குடியரசு தின சிறப்பு முகாம்கள் நமது மருத்துவ குழு குறித்த பயணக்குறிப்பு மற்றும் விளக்கங்கள்
நமது நண்பர்களுக்கும்/சொந்தங்களுக்கும் / புதிதாக நண்பர்களாக இணைந்தவர்களுக்கும்/ புதிதாக என்னை தொடர ஆரம்பித்திருப்பவர்களுக்கும் மனதில் தோன்றிய கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக கேள்வி பதில் நடையில் பயணக்குறிப்பை எழுதுகிறேன்
1. யார் சார் நீங்கலாம்? கொடைக்கானல்ல என்ன பண்ணிட்ருக்கீங்க?
நாங்கள் “நனவாகும் கனா” என்ற பெயரில் இயங்கி வரும் தன்னார்வல மருத்துவக்குழு. இந்த குழுவில் மருத்துவர்கள், இயன்முறை மருத்துவர்கள் , மருந்தாளுனர்கள், சட்டத்துறை வல்லுனர்கள் என்று பலரும் ஒன்றிணைந்து இயங்கி வருகிறோம். எங்களை ஒன்றிணைத்தது 2018 ஆம் ஆண்டு தமிழக டெல்டா மாவட்டங்களை சூறையாடிய கஜா புயல்.
கஜா புயல் நடந்த மாவட்டங்களில் பல மருத்துவ முகாம்கள் நடத்தி மக்களுக்கு ஆறுதலும் நிவாரணமும் வழங்கினோம். அதற்குப் பிறகு குடியரசு தினம் / சுதந்திர தினம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நாட்களில் தமிழகத்தில் உள்ள சுகாதார வசதிகள் குறைவாக கிடைக்கின்ற பின்தங்கிய மலை குக்கிராமங்களுக்கு சென்று மருத்துவ முகாம்கள் அமைப்பதை வழக்கமாக கொண்டு இயங்கி வருகிறோம்.
சென்று வருடம் குடியரசு தினத்தன்று கொடைக்கானல் அருகில் உள்ள இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஊராட்சியான வில்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட வில்பட்டி கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தினோம்.
இந்த வருடம் , கொடைக்கானலில் இருந்து 40 கிலோமீட்டர் கடினமான மலைப்பாதைகளை கடந்து சென்று பூண்டி / கிளாவரை / போளூர் போன்ற மலைக்கிராம மக்களுக்கு மருத்துவ முகாம் அமைத்தோம்.
நேற்று குடியரசு தினத்தன்று வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அட்டுவம்பட்டி காலனியில் மருத்துவ முகாம் அமைத்தோம்.
2. இந்த முகாம்களில் என்னவெல்லாம் சேவை செய்கிறீர்கள்?
மலைக்கிராமங்களில் வாழும் மக்களுக்கு மருத்துவப்பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவைப்படும் மருந்துகளை இலவசமாக வழங்குகிறோம்.
இங்கே எனது கிளினிக்கில் என்னென்ன மருந்துகளை நான் எழுதுவேனோ அது அத்தனையையும் இலவசமாக மக்களுக்கு கிடைக்குமாறு செய்கிறோம்.
மருந்துகளில் காஸ்ட்லி என்று பார்த்து முகாமின் தரத்தை குறைப்பதில்லை. உதாரணம் விலை அதிகமான ஆண்டிபயாடிக்குகளான அசித்ரோமைசின்; செஃபிக்சிம் ; செஃப்போடாக்சைம்; அமாக்சிக்ளேவ் போன்றவை முகாமில் இடம்பெற்றிருக்கும். தரத்தில் குறை வைப்பது இல்லை.
மேலும் சிகிச்சை பெறுபவர்கள் அனைவருக்கும் ரத்த சர்க்கரை பரிசோதனை மற்றும் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்து புதிதாக நீரிழிவு மற்றும் ரத்த கொதிப்பு நோயாளிகளை அடையாளம் காண்கிறோம் .
அவர்களுக்கு ஒரு மாதத்திற்கான மாத்திரைகளை வழங்கி , அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை கடிதம் தருகிறோம். அங்கு அவர்கள் சிகிச்சையை தொடரலாம்.
