அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 57

வர்க்கங்களும் வருமானங்களும்

அ.அனிக்கின்

திப்புத் தத்துவம் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்ட இரண்டு கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியிருந்தது என்பது நமக்குத் தெரிந்ததே. விலைகளின் இறுதியான அடிப்படை எது, வருமானத்தின் இறுதியான தோற்றுவாய் எது என்பவை இத்தகைய கேள்விகளாகும். முதல் கேள்விக்கு ஸ்மித் பகுதியளவுக்குச் சரியான பதிலைக் கூறினார்; ஆனால் அதை யதார்த்தத்தோடு சமரசப்படுத்த முடியவில்லையாகையால் பிறகு கொச்சையான கருத்து நிலையை மேற்கொண்டார். உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தை வளர்க்கும் பொழுது இரண்டாவது கேள்விக்கு விஞ்ஞான ரீதியாகத் தீர்வு காண்பதில் அவருடைய பங்கும் இருந்தது. ஆனால் அது மறுபடியும் முரண்பாட்டைக் கொண்டிருந்தது.

ஸ்மித் “பூர்வீக சமுதாயம்” என்று சொல்லும் பொழுது எவ்விதமான அர்த்தத்தில் அதைக் கையாள்கிறார்? அது அநேகமாக ஒரு கற்பனையே என்று அவர் கருதியபோதிலும் அந்தக் கற்பனை ஒரு முக்கியமான அர்த்தத்தைக் கொண் டிருப்பதாக அவர் நினைத்தார். அது தனிச் சொத்துடைமை இல்லாத சமூகம் என்று அவர் நினைத்தாரா? அநேகமாக அப்படி நினைத்திருக்க மாட்டார். மனிதகுலத்தின் கடந்த காலத்தில் அல்லது எதிர்காலத்தில் இத்தகைய ஒரு “பொற்காலத்தை” ஸ்மித் காணவில்லை. அவர் அநேகமாக தனிச் சொத்துடைமை உள்ள, ஆனால் வர்க்கங்கள் இல்லாத ஒரு சமூகத்தையே மனதில் எண்ணியிருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சமூகம் சாத்தியமா அல்லது எந்தக் காலத்திலாவது இருந்திருக்கிறதா என்பது முற்றிலும் வேறு வகையான கேள்வியாகும்.

பத்து லட்சம் விவசாயிகளைக் கொண்ட ஒரு சமூகத்தை நாம் கற்பனை செய்வோம். அங்கே ஒவ்வொரு விவசாயியும் தன்னுடைய தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு மட்டுமே போதுமான நிலமும் உழைப்புக் கருவிகளும் வைத்திருக்கிறார், தன்னுடைய குடும்பத்தின் நுகர்வுக்கும் பரிவர்த்தனைக்கும் மட்டுமே போதுமான அளவுக்கு உற்பத்தி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இவர்களைத் தவிர, அந்த சமூகத்தில் இன்னொரு பத்து லட்சம் சுதந்திரமான கைவினைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய சொந்த உழைப்புக் கருவிகளைக் கொண்டும் மூலப் பொருள்களைக் கொண்டும் பாடுபடுகிறார்கள். இந்தச் சமூகத்தில் கூலி உழைப்பு என்பது கிடையாது.

கெனேயின் கருத்தின்படி இந்த சமூகத்தில் இரண்டு வர்க்கங்கள் இருக்கின்றன. ஸ்மித்தின் கருத்தில் ஒரே ஒரு வர்க்கம் மட்டுமே இருக்கிறது. ஸ்மித்தின் அணுகுமுறையே அதிகம் சரியானதாக இருக்கிறது. ஏனென்றால் வர்க்கங்கள், அந்த வர்க்கங்களை அமைக்கின்ற மக்கள் பொருளாதாரத்தின் எந்தத் துறையில் உழைக்கிறார்கள் என்பதைப் பொறுத்து வேறுபடுவது கிடையாது, உற்பத்திச் சாதனங்களோடு இவர்கள் கொண்டிருக்கும் உறவைப் பொறுத்தே இந்த வேறுபாடு ஏற்படுகிறது. மேலே கொடுக்கப்பட்ட உதாரணத்தில் பண்டங்களின் பரிவர்த்தனை உழைப்பின் மதிப்புக்குத் தகுந்தவாறு நடைபெறுகிறது, உழைப்பின் மொத்த உற்பத்திப் பொருள் (அல்லது அதனுடைய மதிப்பு) தொழிலாளிக்குச் சொந்தமாக இருக்கிறது என்று ஸ்மித் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அதைப் பகிர்ந்து கொள்வதற்கு யாரும் இன்னும் தோன்றவில்லை. ஆனால் அந்தக் காலம் எப்பொழுதோ முடிந்து விட்டது. நிலம் நிலவுடைமையாளர்களின் தனிச் சொத்தாக மாறிவிட்டது, பட்டறைகளும் தொழிற்சாலைகளும் முதலாளிகளின் உடைமைகளாக இருக்கின்றன. இதுதான் நவீன சமூகமாகும். அது கூலித் தொழிலாளர்கள், முதலாளிகள், நிலவுடைமையாளர்கள் என்ற மூன்று வர்க்கங்களைக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கிடையேயும் பல்வேறு இடைநிலை அடுக்குகளையும் குழுக்களையும் இனம் காண்பதற்குரிய அளவுக்கு ஸ்மித் யதார்த்தவாதியாக இருக்கிறார். ஆனால் கோட்பாட்டளவான பொருளாதார ஆராய்ச்சியில் ஒருவர் இந்த அம்சங்களைப் புறக்கணித்துவிட்டு மூன்று வர்க்கங்கள் என்ற மாதிரிப்படிவத்திலிருந்து முன்னேறலாம்.

