டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல்மயம்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய தொகுதி பிரிவுத் தேர்வில் நடந்த முறைகேடுகள் அம்பலமாகி, தரகர்கள், கீழ்மட்ட ஊழியர்கள், மோசடியாக வேலைபெற்றவர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யபட்டுள்ளனர். இம்முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் எனக் கண்டறியப்பட்ட 99 பேருக்கு வாழ்நாள் முழுவதும் அரசு போட்டித் தேர்வுகளை எழுத தடைவிதிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க, ஆதார், விரல்ரேகை பதிவு உள்ளிட்ட புதிய கண்காணிப்பு வழிமுறைகளைப் பின்பற்றப் போவதாகத் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. இவ்விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகள் சரியான திசையில்தான் செல்கின்றன என்பதைப் போன்றதொரு தோற்றம் இதன் மூலம் வலிந்து உருவாக்கப்படுகிறது.
தொகுதி 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் அம்பலமானதைத் தொடர்ந்து, வட்டாட்சியர், துணை ஆட்சியர், போலீசு துணைக் கண்காணிப்பாளர், சார்பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்க நடத்தப்படும் தொகுதி 1, 2 மற்றும் 2-ஏ தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்திருப்பதும் அம்பலமாகியிருக்கின்றன. டி.என்.பி.எஸ்.சி. மட்டுமல்லாது, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் டி.ஆர்.பி. தேர்வுகள், கணினி ஆசிரியர் தேர்வுகள் ஆகியவற்றிலும், தட்டச்சுத் தேர்வுகளிலும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் காவலர் பணிக்கான தேர்வுகளிலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் நியமனத்திலும் மோசடி முறைகேடுகள் நடந்திருப்பதாக அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
எனினும், அரசுப் பணியாளர் தேர்வு முறைகேட்டில் தேர்வாணைய உறுப்பினர்கள், உயரதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டவர்களின் பங்கு குறித்து கேள்வி எழுப்புவோரின் வாயை அடைக்கும் நோக்கில், வதந்திகளைப் பரப்புவோருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சம்மன் அனுப்பும் என மிரட்டுகிறார் தேர்வாணையத்திற்குப் பொறுப்பான அமைச்சர் ஜெயக்குமார். சுண்டெலிகளைப் பலியிட்டுவிட்டு, பெருச்சாளிகளைக் காப்பாற்ற அ.தி.மு.க. அரசு முடிவு செய்துவிட்டது என்பதற்கான அடையாளமே இந்த மிரட்டல்.
படிக்க :
♦ கொரோனா “ரெட்அலர்ட்” பகுதியில் பணி செய்த அனுபவம் !
♦ TNPSC மோசடி : இது வெறும் ஊழல் அல்ல ! உங்கள் உழைப்பை அழிப்பது !
***
ஒப்பீட்டு அளவில் பணிப் பாதுகாப்பும், ஊதிய உத்தரவாதமும், ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பும் மட்டுமின்றி, சமூகத் தகுதியும் அரசு வேலைகள் மூலம் கிடைப்பதால்தான், தனியார் துறை வேலைகளைவிட அரசு வேலைகளுக்கு இளைஞர் பட்டாளம் ஆளாய்ப் பறக்கிறது. துப்புரவுப் பணியாளர் வேலைக்கும்கூட எம்.இ., எம்.டெக்., எம்.பி.ஏ. உள்ளிட்ட உயர் படிப்புகளை முடித்த இளைஞர்களும் விண்ணப்பிக்க முன்வருவது வேலையில்லா திண்டாட்டத்தின் கோர முகத்தை மட்டும் காட்டவில்லை. அரசு வேலை குறித்து இளைஞர்கள் மத்தியில் உள்ள மயக்கத்தையும் எடுத்துக் காட்டுகிறது. இந்த மயக்கத்தைத்தான் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள், தரகர்கள் ஆகியோரை உள்ளடக்கிய மோசடிக் கும்பல் தூண்டில் முள்ளாய்ப் பயன்படுத்திக் கொள்கிறது.
