PP Letter head24.03.2020

♦ அரசு – தனியார் என அனைத்து மருத்துவ, சுகாதார, பரிசோதனை நிலையங்களையும் அரசு நிர்வாகத்தின் கீழ் ஒருங்கிணை!

♦ புறநகர் கல்லூரிகளை தற்காலிக மருத்துவமனைகளாக மாற்று!

♦ போர்க் கால அடிப்படையில் இலவச மருத்துவ பரிசோதனை, தொடர் சிகிச்சை வழங்கிடு!

♦ குடும்பம் ஒன்றிற்கு இருபதாயிரம் நிவாரணத் தொகை அளித்திடு!

♦ கொரோனாவிலிருந்து மக்களைக் காக்க அனைத்து வகையிலும் அரசு செயல்பட குரல் எழுப்புவோம்!

அன்பார்ந்த மக்களே,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டு இலட்சம் பேருக்கு மேல் தாக்கி உள்ளது. இதுவரை பல ஆயிரம் உயிர்களை பலிவாங்கி உள்ளது. கொரோனா நோய் தொற்று பரவி வரும் வேகம் இனி எத்தனை உயிர்கள் போகும் என தெரியவில்லை. அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் என மருத்துவம், தொழில்நுட்பம், நிதிவளம் மிக்க நாடுகளே திணறிவரும் நிலையில், மக்களை பற்றி கவலைப்படாத பாசிச பா.ஜ.க அரசால் இந்தியாவில் மக்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்புகள் பன்மடங்கு இருக்கப் போகின்றது.

கடந்த மூன்று மாதங்களாக நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை சீனா எவ்வாறு போர்க்கால முறையில் கையாண்டது என்ற அனுபவத்தை மோடி அரசு அலட்சியம் செய்துள்ளது. நோய் தொற்றலுடன் இந்தியாவிற்குள் நுழைவோரை பரிசோதித்து மருத்துவ ரீதியாக தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல்; சந்தேகப்படும் நிலையில் உள்ளோரை விமான நிலையங்கள், துறைமுகங்கள் அருகிலேயே அரசு காப்பகங்களை உருவாக்கி 14 நாட்கள் தனிமைப்படுத்தி பராமரித்தல்; அவர்களுக்கு தொடர்ந்து பரிசோதனை நடத்தி நோய் தொற்றுயில்லை என உத்திரவாதப்படுத்தி வெளியே விடுதல் என இந்திய அரசு துவக்க நிலையிலேயே செயல்பட்டிருந்தால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தியிருக்கலாம்.

சீனாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை.

கோவிட்-2019 கொரோனா வைரஸ் இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்ததாகும். சீனாவைத் தொடர்ந்து ஈரானுக்கும், சில அய்ரோப்பிய நாடுகளுக்கும் பரவியிருந்த நிலையிலேயே, அரசு இயந்திரத்தை ஒருங்கிணைந்த முறையில் முடுக்கி விட்டு மேற்கூறிய நடவடிக்கைகளை செய்திருந்தால் பிறருக்கு கொரோனா பரவியதை தடுத்திருக்கலாம். சமூக பரவலாக்கல் (community transmission) ஆகியுள்ளதா என கண்டறிய கொரோனாவால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ள மக்கள் தொகையினரை ஒரே நேரத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கலாம். இவ்வாறு தடுப்பு நடவடிக்கைகளை ஆக்கப்பூர்வமாக செய்வதை விடுத்து, அது குறித்து விவாதங்கள் ஏற்படுவதை தடுக்கும் விதமாக, கையை கழுவுவது எப்படி, தும்முவது எப்படி என்ற பிரச்சாரத்தில் மக்களை முழ்கடித்து தனிநபர் ஒழுங்கு தான் தீர்வு என நிலைநாட்டி வருகின்றன அரசு நிர்வாகங்களும், ஊடகங்களும். கொரோனா வைரஸ் பரவல் போன்ற திடீர் தாக்குதல்களை எதிர்கொள்கின்ற வகையில் நம் அரசு மருத்துவ கட்டமைப்போ, பரவலான மருத்துவ பரிசோதனை செய்யும் வசதிகளோ நம் நாட்டில் இல்லை என்பதே உண்மை.

ஸ்பெயின் நாட்டில் நோய்பரவல் தீவிரமான நிலையில், வீட்டிற்குள் தங்களை முடக்கிக் கொண்ட மக்கள், பொதுவெளியில் நோய் தொற்றுக்கு எதிராகப் போராடும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாடிகளில் நின்று கைதட்டினர். அந்நாட்டு மக்களின் இந்த உணர்வெழுச்சி வடிவத்தினை, ஒரு பாசிஸ்டுக்கே உரிய நயவஞ்சக விளம்பர உத்தியுடன் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஒரு நாள் மக்கள் ஊரடங்கு என்றும், கைத்தட்டுங்கள் என்றும் நாட்டு மக்களுக்கு அறிவித்தார் மோடி. இந்த 14 மணி நேர ஊரடங்கால் வைரஸ் பரவல் தடுத்து நிறுத்தப்படும் என இரஜினிகாந்த் உள்ளிட்ட சங்கி முட்டாள்கள் மருத்துவ அறிவியலுக்கு எதிராக பிரச்சாரம் செய்து, கொரோனாவில் இருந்து மக்களை காக்கும் மீட்பராக மோடியை காட்ட முயற்சித்தனர். மருத்துவர்களோ கைத்தட்டல் வேண்டாம் நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாக்க உபகரணங்களை தாருங்கள் என மன்றாடுகின்றனர். இருந்த போதிலும் மேட்டுக்குடியினரும், சங்பரிவாரங்களின் பிரச்சாரத்தில் பலியான மக்களும் தேசியக் கொடியுடன் அருகருகில் நின்று கரவொலி எழுப்பினர். இப்போது மேலும் இரு வாரங்கள் ஊரடங்கினை அமுல்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு தமிழகம் முழுவதும் போடப்பட்டுள்ளது.

படிக்க:
கொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி ? | ஃபரூக் அப்துல்லா
கொரோனா வைரஸ் குறித்த மூடநம்பிக்கைகளும் ! உண்மைகளும் !

வயிற்றுப் பிழைப்புக்காக சென்னை போன்ற மாநகரங்களில் தஞ்சமடைந்து இருந்த மக்கள்  கொத்துக்கொத்தாக வெளியேறுகிறார்கள். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மீண்டும் சொந்த ஊர்களுக்கே செல்கிறார்கள். வெளிமாநில தொழிலாளர்களுக்கு அந்த வாய்ப்பும் இல்லை. ஆயிரக்கணக்கானவர்கள் ரயில் நிலையங்களிலேயே படுத்துக்கிடக்கிறார்கள்.  மாவட்ட எல்லைகளை மூடுவது, பொதுப் போக்குவரத்தினை துண்டிப்பது, தொழிற்சாலை – நிறுவனங்களுக்கு விடுமுறை, அரசு நிறுவனங்களை குறைவான ஊழியர்களை கொண்டு இயக்குவது எனப் புதுப்புது அறிவிப்புகளை அரசு நிர்வாகம் வெளியிட்டுக்கொண்டே உள்ளது. சமூக விலக்கல் தூரத்தினை (Social distancing) எவ்வாறு பொது இடங்களில் மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்ற பொது வழிகாட்டுதல் வழங்கி ஒரு பரிசோதனை முயற்சியினை கூட செய்யாமல், சமூகத்தின் இயக்கம் மொத்தமாக முடக்கப்படுகின்றது.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை முறையாக பரிசோதித்து தனிமைப்படுத்தாமல் அலட்சியமாக விட்டுவிட்ட மோடி அரசு, இப்போது ஒரு வேளை சோற்றுக்கும் வழியில்லாத மக்களுக்கு தங்களை தனிமைப்படுத்தி வீட்டில் இருப்பதினை தவிர வேறு வழியில்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளது.

சொந்த ஊருக்கு செல்ல கோயம்பேட்டில் குவிந்த மக்கள்.

பல இலட்சம், பல்லாயிரம் என சம்பளம் வாங்கும் ஐ.டி. ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்யச் சொல்லிவிட்டார்கள். மத்திய மாநில அரசு ஊழியர்கள், ஆசியர்களுக்கும், பணக்கார மேட்டுக்குடியினரும் சில மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக்கொண்டார்கள். அவர்கள் எத்தனை மாதங்கள் வீட்டில் முடங்கினாலும் கவலையில்லை. தொழிற்சாலை முதலாளிகள் கம்பெனிகளை மூடுவதால் பெயிலவுட் என அறிவித்து தொழில்நட்டம் என அரசிடம் நட்ட ஈடு பெற்றுக்கொள்வார்கள்.    (2008-இல் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது பல நிறுவனங்கள் இப்படி செய்துள்ளன.)  ஆனால், பெரும் பாதிப்படையும் ஏழை மக்களுக்கு அரசு என்ன செய்யப் போகின்றது. தினக்கூலிகள், வீடற்ற ஏழை மக்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், வாகன ஒட்டுநர்கள், சிறுவியாபாரிகள் என வருமானம் இன்றி, உணவின்றி முடங்கப் போகும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு யார் பொறுப்பேற்பது. சுனாமி, கனமழை –பெருவெள்ளம், சூறாவளி, புயல்,வறட்சி போன்ற இயற்கை பேரிடராக இருந்தாலும் சரி, கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் பொருளாதார நெருக்கடி, தொழில் முடக்கம், ஆலை மூடல் – வேலையின்மை போன்றவைகளானாலும் ஏழைகள்தான் பாதிக்கப்படுகின்றனர்.

முடக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மற்ற நாடுகள் பல இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கும் போது, தொலைக்காட்சியில் நீட்டி முழங்கிய மோடி இது குறித்து அன்றும் பேசவில்லை. தற்சமயம் உரையாற்றிய போது இது குறித்து நிதி அமைச்சர் தலைமையில் கமிட்டி அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளார். ஜி.எஸ்.டி. வரி மாநில பங்குத் தொகை பல ஆயிரம் கோடிகளை மத்திய அரசு பிடித்து வைத்துள்ளது. இந்த நிலையில் மாநில அரசு நிதிப்பற்றாக்குறையினால் தடுமாறுகின்றது. சுமார் ஐந்து லட்சம் கோடி நிதி ஒதுக்கினால்தான் கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க முடியும் என வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

அரசு மருத்துவர்கள் தங்கள் சொந்த பொறுப்பில் பாதுகாப்பு உபகரணங்களை வைத்துக்கொள்ள வேண்டுமென்ற அவலம்.

சமூக நலன் கொண்ட மருத்துவர்கள் கவலைப்படுவதெல்லாம் கொரோனா பாதிப்பில் இருந்து நோயாளிகளை எப்படி காப்பது என்பதினை விட, சமூக பரவலாக்கல் ஏற்பட்டு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்புக்குள்ளாகி விட்டால் சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், படுக்கைகள் இல்லாத நெருக்கடியான நிலை கண்டு தான். தனியார் மருத்துவமனைகளையும் உள்ளடக்கி இது தான் மொத்த நிலை எனும் போது, அரசோ தனியார் மருத்துவமனைகளை ரூ.4500 மிகாமல் பரிசோதனை செய்து கொள்ள அனுமதிக்கிறது. உங்களிடம் வருவோருக்கு மருத்துவம் பாருங்கள், பணம் தருகிறோம் என தனியாரிடம் பேரம் பேசுகிறது. அரசு – தனியார் என அனைத்து மருத்துவ, சுகாதார, பரிசோதனை நிலையங்களையும் அரசு நிர்வாகத்தின் கீழ் ஒருங்கிணைத்து, புறநகர் கல்லூரிகளை தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றி, போர்க் கால நடவடிக்கையாக இலவச மருத்துவ பரிசோதனை, தொடர் சிகிச்சை பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்படுவதும் உடனடித் தேவையாக உள்ளது. இவ்வாறான நெருக்கடியான தருணத்தில் பாசிசத்தின் தலைமையிலான அரசு கட்டமைப்பினை அம்பலப்படுத்தி போராடாமல், கொரோனாவின் பாதிப்பிலிருந்தோ, அதனால் ஏற்படயுள்ள பொருளாதார இழப்புகளிலிருந்தோ மக்களை சிறிதளவெனினும் நம்மால் பாதுகாத்திட இயலாது.

மத்திய, மாநில அரசுகளே!

♠ கொரோனாவில் பாதிக்கப்பட்டோருக்கு அரசு – தனியார் என அனைத்து மருத்துவ, சுகாதார, பரிசோதனை நிலையங்களையும் அரசு நிர்வாகத்தின் கீழ் ஒருங்கிணைத்து, புறநகர் கல்லூரிகளை தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றி, போர்க் கால அடிப்படையில் இலவச மருத்துவ பரிசோதனை, தொடர் சிகிச்சை வழங்கிடு!
♠ மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தேவையான மருத்துவ உபகரணங்களையும், பாதுகாப்பு கவசங்களையும் வழங்கிடு!
♠ வீடற்றவர்கள், போக்குவரத்து முடக்கத்தால் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் முடங்கியோருக்கு உணவு, குடிதண்ணீர், தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை செய்திடு!
♠ குடும்பம் ஒன்றிற்கு இருபதாயிரம் நிவாரணத் தொகை அளித்திடு!
♠ தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க நிறுவனங்களுக்கு உத்தரவிடு!
♠ ஜி.எஸ்.டி. வரி, வங்கி கடனுக்கான வட்டி, வங்கி கடன் தவணை, மகளிர் சுய உதவி குழு கடன் என அனைத்து வரி, கடன் வசூல் நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்க உத்திரவிடு!
♠ கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்கள் விபரம், சிகிச்சை விபரம், நோய் பரவல் தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையாக வெளிப்படையாக மக்களுக்கு தெரிவித்திடு!

தோழமையுடன்,
வழக்கறிஞர் சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க