
மேல்கோட்டு | The Overcoat | குறுநாவல் – பாகம் – 10
அன்றைய தினம் (வாழ்க்கையில் ஒரே தரம்) அவன் அலுவலகம் செல்லவில்லை. மறுநாள் முகமெல்லாம் வெளிறிப் போய், பழைய ‘கப்போத்தை’ மாட்டிக்கொண்டு அலுவலகம் சேர்ந்தான்; ‘கப்போத்தோ’ முன்னெப்போதையும்விடக் கேவலமாகக் காட்சியளித்தது. அவனுடைய மேல்கோட்டு பறிபோன செய்தியைக் கேட்டு (இந்தச் சந்தர்ப்பத்திலும் அக்காக்கியை நையாண்டி செய்யாமலிருக்கச் சிலரால் முடியவில்லை என்றாலும்) பெரும்பாலான சக எழுத்தர்களுக்கு இரக்கமாயிருந்தது. அவனுக்காக அப்போதே நிதி திரட்டுவதென்று நிச்சயித்தார்கள், ஆனால் மிக அற்பத் தொகையே வசூலானது. ஏனெனில் இயக்குநரின் உருவப்படத்திற்காகவும், ஏதோ ஒரு புத்தகத்தை அதன் ஆசிரியனின் நண்பனான துறைத் தலைவன் சொன்னதன் பேரில் வாங்குவதற்காகவும் நிதி கொடுத்ததால் எழுத்தர்கள் ஏற்கெனவே பெருந்தொகை செலவழித்து விட்டிருந்தார்கள்.
ஆக அக்காக்கியின் பொருட்டு வசூலான தொகை மிகச் சொற்பமே. எழுத்தன் ஒருவன் இரக்கங்கொண்டு அக்காக்கிய்க்கு உதவி செய்வோம் என்று தீர்மானித்து, அவன் இன்ஸ்பெக்டரிடம் போவதில் பயனில்லை என்றும், ஏனென்றால் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவதற்காக இன்ஸ்பெக்டர் ஒருக்கால் கோட்டைக் கண்டுபிடித்து விட்டாலுங்கூட, அக்காக்கிய் கோட்டு தன்னுடையது தான் என்று நிரூபிப்பதற்குச் சட்ட பூர்வமான அத்தாட்சிகளைக் காட்டாவிட்டால் கோட்டு போலீசார் வசமே தங்கிவிடுமென்றும், ஆகையினால் அவன் ஒரு முக்கிய நபரிடம் போவதே மேல் என்றும் அந்த முக்கிய நபர் சரியான ஆட்களுக்கு எழுதியும் அவர்களோடு பேசியும் விவகாரம் விரைவாக நடக்கும்படி செய்ய முடியுமென்றும் சொன்னான்.
அக்காக்கிய் வேறுவகையின்றி அந்த முக்கிய நபரிடம் போவது என முடிவு செய்தான். இம்முக்கிய நபர் என்ன வேலை பார்த்தார், அதன் தரம் என்ன என்பது இன்றுவரை தெரியவில்லை. இம்முக்கிய நபர் சமீபத்தில்தான் முக்கிய நபராக்கப்பட்டார் என்பதையும் அதற்கு முன் அவர் முக்கியமற்றவராகவே இருந்தார் என்பதையும் தெரிந்து கொண்டால் போதுமானது. தவிர, அதிக முக்கியத்துவம் வாய்ந்த மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் அவருடைய பதவி இப்பொழுது கூட அவ்வளவு முக்கியத்துவம் உள்ளதாகக் கருதப்படவில்லை. ஆனால் மற்றவர்கள் கண்களுக்கு முக்கியமற்றதாகப்படுவதை முக்கியமானதாக மதிப்பவர்கள் எப்போதுமே இருந்து வருவார்கள் அல்லவா? அதோடு கூட இந்த முக்கிய நபர் தமது முக்கியத்துவத்தை வேறு பலவகைகளில் அதிகரிக்க முயன்றுவந்தார்:
அதாவது, தாம் அலுவலகம் வந்து சேரும் பொழுது தம் கீழ் வேலை பார்ப்பவர்கள் எல்லாரும் மாடிப்படியில் தம்மை எதிர் கொள்ள வேண்டுமென்றும், பேட்டி காண்பதற்காக முன்கூட்டி மனுச் செய்துகொள்ளாதவன் எவனையும் தமது அலுவலகத்துக்குள் வரவிடக் கூடாதென்றும், எல்லாக் காரியங்களும் கண்டிப்பான வரிசைக் கிரமப்படி செய்யப்பட வேண்டுமென்றும், உதாரணமாக பிராந்தியச் செயலாளன் மண்டலச் செயலாளருக்கும், மண்டலச் செயலாளர் பட்டம் பெற்ற ஆலோசகருக்கோ அல்லது கிரமமான வேறு எவருக்கேனுமோ அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இந்த வழியாகவே விவகாரம் தம் பார்வைக்கு வர வேண்டும் என்றும் அவர் நியமப்படுத்தியிருந்தார்.