தொகுதி 4 தேர்வின் விடைத்தாட்களைத் திருத்துவதற்கு நடந்த அத்துமீறல்கள், முறைகேடுகள்; 2017 நடத்தப்பட்ட தொகுதி 2ஏ தேர்வில் “வெற்றி” பெற்றுப் பணியில் சேர்ந்த 26 அதிகாரிகள் திடீரெனத் தலைமறைவாகியிருப்பது; 2008 நடந்த தொகுதி 1 தேர்வு வினாத்தாள் தயாரிப்பில் சென்னை தி.நகரிலுள்ள பயிற்சி மையத்திற்கு இருந்த தொடர்பு; தேர்வாணையத்தில் உறுப்பினராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராமின் மகன் தனது முதல் முயற்சியிலேயே தொகுதி 1 தேர்வில் தேர்வாகி வணிக வரித்துறையில் துணை ஆணையர் ஆனது உள்ளிட்ட பல முறைகேடுகள் அடுத்தடுத்து அம்பலமாகி வருகின்றன. இவையாவும் இம்முறைகேடுகளின் பின்னே அமைச்சர்- அதிகார வர்க்கம் – பயிற்சி மையம் – என்றொரு வலைப் பின்னல் இருப்பதை அம்பலப்படுத்துகின்றன. சுருக்கமாகச் சொன்னால், இது தமிழகத்தில் அ.தி.மு.க. நடத்தியிருக்கும் “வியாபம் ஊழல்!”
2011-ஆம் ஆண்டில் ஜெயா தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு தேர்வாணையம் கிரிமினல் கூடாரமாக மாற்றப்பட்டது. குறிப்பாக, 2016-ஆம் ஆண்டில், டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் பதவிக்கு கோடிக்கணக்கில் இலஞ்சம் கொடுத்தது அம்பலமாகி, ஜெயா அரசால் நியமிக்கப்பட்ட 11 தேர்வாணைய உறுப்பினர்களையும் சென்னை உயர் நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்தது. எனினும், நீதிமன்றத்திற்கே சவால் விடும் வகையில் நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களுள் 5 பேரை மீண்டும் உறுப்பினராக நியமித்தது, ஜெயா அரசு. சம்பளமில்லாத கவுரவப் பதவியான டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் ஆவதற்கு, இலட்சங்களில் சம்பளம் வாங்கிய நீதிபதி பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற இராமமூர்த்தி, “நீதிபதிக்கான சம்பளத்தைவிட இதில் எத்தனை மடங்கு சம்பாதிப்பார்?” எனக் கேள்வியெழுப்பியது உச்ச நீதிமன்றம்.
படிக்க :
♦ TNPSC ஊழல் – பின்னணி என்ன ? | பேரா ப.சிவக்குமார் | காணொளி
♦ நீட் தேர்வு ஆள் மாறாட்டம் : பாஜகவின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது !
தொகுதி 1 முதன்மைத் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக அத்தேர்வில் பங்கேற்ற ஸ்வப்னா என்ற திருநங்கை பொதுநல வழக்கு தொடர்ந்தார். குறிப்பாக, அத்தேர்வில் சென்னை மனிதநேயம், அப்பல்லோ பயிற்சி மையங் களிலிருந்து மட்டும் 62 பேர் (மொத்த வெற்றியாளர்கள் 74 பேர்) வெற்றி பெற்று அதிகாரிகளாகி இருக்கிறார்கள். அத்தேர்வே மிகப்பெரும் மோசடி என்பதை இந்த 62 பேரின் தேர்வு எடுத்துக் காட்டுகிறது. இதனைத் தொடர்ந்து பயிற்சி மைய இயக்குநர் சாம் மற்றும் தேர்வாணையத்தைச் சேர்ந்த ஓரிரு கீழ்நிலை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். எனினும், சாம் சிறைக்குச் செல்லும் முன்பே முன் பிணை கொடுத்துக் காப்பாற்றப்பட்டார். மேலும், விசாரணை மனித நேயப் பயிற்சி மையத்தை நடத்திவரும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த சைதை துரைசாமி உள்ளிட்டு மேல்மட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகளை நோக்கி நகருகிறது எனப் புரிந்துகொண்ட அ.தி.மு.க. அரசு 2018-இல் விசாரணை அதிகாரிகளை அதிரடியாக மாற்றி, அவ்விசாரணையை முடக்கிப் போட்டுவிட்டது.
