தேசிய பேரிடரான கொரானா நோயை தடுக்க மற்றும் கட்டுப்படுத்த சிறப்பு செயல்பாட்டு குழு அமைக்கவும், தனியார் மருத்துவமனை கட்டணக்கொள்ளைக்கு வழிவகுக்கும் அரசாணையை ரத்து செய்யவும் கோரி – 2 பொதுநலவழக்குகள் !

***

க்கள் உரிமை பாதுகாப்பு மையம் சென்னைகிளை செயலாளர் வழக்கறிஞர் திரு.ஜிம்ராஜ் மில்ட்டன், சென்னை உயர்நீதிமன்றத்தில்,

1. பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் செயல்பாட்டுக்குழு அமைத்து தேசிய நோய்த்தடுப்பு மைய வழிகாட்டுதலின்படி பருண்மையாக செயல்திட்டம் வகுத்து கொரோனா நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.

2. கொரோனா தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பார்க்கவேண்டும் என்ற அரசாணையை ரத்துசெய்து இலவச சிகிச்சை வழங்கவும் இரண்டு பொதுநல வழக்குகள் (W.P.7414 of 2020, W.P.7456 of 2020) தாக்கல் செய்தார்.

மேற்கண்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் S. பார்த்தசாரதி ஆஜரானார். அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் திரு. அரவிந்த் பாண்டியன் அவர்கள் பல்வேறு விஷயங்களை வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட இம்மனுவின் மீது அரசு நடவடிக்கை எடுத்துவருவதாகவும் குறிப்பான விவரங்கள் இருந்தால் தெரிவிக்கும்படியும் தெரிவித்தார்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

• மனுதாரர் தரப்பில் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், தமிழகம் முழுவதும் அடித்தட்டு மக்களுக்கு பொது சமையற்கூடம் அமைத்து உணவு வழங்கவும், சாலையோரங்களில் வசிக்கின்ற மக்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவுக்கு உத்திரவாதம் அளிக்கவும், வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்சனை பற்றியும் முன்வைக்கப்பட்டது.

மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாவட்ட, வட்டார அளவில் செயல்பாட்டு குழுக்கள் அமைத்து நிவாரணப்பணிகளை செய்யவும், இவற்றில் ஏற்கனவே அரசிடம் தன்னார்வலர்களாக பதிவு செய்துள்ள 1100 மருத்துவர்கள், 3500 மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட 45,000 பேரை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது.

மேற்படி கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு பதிலளிக்க வேண்டும் என வழக்கு இருவாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவண்
S. ஜிம்ராஜ் மில்ட்டன், வழக்கறிஞர்,
செயலாளர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.

***

உலகிலுள்ள அனைத்து நாடுகளும் COVID-19 எனப்படும் தொற்றுநோயினால் உயிரிழப்புகளை சந்தித்து வரும் சூழலில், இந்நோயினை தடுக்கும் நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. COVID-19 நோய் தமிழகத்தில் மூன்றாவது நிலையினை (சமூக பரவல் – community Transmit) எட்டியுள்ள நிலையில் இத்தகைய சமூகவிலக்கு என்பது (Social distancing) கட்டுக்குள் கொண்டுவரும் முறைதானெயொழிய, முழுமையான தீர்வு அல்ல.

எனவே கூடுதலாக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம்- 2005 ன் கீழ் (Disaster Management Act – 2005) தமிழக அரசு தலைமைச்செயலர் தலைமையில், சுகாதாரம், சமூகநலம், நிதி, பொதுப்பணித்துறை, தொழிலாளர் துறை சார்ந்த அரசுச் செயலாளர்கள், தன்னார்வலர்கள், சுகாதாரம் – சமூக சேவையில் நிபுணத்துவம் உள்ளவர்களை உள்ளடக்கிய ”செயல்பாட்டுக்குழுவினை (Executive Committee)” அமைக்கவேண்டும். அதேபோல தன்னார்வலர்களை உள்ளடக்கிய மாவட்டம், தாலுக்கா/மண்டல அளவிலான செயல்பாட்டுக்குழுவை அமைக்கவேண்டும். மேலும்,

• பள்ளி, கல்லூரி, திருமண மண்டபங்கள் போன்ற இடங்களை தற்காலிக மருத்துவமனைகளாகவும் மற்றும் தனிமைப்படுத்தும் முகாம்களாகவும் மாற்றவேண்டும்.