படிக்க:
♦ தேசிய அவமானம் : வட இந்தியாவில் 49% குடும்பங்கள் தீண்டாமை கடைபிடிக்கின்றன !
♦ நூல் அறிமுகம் : கூலி உழைப்பும் மூலதனமும் | மனிதன் உருவானதில் உழைப்பின் பாத்திரம்

இன்று ஒரு தொழிலாளி யாரோ ஒருவருடைய நிலத்தில் யாரோ ஒருவருடைய மூலதனத்தின் உதவியைக் கொண்டு பாடுபடுவது ஒரு விதியாகவே இருக்கிறது. எனவே அவருடைய உழைப்பின் மொத்த உற்பத்திப் பொருளும் இனியும் அவருக்குச் சொந்தமாக இருப்பதில்லை. இந்த உற்பத்திப் பொருளிலிருந்து அல்லது அதனுடைய மதிப்பிலிருந்து நிலவுடைமையாளரின் குத்தகைப் பணம் முதலில் கழிக்கப்படுகிறது. இரண்டாவதாக, தொழிலாளிகளை வேலைக்கு வைத்துக் கொண்டு அவர்களுடைய வேலைக்குத் தேவையான கருவிகளையும் பொருள்களையும் கொடுக்கின்ற முதலாளியின் லாபம் கழிக்கப்படுகிறது.

உபரி மதிப்பு என்பது முதலாளிகளும் நிலவுடைமையாளர்களும் உழைப்பைச் சுரண்டுவதன் வெளிப்பாடு என்று புரிந்து கொள்ளுகிற அளவுக்கு ஸ்மித் நெருங்கி வருகிறார். எனினும் மார்க்சுக்கு முன்பிருந்த எல்லாப் பொருளியலாளர்களையும் போலவே அவர் உபரி மதிப்பை ஒரு தனிவகையான இனமாகப் பிரித்துக் கூறவில்லை; முதலாளித்துவ சமூகத்தின் மேற்பரப்பில் அது மேற்கொள்ளும் ஸ்தூலமான வடிவங்களான லாபம், குத்தகை, வட்டி என்பவற்றை மட்டுமே அவர் ஆராய்ந்தார். ஸ்மித் நாடுகளின் செல்வத்தில் ஒரு காலத்தில் தொழிலாளிக்குச் சொந்தமாக இருந்த உழைப்பின் முழு உற்பத்திப் பொருள் பிறகு அவரிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டதைக் குறிப்பிடுகின்ற ஐந்து இடங்களை பி. டக்ளஸ் எடுத்துக் காட்டுகிறார். இந்தச் சொற்றொடர் “சோஷலிசச் சிந்தனையின் வரலாற்றில் மிகவும் அதிகமான முக்கியத்துவம் வாய்ந்தது, அதை ஆடம் ஸ்மித்தின் புத்தகத்தில் காண்பது அதிகமாகக் குறிப்பிடக் கூடியதாகும்…” (1)  என்று டக்ளஸ் எழுதுகிறார். இது மிகவும் உண்மையே. நாடுகளின் செல்வம் புத்தகத்தை அறிஞர்கள் மிக நுட்பமான சோதனைக்கும் ஆராய்ச்சிக்கும் உட்படுத்தியிருக்கிறார்கள் என்பதை நான் இங்கே குறிப்பிட வேண்டும். இவ்வளவு அதிகமான அளவுக்கு மாறுபட்ட – முரண்பாடாகவும் இருக்கின்ற வாசகங்களைக் கொண்ட மாபெரும் இலக்கியங்கள் மிகச் சிலவே.

