Saturday, April 19, 2025
முகப்புசெய்திஇந்தியாலாக்டவுன் : தொழிலாளர்களின் ஊதியத்தை முழுங்கிய முதலாளிகள் !

லாக்டவுன் : தொழிலாளர்களின் ஊதியத்தை முழுங்கிய முதலாளிகள் !

கொரோனா ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் புலம் பெயர் தொழிலாளர்களின் சம்பளப் பணத்தை மோசடி செய்துள்ளன.

-

மைப்புசாரா மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க அரசாங்கம் வழிவகை செய்ய உத்தரவிடக் கோரி சமூக செயற்பாட்டாளர்கள் ஹர்ஷ் மந்தேர் மற்றும் அஞ்சலி பரத்வாஜ் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தனர். ஏப்ரல் 7 அன்று இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்று கூறியதோடு மட்டுமல்லாமல் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிடத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதால், சம்பளம் வழங்குவது இரண்டாம்பட்சமானது என்றும் குறிப்பிட்டது.

இது களநிலவரத்துக்குப் புறம்பானது என்கிறார், குஜராத் மற்றும் ராஜஸ்தானில் புலம்பெயர் தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக – சட்டப்பூர்வ பிரச்சினைகளுக்காக செயல்பட்டு வரும் ஆஜீவிகா மையத்தின் இயக்குனர் ராஜீவ் கந்தெல்வால்.

லாக் டவுன் அறிவிக்கப்பட்டு முதல் 4 நாட்களில் இந்த மையத்திற்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. பல்வேறு இடங்களிலும் ஒப்பந்ததாரர்களும், முதலாளிகளும் சம்பளம் ஏதும் கொடுக்காமலோ அல்லது மிகச்சிறு தொகையைக் கொடுத்துவிட்டோ, கிளம்பிச் சென்றுவிட்டனர். பல நிறுவனங்களில், லாக்டவுனுக்குப் பிறகுதான் சம்பளத்தைக் கொடுக்க முடியும் எனக் கூறியிருக்கின்றனர்.

முறைசாரா தொழிற் பிரிவுகளில் பணிபுரியும் பல தொழிலாளர்களுக்கு அவர்களது வேலையும் பறிபோயிருக்கிறது. பல இடங்களில் வாட்சப் மூலமாகவும், குறுஞ்செய்தி மூலமாகவும் தொழிலாளர்களுக்கு பணிநீக்க உத்தரவை அனுப்பியிருக்கின்றன இந்த நிறுவனங்கள்.

குறிப்பாக பெரும்பாலான புலம்பெயர் தொழிலாளர்கள் கடும் பாதிப்பை அடைந்துள்ளனர். அவர்கள் தங்களது சம்பளத்தையும் பணியையும் மட்டும் இழக்கவில்லை. கூடுதலாக நிறுவனங்களால் கொடுக்கப்பட்ட தங்குமிடத்தையும் இழந்திருக்கின்றனர்.

உதாரணத்திற்கு அகமதாபாத்தின் துணி ஆலை ஒன்றில் பணிபுரிந்த தொழிலாளர்களை லாக்டவுன் அறிவித்த அன்றே அங்கிருந்து கிளம்புமாறு உத்தரவிட்டுள்ளது ஆலை நிர்வாகம். அவர்கள் முன் இருந்த ஒரே வாய்ப்பு 300 கிமீ தொலைவில் ராஜஸ்தானின் பாலி மாவட்டத்திலுள்ள தமது வீடுகளுக்கு நடந்தே செல்வது ஒன்றுதான். கையில் வெறும் ரூ.500 மட்டுமே இருந்த நிலையில், தங்களுக்குத் தரவேண்டிய ஊதிய பாக்கி ரூ.12,000-ஐ தங்களது ஒப்பந்ததாரரிடம் கேட்டிருக்கின்றனர். ஊதிய பாக்கியை தர முடியாது என்று கூறி அவர்களை மிரட்டி அனுப்பியுள்ளனர்.

படிக்க:
♦ ஏப்ரல் 22 தோழர் லெனினின் 150வது பிறந்தநாள் ! இணையவழி பொதுக்கூட்டம் !
♦ உணவுக்கு கையேந்தி தெருவில் நிற்கும் அமெரிக்கா.. என்ன நடக்கப்போகிறது ?

