திருச்சி பாலக்கரை பகுதியின் பாஜக மண்டலச் செயலாளராகச் செயல்பட்டுவந்த விஜயரகு என்பவர், நேற்று (27-01-2020) காலை 6 மணியளவில் திருச்சி சந்தைப் பகுதியில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி தமிழகத்தில் வன்முறைச் சம்பவங்களை அரங்கேற்ற பாஜக பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறது.
திருச்சியில் (காந்தி மார்க்கெட் அருகில்) உப்புப்பாறை என்னும் பகுதியைச் சேர்ந்தவர் விஜயரகு. இவர் அந்தப் பகுதியில் மார்க்கெட்டுக்குள் வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பவராக பணியாற்றி வந்துள்ளார். அவர் திருச்சி பாலக்கரைப் பகுதியின் பாஜக மண்டலச் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் இவருக்கும், இவர் குடியிருக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள மிட்டாய் பாபு என்பவருக்கும் ஏற்கெனவே முன் விரோதம் இருந்து வந்திருக்கிறது. விஜயரகுவின் மகளை மிட்டாய் பாபு காதலித்ததாகவும், அதற்கு விஜயரகு குடும்பத்தினர் மறுத்துவிட்டதாகவும், இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கெனவே தகராறு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த முன் விரோதத்தைத் தீர்த்துக் கொள்ள நேற்று (27-01-2020) காலையில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மிட்டாய்பாபு விஜயரகுவை சந்தையில் ஓட ஓட வெட்டிக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.

கடும் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்த விஜயரகுவை அப்பகுதி மக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார் விஜயரகு. இதனைத் தொடர்ந்து மருத்துவமனை முன் கூடிய பாஜக காலிகள் – எச்.ராஜா வரும்வரை பிணத்தை வாங்கமாட்டோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி அருகில் உள்ள சாலையில் 10 பேர் அமர்ந்து கொண்டு ‘சாலை மறியல் போராட்டத்தையும்’ நடத்தியுள்ளனர்.
அதற்குள்ளாக கொலை நடந்த சமயத்தில் அங்கு இருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொலை செய்தது மிட்டாய் பாபுவும் அவரது கூட்டாளிகளும் என்பது வெளியில் அனைவருக்கும் தெரியவந்தது. கொலை செய்த மிட்டாய்பாபுவை போலீசு தேடி வந்தது. பலரது பார்வையில் நடந்த கொலையாதலால் மிட்டாய் பாபு பெயர் வந்தது. யாரென்று விவரம் தெரியாமல் இருந்திருந்தால், முசுலீம் ‘தீவிரவாதிகள்’தான் இந்தக் கொலையை செய்ததாக, பாஜகவும் – ஊடகங்களும் அறிவித்திருக்கும்.
இதற்குள்ளாகவே, செத்த பிணத்திலும் காசு திருடும் பாஜக தலைவர்கள் இசுலாமிய தீவிரவாதக் கதையை சமூக வலைத்தளங்களில் கட்டிப் பரப்ப ஆரம்பித்துவிட்டனர். இந்தக் கொலை குறித்து பாஜக-வின் தேசியச் செயலாளர்களான எச்.ராஜா -வும் முரளிதர் ராவும் தங்களது டிவிட்டர் பக்கத்தில் தமது முசுலீம் வெறுப்பைக் கொட்டத் தொடங்கிவிட்டனர்.
படிக்க:
♦ ஆர்.எஸ்.எஸ். : நாட்டையே அச்சுறுத்தும் கொரோனோ வைரஸ் | கேலிச்சித்திரம்
♦ பொன்னாரின் சன்னிதான அழுகை – என்ன மாதிரியான டிசைன் இது ?
எச்.ராஜா தனது டிவிட்டில், “பாஜக திருச்சி பாலக்கரை பகுதிச் செயலாளர் ரகு அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜக திருச்சி பாலக்கரை பகுதிச் செயலாளர் ரகு அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்னாரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்
— H Raja (@HRajaBJP) January 27, 2020
பாஜகவின் தேசியச் செயலாளர்களில் ஒருவரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான முரளிதரராவ் தனது டிவிட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் ஜிகாதி குண்டர்களால் திருச்சி பாலக்கரை பாஜக மண்டல செயலாளர் ரகு கொல்லப்பட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Thiruchi palakkari BJP Mandal secretary Regu assassinated by Jihadi goons in Tamil Nadu!
