கொரோனா : சென்னை மக்கள் உதவிக் குழு – மக்களுக்கான நிவாரண பணியில், 50 நாள் நிறைவு !

ந்த ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கு தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள், மருத்துவ உதவி, நிதியுதவி என அனைத்து வழிகளிலும் 08.04.2020 அன்று தொடங்கி இன்று வரை சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், மருத்துவ உதவி வழங்கி மக்களின் துன்பத்தில் பங்கெடுத்துள்ளோம்.

மேலும் நம் குழுவானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும்போது, நம்மை அவர்கள் குடும்பத்தில் ஒருவராக எண்ணி நம்பிக்கை தெரிவிப்பது நமக்கு இந்த பணியில் ஈடுபட்ட மன நிறைவை தருகிறது.

துவக்கத்தில் வருமானம் எதுவும் ஈட்டாத மாணவர்கள், இளைஞர்கள் நம்மால் என்ன செய்யமுடியும் என யோசித்தோம். ஆனால் கடுமையான சிக்கலில் இருந்த மக்களின் நிலைதான் எங்களை செயல்பட தூண்டியது. அப்படிப்பட்ட பயணத்தில் ஏற்பட்ட பல அனுபவங்களில் ஒரு சில…

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

டீ விற்றுக் கொண்டிருந்த அம்மா ஒருவர், வியாபாரமாகாத டீயை கண்ணெதிரே தரையில் ஊற்றிக் கொண்டிருந்ததை பார்த்து, மனம் பொறுக்காமல் அவரிடம் பேசினோம்.

“யாரும் டீ வாங்குறதில்ல, எனக்கு 2 பொம்பள புள்ளைங்க, புருஷன் இறந்துட்டாரு, வாடகையும் கட்ல, என்ன செய்றதுனே தெரியலப்பா” என அவரது பாரத்தை நமது குழவின் நண்பர் அக்பரிடம் பகிர்ந்து கொண்டார்.

உடனே போன் மூலம் குழுவில் பேசி முடிவெடுத்து அத்தியாவசிய பொருட்கள், வீட்டு வாடகைக்கு முடிந்த உதவியை எங்கள் சென்னை மக்கள் உதவிக்குழு செய்யுமென உறுதியளித்து வந்தோம். உறுதியளித்தது போலவே நம் குழுவினரால் நிதியுதவி அளிக்கப்பட்டது. அதனை பெற்று கொண்ட அந்த அம்மா, “பெத்த புள்ளைங்கபோல உதவிசெஞ்சீங்க, ரொம்ப நன்றிப்பா” என நெகிழ்ச்சியோடு கூறினார், அந்த தாய்..

இத்தகைய நிகழ்வுகளில், ஒருமுறை அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வரும் கடைக்காரரிடம் நம்முடைய சென்னை மக்கள் குழுவின் செயல்பாடுகளை விளக்கியதும், அவர் சுமார் ₹1000 ரூபாயை தன்னுடைய பங்களிப்பாக வைத்து கொள்ளும்படி சொன்னது நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.

இம்மாதம் மேற்கொண்ட சில வேலைகள்… பாரிமுனை சுற்றியுள்ள பகுதியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சாலையோரம் வசிக்கும் சுமார் 70 பயனாளிகளுக்கு, வடசென்னை மக்கள் உதவிக்குழு தோழர்களுடன் இணைந்து, உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களின் பங்களிப்போடு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

மேலும் சென்னை கொருக்குப்பேட்டை – பாரதிநகர் – ஜெ.ஜெ நகர் – அண்ணா நகர் – கோவிந்தசாமி நகர், வியாசர்பாடி என பல்வேறு பகுதியில் உள்ள தினக்கூலி தொழிலாளர்கள், ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் என 100 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

உதவிக்குழு சென்னையின் பெயரில் இருந்தாலும், குழுவின் உறுப்பினர்களான சட்ட மாணவர்கள் மற்றும் இளம் வழக்கறிஞர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ளதால், செங்கல்பட்டு, காரைக்குடி, தருமபுரி, கோவை, கடலூர், புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டப் பகுதிகளிலும் நமது பணி நடந்து வருகிறது.

எல்லா நெருக்கடியான நேரத்திலும் மக்களுக்கு உதவ, மக்கள் தான் உதவுவார்கள் என ஏற்கனவே பல நெருக்கடியான தருணங்களில் நாம் கண்டுள்ளோம். அதேபோல தற்போதைய இந்த பேரிடர் காலத்திலும் நம் குழுவில் உள்ள நண்பர்கள் தம்மால் முயன்ற பங்களிப்பினை செலுத்தியதும், உதவி பணிகளை பார்க்கும் நண்பர்கள் தொடர்ச்சியாக தரும் நிதி மற்றும் நிவாரண பொருட்களும் தான் 50 நாட்களை தாண்டி நீடித்து வரும் வெற்றிக்கு காரணம். இந்த மகத்தான பணியில் நிதியுதவி அளித்த மற்றும் உறுதுணையாக நின்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

லாக்டவுன் 5 -ல் இருக்கிறோம். இன்னும் சென்னை மண்டலத்தில் பேருந்து, ரயில் ஓடவில்லை. இன்னும் மக்களின் வாழ்க்கை இயல்புநிலைக்கு திரும்பவில்லை. உதவிகள் கேட்டு நமக்கு கோரிக்கைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. நமக்கு தொடர்ந்து உதவிக் கொண்டும் இருக்கின்றனர். தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.

நன்றி !

சென்னை மக்கள் உதவிக்குழு,
தொடர்புக்கு : 99401 57731.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க