புனித ருஷ்யத் திருநாட்டிலோ, காப்பியடிப்பது தொற்று நோய் போல் பரவியிருக்கிறது, ஒவ்வொருவனும் தனக்கு மேல் பதவியிலிருப்பவனைப் போலவே செய்கிறான், அவன் தோரணையைக் காப்பியடிக்கிறான். ஒரு கதைகூடச் சொல்லுவார்கள்: எவனோ பட்டம் பெற்ற ஆலோசகன் இருந்தானாம்; ஒரு சிறிய அலுவலகத்துக்குத் தலைவனாக நியமிக்கப்பட்டதுமே அவன் தனக்காக ஒரு தனி அறை ஏற்படுத்திக் கொண்டு, “பேட்டி காணும் அறை” என அதற்குப் பெயரிட்டு, சிவப்புக் காலர்களும் டவாலிகளுமாக இரண்டு சேவகர்களை அதன் வாயிலில் நிறுத்தி, கதவுப்பிடியைப் பற்றிக் கொண்டிருக்கும் படியும் தன்னைக் காண வருபவர்களுக்குக் கதவைத் திறந்து விடும்படியும் அவர்களுக்கு உத்தரவிட்டானாம். இந்த லட்சணத்தில் “பேட்டி காணும் அறை”யிலோ, சாதாரண எழுது மேசை போடுவதற்குக் கூட இடம் பற்றாதாம்.
படிக்க:
♦ காவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள் !
♦ NRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா ? | வாஞ்சிநாதன் உரை
முக்கிய நபரின் தோரணைகளும் பழக்க வழக்கங்களும் கனமும் படாடோபமும் பொருந்தியவை ஆயினும் நய நுட்பமற்றவை. கண்டிப்புதான் அவருடைய முறையின் பிரதான அடிப்படை. “கண்டிப்பு, கண்டிப்பு, இன்னும் கண்டிப்பு!” என்று சொல்வதும் கடைசி வார்த்தையைச் சொல்கையில் கேட்டுக் கொண்டிருப்பவனது முகத்தை கூர்ந்த நோக்குவதும் அவர் வழக்கம். இந்தக் கண்டிப்புக்கு விசேடத் தேவை இருந்ததாகவும் தெரியவில்லை, ஏனெனில் அவருடைய அலுவலகத்தின் நிர்வாக எந்திரமாக விளங்கிய மொத்தம் பத்துப் பன்னிரண்டு எழுத்தர்கள் அது இல்லாமலே ஒரேயடியாகக் கிலியடித்துப் போயிருந்தார்கள். அவர் தூரத்தில் வரக் கண்டதுமே அவர்கள் எல்லாரும் வேலையை நிறுத்தி விட்டு எழுந்து நிமிர்ந்து நின்று, தலைவர் அறையைக் கடந்துசெல்லும் வரையில் அப்படியே இருப்பார்கள். தம்கீழ் வேலை செய்பவர்களிடம் அவரது வழக்கமான உரையாடலில் கண்டிப்பு தொனிக்கும்; பெரும்பாலும் அது மூன்றே வாக்கியங்கள் கொண்டிருக்கும்:
“எப்படி ஐயா உமக்குத் துணிச்சல் வந்தது? யாரோடு பேசுகிறோம் என்று தெரியுமா ஐயா உமக்கு? புரிகிறதா ஐயா உமக்கு முன்னே நிற்பது யார் என்று?” இவ்வளவிற்கும் அவர் நல்ல உள்ளம் படைத்தவர், கூட்டாளிகளுடன் கலகலப்பாயிருப்பார், உதவி செய்வார். ஜெனரல் பதவி கிடைத்ததுமே அவர் மூளை கிறுகிறுத்துப் போயிற்று, தடம் புரண்டுவிட்டது, எப்படி நடந்து கொள்வதென்று அவருக்குப் பிடிபடவேயில்லை. சம தகுதியுள்ளவர்களுடன் பழகும் போது அவர் சாதாரண மனிதராக, மிக ஒழுங்கான மனிதராக, பல விஷயங்களில் அறிவீனர் என்று சொல்ல முடியாதவராக விளங்கினார்; ஆனால் தம்மைவிட ஒருபடி மட்டுமே தாழ்ந்தவர்கள் இருக்கும் கூட்டங்களில் கூட அவர் திக்குத் திசை தெரியாதவர் போல விழிப்பார்; வாயிலிருந்து வார்த்தையே கிளம்பாது; அப்போது அவருடைய நிலைமை இரங்கத்தக்கதாக இருக்கும். நேரத்தை எவ்வளவோ இன்பமாகக் கழித்திருக்கலாமே என்று அவருக்கே தோன்றுமாதலால் நிலைமை விசேடப் பரிதாபத்துக்கு உரியதாயிருக்கும்.
சுவையான உரையாடல் எதிலேனும் பங்கு கொள்ளவோ, ரசமான பேர்வழிகளுடன் அளவளாவவோ பலத்த விருப்பம் அவர் மனத்தில் எழுவதைச் சில சமயம் அவரது விழிகள் காட்டும்; ஆயினும் தாம் அவ்வாறு செய்வது தவறாகக் கருதப்படுமோ, அனாவசியச் சொந்தம் பாராட்டுவதாகி விடுமோ, அதனால் தமது மதிப்பு தாழ்ந்து போய்விடுமோ என்ற எண்ணம் அவரைத் தடுத்து நிறுத்தி விடும். இந்தத் தர்க்கத்தின் பலனாக அவர் பேசாவாயராய், அபூர்வமாக எதேனும் ஓரசை ஒலியைக் கிளப்புவதுடன் நின்று கொள்ளும் நிலைமையிலேயே நிரந்தரமாக இருந்து வந்தார்; இந்தக் காரணத்தினாலேயே ‘படு போர்’ என்ற பட்டத்தையும் பெற்றிருந்தார்.
இத்தகைய முக்கிய நபர் முன்னிலையில்தான் நமது அக்காக்கிய் நின்றான், அதுவும் மிக மிக அனுகூலமற்ற நேரத்தில் – அதாவது தனக்கு, முக்கிய நபருக்கல்ல.
(தொடரும்)
« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »