மார்க்சுக்கு முந்திய காலகட்டத்தைச் சேர்ந்த பொருளியலாளர்கள் (மூலச்சிறப்புடைய முதலாளித்துவ அரசியல் பொருளியலாளர்களும் இதில் அடங்குவர்) மூலதனம் என்பது கருவிகள், மூலப் பொருள், பிழைப்புச் சாதனங்கள், பணம் ஆகியவற்றின் சேமிப்புக் குவியல் என்று கருதினார்கள். மூலதனம் எப்பொழுதுமே இருந்து வந்திருக்கிறது. இனியும் எப்போதும் இருக்கும், ஏனென்றால் அப்படிப்பட்ட சேமிப்பு இல்லாமல் உற்பத்தி என்பது சாத்தியமல்ல என்பதே இதன் பொருளாகும்.
மூலதனம் என்பது வரலாற்று ரீதியான இனம் என்று விளக்கமளித்ததன் மூலம் மார்க்ஸ் இந்தக் கருத்தை மறுத்தார். உழைப்புச் சக்தி ஒரு பண்டமாக மாறும் பொழுது, உற்பத்திச் சாதனங்களை உடைமையாகக் கொண்டிருக்கும் முதலாளியும் உழைக்கக் கூடிய சக்தியைத் தவிர வேறு எதுவுமே உடைமையாக இல்லாத கூலி உழைப்பாளியும் சமூகத்தின் முக்கியமான நபர்களாக இருக்கும் பொழுது மட்டுமே மூலதனம் தோன்றுகிறது என்பதை மார்க்ஸ் எடுத்துக் காட்டினார். இந்த சமூக உறவின் வெளியீடு தான் மூலதனமாகும். அது எப்பொழுதுமே இருந்து வந்திருக்கவில்லை, என்றென்றைக்கும் நிலைத்திருக்கக் கூடியதும் அல்ல. மூலதனத்தைப் பண்டங்கள், பணத்தின் மொத்தம் என்று கருதலாம். ஆனால் அப்பொழுதும் அவை முதலாளியால் ஒதுக்கிக் கொள்ளப்படுகின்ற, கூலி உழைப்பாளிகளின் கூலி கொடுக்கப்படாத (உபரி) உழைப்பைக் கொண்டிருக்கின்றன, இந்த உழைப்பின் புதிய பகுதிகளை ஒதுக்கீடு செய்து கொள்வதற்கு அவை பயன்படுத்தப்படுகின்றன என்ற பொருளில் மட்டுமே அவ்வாறு கருத முடியும்.
கார்ல் மார்க்ஸ்
ஸ்மித்தின் புத்தகத்தில் ஒரு இடத்தைப் பற்றி, இங்கே ஸ்மித் உபரி மதிப்பின் உண்மையான பிறப்பிடத்தைப் புரிந்து கொண்டிருக்கிறார் என்று மார்க்ஸ் எழுதுகிறார். அந்தப் பகுதி கீழே தரப்படுகிறது: “குறிப்பிட்ட சில நபர்களின் கைகளில் பணம் குவிந்தவுடன், அவர்களில் சிலர் சுறுசுறுப்பான நபர்களுக்கு வேலை கொடுப்பதற்கு அதை இயற்கையாகப் பயன்படுத்துவார்கள். அவர்களுடைய உழைப்புப் பொருள்களை விற்பனை செய்து லாபமடைவதற்காக அல்லது அவர்களுடைய உழைப்பின் மூலம் தங்களுடைய பொருள்களின் மதிப்பை அதிகப்படுத்துவதற்காக பொருள்களையும் உயிரோடிருக்கத் தேவையான கூலியையும் அவர்களுக்குக் கொடுப்பார்கள்” (1) இங்கே ஸ்மித் மூலதனம் தோன்றிய வரலாற்று ரீதியான நிகழ்வுப் போக்கையும் அது ஏற்படுத்துகின்ற சமூக உறவுகளின் சாராம்சம் சுரண்டும் தன்மையைக் கொண்டிருப்பதையும் குறிப்பிடுகிறார்.
