“சென்னையில் கொரோனோ பரிசோதனைகளை தெருத்தெருவாக செய்து கொண்டிருக்கிறோம். பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கும் தினமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு மட்டுமல்ல குடும்பத்தையே நாங்கள் சோதனை செய்கிறோம், தனிமை படுத்துகிறோம். ஃபீவர் கேம்ப் நடத்துகிறோம்.”

இப்படி, சென்னை மாநகராட்சி கமிஷனர் பல்வேறு அறிவிப்புகளை தினமும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆனால் இத்தனை அறிவிப்புகளும் எல்லா மக்களையும் சென்று அடைந்ததா என்றால் இல்லை அதற்கு ஒரு எடுத்துக்காட்டு தான் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கோதாமேடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி. இப்பகுதி நிலைமை என்ன? என்பது குறித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சைதாப்பேட்டை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் பூர்ணிமா விளக்குகிறார்.

“எங்கள் பகுதியில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இப்போது எங்களுக்கு தெரிந்த வரை 10-க்கும் மேற்பட்டோருக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பாதிப்பு ஏற்பட்ட நபர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். மீண்டு சிலர் வந்திருக்கிறார்கள்.

பிரச்சனை அதுவல்ல அவ்வாறு பாதிக்கப்பட்டோரின் குடும்பங்கள் இங்கேயே இருக்கிறார்கள். அவர்கள் வழக்கம்போல தங்களுக்குத் தேவையான எல்லா வேலைகளையும் செய்து கொள்கிறார்கள். தண்ணீர் பிடிக்கிறார்கள், காய்கறி வாங்குகிறார்கள் மக்களோடு சகஜமாகவே இருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட ஒரு நபரை மட்டுமே பரிசோதனை செய்து அவரின் குடும்பங்களை கண்டுகொள்ளாமல் நீங்கள் வீட்டிலேயே தனிமையாய் இருங்கள் என்று சொல்வதன் மூலம் மட்டுமே ஒரு நோயை எப்படி கட்டுப்படுத்த முடியும்?

படிக்க:
சாத்தான்குளம் : மதுரை வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !
♦ நுண்கடன் தவணை ஆகஸ்ட் 31 வரை செலுத்த மறுப்போம் ! கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு !

அனைவரையும் சோதிக்க வேண்டும். குறிப்பாக யாருக்கு தொற்றுநோய் ஏற்பட்டுள்ளதோ அவரோடு இருந்த அனைத்து தொடர்புகளையும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. அவ்வாறு எந்த பரிசோதனையும் மேற்கொள்வது இல்லை.

தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு எந்த பொருளாதார உதவியும் செய்யாமல் வீட்டிலேயே இருங்கள் என்று சொன்னால் அவர்களால் எப்படி இருக்க முடியும் ? அவர்கள் தங்கள் தேவையை எப்படி பூர்த்தி செய்து கொள்வார்கள் ?
ஆக தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இதை அரசு மேற்கொள்ளாமல் ஒரு போதும் தொற்று நோயை கட்டுக்குள் கொண்டுவர முடியாது.

சைதாப்பேட்டையில் ஒரு அரசு மருத்துவமனை இருக்கிறது. இந்த கொரோனா பிரச்சினைக்கு பிறகு அவசர சிகிச்சை என்றால் மட்டுமே மருத்துவம் பார்க்கப்படுகிறது. காய்ச்சல், சளி போன்ற சாதாரண நோய்களுக்கு மருத்துவம் பார்க்கப்படுவது கிடையாது. வயது முதிர்ந்தவர்கள் குறிப்பாக அதிக உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை மேற்கொள்ளப்படும். அப்படிப்பட்ட பரிசோதனைகள் கடந்த நான்கு மாதங்களாக செய்யப்படவில்லை.

சுகர், பி.பிக்கான மாத்திரைகள் ஜூன் மாதம் முழுக்க கொடுக்கவே இல்லை. தேவைப்பட்டால் மாத்திரையை நீங்கள் ராயப்பேட்டையில் வாங்கிக் கொள்ளுங்கள் என்கிறார்கள்.”

இதையொட்டி மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பாக பகுதி மக்களிடம் கையெழுத்து வாங்கி மனுவை சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்துக்கு கொடுக்கச் சென்றால் அதை வாங்குவதற்கு ‘ஒரு நாதியும் இல்லை’. “போய் மண்டல அலுவலகத்துக்கு கொடுங்கள்…” என்கிறார்கள்.

“பொது முடக்கம் அறிவித்துவிட்டார்கள் வண்டியில் போக முடியாது என்றால் சைதாப்பேட்டையில் இருந்து கோடம்பாக்கம் மண்டல அலுவலகத்திற்கு எப்படி போக முடியும் ?

சுகாதாரத்துறை செயலாளர் மாநகராட்சி ஆணையருக்கு பதிவுத் தபாலில் அனுப்பியுள்ளோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.”

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

28.06.2020 ஞாயிற்றுக்கிழமை சைதாப்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏ. மா. சுப்பிரமணியம் அவர்களை சந்தித்து மனு அளித்தோம் .அவர் மாத்திரைகளை வழங்குவதற்கும், கிருமிநாசினி தெளிப்பதற்கும், Fever camp போடுவதற்கும் ஏற்பாடுகளை செய்வதாக கூறினார் .

அதைத் தொடர்ந்து திங்கள்கிழமை முதல் பகுதி முழுக்க கிருமிநாசினி தெளிக்கிறார்கள். சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கான சுகர், பிபி மாத்திரைகள் கொடுக்கிறார்கள் .

இதுபோன்று குடிசை மாற்று வாரிய பகுதியில் உள்ள மக்கள் மிகவும் நெருக்கடியான சூழலில் வாழ்கிறார்கள். அவர்கள் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தா விட்டால் மோசமான தொற்றுநோய் பாதிப்பு ஏற்படும்.

என்ன பண்றது… இந்த நாட்டில் மனு கொடுத்தா தான் மாத்திரையை கிடைக்குது…” என தனதுபோராட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் பூர்ணிமா.

தகவல் :
மக்கள் அதிகாரம்
சென்னை மண்டலம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க