நேற்றும் அதற்கு முந்தைய நாள் நடந்த முகாம்களில் இரண்டு கிராமங்களுக்கு குடற்புழு நீக்கம் செய்துள்ளோம். குடற்புழுக்கள் ரத்த சோகையை வரவழைப்பவை.
பெரும்பாலும் அனைத்து பெண்களுக்கும் ரத்த சோகை இருந்தமையால் அனைவருக்கும் இரும்புச்சத்து மாத்திரை வழங்கப்பட்டது.
வயதான முதியோர்களுக்கும் / மெனோபாஸ் காலக்கட்ட பெண்களுக்கும் ஒரு மாதத்திற்கு தேவையான கால்சியம் மாத்திரை வழங்கப்பட்டது. கர்ப்பிணிகளுக்கு புரதச்சத்து வழங்கும் பவுடர்கள் / இரும்புச்சத்தை அதிகரிக்கும் மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இத்துடன் குழந்தைகளுக்கு ஸ்வெட்டர் / துணிகள் , காலணிகள், சோலார் லைட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டன.
பூண்டி மலைக்கிராம முகாம்களுக்கான களப்பணிகளை பீக் ட்ரஸ்ட் அமைப்பு செய்திருந்தது. அந்த முகாமுக்கான ஏற்பாடுகளை அருட்தந்தை திரு.ஆரோக்கியசாமி அவர்களின் குழு சிறப்பாக செய்திருந்தது.
அட்டுவம்பட்டி மலைக்கிராம முகாம்களுக்கான களப்பணிகளை வாய்ஸ் அமைப்பு மற்றும் அட்டுவம்பட்டி கிராம ஸ்டார் இளைஞர் அணி அமைப்பு மற்றும் வாய்ஸ் மைக்கேல் அவர்களும் இணைந்து சிறப்பாக செய்தனர்.
சிறப்பான களப்பணியே பல மக்களை முகாமுக்கு அழைத்து வரும்.
களப்பணிக்கு நன்றி சகோதரர்களே.
நமது குழுவுக்கான சிறப்பான தங்குமிடத்திற்கான ஏற்பாட்டை செய்து குடியரசு தின முகாமிற்கு நமது அழைப்பை ஏற்று நேரில் வந்து விழாவை சிறப்பு செய்த கணம் கற்றறிந்த மாண்புமிகு நீதிபதி இளங்கோவன் அவர்களுக்கு நன்றி.
ஐயா இளங்கோவன் அவர்கள் எனது முகநூல் நண்பர். நமது தன்னார்வல தொண்டு அமைப்புக்கு தாமாக முன்வந்து உதவி செய்த அவருக்கு நன்றிகள். அவரை நேரில் கண்டு அளவளாவியதில் மகிழ்ச்சி.
3. இந்த முகாம்கள் எவ்வாறு நடக்கின்றன?
“Crowd funding” முறைப்படி பல தொழில் நிறுவனங்கள் / வியாபாரங்கள் நடக்கின்றன. அதே போல் இந்த மருத்துவ முகாம்கள் “Soul sharing” முறைப்படி நடக்கின்றன. எனது நண்பர்கள் சொந்தங்கள் அனைவரும் இந்த முகாம்கள் நடத்த தங்களின் பொருளாதாரத்தை நிதியாக அளிக்கின்றனர்.
எனவே இந்த முகாம்கள் உதவிகள் அனைத்தும் ஒத்தக்கருத்துடைய மனங்கள் ஒன்றிணைவதால் நடக்கின்றன. எனது மருத்துவ துறை சார்ந்த நண்பர்கள் தங்களின் மருந்து கம்பெனிகளில் உள்ள தரமான மருந்து மாத்திரைகளை தாராள மனதுடன் தந்து உதவுகின்றனர்.
இன்னும் சில நண்பர்கள் குழந்தைகளுக்கு உண்டான பள்ளி கல்வி உபகரணங்களுக்கான செலவினத்தை ஏற்றுக்கொள்கின்றனர்.
