ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கே.வி.என் பவுண்டேஷன் என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் உள்ள தினக்கூலிகளுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்குவதாக இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் “சேவை” பிரிவு ஒருங்கிணைப்பாளர் சொக்கலிங்கம், இது வரை சுமார் 13,000 உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் முதியோர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி எண் வழியே இது வரை சுமார் 280 அழைப்புகள் வந்துள்ளதாகவும், சென்னையில் மட்டும் 67 மையங்கள் அமைக்கப்பட்டு சுமார் 530 தொண்டர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பேரிடர் காலங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வலர்கள் நிவாரணப் பொருட்கள் வழங்குவதுகாலம் காலமாக நாம் பார்த்து வருவதுதான். குறிப்பாக, கொரோனா நிவாரணப் பணியில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் களத்தில் இறங்கி நிவாரணப் பொருட்கள் வழங்குவது, பிற மாநிலங்களில் மாட்டிக் கொண்ட தமிழர்கள் குறித்து அந்தந்த மாநில அரசுகளைத் தொடர்பு கொண்டு அவர்களுக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் தான் நேற்று தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் நேரடியாக மக்களுக்கு நிவாரணப் பொருட்களையோ உதவியையோ வழங்க கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளை மனதில் கொண்டு இடப்பட்டதா அல்லது பொதுவாக எல்லோருக்குமானதா என்பதை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொட்டல “சேவை” தொடர்கிறதா இல்லையா என்பதைப் பார்த்த பின் நாம் முடிவு செய்து கொள்ளலாம்.

இது ஒருபுறம் இருக்க, நாட்டின் ஒருசில பகுதிகளிலும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் “சேவைப் பணிகளில்” ஈடுபடும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தெலுங்கானா மாநிலத்தின் யதாதிரி போங்கீர் மாவட்டத்தின் சாலைகளில் கைகளில் கம்பு கட்டைகளோடு தடையரண் அமைத்து சாலையில் செல்லும் வாகனங்களைத் தடுத்து நிறுத்தி ஆவணங்களைக் கேட்டு பரிசோதித்துள்ளனர். சில வாகன ஓட்டிகளை மிரட்டவும் செய்துள்ளனர். இது குறித்த செய்திகள் வெளிவந்து பிற அரசியல் கட்சிகள் எதிர்ப்புக் குரல் கொடுக்கவும் மாநில அரசு தாம் அவ்விதமான அனுமதியை எந்த அமைப்புக்கும் வழங்கவில்லை என தெரிவித்துள்ளது.
கொரோனாவுக்கு பிந்தைய உலகம் அதன் தன்மையளவில் பாரிய மாற்றங்களுக்கு உள்ளாகும் என பல்வேறு நிபுணர்கள் கணிக்கின்றனர். குறிப்பாக அரசுகள் மேலும் மேலும் குடிமக்களின் மேலான கண்காணிப்பை அதிகப்படுத்தும் என்றும் “கண்காணிப்பு அரசுகள்” (Surveilance State) உருவாகும் எனவும் குறிப்பிடுகின்றனர்.
“தொற்றுநோய்க்கு பிந்தைய சாத்தியக்கூறுகள் தீவிர சர்வாதிகாரம் உடைய மிருகத்தனமான அமைப்புகளை நிறுவுவதிலிருந்து… லாபமற்று மனிதாபிமானத்துடன் இயங்கிய அமைப்புகளை முழுவதுமாக சிதைப்பது வரை இருக்கும்,” எனக் குறிப்பிடும் நோம் சாம்ஸ்கி, மேலும் “இந்த அதிக சர்வாதிகாரம் நிறைந்த, மோசமான அமைப்புகள் புதிய தாராளமயத்துடன் மிகவும் ஒத்துப்போகும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.” என்கிறார்.
“கொரோனாவை பயன்படுத்தி அரசுகள் நம்மை முன்பு எப்போதும் இல்லாததைவிட மிக அதிமாக கண்காணிக்கின்றன,” என்கிறார் எட்வர்ட் ஸ்னோடன்.
படிக்க:
♦ ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு ! பாசிச UAPA சட்டங்களை ரத்து செய் !
♦ கொரோனா வைரஸ் என் உடலைத் தின்று வருகிறது ! – இரயாகரன்
***
இந்தியாவைப் பொருத்தவரை நாம் இரட்டை அபாயத்தை எதிர்நோக்கி இருக்கிறோம். ஒருபுறம் அரசும் அரசின் உறுப்புகளும் மேலும் மேலும் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு மக்களை சதாகாலமும் கண்காணிக்கும் விதமாயும், அதன் மூலம் கடுமையாக ஒடுக்கும் தன்மை கொண்டதாகவும் மாறி வருகிறது. சொல்லப் போனால் இந்தப் போக்கு கொரோனாவுக்கு முன்பாகவே துவங்கி விட்டது – ஆதார் எண் “கண்காணிப்பு அரசை” நிறுவுவதை நோக்கிய முதல் படி. தற்போது குடி மக்களின் நடவடிக்கைகளை, நடமாட்டங்களை கண்காணிப்பின் கீழ் வைத்திருப்பதற்கு கொரோனா ஒரு நல்ல காரணத்தை வழங்கியுள்ளது.
மறுபுறம் ஆர்.எஸ்.எஸ் போன்ற ஆயுதம் தரித்த ஒட்டுக்குழுக்கள் கீழிருந்து சமூகத்தின் சகல மட்டங்களிலும் ஊடுருவி அதன் திசைவழியை தீர்மானிக்கும் சக்தியாக வளர்ந்து வருகின்றது. ஆர்.எஸ்.எஸ் வழங்கும் உணவுப் பொட்டலத்தில் முட்டை உள்ளதா வெங்காயம் இல்லையா என்பதல்ல பிரச்சினை – சமூகத்தை மத அடிப்படையில் பிளவு படுத்துவதையே தனது சித்தாந்தமாகவும் லட்சியமாகவும் கொண்டிருக்கும் ஒரு அமைப்பு சமூகத்தின் வேர்மட்ட அளவில் விஷம் போல் பரவி வருகிறது என்பதே நமது அக்கறைக்குரியது.
மக்களை பேரிடர் காலங்களில் காப்பது அரசின் கடமை. மக்களின் சுதந்திரத்தை உத்திரவாதப்படுத்துவதும் அரசின் கடமை. அரசின் கடமையை அரசு செய்யட்டும். அதை வலியுறுத்துவோம். இடையில் ஆர்.எஸ்.எஸ் போன்ற தீவிரவாத ஒட்டுக்குழுக்கள் நுழைவதை உறுதியாக தடுப்போம்.
– தமிழண்ணல்