யிர் பிழைப்பதற்கான மரண ஓட்டத்தில் ஐரோப்பாவை அடைவதற்குள் 12,000 ஆப்பிரிக்க அகதிகள் மத்தியத்தரைக்கடலில் மூழ்கிவிட்டனர். தப்பி ஓடிவரும் ஆப்பிரிக்க அகதிகளுக்கு முதன்மையான நுழைவாயிலாக லிபியா இருக்கிறது. அங்கு தற்போது 6,36,000 -க்கும் மேற்பட்ட அகதிகள் மற்றும் குடியேறியவர்கள் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் அண்டை நாடுகள் மற்றும் சகாரா கீழமை ஆப்பிரிக்காவிலிருந்து (sub-Saharan Africa) வந்தவர்கள் என்று சர்வதேச அகதிகள் அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது.

இந்த அகதிகள் பெரும்பாலும் வறுமை, உள்நாட்டு போர், கட்டாய உழைப்பு மற்றும் உயிர் வாழ்வதற்கான அச்சுறுத்தல்கள் காரணமாக அவர்களது தாயகத்தை விட்டு வெளியேறுகிறார்கள். ஆட்கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வன்முறைகளால் வரும் வழியிலேயே பாதிக்கப்படும் அவர்களுக்கு லிபியாவிற்குள் நுழைவது மட்டுமே தற்காலிகமான ஆறுதலாக தோன்றலாம். ஆனால் லிபியாவிலும் அவர்களுக்கு பாதுகாப்பில்லை.

“நீங்க இங்க பாருங்க” என்று செய்த வேலைக்கு கூலி கேட்ட போது ஒரு லிபியாக்காரர் அடித்ததால் தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தை அல்ஜசீரா நிருபருக்கு காட்டினார் அகதியான கரிம். பின்னர் அவர் தனது வலது காலை சுட்டிக்காட்டினார். “திரிப்போலியில் வேலைக்காகக் காத்திருந்தபோது என்னுடைய காலில் சுட்டுவிட்டார்கள். அங்கே சட்டத்திற்கு வேலையில்லை. அனைவரிடமும் துப்பாக்கிகளும் கத்திகளும் உள்ளன. கத்தியால் குத்தப்பட்டாலோ, துப்பாக்கியால் சுடப்பட்டாலோ கறுப்பின மக்களுக்கு அங்கே எந்த உரிமையும் இல்லை” என்று அவர் மேலும் கூறினார்.

கேமரூனிலிருந்து உயிர்பிழைக்க லிபியா ஓடிவந்த புளோரண்ட் அங்கிருக்கும் கொடுமை தாளாமல் மீண்டும் அங்கிருந்து தப்பி மத்தியத்தரைக்கடலில் ஒரு ரப்பர் படகின் மூலம் காப்பாற்றப்பட்டார். “நான் இப்போது செத்துப் போனால் கூட எனக்கு எந்த வருத்தமும் இல்லை. லிபியாவிலிருந்து எப்படியோ தப்பி விட்டேன். நரகம் அது.” என்று அவர் கூறினார்.

நள்ளிரவில் படகுகளில் ஏறுமாறு மக்களிடம் கூறுகிறார்கள். “நீங்கள் எதையும் பார்க்க முடியாது. இங்கே இருட்டாகவும் பயமாகவும் இருக்கிறது. ஆனால் லிபியாவிலிருந்து வெளியேறவில்லை என்றால் இங்கேயே செத்துவிடுவீர்கள் என்று உங்களுக்குத் தெரியும்” என்று 17 வயதான சாருணா கூறினார். “நீங்கள் புறப்படுவதற்கு முன்பு குடும்பத்திடம் பேசிவிடுங்கள். நீங்கள் கடலில் பிழைப்பீர்களா என்று உங்களுக்குத் தெரியாது. நீங்கள் கடவுளிடம் வேண்டிக்கொண்டு புறப்படுங்கள்” என்று கூறினார்.

“வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்துவிட்டால், எதற்கும் நீங்கள் இனி பயப்பட மாட்டீர்கள்” என்று சாவ் கூறினார். இது கடைசிப் பயணமாக கூட இருக்கலாம் என்பதால் இப்படி அவர் கூறினார். செத்தது போக எஞ்சியவர்கள் கிட்டத்தட்ட 9,000 பேர் சென்ற ஆண்டு லிபிய கடலோர காவல்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு தடுப்பு மையங்களில் அடைக்கப்பட்டனர்.