முறைகேடுகளின் மூலம் நிரப்பப்படும் நியமனங்கள் நியாயமான முறையில் தேர்வெழுதிக் காத்திருக்கும் இளைஞர்களை மட்டும் ஏமாற்றவில்லை. அதனைவிட முக்கியமாக, மோசடிகளின் மூலம் அரசுப் பதவிகளைப் பெறுபவர்கள், குறிப்பாக வட்டாட்சியர், போலீசு துணைக் கண்காணிப்பாளர், வணிக வரி அதிகாரிகள் என அதிகாரமிக்க பதவிகளைப் பெறுபவர்கள் சட்டப்படியும் நியாயப்படியும் நடந்துகொள்வார்கள் என்பதற்கு அடிப்படையே கிடையாது. இப்படிப்பட்ட நியமனங்கள் சிவில் சமூகத்தின் மீது நிகழ்த்தப்படும் குரூரத் தாக்குதலாகும். இப்படிப்பட்ட அதிகாரிகள், அவர்களது மோசடி நியமனங்கள் அம்பலமாகி பிற்பாடு பதவி நீக்கம் செய்யப்பட்டாலும், அவர்கள் பதவியில் இருந்த காலத்தில் போட்ட உத்தரவுகள், எடுத்த நடவடிக்கைகள் செல்லுபடியாகும் என்றால், அதனைவிட குரூர நகைச்சுவை வேறு எதுவும் இருக்க முடியாது.
படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியாதவர்கள், அதற்கான பொருளாதாரக் கொள்கைகளை வகுத்து நடைமுறைப்படுத்தும் திராணியற்றவர்கள் தமது தோல்வியை மறைக்கவே போட்டித் தேர்வு முறைகளை உருவாக்கியிருக்கிறார்கள். வேலை தேடும் இளைஞர்களுள் தகுதியும் திறமையும் கொண்டவர்களைக் கண்டுபிடிக்கத்தான் போட்டித் தேர்வுகளை நடத்துவதாக அவர்கள் கூறுவதெல்லாம் நாடகம், மோசடி என்பது தேர்வாணையத் தேர்வுகளில் நடந்திருக்கும் முறைகேடுகளின் வழியாக மட்டுமல்ல, வியாபம் ஊழல், நீட் தேர்வு ஆள் மாறாட்ட மோசடிகள், மத்தியப் பணியாளர் தேர்வு வாரியத்தின் வினாத்தாட்கள் வெளியானது என வெவ்வேறு நிகழ்வுகளின் மூலம் அம்பலமாகியிருக்கிறது.
இவையாவும் இந்தக் கட்டமைப்பு எவ்வளவு தூரத்திற்குத் திருத்த முடியாத அளவிற்குச் சீரழிந்து நிற்கிறது என்பதை எடுத்துக் காட்டுகின்றன. இந்த நிலையில் முறைகேடுகளைத் தடுப்பதற்கு புதிய புதிய கண்காணிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்கி இந்த அமைப்பு முறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்த முனைகிறார்கள். அவையெல்லாம் புற்று நோய்க்கு பாரசிட்டமால் மாத்திரை கொடுப்பதைப் போன்றதாகும்.
கைகளில் புத்தகக் கட்டுகளோடும், கண்களில் கனவுகளோடும், மனதில் நம்பிக்கையோடும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞர்களே, இனி நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். பாரசிட்டமால் மாத்திரை போதுமா, அல்லது அறுவைச் சிகிச்சை தேவையா என்பதை!
தமிழ்ச்சுடர்
மின்னூல்:
₹15.00Add to cart
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்
![]() ₹15.00Add to cart |
![]() ₹15.00Add to cart |
![]() ₹15.00Add to cart |