எனினும் தமது இரண்டாவது புத்தகத்தில் மூலதனத்தைப் பற்றி தனி வகையான ஆராய்ச்சிக்கு முன்னேறுகின்ற பொழுது இந்த ஆழமான கருத்து நிலையை ஸ்மித் அநேகமாக முற்றிலுமே கைவிட்டுவிடுகிறார். மூலதனத்தைப் பற்றிய அவரது தொழில் நுட்ப ஆராய்ச்சி டியுர்கோ செய்த ஆராய்ச்சியைப் போலவே இருக்கிறது. ஆனால் நிலையான மூலதனம், செலாவணியாகும் மூலதனம், மூலதனத்தின் முதலீட்டில் வெவ்வேறு துறைகள், கடன் மூலதனம் மற்றும் கடன் வட்டி முதலிய பிரச்சினைகளை ஸ்மித் டியுர்கோவை அல்லது வேறு யாரையும் காட்டிலும் அதிகமான விவரத்தோடும் முறைப்படியாகவும் ஆராய்கிறார்.
ஸ்மித்தை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டி அவருடைய மொத்த விரிவுரைக்குமே ஒரு வகையான வன்மையைக் கொடுப்பது பொருளாதார முன்னேற்றத்தின் தீர்மானமான காரணியாக மூலதனக் குவிப்புக்கு அவர் கொடுத்திருக்கும் அழுத்தமே எனலாம். குவித்தலே ஒரு நாட்டின் செல்வத்துக்குத் திறவுகோல், சேமிப்பவர்கள் ஒவ்வொருவரும் நாட்டைக் காப்பவர்கள், ஊதாரித்தனமாகச் செலவழிக்கும் ஒவ்வொருவரும் நாட்டின் எதிரி என்று நிரூபிப்பதற்கு ஆடம் ஸ்மித் அதிகமான கொள்கை மாறாமையோடும் விடாமுயற்சியோடும் பாடுபடுகிறார். தொழில் துறைப் புரட்சியின் அடிப்படையான பொருளாதாரப் பிரச்சினையை அவர் எவ்வளவு ஆழமாகப் புரிந்து கொண்டார் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. நவீன ஆங்கிலப் பொருளியலாளர்களின் மதிப்பீடுகளின்படி, பதினெட்டாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இங்கிலாந்தில் சேமிப்பு விகிதம் (தேசிய வருமானத்தின் குவிக்கப் பட்ட பகுதி) சராசரியாக 5 சதவிகிதத்துக்கு அதிகமல்ல. தொழில்துறைப் புரட்சி அதன் மிகத் தீவிரமான கட்டத்தை சுமார் 1790-ல் அடைகின்ற வரையிலும் சேமிப்புவிகிதம் அநேகமாக அதிகரிக்கத் தொடங்கவில்லை. ஐந்து சதவிகிதம் என்பது மிகவும் குறைவுதான். இன்று சேமிப்பு விகிதம் 12 முதல் 15 சதவிகிதமாக இருந்தால் அது ஏறத்தாழ திருப்திகரமான நிலைமை என்று வழக்கமாகக் கருதப்படுகிறது. 10 சதவிகிதம் என்றால் அது அபாயத்தின் அறிகுறி. 5 சதவிகிதம் என்றால் விபத்து என்று பொருள். சேமிப்பு விகிதத்தை எப்பாடுபட்டாவது அதிகப்படுத்துங்கள்! நவீனமான சொற்களில் ஸ்மித்தின் வேண்டுகோள் இதுவே.