இதே போல, இராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள ஆலையில் பணிபுரியும் சுமார் 200-கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வெறும் ரூ.1000 மட்டும் இடைக்கால உதவியாக கொடுத்து அனுப்பப்பட்டது. சம்பளத்தைக் கேட்ட தொழிலாளர்களிடம் லாக்டவுன் முடிந்த பின்னரே சம்பளம் கொடுக்க முடியும் என்று கூறி அனுப்பியுள்ளனர்.
மும்பையில் ஒரு நிறுவனத்தில் தொழிலாளர்களிடம் மார்ச் மாதத்திற்கான அரைச் சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்கான ஒப்புதல் என்ற பெயரில் வெற்றுத் தாள்களில் கையெழுத்து வாங்கியிருக்கின்றனர். பின்னர்தான், அந்நிறுவனம் அந்த வெற்றுத் தாள்களை தொழிலாளர்களின் பணிவிலகல் கடிதமாக மாற்றி எழுதி நிரப்பிக் கொண்டது தெரியவந்தது.

கட்டிடத் தொழில், சிறு உற்பத்தி, போக்குவரத்து, சந்தைத் தொழிலாளர்கள் உள்ளிட்டு இந்தியா முழுவது சுமார் 40 கோடி உதிரி தொழிலாளர்களின் நிலைமை இதுதான்.
ஆனால் இவையெதுவும் இந்தியாவின் முறைசாரா பொருளாதாரத்தில் நடைபெறும் புதிய விசயங்கள் அல்ல. வேலை நீக்கம், சம்பள மறுப்பு, சம்பள ஏமாற்று, வலுவந்த பணிமாற்றம், கொத்தடிமை வேலை ஆகியவை தொடர்ந்து பல ஆண்டுகளாக இத்துறையில் நடைபெற்றுவரும் வாடிக்கைதான். கடந்த 2018-ம் ஆண்டு ஆஜீவிகா மையம் நடத்திய ஆய்வில் கட்டிடத் தொழிற்துறையில் மட்டும் மிக மிகக் குறைந்தபட்சமாக ஆண்டுக்கு சுமார் ரூ. 6400 கோடி ரூபாய் சம்பள மோசடி நடைபெறுவது தெரியவந்துள்ளது.

சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (ILO) வழிகாட்டியுள்ள குறைந்தபட்ச கூலியை இந்தியா எவ்வகையிலும் பின்பற்றவில்லை. ILO வெளியிட்டுள்ள இந்திய ஊதிய அறிக்கையில் (India Wages Report) “இந்தியாவில் தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை விட மிகவும் குறைவான அளவு ஊதியமே மூன்றில் ஒரு தொழிலாளிக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. நகர்ப்புறங்களில் வழங்கப்படும் ஊதியத்தில் பாதிக்கும் குறைவான அளவு கூலியே கிராமப்புறங்களில் வழங்கப்படுகிறது. மேலும் ஆண்களை விட பெண்களுக்கு 34% அளவிற்கு குறைவான ஊதியமே கொடுக்கப்படுகிறது. பெண் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு கிராமப்புறங்களில் வாங்கும் சராசரி ஊதியம் ரூ. 104 மட்டுமே ஆகும்.” என்று தெரிவித்துள்ளது.

சமீபத்தில் ஜன் சஹாஸ் என்ற உரிமைகள் அமைப்பினர் சுமார் 3000 கட்டிடத் தொழிலாளர்கள் மத்தியில் நடத்திய கள ஆய்வில், 90%-க்கும் மேற்பட்டோர், லாக்டவுன் காலகட்டத்தில் தங்கள் குடும்பத்தைப் பராமரிக்கப் போதுமான பணமோ சேமிப்போ இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பணியாற்றியவர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அவ்வகையில் இந்தியா முழுவதும் சுமார் ரூ.1800 கோடி ஊதியம் வழங்கப்படாமல் இருக்கிறது

தற்போதைய லாக்டவுன் சூழலில், அரசாங்கம் அறிவித்துள்ள நிவாரண நடவடிக்கைகள் போதுமானவை அல்ல என்பது கண்கூடு. முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமையைப் பொறுத்தவரையில், அவர்களது ஊதியத்தை பெற்றுத் தருவதும், லாக்டவுன் காலகட்டங்களில் அவர்களது குடும்பத்தைப் பராமரிப்பதும் அரசாங்கத்தின் கடமை ஆகும். முதலாளிகளுக்கு அடுத்து எதை எடுத்து விற்றுக் கொடுப்பது என சிந்திக்கும் மோடி அரசிடம் இதை எதிர்பார்க்க முடியுமா ?


– நந்தன்
செய்தி ஆதாரம் :  ஸ்க்ரால். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க