படிக்க:
புதிய தாராளவாத வைரஸின் சகாப்தம் !
♦ கொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன ? | மக்கள் அதிகாரம்

• வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை சிறப்பு முகாம்களில் தங்கவைத்து சிகிச்சை அளிக்கவும் மற்றும் கண்காணிக்கவும் வேண்டும்.

• தனியார் மருத்துவமனைகளில் COVID-19 தொற்றுநோய்க்குஇலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்க வேண்டும்.

• COVID-19 தொற்றுநோய் தடுப்புப் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள், காவல்துறை போன்ற அத்தியவாசிய பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு சாதனங்கள் அளித்து அவர்களது பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்தவேண்டும்.

– ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் உரிமைப்பாதுகாப்பு மையத்தின் சென்னை கிளை செயலாளர் திரு.ஜிம்ராஜ் மில்டன் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். (W.P.No.7414/2020).

இந்த பொதுநல வழக்குடன் கூடுதலாக கீழ்கண்ட இடைக்கால கோரிக்கைகள் அடங்கிய இடைக்கால கோரிக்கைமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

1. தமிழக அரசு தனியே“COVID-19 நிவாரண நிதி (COVID -19 RELIEF FUND)”எனும் பெயரில் வங்கிக்கணக்குதுவக்கி நன்கொடைகளை பெறவேண்டும் (W.M.P.No. 8879/2020).

2. தனியார் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அறிவியல் மாணவர்கள் கொண்ட தன்னார்வு குழுக்களை உருவாக்கி, பயிற்சியளித்து வீடு தோறும் COVID-19 தொற்றுநோய்தடுப்பு, மருத்துவபரிசோதனை, உணவு வழங்கல்மற்றும் விழிப்புணர்வு போன்ற பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் (W.M.P.No. 8880/2020).

3. ஒவ்வொரு குடும்பஅட்டைதாரருக்கும் தமிழக அரசு அறிவித்துள்ளரூ.1000 நிவாரணத் தொகையினை உயர்த்தி, நகர்ப்புற குடும்பங்களுக்கு ரூ.10,000 மற்றும் கிராமப்புற குடும்பங்களுக்கு ரூ.5,000 என வழங்கவேண்டும் (W.M.P.8881/2020).

4. அனைத்து மக்களுக்கும் தேவையான உணவினை உத்திரவாதப்படுத்த தாலுக்காவாரியாக மற்றும் தேவையான இடங்களில் சமூக உணவுக்கூடங்கள் (Community Kitchen) அமைத்து தன்னார்வ குழுக்கள்மூலம் வீட்டிற்கே சென்று விநியோகிக்கவேண்டும் (W.M.P.8882/2020).

5. டெங்குவிற்கு நிலவேம்பு குடிநீர் பயன்படுத்தியதுபோல, COVID-19 நோய்த்தடுப்பில் பாரம்பரிய சித்த மருத்துவம், ஹோமியோபதி போன்ற மாற்று மருத்துவ முறைகளையும் பயன்படுத்தவேண்டும் (W.M.P.8883/2020).

இந்த பொதுநலவழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் 27.03.2020 அன்று மாண்புமிகு நீதிபதிகள் சுப்பையா & பொங்கியப்பன் அடங்கிய அமர்வின் முன்பாக சிறப்பு அனுமதியின் பேரில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் திரு.பாலன் ஹரிதாஸ் ஆஜராகி, மேற்சொன்ன பரிந்துரைகளை சட்டரீதியாக விளக்கி வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் திரு.அரவிந்த் பாண்டியன் மனுதாரரின் பரிந்துரைகளை கவனத்தில் கொள்ளவும், பரிசீலிக்கவும் அதிகாரிகளிடம் தெரிவிப்பதாகக் கூறி, வழக்கு குறித்த அரசின் கருத்துகளை தெரிவிக்க கால அவகாசம் கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கினை இரண்டு வாரங்கள் கழித்து விசாரணைக்கு பட்டியலிடவும், அவசர நிலையெனில் நீதிமன்றத்தில் தெரிவித்து உடனடியாக விசாரணைக்கு கொண்டு வரவும் உத்தரவிட்டனர்.


தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னைக் கிளை.