபடுகின்ற உரிமையைக் கொடுத்தால், எந்தத் தனிக்குழுவுக்கும் சலுகைகளோ அல்லது ஏகபோக உரிமையோ கொடுக்கப்படவில்லையென்றால், அவர்களால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்கிறார் (அவர்களிடமிருந்து நாம் அதிகமாக எதிர்பார்க்கக் கூடியது இதுவே என்று சாடையாகக் குறிக்கிறார்).
சுதந்திர உற்பத்திக் கோட்பாட்டைக் கண்டு பிடித்தது ஸ்மித்தினுடைய சாதனை அல்ல, ஆனால் அதற்காக முரணில்லாமல் முறையாக வாதாடியது தான் அவருடைய சாதனை. அந்தக் கோட்பாடு பிரான்சில் தோன்றியது என்றபோதிலும், ஒரு ஆங்கிலேயரால் தான் அதன் தர்க்க ரீதியான முடிவுக்கு அதை வளர்த்துக் கொண்டு போக முடிந்தது, பொருளாதாரத் தத்துவத்தின் அடிப்படையாக அதை ஆக்க முடிந்தது. உலகத்திலேயே அதிகமான தொழில் துறை வளர்ச்சி அடைந்த நாடாக முன்னேற்றமடைந்த இங்கிலாந்து இதற்கு முன்பாகவே யதார்த்த ரீதியில் சுதந்திர வர்த்தகத்தின் மீது அக்கறை கொண்டிருந்தது. பிரான்சில் பெரும்பாலும் அறிவு வளர்ச்சியும் மிதவாதமும் கொண்ட பிரபுக்கள் பிஸியோக்ரஸியை ஒரு நவீன பாணியாகக் கருதி ஆதரித்தார்கள்; அவர்களுடைய மோகம் விரைவில் மறைந்தது. ஆனால் இங்கிலாந்தில் ஸ்மித் மீது ஏற்பட்ட “மோகம்” முதலாளிகள் மற்றும் முதலாளித்துவ மயமாகிக் கொண்டிருந்த பிரபுக்களின் நம்பிக்கைச் சின்னமாயிற்று. அடுத்து வந்த நூற்றாண்டு முழுவதிலும் இங்கிலாந்து அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை என்பது ஓரளவுக்கு ஸ்மித்தினுடைய திட்டத்தை அமுல் நடத்துவதாக இருந்தது.
ஸ்மித் உயிரோடிருக்கும் பொழுதே இதற்கான முதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இது சம்பந்தமாக ஒரு வேடிக்கையான கதை சொல்லப்படுவதுண்டு. தம்முடைய வாழ்க்கையின் கடைசிப் பகுதியில் ஸ்மித் மிகவும் பிரபலமானவராக இருந்தார். 1787 -ம் வருடத்தில் அவர் லண்டனுக்கு வந்தபொழுது மிகவும் முக்கியமான ஒரு பிரபுவின் மாளிகைக்குப் போனார். அங்கே வரவேற்புக் கூடத்தில் பிரதம மந்திரி வில்லியம் பிட் உட்பட பலர் உட்கார்ந்திருந்தார்கள். ஸ்மித் உள்ளே நுழைந்ததும் எல்லோரும் எழுந்து நின்றார்கள். ஸ்மித் பேராசிரியருக்குரிய தோரணையில் கையை உயர்த்தி, ”உட்காருங்கள், கனவான்களே!” என்றார். ”இல்லை. நீங்கள் உட்காரும் வரை நாங்கள் நின்று கொண்டிருப்போம்; ஏனென்றால் நாங்கள் அனைவருமே உங்களுடைய சீடர்கள்” என்றார் பிரதம மந்திரி பிட். இது கற்பனையாகக்கூட இருக்கலாம். ஆனால் இந்த சம்பவம் நடந்திருந்தால் ஆச்சரியப்பட முடியாது. வில்லியம் பிட் வர்த்தகத் துறையில் அடுத்தடுத்துச் செய்த சில நடவடிக்கைகள் “நாடுகளின் செல்வம்” புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களோடு உணர்ச்சி ரீதியில் ஒன்றியிருந்தன.
ஸ்மித் தன்னுடைய செயல் திட்டத்தில் அடங்கிய கருத்துக்களை ஒவ்வொன்றாக எங்குமே எடுத்துக் கூறவில்லை, ஆனால் இது கஷ்டமான வேலையல்ல. அவருடைய பார்வையில் சுதந்திரமான உற்பத்தி என்பது நடைமுறையில் பின்வரும் அம்சங்களைக் கொண்டிருக்கிறது.
