Saturday, April 19, 2025
முகப்புசெய்திஇந்தியாRSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக்கு 23 கோடி !

RSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக்கு 23 கோடி !

சமஸ்கிருதத்திற்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கப்படுவதும் பிற மொழிகளுக்கான நிதி குறைக்கப்படுவதும், மொழித் தீண்டாமையைத் தவிர வேறு என்னவாம்?

-

மொழி வளர்ச்சிக்கு கடந்த மூன்றாண்டுகளில் ஒதுக்கப்பட்டுள்ள தொகையில், சமஸ்கிருதத்திற்கு மட்டும் ரூ. 643.84 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிற 5 செவ்வியல் மொழிகளுக்கு மொத்தமாகச் சேர்த்தே ரூ. 29 கோடி மட்டும்தான் செலவழிக்கப்பட்டுள்ளது. கலாச்சார அமைச்சகம் வெளியிட்ட தகவல்களிலிருந்து இந்த விவகாரம் வெளிவந்துள்ளது.

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், சமஸ்கிருதத்தை பரப்புவதற்கான ராஷ்டிரிய சமஸ்கிருத சன்ஸ்தன் என்ற அமைப்பை உருவாக்கி, ரூ. 643.84 கோடி ரூபாயை கடந்த மூன்று ஆண்டுகளில் ஒதுக்கியுள்ளது. கடந்த 2019-2020 நிதியாண்டில், ரூ. 231.15 கோடியும், 2018-2019 நிதியாண்டில் ரூ. 214.38 கோடியும், 2017–2018 நிதியாண்டில் ரூ. 198.31 கோடியும் ஒதுக்கியுள்ளது.

செம்மொழி தமிழுக்கான மத்திய நிறுவனத்தின் மூலமாக தமிழ் மொழி வளர்ச்சிக்கு செலவழிக்கும் தொகை பெருவாரியாகக் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2017–2018-ல் இந்நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை வெறும் ரூ. 10.59 கோடி மட்டுமே. மேலும் 2018 – 2019-ம் ஆண்டில் வெறும் ரூ. 4.65 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. கடந்த 2019- 2020-ம் ஆண்டில் ரூ. 7.7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் கடந்த மூன்றாண்டுகளில் தமிழுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.23 கோடி மட்டுமே !

கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளில் தலா வெறும் ரூ. 3 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளுக்கு கடந்த மூன்றாண்டுகளில் ரூ. 29 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மலையாளம் மற்றும் ஒடியா மொழிக்கும் எந்தப் பணமும் இதுவரை ஒதுக்கப்படவில்லை. ஒடியாவுக்கும் மலையாளத்துக்கும் சிறப்பு வளர்ச்சி மையங்கள் அமைப்பது பற்றி பரிசீலித்து வருவதாக மனித வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரயில் நிலையங்களில் உருது மொழியில் எழுதப்பட்டிருக்கும்  பெயர்களை நீக்கிவிட்டு, சமஸ்கிருதத்தில் எழுத இருப்பதாக மத்திய அரசு அறிவித்த சமயத்தில் சமஸ்கிருதத்திற்கு மட்டும் ஏன் தனிச்சிறப்பு கவனம்கொடுக்கப்படுகிறது என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

உத்த்ரகாண்டில் சமஸ்கிருதமயமாக்கும் முயற்சி, ரயில் நிலையங்கள் மூலம் திணிக்கப்பட்டது. “இந்தி, ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளுக்குப் பதிலாக உத்தரகாண்ட் முழுவதும், ரயில் நிலையங்களில் இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பெயர்ப்பலகைகள் எழுதப்படும்” என்று ஒரு ரயில்வேதுறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழக்கு நடத்த வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி தயாநிதி மாறன் பேசுகையில், சமஸ்கிருதத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் கொடுக்கப்படும் சூழலில் செம்மொழி தமிழுக்கு மிகக் குறைவான தொகை ஒதுக்கப்படுவது குறித்து தயாநிதிமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கான முறையான பதில் மத்திய அரசிடம் இல்லை.

படிக்க:
கலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா
♦ சமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் : மக்களவையில் சு.வெங்கடேசன் வாதம் !

கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசின் சார்பில் 43 சமஸ்கிருதப் பள்ளிகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்படும் என்று பெகூர் பிராமணர் சங்கம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடக துணை முதல்வர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் அந்நிகழ்ச்சியில் பேசுகையில், “நாட்டில் தற்போது உள்ள நிலைமைகள் போதுமானவையல்ல. கலாச்சார வகையில் இன்னும் நாடு உறுதியாக்கப்பட வேண்டும். வேத ஆய்வு உட்பட மத மற்றும் கலாச்சார பணிகளை பெகூர் பிராமணர் சங்கம் செய்து வருகிறது.” என்றார்.

“தினமும் சமஸ்கிருதத்தில் பேசினால், நரம்பு மண்டலம் சீராகும். மாரடைப்பு மற்றும் சர்க்கரை நோய் வராது. நாசாவின் ஆய்வுப்படி, சமஸ்கிருதத்தில் கணிணி மொழி உருவாக்கப்பட்டால், அது பிழையற்றதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது” என கடந்த ஆண்டு சமஸ்கிருத பல்கலைக்கழக மசோதாவை மக்களவையில் கொண்டுவந்த போது பாஜக எம்.பி கணேஷ் சிங் தெரிவித்தார்.

இப்படி அறிவியலுக்குப் புறம்பாக, செத்துப் போன மொழியான சமஸ்கிருதத்தை முன் நிறுத்துவதன் மூலம், பார்ப்பனியத்தையும் வேத கலாச்சாரத்தையும் முன் நிறுத்துகிறது, பாஜக ஆர்.எஸ்.எஸ். கும்பல். “ஒரே நாடு ஒரே கலாச்சாரம்” என்ற பெயரில் இந்தியாவின் பல்வகைக் கலாச்சாரத்தை அழிக்க முற்படும் சங்க பரிவாரத்தை எதிர்த்துக் களத்தில் இறங்க வேண்டிய தருணம் இது..


நந்தன்
நன்றி :  தி வயர்.