சென்ற ஆண்டு மட்டும் 1,10,000 க்கும் மேற்பட்ட அகதிகள் கடல் வழியாக ஐரோப்பாவிற்கு வந்தனர். ஆனால் வட ஆப்பிரிக்க அகதிகளில் 1,283 பேர் லிபியாவிலிருந்து ஒரு வழியாக தப்பினாலும் மத்தியத்தரைக்கடலில் மூழ்கி மடிந்து போயினர். “மத்தியத்தரைக்கடலில் மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கை முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது” என்று ஓஷன் வைக்கிங் (Ocean Viking) மீட்புக் கப்பலின் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பாளர் நிக்கோலஸ் ரோமானியுக் (Nicholas Romaniuk) கூறினார்.

படிக்க :
ஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான் | கலையரசன்
♦ ரஜினியின் கருத்துச் சுதந்திரத்திற்காக களமிறங்கும் இந்து தமிழ் திசை

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீட்பு பணியில் இல்லையென்றால் “மத்தியத்தரைக்கடலே இரத்தமயமாகியிருக்கும்” என்று ஐ.நா எச்சரித்துள்ளது. 1,100 க்கும் மேற்பட்டவர்களை ஆகஸ்ட் 2019-ம் ஆண்டு முதல் மீட்பு கப்பலான ஓஷன் வைக்கிங் மீட்க முடிந்தது. ஆனால் கடந்த காலங்களில், ஐரோப்பாவிற்கு ஆட்கடத்தல் செய்ததாக அந்த கப்பல் ஊழியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு 20 ஆண்டுகள் வரை இத்தாலியில் சிறைத்தண்டனை கிடைத்தது. கடத்தல்காரர்களுக்கும் சட்டத்திற்கு புறம்பான குடியேற்றத்திற்கும் உதவியதாக அவர்கள் மீது அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

லிபியாவில் தங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை, மிரட்டி பணம் பறித்தல் ஆகியன பற்றிய கதைகளை லிபியாவிலிருந்து தப்பிய அகதிகள் அல்ஜசீராவிடம் பகிர்ந்து கொண்டனர். அதில் சிலர் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் வரை லிபியாவில் இருந்துள்ளனர். மின்சாரத் தாக்குதல், கத்தி வெட்டுகள், துப்பாக்கிச் சூடு, ரப்பர் மற்றும் உலோகக் குழாய்களால் தாக்கப்பட்டு காயமடைந்த நபர்களைப் பார்த்ததாக பயிற்சி மருத்துவர்கள் தெரிவித்தனர். “நீங்கள் அலைகளைப் பார்க்க மாட்டீர்கள், ஒரு படகுக்காக மட்டுமே காத்திருப்பீர்கள். லிபியாவிலிருந்து வெகு தொலைவில் விடுதலையை மீண்டும் பெறுவதற்கான உங்களது வாய்ப்பு இதுதான்” என்று மத்திய ஆப்பிரிக்க குடியரசைச் சேர்ந்த சாவ் கூறினார்.

லிபியாவில் குடியேறியவர்களில் 10 விழுக்காடு பெண்கள் என்று IOM மதிப்பிடுகிறது. பாலியல் பலாத்காரம், உயிரிழப்புகள் உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் அபாயங்கள் குறித்து லிபியாவிற்கு கடத்தப்பட்ட அகதிகள் புகார் அளித்ததாக அந்நிறுவனம் கூறியது. எட்டு மாத கர்ப்பிணியான (இரட்டை குழந்தை) கெல்லி (32 வயதாகிறது), லிபியாவிலிருந்து தப்பிப்பிழைக்க ஒரு ரப்பர் படகில் ஏறினார். “நீரில் இறங்க நான் விரும்பவில்லை. இது மிகவும் ஆபத்தானது. பயணம் முடியாவிட்டால் செத்து போய்விடுவேன் என்று நினைத்தேன்” என்று நவம்பரில் மீட்கப்பட்ட பின்னர் அவர் கூறினார்.