முதலாவதாக, தொழிலாளர்கள் இடம் பெயர்தலைக் (இந்த வார்த்தை நவீன பொருளாதாரத்தைச் சேர்ந்தது) கட்டுப்படுத்துகின்ற எல்லா நடவடிக்கைகளையும் ரத்துச் செய்ய வேண்டுமென்று அவர் கோரினார். எல்லாவற்றுக்கும் மேலாக, கட்டாயத் தொழில் பயிற்சி, குடியேற்றச் சட்டம் போன்ற நிலப்பிரபுத்துவ மிச்சங்களோடு இது சம்பந்தப் பட்டிருந்தது. இந்தக் கோரிக்கையின் யதார்த்தமான நோக்கம் முதலாளிகளுக்கு நடவடிக்கைச் சுதந்திரத்தை உறுதி செய்வதே என்பது தெளிவு. ஆனால் ஸ்மித் புத்தகத்தை எழுதிய காலத்தை நாம் கவனத்தில் வைக்க வேண்டும்: அன்று பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவத்தினால் இன்னும் துன்பமடைந்து கொண்டிருக்கவில்லை, முதலாளித்துவ வளர்ச்சி போதுமான அளவுக்கு இல்லாததனால்தான் துன்பமடைந்து கொண்டிருந்தது. எனவே ஸ்மித்தின் கோரிக்கை முற்போக்கானதாகும், இரக்கப் பண்புடையது என்று கூடச் சொல்லலாம்.
இரண்டாவதாக, ஸ்மித் நிலத்திலும் முற்றிலும் சுதந்திர வர்த்தகத்தை ஆதரித்தார். பெரிய நிலப் பண்ணைகள் வைத்திருப்பதை அவர் எதிர்த்தார். வாரிசுரிமையாகப் பெறும் நிலச் சொத்தைப் பிரிப்பதைத் தடுக்கும் முந்துபிறப்புரிமைச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டுமென்று அவர் கோரினார். நிலத்தை மிகவும் அதிகமான பொருளாதார உபயோகத்துக்கு யார் பயன்படுத்துவார்களோ அல்லது அதைச் செலாவணிக்குள் கொண்டுவருவதற்கு யார் உடன்படுகிறார்களோ அவர்களுடைய உடைமையாக அது இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். இவை எல்லாமே விவசாயத்தில் முதலாளித்துவ வளர்ச்சி ஏற்படுவதை நோக்கமாகக் கொண்ட கருத்துக்களாகும்.
மூன்றாவதாக, தொழில் துறை மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை அரசாங்கம் ஒழுங்குபடுத்தும் எச்சங்களை ஒழிக்க வேண்டுமென்று ஸ்மித் வற்புறுத்தினார். உள் நாட்டுச் சந்தையில் சில பண்டங்களின் விற்பனை மீது தீர்வை விதிப்பது செலவுத் திட்ட வருமானத்துக்காக இருக்க வேண்டுமே தவிர, பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக இருக்கக் கூடாது என்றார். இங்கிலாந்தில் இதற்கு முன்பாகவே உள்நாட்டில் வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படும் பண்டங்கள் மீது தீர்வை விதிப்பது நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால் ஸ்மித்தின் விமர்சனம் பிரான்சுக்கு மிகவும் பொருத்தமாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.
நான்காவதாக, ஸ்மித் இங்கிலாந்தின் மொத்த அந்நிய வர்த்தகக் கொள்கையையும் நுணுக்கமாக விமர்சித்துவிட்டு சுதந்திரமான அந்நிய வர்த்தகத்துக்கு ஒரு திட்டத்தைத் தயாரித்தார். இதுவே அவருடைய மிக முக்கியமான கோரிக்கையாகும்; அது வாணிப ஊக்கக் கொள்கையை மிகவும் நேரடியாகத் தாக்கியது. 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலத் தொழில் முதலாளிகளின் பதாகையாக இருந்த சுதந்திர வர்த்தக இயக்கம் இவ்விதம் ஆரம்பமாயிற்று.