ஸ்மித்தினுடைய சிந்தனையில் மற்றொரு கருத்தோட்டம் கூலி, லாபம், வாரம் ஆகிய வருமானங்களின் மொத்தமே மதிப்பு என்ற அவருடைய அபிப்பிராயத்திலிருந்து தோன்றுகிறது. லாபமும் வாரமும் ஒரு பண்டத்தின் மதிப்பைப் படைக்கின்றன என்றால் அந்தப் பண்டத்தின் முழு மதிப்பிலிருந்து அவற்றைக் கழிக்க முடியாது என்பதே உண்மையாகும். இங்கே வருமானங்களைப் பகிர்ந்தளிப்பதைப் பற்றிய முற்றிலும் மாறுபட்ட கருத்தைக் காண்கிறோம். உழைப்பு, மூலதனம், நிலம் என்ற ஒவ்வொரு உற்பத்திக் காரணியும் (இந்தச் சொல் பிற்காலத்தில் தான் உபயோகப்படுத்தப்பட்டது) பண்டத்தின் மதிப்பைப் படைப்பதில் பங்கு கொள்கின்றன, அதற்குரிய பங்கை இயற்கையாகவே கோருகின்றன என்பது இக்கருத்தாகும். தன் கருத்துக்கு ஆதரவான வாதத்தைக் கொடுத்த பொருளியலாளர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பறைசாற்றிய “மூலதனத்தின் தெய்விக உரிமை” என்பது இங்கேயிருந்து வெகு தூரத்தில் இல்லை.

வருமானங்களிலிருந்து மதிப்பை உருவாக்கிக் கொண்ட பிறகு ஸ்மித் ஒவ்வொரு வருமானமும் நிர்ணயிக்கப்படுகின்ற இயற்கையான விகிதத்தை ஆராய்வதற்கு முடிவு செய்கிறார், அதாவது சமூகத்தின் வர்க்கங்களுக்கிடையே தனிப்பட்ட பண்டம் மற்றும் மொத்த உற்பத்திப் பொருளின் மதிப்பு எந்த விதிகளின்படி பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பதை ஆராய்வதற்கு முடிவு செய்கிறார்.

முக்கியமான மூன்று வருமானங்கள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்த பிறகு ஸ்மித் மறுபடியும் ஓரளவுக்கு அவருடைய உபரி மதிப்புத் தத்துவத்துக்குத் திரும்புகிறார். கூலியைப் பற்றிய அவருடைய கருத்து இன்றைக்கும் கூட அக்கறை கொள்வதற்கு உரியதாக இருக்கிறது. கூலியைப் பற்றிய அவருடைய தத்துவம் பல அம்சங்களில் திருப்திகரமாக இல்லை என்பது சரியே, ஏனென்றால் தொழிலாளி முதலாளியிடம் தன்னுடைய உழைப்புச் சக்தியை விற்பனை செய்வதில் அடங்கியுள்ள உறவுகளின் உண்மையான தன்மையை அவர் புரிந்து கொள்ளவில்லை. அவர் நடைமுறையில் உள்ள உழைப்பையே பண்டம் என்றும் அதன் காரணமாக அதற்கு ஒரு இயற்கையான விலை இருப்பதாகவும் அனுமானித்தார். ஆனால் அவர் இந்த இயற்கையான விலையை மார்க்ஸ் உழைப்புச் சக்தியின் மதிப்பை வரையறுத்த அதே விதத்தில் – தொழிலாளியும் அவருடைய குடும்பமும் உயிரோடிருக்கத் தேவையான சாதனங்களின் மதிப்பின் மூலமாகஉண்மையாகவே வரையறுத்தார். ஸ்மித் இதற்கு யதார்த்த ரீதியான, முக்கியமான சேர்ப்புகளின் தொடரையும் கொடுத்தார்.

படிக்க:
♦ “அச்சச்சோ கம்யூனிச பூதம்!’ – அல்பேனியா பயணக்கதை | கலையரசன்
♦ ஆங்கிலேயரிடம் ஓய்வூதியம் வாங்கிய சாவர்க்கர் !

