மும்பையிலிருந்து லக்னோவிற்கு செல்லும் விமானத்தில் ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமி பயணிக்கிறார். கூடவே நகைச்சுவை பேச்சாளரான (Stand-up comedian) குனால் காம்ராவும் பயணம் செய்கிறார். தொலைக்காட்சி பெட்டியே வெடித்துச் சிதறுமளவுக்கு இந்துத்துவாவிற்கும் மோடிக்கும் ஆதரவாக எட்டுக் கட்டையில் கத்தும் அர்னாப்பை யாருக்குத்தான் பிடிக்கும்? குனால் காம்ரா முற்போக்கு கருத்துள்ளவர். இந்த வாய்ப்பை தவற விரும்பவில்லை.
I did this for my hero…
I did it for Rohit pic.twitter.com/aMSdiTanHo— Kunal Kamra (@kunalkamra88) January 28, 2020
தனது செல்பேசியை எடுத்து அர்னாப் கோஸ்வாமி முன்பு வீடியோ பதிவை தொடங்கி விட்டு கேள்விகள் கேட்கிறார். விவாதங்களில் மற்றவர் பேச்சை பேச விடாமல் கத்தும் நீங்கள் கோழையா, பத்திரிகையாளரா என்று கேட்கிறார். ரோஹித் வெமுலாவின் தற்கொலை குறித்து அவதூறு செய்ததை கேட்கிறார். இதை ரோஹித் வெமுலாவின் தாயார் சார்பில் கேட்பதாக கூறுகிறார். எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காத அர்னாப் கோஸ்வாமி அமைதியாக சிலையாக உறைந்து போயிருக்கிறார். இவர்களெல்லாம் பாதுகாப்பான ஸ்டூடியோ வெளிச்சத்தில் மட்டும்தான் பேசுவார்கள். பொதுமக்கள் பொது இடத்தில் இப்படி எடக்கு மடக்காக கேட்டால் வாய் மூடி மவுனியாக இருப்பார்கள். அவதூறு செய்து அதிகம் கத்துபவன் இப்படித்தான் கோழையாக இருப்பான்.
படிக்க :
♦ அஞ்சாதே போராடு ! பிப்-23 திருச்சியில் மக்கள் அதிகாரம் மாநாடு !
♦ அர்னாப் – மாலனை பாகிஸ்தானுடன் போருக்கு அனுப்புங்கள் : சமூக ஊடகங்களில் மக்கள் கோரிக்கை !
இதன்பிறகு விமானத்தின் பணியாளர்கள் குனால் காம்ராவை இருக்கைக்கு திரும்புமாறு கோருகிறார்கள். அவரும் திரும்பி விட்டு தன்னால் ஏற்பட்ட இடையூறுக்கு அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறார். கூடவே அர்னாப்பின் வீடியோவையும் டிவிட்டரில் வெளியிடுகிறார்.

மோடியின் நம்பர் ஒன் கூஜாவான அர்னாப் இப்படி விமானத்தில் அவமானப்பட்டால் மோடி படை சும்மா இருக்குமா? விமானத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி டிவிட்டரில் “விமானப் பயணத்தில் இப்படி அராஜகமாக நடந்து கொள்வது ஏற்க முடியாது, சக விமான பயணிகளுக்கு ஆபத்து. சம்பந்தப்பட்ட நபரை விமானத்தில் பறக்க முடியாதபடி தடை செய்ய விமான நிறுவனங்கள் ஆவண செய்ய வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
அவர் கூறுவதற்கு முன்னாடியே சம்பவம் நடந்த விமான நிறுவனமான இண்டிகோ குனால் காம்ராவை தனது விமானத்தில் பயணிப்பதற்கு ஆறு மாதம் தடை செய்து டிவிட்டரில் அறிவித்திருக்கிறது. இண்டிகோவை அடுத்து ஏர் இந்தியாவும் மறு அறிவிப்பு வரும் வரை அவரை விமானப் பயணத்தில் ஏற்க முடியாது என்று அறிவித்திருக்கிறது. மற்ற விமான நிறுவனங்களும் இதை ஒட்டி முடிவு எடுக்கும்.
தூத்துக்குடி விமானத்தில் தமிழிசையை எதிர்த்து சோஃபியா முழக்கமிட்டதையே கைது வரை கொண்டு சென்றார்கள் பாஜகவினர். அர்னாப்பிற்கு ஏற்பட்ட அவமானத்திற்கு சும்மா விடுவார்களா?
ஆனால் குனால் கம்ரா கவலைப்படவில்லை. அர்னாப் குறித்த வீடியவை வெளியிட்டவர் அதில் இந்த வீடியோ எனது ஹீரோவிற்காக, ரோஹித் வெமுலாவிற்காக என்று குறிப்பிட்டிருக்கிறார். பாசிஸ்டுகளுக்கு மண்ணிலும், விண்ணிலும் எதிர்ப்புதான். குனால் காம்ராவின் வீரத்தை போற்றுவோம்!
மதன்