இப்படியாக உலகின் ஏனைய பகுதிகளில் வாழும் அன்பு உள்ளம் கொண்ட எனது நண்பர்கள் மற்றும் சொந்தங்களினால் இந்த முகாம்கள் சாத்தியமாகின்றன.
இந்த முகாம்களுக்கு உடல் சார்ந்த அறிவு சார்ந்த உழைப்பினை எங்கள் குழு செய்கிறது. இன்றியமையாத பொருளாதாரத்தை தந்து உதவுவது எனது முகம் காணா நண்பர்கள் தான். இந்த முகாம்கள் மூலம் கிடைக்கும் நன்மைகள் அனைத்துக்கும் சொந்தக்காரர்கள் தங்களின் இன்னுழைப்பால் வந்த பொருளை கொடுத்த நண்பர்களே ஆவர்.
ஒருமுறை எனது மருத்துவ நண்பர் என்னைப்பற்றி குறிப்பிடும் போது
“கஜா புயலின் போது எனது சொந்த செலவில் மருத்துவ முகாம் நடத்தியதாக பாராட்டி எழுதியிருந்தார் ”
“NEWS18 தொலைக்காட்சி எனக்கு வழங்கிய பாராட்டு விருதிலும் 15 இலட்ச ரூபாய் உதவியை கஜா நேரத்தில் எனது செலவில் செய்ததாக பதிவு செய்தது” – அது தவறாகும்.
இந்த முகாம்களை அமைப்பதற்கு எனது அறிவையும் உடல் உழைப்பையும் தான் செய்தேன். மேலும் இந்த முகாம்கள் நடத்த எனது கிளினிக்கை அடைப்பதால் ஏற்படும் இழப்புகளை நான் பெரிதாக நினைப்பதில்லை. காரணம் நாம் சம்பாதிக்காத பொருளை நட்டக்கணக்கில் சேர்க்க முடியாது.
எனவே, எப்போதும் இந்த முகாம்கள் அனைத்தும் எனது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து நடத்துமாறுதான் நடைபெறும் / நடைபெறுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
4. ஏன் மலைக்கிராமங்களில் முகாம் அமைக்கிறீர்கள்?
தமிழகத்தை பொறுத்த வரை சமவெளியில் ஒவ்வொரு பத்து கிலோமீட்டருக்கும் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனை இருக்கிறது. மேலும் நடமாடும் அரசு மருத்துவமனைகள் (Hopsital on wheels) மருத்துவமனை இல்லாத இடங்களையும் கவர் செய்கிறது.
மலைக்கிராம மக்களுக்கு தான் மருத்துவ தேவை கிடைக்க நேரம் ஆகிறது.
நாங்கள் தேர்ந்தெடுக்கும் இடங்கள் அனைத்தும் மருத்துவ வசதி இல்லாத கிராமங்களாக இருக்குமாறு பார்த்துக்கொள்கிறோம்.
சனிக்கிழமை முகாம் நடந்த பூண்டி/ கிளாவரை போன்ற கிராமங்கள் கொடைக்கானலை விட்டு 40 கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கின்றன. சுமார் இரண்டு மணிநேர கடினமான பயணம்.
இருப்பினும் அங்கு வாழும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற ஆர்வமே எங்களை வழிநடத்தியது. மேலும் இது போன்ற மலைக்கிராமங்களில் இரண்டு வகையான மக்கள் உண்டு. ஒன்று மலைக்கிராமங்களை தங்களின் பூர்வீகமாக கொண்ட மலைவாழ் இன பூர்வகுடி மக்கள் மற்றவர்கள் இங்கிருந்து அங்கு சென்று தலைதலைமுறையாக வாழ்பவர்கள்.
இவர்களின் வாழ்வியல் எவ்வாறெல்லாம் மாற்றம் பெற்று சமவெளி மக்களுக்கு வரும் அத்தனை நோய்களாலும் அவதியுறுகிறார்கள் என்பதையும் நேரடியாக கண்டு வருகிறோம்.
