Tuesday, April 22, 2025
முகப்புசெய்திஉலகம்கொரோனா முடக்கத்தில் சொத்துக்களை பெருக்கும் அமெரிக்க பில்லியனர்கள்

கொரோனா முடக்கத்தில் சொத்துக்களை பெருக்கும் அமெரிக்க பில்லியனர்கள்

கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் கொரோனா வைரஸ் நோய்ப் பெருந்தொற்றின் காரணமாக வேலையிழந்து நிற்கையில், அமெரிக்காவின் பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு அதிகரித்து வருகிறது.

-

மெரிக்காவில் ஆய்வு நிறுவனம் ஒன்றின் சமீபத்திய அறிக்கையில் வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் கொரோனா வைரஸ் நோய்ப் பெருந்தொற்றின் காரணமாக வேலையிழந்து நிற்கையில், அமெரிக்காவின் பெரும் கோடீஸ்வரர்களின் (பில்லியனர்கள்) சொத்து மதிப்பு வெறும் 23 நாட்களில் 282 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.

அமெரிக்கப் பொருளாதாரத்தில் இந்தக் காலாண்டில் மட்டும் சுமார் 40% அளவிற்கு வீழ்ச்சி ஏற்படும் என்று கூறப்பட்டுவரும் நிலையில், இந்த திடீர் சொத்து மதிப்பு வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

இந்த அறிக்கையின்படி, 1980-க்கும் 2020-க்கும் இடையிலான காலகட்டத்தில், அமெரிக்காவின் கோடீஸ்வர்களின் சொத்து மதிப்புக்கு அவர்கள் கட்டக் கூடிய வரியின் சதவீதம் சுமார் 79% குறைந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் அமெரிக்க பெரும் கோடீசுவரர்களின் சொத்து மதிப்பு சுமார் 1100% அதிகரித்துள்ளது. ஆனால் நடுத்தர வர்க்கத்தினரின் சொத்துமதிப்பு வெறும் 5%தான் உயர்ந்துள்ளது.

கடந்த 1990-ல் அமெரிக்க பெரும் கோடீஸ்வர வர்க்கத்தினரின் மொத்த சொத்து மதிப்பு 240 பில்லியன் டாலர் மட்டுமே. ஆனால் இன்று அதன் மதிப்பு சுமார் 2.95 ட்ரில்லியன் டாலர் ஆகும். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் அடிமட்ட 50% மக்களின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பை விட, அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ஜெஃப் பெசாஸ், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மற்றும் ஹாத்தவே நிறுவனத்தின் வாரன் பஃபெட் ஆகிய மூவரின் சொத்து மதிப்பின் கூட்டுத்தொகை அதிகம்.

இந்த அறிக்கை, சட்டமியற்றும் மற்றும் செயல்படுத்தும் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு எந்த சட்டங்கள் இயற்றப்படவேண்டும் என்பதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும், ஒருசில பெரும்பணக்காரர்களது ஆட்சியே அமெரிக்காவில் நடக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. மேலும் இந்த அறிக்கையில் அமெரிக்காவில் பெருகி வரும் “சொத்துப் பாதுகாப்பு நிறுவனங்கள்” குறித்தும் விரிவாகப் பேசப்படுகிறது. இந்த நிறுவனங்களுக்கு பெரும் கோடீஸ்வரர்கள் கோடிக்கணக்கான டாலர்கள் வரியை ஏய்க்க கணக்காளர்கள், வழக்கறிஞர்கள், தரகர்கள் மற்றும் வரிச் சொர்க்கங்களிலும், அறக்கட்டளைகளிலும் தங்களது பெரும் சொத்துக்களை மறைப்பதற்கு உதவிபுரியும் சொத்து நிர்வகிப்பாளர்களுக்கும் பல லட்சம் டாலர்களை அள்ளித்தருகிறார்கள்.

படிக்க:
♦ கொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை
♦ ஸ்டெர்லைட் விவகாரத்தில் கட்சிகள் – இயக்கங்கள் – சங்கங்களின் மௌனம் கலையட்டும் !