BJP condemns this heinous act and demands immediate action agaisnt the culprits. My condolences are with the bereaved family members.— P Muralidhar Rao (@PMuralidharRao) January 27, 2020
போலீசு விசாரணையைத் தொடங்குவதற்கு முன்னரே கொலை செய்த நபர் முசுலீம்தான் என்பதை இவர்கள் இருவரும் அடித்துக் கூறுகின்றனர். சொல்வது பாஜக ஐ.டி. விங்கில் போட்டோஷாப் வேலை செய்யும் ஏதேனும் சைபர் கூலியாக இருந்தால் கூடப் பரவாயில்லை, சொல்பவர்கள் பாஜக-வின் தேசியப் பொதுச் செயலாளர்கள்.
இவர்களாவது இசுலாமிய பயங்கரவாதிகள் கொலை செய்ததாகக் கூறுவதோடு நிறுத்திக் கொண்டனர். பாஜக-வின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்னும் தரம் தாழ்ந்து ஒரு ‘நாலாம்தர’ பொறுக்கியைப் போல பேசியுள்ளார்.
படிக்க:
♦ களநிலவரம் – எரியக் காத்திருக்கும் கோவை… !
♦ ஆர்.எஸ்.எஸ். : நாட்டையே அச்சுறுத்தும் கொரோனோ வைரஸ் | கேலிச்சித்திரம்
சென்னை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பொன்னார், “தமிழகத்தில் ஒரு யுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். அதை எதிர்கொள்ள நாங்கள் தயார். எதற்கும் ஒரு எல்லை உண்டு. எல்லை மீறினால் எல்லோருக்கும் ஓர் உயிர்தான். எல்லாருக்கும் ஒரு சாவுதான். அதைப்பற்றி கவலைப்பட நாங்கள் தயாராக இல்லை. இதை தமிழ அரசும் காவல்துறையும் புரிந்து கொள்ள வேண்டும், என்றார். ” (செய்தி : தினகரன் 28-01-2020)
அதாவது இவர்கள் யாரையும் போட்டுத்தள்ளத் தயாராகத்தான் இருக்கிறார்களாம். சாவைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லையாம். இதை போலீசும் தமிழக அரசும் புரிந்து கொள்ள வேண்டுமாம்.
இவர்கள் மக்களைக் கொல்வதற்கு எவ்விதத் தயக்கமும் இல்லாதவர்கள் என்பது இவர்களது சித்தாந்த குருவான கோல்வால்கர், சாவர்க்கரின் நூல்களிலேயே காணக் கிடைக்கிறது. ரத யாத்திரை முதல் சமீபத்திய ஜே.என்.யூ. வன்முறை வரை சங்க பரிவாரத்தின் கொலைவெறியைப் பற்றி அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.
அடுத்ததாக, சாவைப் பற்றியும் இவர்கள் கவலைப்பட மாட்டார்களாம். ஆம், களத்தில் பலியாவது அனைத்தும் இவர்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பணவசதியற்றவர்கள் தானே. ஆகையால் சாவைப் பற்றி பொன்னார்களுக்கும் எச்.ராஜாக்களுக்கும் கவலை ஏதும் கிடையாது என்பதும் உண்மைதான்.
கடைசியாக, தமிழக அரசும் போலீசும் இதைப் புரிந்து கொள்ளவேண்டும் என இருதரப்பினருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார் பொன்னார். அதுதான் புதிதாக இருக்கிறது. தாங்கள் கொலைக்கும் தயங்காதவர்கள் என்று போலீசிடம் குறிப்பிடுவதன் மூலம் போலீசையே மிரட்டுகிறாரா பொன்னார்? தமிழகப் போலீசின் நிலை அந்த அளவுக்கா தரம் தாழ்ந்துவிட்டது?
பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகளைச் சேர்ந்த யாரேனும் சாதாரணமாக மரணமடைந்தாலேயே அதில் இசுலாமிய தீவிரவாதப் பின்னணி இருப்பதாக பாஜக கிளப்பிவிடுகிறது. பாஜக – இந்து அமைப்பு பிரமுகர்கள் இசுலாமிய பயங்கரவாதிகளால் குறிவைக்கப்பட்டுள்ளதாக சங்கிகள் அலறுகிறார்கள்.
தமிழகத்தில் இதுவரை கொலை செய்யப்பட்ட பல்வேறு பாஜக – சங்க பரிவாரப் பிரமுகர்களில் பெரும்பாலானவர்களின் மரணத்திற்கு கட்டப்பஞ்சாயத்து, முன் விரோதம், கள்ளக் காதல் போன்ற விவகாரங்கள்தான் அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது என்கிற உண்மை போலீசு விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் இந்தக் கொலைப் பழியை இசுலாமியர்கள் மீதே போடுவதற்கு முயற்சித்து வருகிறது பாஜக கும்பல்.
கடந்த 2012-ம் ஆண்டு வேலூரில் பாஜக மாநில மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை செய்யப்பட்டபோது, இதே போல சவடால்களும், மிரட்டல்களும் சாலை மறியல்களும் நடத்தப்பட்டன. பின்னர் விசாரணையில் ஒரு பெண் விவகாரத்தில் பிரபல ரவுடி வசூர் ராஜா என்பவருடன் இருந்த முன்விரோதத்தின் காரணமாகவே இந்தக் கொலை நடந்துள்ளது என்பது தெரியவந்தது.
அதே ஆண்டு நாகபட்டிணத்தைச் சேர்ந்த அப்போதைய பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி ஜூலை மாதத்தில் காலையில் நடைபயிற்சியின் போது 4 பேரால் வெட்டிக் கொல்லப்பட்டார். அப்போதும் முசுலீம் தீவிரவாதம் எனக் குதித்தது பாஜக. இந்தப் புகழேந்தி அப்போதுதான் ஒரு ஆசிரியரின் வீட்டை அபகரித்த வழக்கில் பிணையில் வெளிவந்திருக்கிறார் என்பதும், கட்டப் பஞ்சாயத்தில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாகத்தான் முனீஸ்வரன் என்பவர் புகழேந்தியைக் கொன்றார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், திருப்பூர் மாவட்ட பாஜக துணைத்தலைவர் மாரிமுத்து கள்ளக் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டதை மறைத்து, இசுலாமிய ‘தீவிரவாதிகளால்’ அன்னார் அடித்துக் கொல்லப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டதாகவும், அருகில் மோடி படத்துடன் பாஜக கொடிக்கும் சேர்த்து செருப்பு மாலையெல்லாம் போட்டு செட்டப்பை தயாரித்து வைத்திருந்தனர் சங்கிகள். போஸ்ட் மார்டம் அறிக்கையும் உறவினர்களின் சாட்சியமும் சங்கிகளின் நாடகத்தின் மீது சேறை வாரியிறைத்தன.
பாஜக உள்ளிட்ட சங்கப் பரிவாரக் கும்பலின் நோக்கமே கலவரத்தைத் தூண்டுவதும், வாழ்வாதாரப் பிரச்சினைகளை நோக்கி மக்களை சிந்திக்க விடாமல் திசை திருப்புவதும்தான். சமீபத்தில் எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை தொடங்கி, நேற்றைய விஜயரகு கொலை வரையிலும், தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருகிறது பாஜக கும்பல்.
கலவரங்களின் மூலம் ஒன்றிரண்டு தொகுதியையாவது கைப்பற்றிவிடமாட்டோமா என பாஜக தலைவர்கள் ஏங்கும் அதே வேளையில், ஒன்றிரண்டு பிரியாணி அண்டாக்களாவது கிடைக்காதா என பாஜக – சங்க பரிவார தொண்டர்களும் ஏங்கிக் காத்துக் கொண்டுள்ளனர் !
தமிழக மக்களே! அண்டா திருடர்கள் வரத் தயாராகிவிட்டார்கள் ஜாக்கிரதை !

நந்தன்