படிக்க :
குடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் !
♦ அஞ்சாதே போராடு ! பிப்-23 திருச்சியில் மக்கள் அதிகாரம் மாநாடு !

தற்போது லிபியாவில் கிட்டத்தட்ட 45,000 குழந்தை அகதிகள் உள்ளனர், அவர்களில் கால் பங்கிற்கும் அதிகமானோர் ஆதரவற்றவர்கள். தங்களது நாட்டை விட்டு வெளியேறும்போது தங்கள் குழந்தைகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் சில பதின்பருவ அகதிகளுக்கு ஏற்பட்டது. பயணத்தின்போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சில பெண் அகதிகளுக்கு லிபியாவிலோ அல்லது செல்லும் வழியிலோ குழந்தை பிறக்கிறது.

ஐரோப்பாவை அடைந்து விடலாம் என்ற அகதிகளின் கனவுக்கு அருகில் அவர்களை எடுத்து செல்கிறது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன படகு. பயணம் இன்னும் முழுமையடையவில்லை. ஐரோப்பாவில் புகலிடமும் இன்னும் கிடைத்தபாடில்லை. எனினும், தாய்நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் ஒரு பாதுகாப்பு உணர்வு ஏற்பட்டதாக அவர்கள் கூறினார்கள். “லிபிய கடலோர காவல்படையினர் இப்போதே கப்பலில் வந்தால், என்னுடைய தலையை சுவரில் அடித்து நொறுக்குவேன், தொண்டையை அறுத்து தண்ணீரில் குதித்து விடுவேன். லிபியாவுக்கு திரும்பி செல்வதை விட இது நன்றாக இருக்கும்” என்று கேமரூனைச் சேர்ந்த புளோரண்ட் கூறினார்.

“துப்பாக்கிச் சூட்டு ஓசை கேட்டு கண்விழிக்க வேண்டிய பயமில்லாமல் தூங்க முடிகிறது. அல்லது கடத்தப்படுவோம் என்ற பயமின்றி இருப்பது ஒரு நற்பேறு” என்று மீட்கப்பட்ட அகதிகளில் ஒருவர் கூறினார். சூடான உணவுக்கும், குளிப்பதற்கும், மக்களுடன் பேசுவதற்கும் வாய்ப்பு கிடைத்ததால் நிம்மதியுடன் இருப்பதாக மற்றவர்கள் கூறினார்கள். எங்களை மீட்டவர்கள் அவர்கள் லிபியாவைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று சொன்னபோது நான் அழ ஆரம்பித்தேன். நான் மீட்கப்படுவேன் என்றோ கடலில் சாகமாட்டேன் என்றோ என்னால் நம்ப முடியவில்லை.” என்று மேலும் கூறினார்.

நிலத்திலும் கடலிலும் கடுமையான பயணங்களினால் ஏற்பட்ட துன்பங்கள் “ஐரோப்பாவின் பாதுகாப்பினால்” மகிழ்ச்சியாக மாறும் என்றும் தங்களது குடும்பத்தினருக்கு வீடுகளும் அவர்கள் கொடுப்பார்கள் என்றும் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர்கள் நம்புகிறார்கள். “என்னுடைய அம்மாவும் அப்பாவும் இறந்துவிட்டார்கள். இழப்பதற்கு எதுவுமே இல்லாததால் நானும் என்னுடைய மனைவியும் நைஜீரியாவை விட்டு வெளியேறிவிட்டடோம்” என்று 37 வயதான சோண்டி கூறினார்.

மீட்புப்பணி சூழலானது சில நொடிகளில் கொடியதாக மாறிவிடுவதால் மீட்பர்களின் வேலை அவ்வளவு எளிதல்ல. கரடுமுரடான கடல்கள், சோதனையான நிலைமைகள் மற்றும் சூழ்நிலையின் நெருக்கடி மற்றும் கணிக்க முடியாத தன்மை ஆகியவை சூழலை மேலும் கடினமாக்குகின்றன. “மக்களை மீட்பது அவர்களது உரிமை எனவே நாங்கள் அவர்களை மீட்கிறோம்.” என்று ருமேனியாவை சேர்ந்த மீட்பரான டிராகோஸ் கூறினார். “ஒரு குதிரையையோ அல்லது பசுவையோ நீரில் கண்டால் அவற்றை நீங்கள் கப்பாற்றுவீர்கள். ஏனெனில் அவற்றிற்கான இடமல்ல அது” என்று அவர் மேலும் கூறினார்.

