Wednesday, April 16, 2025
முகப்புசெய்திஇந்தியாஅடிமாட்டு விலைக்கு ஏர் இந்தியா விற்பனை : கார்ப்பரேட் அடிமை அரசு !

அடிமாட்டு விலைக்கு ஏர் இந்தியா விற்பனை : கார்ப்பரேட் அடிமை அரசு !

தற்போது அடிமாட்டு விலைக்கு விற்கப்படுவது ‘ஏர் இந்தியா’ என்ற ஏதோ ஒரு அரசு நிறுவனமல்ல.. நமது உழைப்பிலிருந்து வரியாக உறிஞ்சப்பட்டு கட்டியமைக்கப்பட்ட ஒரு பொதுச் சொத்து...

-

டந்த ஜனவரி 27-ம் தேதியன்று மோடி அரசு ஏர் இந்தியா நிறுவனத்தின் 100% பங்குகளையும் அதன் துணை நிறுவனங்களான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ‘ஏர் இந்தியா SATS’ என்ற நிறுவனத்தின் 50% பங்குகள் ஆகியவற்றை விற்கப் போவதாக அறிவித்துள்ளது. சுமார் 87 ஆண்டுகளாக இந்திய அரசின் கையில் இருந்த வான்வழிப் போக்குவரத்து நிறுவனத்தை மொத்தமாகக் கைகழுவ முடிவு செய்திருக்கிறது மோடி அரசு.

இதற்கு முன்னர் கடந்த 2018-ம் ஆண்டு இந்நிறுவனத்தின் 76% பங்குகளை விற்பனை செய்வதாக மோடி அரசு அறிவித்தது. ஆனால் அச்சமயத்தில் எந்த நிறுவனமும் அதனை வாங்க முன்வரவில்லை. அதற்கு முக்கியமான காரணங்களுள் ஒன்று ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தோடு வந்த ரூ. 48,000 கோடி கடன் சுமைதான். அதேபோல, 76% பங்குகள் மட்டும்தான் விற்கப்பட்டதால், அரசாங்கத்தின் தலையீடு இருக்கலாம் என்ற தயக்கமும் மற்றொரு காரணம்.

இந்தமுறை எப்படியாவது விற்றே தீரவேண்டும் எனக் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கிறது பாஜக அரசு. இந்தமுறை மொத்த பங்கையும் விற்றுவிட முடிவெடுத்ததோடு, வாங்க விருப்பம் தெரிவிக்கவல்ல நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச மதிப்பை ரூ. 5,000 கோடியிலிருந்து ரூ. 3,500 கோடியாகக் குறைத்துள்ளது.

அதே சமயத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் மொத்தக் கடன் தொகையாகிய ரூ. 80,000 கோடியில் வெறும் ரூ. 23,286 கோடி கடன் மட்டுமே ஏர் இந்தியாவின் பங்குகளோடு சேர்ந்து ஏர் இந்தியாவை ஏலம் எடுக்கும் நிறுவனத்துக்குப் போய்ச் சேரும்.  (கடந்த முறை விற்பனை அறிவிப்பின் போது ரூ.48,000 கோடி கடனை பொறுப்பேற்க வேண்டிய நிலை இருந்தது)

கடந்தமுறை ரூ. 5,000 கோடிக்கு மூலதனம் வைத்திருக்கும் நிதி நிறுவனங்களின் முதலீடு மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அதையும் ரூ. 3,500 கோடியாக குறைத்திருக்கிறது மத்திய அரசு.

இதற்கு முன்னர் ஏலம் எடுக்கும் நிறுவனம், முந்தைய ஐந்தாண்டு காலத்தில் லாபமீட்டியிருக்க வேண்டும் என்ற விதியை இந்த முறை தளர்த்தியிருக்கிறது மோடி அரசு.

இந்தியாவில் ஏற்கெனவே பட்டியலில் இருக்கும் வான்போக்குவரத்து நிறுவனங்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்கியிருக்கிறது. அவர்கள் கடந்த காலத்தில் நட்டத்தில் இயங்கியிருந்தாலும் ஏலத்தில் பங்கு பெறலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

படிக்க :
♦ உழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் – 55
♦ ஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே !

கொஞ்சம் விட்டால் மோடி அரசு, ஏர் இந்தியாவை வாங்கும் நிறுவனத்திற்கு இலவசமாக ஏர் இந்தியாவையும் கொடுத்து கைச்செலவுக்குக் காசும் கொடுத்துவிடும் போலத்தான் தோன்றுகிறது. எப்படியாவது ஏர் இந்தியாவைக் கைகழுவினால் போதும் என்பதே அரசின் நோக்கமாக இருப்பது கண்கூடாகத் தெரிகிறது.

நட்டத்தில் இயங்குவதைத்தானே அரசு விற்கிறது என்று எண்ணுபவர்கள், லாபத்தில் இயங்கும் எல்.ஐ.சி.-யை விற்க இந்த அரசு முடிவு செய்துள்ளதைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நம் முன்னோர்களின் பாரம்பரிய சொத்து ஒன்று இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை பாதுகாக்கவும், பராமரிக்கவும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு காவலாளியை நியமிக்கிறோம். அந்தக் காவலாளியின் வேலை, அந்த சொத்தை பராமரிப்பதும், பாதுகாப்பதும், மேம்படுத்துவதும்தானே.

ஆனால் அந்தக் காவலாளி, அந்தச் சொத்தை இன்னொரு சூதாடியிடம் அடிமாட்டு விலைக்கு விற்றுவிடப் போகிறான் என்றால் பார்த்துக் கொண்டு சும்மா இருப்போமா?

தற்போது அடிமாட்டு விலைக்கு விற்கப்படுவது ‘ஏர் இந்தியா’ என்ற ஏதோ ஒரு அரசு நிறுவனமல்ல.. நமது உழைப்பிலிருந்து வரியாக உறிஞ்சப்பட்டு கட்டியமைக்கப்பட்ட ஒரு பொதுச் சொத்து, சரியாகச் சொல்லப்போனால் நமது சொத்துக்களை நிர்வகிக்க நம்மால் நியமிக்கப்பட்ட ‘சௌகிதார்’ மோடி அதனை தனது எஜமானர்களான கார்ப்பரேட் சூதாடிகளுக்கு கூறு போட்டு விற்றுக் கொண்டிருக்கிறார். நாமும் அதனைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கப் போகிறோமா ?

நந்தன்

செய்தி ஆதாரம் : டெலிகிராப்