அவர்களது உணவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள். சிந்தனையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கண்டு வருகிறோம். தொற்றா நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உணவு முறை மாற்றத்திற்கான அறிவுரைகளை வழங்குகிறோம்.
படிக்க:
♦ குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடகம் போட்டதற்காக பள்ளி மீது தேசத் துரோக வழக்கு !
♦ விமானப் பயணத்தில் அர்னாப் கோஸ்வாமியை ‘வெச்சு செய்த’ குனால் காம்ரா !
சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் நடந்த முகாம்களில்
சுமார் 600 மலைவாழ் கிராம மக்களுக்கு நோய்க்கான சிகிச்சை அளித்ததில் மகிழ்ச்சி.
நனவாகும் கனா மருத்துவக்குழு என்பது இருபதுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களையும் நூற்றுக்கணக்கான நிதியுதவி செய்யும் தொண்டுள்ளங்களையும் கொண்டு இந்த நிலையை அடைந்துள்ளது .
இந்த மருத்துவக்குழுவிற்கான தொடக்கப்பள்ளி கஜா புயலின் கோரத்தை நேரில் பார்த்தால் என் மனதில் உருவானது. என்னால் இயன்ற ஒரு பிஸ்கெட் பாக்ஸ், ஒரு மெழுகுவர்த்தி பாக்ஸ் , எடுத்துக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றபோது அந்த மக்களுக்கான தேவை
ஒரு பிஸ்கெட் பாக்ஸோடு முடியவில்லை என்பதை உணர்ந்தேன்.
என்னை முகநூலில் தொடர்ந்து வரும் எனது கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் உள்ளங்கள் இந்த முயற்சியிலும் பங்கேற்பாளர்கள் என்ற எண்ணத்தில் “soul sharing” முறையை ஆரம்பித்தேன் .
என்னைப் போன்ற தொண்டுள்ளம் கொண்ட எதையும் எதிர்பாராத உள்ளங்கள் ஒன்றிணைந்தன. அதனால் உருவானதே இந்த “நனவாகும் கனா” மருத்துவக்குழு. கூடிய விரைவில் இந்த குழுவை அறக்கட்டளையாக மாற்றும் கனவை இறைவன் நனவாக்குவானாக…
எங்கெல்லாம் மருத்துவ வசதிகள் கிடைக்காமல் இருக்கின்றனவோ அங்கெல்லாம் சென்று முகாம் அமைத்து தொற்றா நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது எமது நோக்கம்.
முகநூல் மூலமாக நன்மைகளை விதைத்து நன்மைகளை அறுவடை செய்ய முடியும் என்பதற்கு நமது குழுவும் சிறு எடுத்துக்காட்டு.
இதற்கான பெரிய எடுத்துக்காட்டு தமிழகத்தில் மிகப்பெரிய தொற்றா நோய் குறித்த விழிப்புணர்ச்சியும் உணவுப்புரட்சியும் கொண்டு வரும் @ஆரோக்கியம்&நல்வாழ்வு குழுமத்தை சாரும்.
முகநூலை வெட்டி பேச்சு அரங்கம் என்ற நிலையில் இருந்து மாற்றியுள்ளது இது போன்ற இயக்கங்கள். சிந்தனைகள், எண்ணங்கள், கனவுகள் மட்டுமே நமது..
அதை நனவாக்குவது அவன்..☝️
முக்காலத்தையும் தன் வசம் வைத்திருக்கும் , அவனுக்கே புகழனைத்தும்… நம் எண்ணங்களில் சிந்தனையில் செயல்களில் முயற்சிகளில் நன்மையானவற்றில் இறைவனின் துணை நிற்பானாக..
நிச்சயம் நன்மையை ஏவி தீமையை தடுத்து அச்சமூட்டி எச்சரிக்கவேயன்றி நம்மை இறைவன் நம் அனைவரையும் ஒன்றிணைக்கவில்லை..
முகாம்கள் சிறக்க உதவி செய்த அனைவருக்கும் நன்றி
உதவியன்றியும் முகாம்கள் சிறக்க பிரார்த்தனைகள் செய்தோருக்கும் நன்றி!
நன்றி : ஃபேஸ்புக்கில் – Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.