ஒரு படகிலிருந்து புறப்படும் பெரும்பாலான அகதிகளுக்கு லிபியாவிலிருந்து இத்தாலிக்கு எவ்வளவு தூரம் என்று தெரியவில்லை. கடக்க வேண்டியது ஒரு சிறிய ஆறு மட்டுமே என்று 100 கி.மீ (62 மைல்) தொலைவில் உள்ள கடல் எண்ணெய் கிணறுகளின் விளக்குகளை ஆட்கடத்தல்காரர்கள் சிலர் சுட்டிக்காட்டி அங்கு தான் செல்ல போவதாக கூறுகிறார்கள். கேள்விப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் தூரம் குறைவாக இருந்ததாகவும் ஆனால் பயணம் மிக நீண்டதாக இருந்ததாக தப்பிப்பிழைத்த அகதிகள் கூறினார்கள்.

படிக்க :
இந்தியாவின் ஆன்மாவுக்கான போராட்டத்தை பற்ற வைத்த புதிய குடியுரிமை சட்டம் !
♦ சிறப்புப் பொருளாதார மண்டலம் – குப்பையாக ஒதுக்கப்படும் தொழிலாளர்கள்…

“நான் ஒரு தீயணைப்பு வீரராக அல்லது மீட்புவீரராக இருந்தபோது, என்னுடைய வேலைக்குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை. இப்போது நான் இன்னும் உயிர்களைக் காப்பாற்றி வருகிறேன் ஆனால் என்னுடைய வேலை கேள்விக்குள்ளாக்கப்படுவதுடன் குற்றமயமாக்கப்படுகிறது. உயிரைக் காப்பாற்ற முயற்சிக்கும் ஒரு சாதரண மீட்புவீரன் நான்” என்கிறார் டங்குய். மீட்புப்பணியின் போது தங்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறித்தும், ஒரு ரப்பர் படகு தங்கள் கண் முன்னாலேயெ கவிழக்கூடும் என்ற அச்சத்தைப் பற்றியும் மீட்புவீரர்கள் பேசினர். “கடலில் ஏற்படும் அதிர்ச்சிகரமான அனுபவங்கள் எங்களிடம் ஒரு வடுவை விட்டுச்செல்கிறது” என்று தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பாளர் நிக்கோலஸ் ரோமானியுக் கூறினார்.

சொந்த நாடுகளிலிருந்து கிளம்பும் சமயத்திலிருந்தே தங்களுக்கு ஏற்பட்ட உடல்ரீதியிலான பாலியல் துன்புறுத்தல் குறித்த கதைகளை காப்பாற்றப்பட்ட பெண் அகதிகள் கூறினார்கள். லிபியா செல்லும் வழியில் பலர் சித்திரவதைகளையும் பாலியல் பலாத்காரத்தையும் எதிர்கொண்டனர். லிபியாவுக்கு வந்த பிறகு, தெருக்களிலும், துப்புரவாளர்களாக அவர்கள் கட்டாயமாக வேலை வாங்கப்பட்ட போதும் எல்லா இடங்களிலும் பாலியல் வன்முறைகளை அவர்கள் சந்தித்தனர். சில பெண்கள் தங்கள் பிறப்புறுப்புகள் எரிக்கப்பட்டதாகக் கூறினர்.

ஐரோப்பாவில் இறங்கத் தயாராகும் அதே நேரத்தில் குடிவரவு அதிகாரிகளின் முன்னால் கடுமையான சோதனைகள் தங்களுக்கு காத்திருக்கின்றன என்பதையும், அவர்களின் பயணம் இன்னும் முடிவடையவில்லை என்பதையும் மீட்கப்பட்ட அகதிகள் உணர்கிறார்கள். இத்தாலியால் 2019-ம் ஆண்டில் 5,000-க்கும் மேற்பட்ட அகதிகள் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டனர். இதை ஒப்பிடும்போது, முன்னர் பயணத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட வன்முறை, கொடுமைகள் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகியவையெல்லாம் ஒன்றுமே இல்லை.


நன்றி : அல்ஜசீரா
தமிழாக்கம் : சுகுமார்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க