யாரால் சேமிக்க முடியும்? யார் சேமிக்க வேண்டும்? முதலாளிகள், பணக்கார விவசாயிகள், தொழிலதிபர்கள், வணிகர்கள் ஆகியோர் தான். இது அவர்களுடைய முக்கியமான சமூகக் கடமை என்று ஸ்மித் கருதுகிறார். ஸ்மித் முன்பே தம்முடைய கிளாஸ்கோ விரிவுரைகளில் மூலதனத்தின் உள்ளூர்ப் பிரமுகர்களின் “இன்பமறுப்பைப்” பாராட்டிக் கூறியிருக்கிறார். அந்தப் பெரிய நகரம் முழுவதும் தேடினால் கூட ஒன்றுக்கு மேற்பட்ட வேலைக்காரனை வைத்திருக்கும் பணக்காரரைப் பார்க்க முடியாது. பயன் தருகின்ற தொழிலாளிகளுக்கு வேலை கொடுப்பதன் மூலம் ஒரு நபர் பணக்காரராக முடியும்; அதே நபர் வெறும் வேலைக்காரர்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் ஏழையாவார் என்று ஸ்மித் எழுதினார். இது நாடு முழுமைக்கும் மொத்தத்தில் பொருந்தக் கூடியதே. மக்கள் தொகையில் பயனுள்ள உழைப்பில் ஈடுபடாத பகுதியை இயன்ற அளவுக்குக் குறைவாக வைத்திருப்பதற்கு முயற்சிக்க வேண்டும். பயன் கொடுக்கும் உழைப்பைப் பற்றிய ஸ்மித்தின் கருதுகோள் சமூகத்திலிருந்த நிலப்பிரபுத்துவ சக்திகளையும் அவற்றோடு இணைந்த- அரசாங்க அதிகார வர்க்கம், இராணுவம், திருச் சபை ஆகியோர் ஒவ்வொருவரையும் வன்மையாகத் தாக்கியது. மார்க்ஸ் குறிப்பிட்டதைப் போல, உற்பத்தியின் மீது பெருஞ்சுமையாகவும் மூலதனக் குவிப்புக்குத் தடையாகவும் இருந்த இக்கும்பலைப் பற்றிய ஸ்மித்தின் விமர்சன அணுகுமுறை அந்தக் காலகட்டத்திலிருந்த முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கம் ஆகிய இரண்டு தரப்பினரின் கருத்து நிலையையும் பிரதிபலித்தது.
ஸ்மித் பின்வருமாறு எழுதினார்: “உதாரணமாகச் சொல்வதென்றால் அரசரும் அவரின் கீழ் பணியாற்றும் நீதித்துறை, யுத்தத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும், மொத்த இராணுவத்தினரும் கடற்படையினருமே பயனில்லாத உழைப்பைச் செய்கின்ற தொழிலாளர்களாவர். அவர்கள் மக்களின் ஊழியர்கள்; மற்ற மக்களின் கடும் உழைப்பினால் கிடைக்கும் வருட உற்பத்திப் பொருளின் ஒரு பகுதியைக் கொண்டு அவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள்.. இதே ரகத்தில் தான் முக்கியத்துவமும் பொறுப்பும் நிறைந்த சில தொழில்களையும் பொழுதுபோக்கான வேறு தொழில்களையும் மதகுருக்கள், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், எல்லா ரகங்களையும் சேர்ந்த எழுத்தாளர்கள், விளையாட்டு வீரர்கள், கோமாளிகள், பாடகர்கள், இசை நாடகக் கலைஞர் கள், நடனக்காரர்கள், இன்னும் பலரையும் சேர்க்க வேண்டும்”. (2)
ஆக, அரசரும் கோமாளிகளும் ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்! அதிகாரிகளும் மதகுருக்களும் மற்றவர்களுடைய இரத்தத்தைக் குடித்து வாழ்பவர்கள்! ஸ்மித்தும் ஒரு எழுத்தாளரே, ஆனால் பொருளாதாரக் கோணத்தில் பார்க்கும்பொழுது ”எல்லா ரகங்களையும் சேர்ந்த எழுத்தாளர்கள்” பயனில்லாத உழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்களே என்று ஸ்மித் ஒத்துக் கொள்வது அவருடைய அறிவுத் துறை நேர்மையைக் காட்டுகிறது. மேலே தரப்பட்ட பகுதியில் துணிவும் கிண்டலும் இருக்கின்றதென்பதில் சந்தேகமில்லை; எனினும் ஒரு பேராசிரியரின் கருத்தாழத்திலும் புறநிலைச் சிந்தனையிலும் அது நன்றாக மறைந்திருக்கிறது. அது தான் ஆடம் ஸ்மித்.
(தொடரும்…)
அடிக்குறிப்புகள் :
(1) A. Smith, The Wealth of Nations, Vol. II, p. 42. (2) A. Smith, The Wealth of Nations, Vol. I, London, 1924, p. 295.
நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983