முதலாவதாக, உழைப்புச் சக்தியின் மதிப்பு (”இயற்கையான கூலி” என்பது அவருடைய சொற்றொடர்) உயிரோடிருக்கத் தேவையான சாதனங்களின் குறைந்த பட்சத்தினால் நிர்ணயிக்கப்படுவது மட்டுமல்லாமல், கால, நேர நிலைமைகளையும் பொறுத்திருக்கிறது, அதில் வரலாற்று ரீதியான, கலாச்சார ரீதியான கூறுகளும் அடங்கியிருக்கின்றன என்பதை முன்பே உணர்ந்திருந்தார். தோலினால் செய்யப் படும் காலணிகளை ஸ்மித் உதாரணமாகக் காட்டினார். இங்கிலாந்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அது அவசியமிக்க பொருள், ஸ்காட்லாந்தில் ஆண்களுக்கு மட்டும் அது அவசியமான பொருள், பிரான்சில் இருபாலாருக்குமே அது அவசியமான பொருளல்ல. பொருளாதாரம் வளர்ச்சி அடைகின்ற பொழுது தேவைகளின் வட்டம் விரிவடைகிறது, உண்மையான பண்டங்களில் எடுத்துரைக்கப்படும் உழைப்புச் சக்தியின் மதிப்பும் அதிகரிக்க வேண்டும் என்ற முடிவுக்கு ஒருவர் வருவது இயற்கை.

இரண்டாவதாக, தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட குறைவான கூலிக்கு அது குறைந்த பட்சத்தை ஒட்டியே இருந்தது – முக்கியமான காரணங்களில் ஒன்று முதலாளியோடு ஒப்பிடுகின்றபொழுது அவர்களுடைய பலவீனமான நிலைமையே என்பதை ஸ்மித் தெளிவாகப் பார்த்தார். அவர் இதைப் பற்றி மிகவும் வன்மையாக எழுதினார். தொழிலாளர்களின் ஸ்தாபனமும் ஒருமைப்பாடும், அவர்களுடைய எதிர்ப்புமே தொழிலதிபர்களின் பேராசையைக் கட்டுப்படுத்தும் என்று ஒருவர் முடிவு செய்வது இயற்கையே.

கடைசியில் மூன்றாவதாக, அவர் கூலியில் ஏற்படும் போக்குகளை நாட்டின் பொருளாதார நிலைமையோடு இணைத்தார்; முற்போக்கான பொருளாதாரம், பிற்போக்கான பொருளாதாரம், மாற்றமில்லாத பொருளாதாரம் என்று நாட்டின் பொருளாதாரத்தில் மூன்று வகைகளைப் பிரித்துக் காட்டினார். முதல் வகையில் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தின் காரணமாக உழைப்புக்கு அதிகமான தேவை ஏற்பட்டுக் கூலி அதிகரிக்கும் என்று அவர் நம்பினார். வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரம் கூலி உயர்வுக்காகத் தொழிலாளர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு உண்மையாகவே உதவியாக இருப்பதை முதலாளித்துவப் பொருளாதாரத்தின் பிற்காலத்திய வளர்ச்சி எடுத்துக் காட்டியிருக்கிறது.

அரசியல் பொருளாதாரத்தில் லாபத்தை ஒரு விசேஷமான பொருளாதார இனமாகப் பிரித்துக் காட்டுகின்ற பணியை ஸ்மித் பூர்த்தி செய்தார். ”மேற்பார்வையிடுதல் மற்றும் இயக்குதல்” என்ற விசேஷமான வேலை ரகத்துக்குக் கொடுக்கப்படும் கூலியே லாபம் என்ற கருத்தை அவர் அடிப்படையில் நிராகரித்தார். லாபத்தின் அளவு மூலதனத்தின் அளவினால் நிர்ணயிக்கப்படுவதையும் இந்த உழைப்பிலுள்ள சிரமத்தைப் பற்றிக் கற்பனையாகச் சொல்லப்படுவதற்கும் அதற்கும் எத்தகைய சம்பந்தமும் இல்லையென்பதையும் அவர் எடுத்துக் காட்டுகிறார். இங்கும் இன்னும் சில பகுதிகளிலும் லாபம் என்பது சுரண்டுபவருடைய வருமானம், அது உபரி மதிப்பின் முக்கியமான வடிவம் என்பதை எடுத்துக் காட்டுகிறார்.

இந்தக் கருத்துக்குப் பக்கத்திலேயே லாபத்தைப் பற்றிய மேலெழுந்தவாரியான முதலாளித்துவக் கருத்தையும் நாம் பார்க்கிறோம். லாபம் என்பது ஆபத்தை மேற்கொள்வதற்காக, தொழிலாளி பிழைப்பதற்குரிய சாதனத்தைக் கொடுப்பதற்காக, தவிர்ப்பு என்று சொல்லப்படுவதற்காக முதலாளிக்குத் தரப்படுகின்ற இயற்கையான வெகுமதி என்றும் எழுதுகிறார்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

 (1)  Adam Smith, 1776-1926, “Lectures to Commemorate the 150th Anniversary of the Publication of The Wealth of Nations”, Chicago, 1928, p. 96.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க