இதன் விளைவாக சமூகத் திட்டங்கள் முடமாக்கப்படுவதும் சாதாரண மக்களின் வாழ்க்கைத்தரம் முடங்குவதும் மட்டுமல்லாமல், மக்களின் சராசரி வாழ்நாளின் அளவு தொடர்ச்சியாக குறைந்தும் வருகிறது. வெகு சில அமெரிக்கர்களே தங்கள் பிள்ளைகள் தங்களை விட நல்ல வாழ்க்கை வாழ்வார்கள் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளனர். புள்ளி விவரங்களும் அதைத்தான் தெரிவிக்கின்றன.
பெரும் கோடீசுவரர்கள் தாங்கள் கட்ட வேண்டிய வரித்தொகையில் மிகச் சிறுபகுதியையே நன்கொடையாக அளிக்கின்றனர். அப்படி சிறு பங்கு அளிப்பதும்கூட விரிவாக விளம்பரப்படுத்தப்படுவதை அவர்கள் உறுதி செய்து கொள்கின்றனர். செய்தி நிறுவனங்களுக்கு போதுமான நன்கொடை கொடுப்பதன் மூலம் அதை செய்கின்றனர்.

மிண்ட்ப்ரெஸ் என்னும் செய்தி நிறுவனம் கடந்த டிசம்பர் 2019-ல் நடத்திய புலன் விசாரணையில் பெரும் கோடீசுவரரான பில்கேட்ஸ், கார்டியன் பத்திரிகைக்கு 9 மில்லியன் டாலர்களும், என்.பி.சி. யுனிவர்சல் நிறுவனத்துக்கு 3 மில்லியன் டாலர்களும், என்.பி.ஆர் நிறுவனத்துக்கு 4.5 மில்லியன் டாலர்களும், அல்-ஜசீரா நிறுவனத்துக்கு 1 மில்லியன் டாலர்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, பிபிசியின் மீடியா நடவடிக்கை திட்டத்திற்கு 49 மில்லியன் டாலர்களும் அளித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெசாஸ் இப்படியானவர் அல்ல. எளிமையாக செய்தி நிறுவனங்களை வாங்கி விட்டு, தமக்கு விசுவாசமான வகையில் ஆசிரியர் குழு நிலைப்பாட்டை மாற்றி வைத்து விடுவார்.

கடந்த மார்ச் இறுதி வாரத்திலிருந்து ஏப்ரல் இறுதிவாரம் வரை, அமெரிக்காவில் மட்டும் சுமார் 2.65 கோடி பேர் வேலையில்லாதவர்களாக பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை வளர்ந்து கொண்டே இருக்கிறது. விரைவில் இது வேகமெடுத்து வளரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய பெரும் கோடீசுவரர்கள் இந்த பெருந்தொற்றுக் காலகட்டத்தில் தங்களது தனிப்பட்ட சொகுசு பங்களாக்களிலும், சொகுசுப் படகுகளிலும் பதுங்கிக் கொண்டிருக்கையில், அவசியப் பணியாளர்களாக இருக்கும் 5 முதல் 6.5 கோடி எண்ணிக்கையிலான அமெரிக்கர்கள் இந்த சமூகத்தை இயக்க தங்களது உயிரைப் பணயம் வைக்க வேண்டியது இருக்கிறது. பலசரக்குக் கடை பணியாளர்களைப் போன்ற குறைவான கூலிக்குப் பணிபுரியும் தொழிலாளர்கள் பலரும் உடல்நலம் குன்றி இறந்துள்ளனர்.

தொழிலாளர்களின் நிலைமை ஒருபுறம் மோசமாகிக் கொண்டிருக்க, பெரும் கோடீசுவரர்களின் சொத்து மதிப்பு உயர்ந்து கொண்டிருப்பது நமக்கு ஒன்றை மட்டும் ஆணித்தரமாக உறுதிப்படுத்துகிறது. முதலாளித்துவத்தைப் பொறுத்தவரையில் வறுமையும், பெரும் கோடீசுவரர்களின் செல்வக் குவிப்பும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதுதான் அது.


நந்தன்

செய்தி ஆதாரம் : MR Online.