வழங்கீடுகளின் சமநிலையைக் கட்டாயமாக ஏற்படுத்த முயற்சிப்பது, சில குறிப்பிட்ட பண்டங்களின் ஏற்றுமதி, இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடைகள், மிக அதிகமான
இறக்குமதித் தீர்வைகள், ஏற்றுமதிக்கு நிதியுதவிகள் மற்றும் ஏகபோக வர்த்தக உரிமை கொண்ட கம்பெனிகள் ஆகிய வாணிப ஊக்கக் கொள்கையினரின் மொத்தக் கொள்கையுமே ஸ்மித்தின் தாக்குதலுக்கு உட்பட்டது. ஆங்கிலக் காலனியாதிக்கக் கொள்கையை அவர் விசேஷமாகக் குறை கூறினார்; நாட்டின் நன்மைக்காக இல்லாமல், குறைந்த எண்ணிக்கையுள்ள வர்த்தகர்கள் கும்பலின் நன்மையையே அது நோக்கமாகக் கொண்டிருக்கிறதென்று பகிரங்கமாகக் குறிப்பிட்டார். அயர்லாந்திலும் குறிப்பாக வட அமெரிக்காவிலுமுள்ள குடியேற்றங்களிலும் தொழில்துறையை நசுக்கி வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் கொள்கையை இங்கிலாந்து கடைப்பிடித்தது. இந்தக் கொள்கை குறுகிய நோக்கமுடையது, பொருளற்றது என்று ஸ்மித் கருதினார். “எனினும் ஒரு மாபெரும் நாட்டின் மக்களை அவர்களுடைய சொந்த உற்பத்திப் பொருளின் ஒவ்வொரு பகுதியைக் கொண்டு அவர்களால் முடிந்த எல்லாவற்றையும் அடைவதைத் தடுப்பதும் அல்லது அவர்களுடைய செல்வத்தையும் தொழில் உழைப்பையும் தங்களுக்கு அதிகமான பலன் தரக் கூடியதென்று அவர்கள் முடிவு செய்யும் வழியில் ஈடுபடுத்துவதைத் தடுப்பதும் மனிதகுலத்தின் மிகவும் புனிதமான உரிமைகளை வெளிப்படையான வகையில் மீறுவதாகும்” (1) என்று எழுதினார்.
1776-ம் வருடத்தில், புரட்சி செய்த குடியேற்றங்களோடு இங்கிலாந்து யுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது இப்படி எழுதினார். ஸ்மித் அமெரிக்கக் குடியரசுவாதத்துக்கு அனுதாபம் கொண்டிருந்தார். ஆனால் அவர் நல்ல பிரிட்டிஷ்காரராக இருந்தார் என்பதனால் அமெரிக்கக் குடியேற்றங்கள் பிரிந்து போவதை ஆதரிக்கவில்லை; இங்கிலாந்துக்கும் குடியேற்றங்களுக்கும் சமத்துவமான முழு உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட இணைப்பை ஏற்படுத்துவதை ஆதரித்தார். கிழக்கு இந்தியக் கம்பெனி இந்தியாவில் பின்பற்றி வந்த கொள்ளை, ஒடுக்குமுறைக் கொள்கையைப் பற்றி இதே மாதிரியான தீவிரத்தோடு கருத்துக்களைக் கூறினார். ஸ்மித் தன்னுடைய புத்தகத்தில் திருச்சபையைப் பற்றியும் பல்கலைக்கழகக் கல்வி முறையைப் பற்றியும் பல கடுமையான வார்த்தைகளை எழுதினார். இங்கிலாந்தில் அவ்வாறு எழுதுவதனால் அவருடைய உயிருக்கோ, சுதந்திரத்துக்கோ ஆபத்து ஏற்படாது; அவரைச் சிறையில் போட மாட்டார்கள் என்பது உண்மையே. அவருடைய பிரெஞ்சு நண்பர்கள் சிலருக்கு வொல்டேர், டிட்ரோ, மோரெல்லே, மிராபோ கூட வெவ்வேறு காலங்களில் அந்த அனுபவம் ஏற்பட்டதுண்டு. ஆனால் ஆங்கில மதகுருக்கள், பல்கலைக்கழக அதிகாரிகள், பத்திரிகைகளின் கூலி எழுத்தாளர்களின் வெறுப்பும் தாக்குதல்களும் எவ்வளவு ஆபத்தானது என்பது அவருக்குத் தெரியும். இவர்களைக் கண்டு அவர் அஞ்சினார்; அந்த அச்சத்தையும் அவர் மறைக்கவில்லை.
ஸ்மித் இயற்கையாகவே கவனமும் முன் எச்சரிக்கையும் கொண்டவராக இருந்த போதிலும், ஒரு துணிச்சலான புத்தகத்தை எழுதி வெளியிட்டார். மனிதர் என்ற முறையில் அவருடைய கவர்ச்சி இதில் அடங்கியிருக்கிறது.
(தொடரும்…)
அடிக்குறிப்புகள் :
(1)A. Smith, The Wealth of Nations, Vol. II, London, 1924, p. 78.
நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983