Tuesday, April 22, 2025
முகப்புசெய்திஉலகம்வேலைவாய்ப்பின்மை : எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாகவே உள்ளது !

வேலைவாய்ப்பின்மை : எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாகவே உள்ளது !

சர்வதேச நிலையைக் கண்டு முதலாளித்துவவாதிகளே அலறுகின்றனர். ஆனால் இந்தியாவில் சங்க பரிவாரக் கும்பலோ CAA - NRC, ரஜினி என திசைதிருப்பும் வேலையை செய்கிறது.

-

லகம் முழுவதும் சுமார் 47 கோடி பேர் வேலையில்லாமல், அல்லது குறைந்த தகுதியுள்ள வேலையில் இருக்கிறார்கள் என ஐக்கியநாடுகள் சபை கூறியுள்ளது. சர்வதேச தொழிலாளர் சங்கம் தொகுத்துக் கொடுத்துள்ள அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.

உலகளாவிய வேலைவாய்ப்பின்மை விகிதம் 2010-களில் ஸ்திரமானதாக இருந்தது என்கிறது இந்த அறிக்கை.  ஆனால் சர்வதேச வேலைவாய்ப்பு விகிதம் 2020-ம் ஆண்டில் 18.8 கோடியில் இருந்து 19.05 கோடியாக உயரும் என எதிர்ப்பார்ப்பதாகக் கூறுகிறது.

உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூகக் கண்ணோட்ட ஆண்டறிக்கை வேலைவாய்ப்பின்மை பிரச்சினையைப் பற்றி மட்டுமல்லாமல், தகுதிக்கு குறைவான வேலைகளில் ஈடுபடுபவர்களையும் இணைத்து குறிப்பிட்டிருக்கிறது. 28.5 கோடி பேர் தங்கள் எதிர்பார்த்ததை விட குறைவான வேலையில் இருக்கிறார்கள், அல்லது தகுதியான வேலைகளைத் தேடுவதைக் கைவிட்டிருக்கிறார்கள் அல்லது தொழிலாளர் சந்தையை அணுக இயலாமல் இருக்கிறார்கள் என்கிறது அறிக்கை.

47 கோடி பேர் என்பது ஒட்டுமொத்த உழைக்கும் சக்தியில் சுமார் 13% ஆகும் என்கிறது அந்த அறிக்கை.

சமூக அமைதியின்மைக்கும் வேலைவாய்ப்பின்மை மற்றும் தகுதியற்ற வேலை ஆகியவற்றிற்கு இடையிலான உறவுதான் இந்த அறிக்கையின் தனிச்சிறப்பான பகுதி. “நமது சமூகங்களில் பெரும்பாலானவற்றில் சமூக இணக்கம் அரிக்கப்பட்டு வருவதற்கு தொழிலாளர் சந்தை நிலைமைகள் முக்கியப் பங்களிக்கின்றன” என்கிறார் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் தலைவர் கய் ரைடர்.

சர்வதேச தொழிலாளர் நிறுவனம் உலகம் முழுவதும் நடந்துவரும் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு “சமூக கொந்தளிப்பு” வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2009-2019 காலகட்டத்தில் உலகம் முழுவதும், மொத்தமுள்ள 11 பகுதிகளில் 7 பகுதிகளில் சமூக அமைதியின்மை அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

15 முதல் 24 வயதுவரையிலான சுமார் 26.7 கோடி இளம் தலைமுறையினர், பணிபுரிபவர்களாகவோ, கல்வி கற்பவர்களாகவோ, பயிற்சியில் இருப்பவர்களாகவோ இல்லை. பணியிலிருக்கும் இளம்தலைமுறையினரில் பெரும்பாலானோர் மோசமான வேலை நிலைமைகளில்தான் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த அறிக்கையில் உலகில் அதிகமாக சம்பாதிப்பதவர்களுக்கும் குறைவாக சம்பாதிப்பவர்களுக்கும் இடையிலான மிகப்பெரிய ஏற்றத் தாழ்வையும் பதிவு செய்துள்ளது. பெண்களில் பணியில் ஈடுபடுபவர்களின் அளவு 47%-மாகவே நீடிப்பதாகவும் இது ஆண்களின் பணிப் பங்கேற்பு விகிதத்தை விட 27% குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கிறது இந்த அறிக்கை.

“நாம் எங்கு செல்லவேண்டும் என்று விரும்பினோமோ அங்கு நாம் செல்லவில்லை. நாம் முன்னரே எண்ணியிருந்ததை விட மிகவும் மோசமானதாகவே நிலைமை இருக்கிறது.” என்று குறிப்பிடுகிறார் கய் ரைடர்.

இன்றைய சர்வதேசிய நிலைமையைக் கண்டு முதலாளித்துவவாதிகளே அலறுகின்றனர். ஆனால் இந்தியாவில் ஆட்சியிலிருக்கும் சங்க பரிவாரக் கும்பலோ, அது குறித்து சிறிதும் கவலையின்றி நம்மை ரஜினிகாந்துகளுக்குப் பின்னும், குருமூர்த்திகளுக்குப் பின்னும் திசை திருப்பிவிட்டுக் குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றனர்.

படிக்க :
அஞ்சாதே போராடு ! பிப்-23 திருச்சியில் மக்கள் அதிகாரம் மாநாடு !
♦ CEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம் | ஆக்ஸ்ஃபாம் அறிக்கை !

கார்ப்பரேட்டுகளின் இந்த வீழ்ச்சியை காவிக் கும்பல் முட்டுக்கொடுத்து மக்களின் ஆத்திரத்தைத் தடம் மாற்றி விட்டுக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் அழுகி நாறும் முதலாளித்துவத்தையும், மக்களது கோபத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் வலதுசாரி பாசிஸ்டுகளையும் ஒருசேர வீழ்த்தாமல் அழிவிலிருந்து நிரந்தரமாகத் தப்ப வாய்ப்பு வேறு இல்லை என்பதுதான் எதார்த்தம் !


நந்தன்

நன்றி : த வயர்