கொரோனா தீவிரமாகும் போது பல்கலைக்கழக செம்ஸ்டர் தேர்வு எதற்கு ? ரத்து செய் !
பு.மா.இ.மு கண்டன அறிக்கை!
பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வுகளை வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திற்கு அனுமதியளித்துள்ளது என ஜூலை -7 ந்தேதி செய்தி வெளியாகியுள்ளது. இது நாடு முழுவதுமுள்ள கோடிக்கணக்கான கல்லூரி மாணவர்களை கொரோனா தொற்றுக்கும், மன அழுத்ததிற்கும் ஆளாக்கும் விபரீதமான முடிவு என எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலும், இறப்பு விகிதமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள்ளது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இது உச்சத்தை எட்டும் என வல்லுநர்களும், மருத்துவர்களும் எச்சரிக்கின்றார்கள். எல்லா மாநிலங்களிலும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், விடுதிகள் அனைத்தும் கோவிட் -19 தொற்றுக்கு ஆளானவர்களை தனிமைப்படுத்தும் முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வந்து படித்த மாணவர்கள் கொரோனா – ஊரடங்கு காரணமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
ரயில், பேருந்து போன்ற போக்குவரத்துகள் முடக்கப்பட்டுள்ளன, மாணவர் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து வறுமையின் பிடியில் சிக்கியுள்ளன. இப்படிப்பட்ட நிலையில் மாணவர்கள் எப்படி செமஸ்டர் தேர்வுக்கு தயாராக முடியும்? மாணவர்களின் நலன், நடைமுறைசார்ந்த பிரச்சனைகள் குறித்து சிந்தித்து திட்டமிடாமல், தாங்கள் நினைத்தை நடத்துவது என்ற அதிகார வர்க்க திமிரைத்தான் காட்டுகிறது.
படிக்க:
♦ ஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் !
♦ பொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் !
இந்த கொரோனா – ஊரடங்கு காலத்தில் மாணவர்களின் உயர்கல்வியை தொடர்வது குறித்தும், கடந்த செமஸ்டர் தேர்வு பிரச்சனையை மட்டுமின்றி, இக்கல்வியாண்டை கடப்பது குறித்தும் ஓர் அறிவியல்பூர்வமான மாற்று வழிமுறை குறித்து சிந்திக்க வேண்டிய தருணம் இது. அதற்கு கல்வியாளர்கள், பல்கலைக் கழக, கல்லூரி ஆசிரியர் சங்கங்கள், மாணவர் பிரநிதிகளைக் கொண்ட குழு அமைத்து தீர்மானிப்பதுதான் சரியானது என்பதையும் இத்தருணத்தில் நாம் வலியுறுத்த வேண்டும்.
எனவே, கொரோனா தீவிரமாகும் போது செம்ஸ்டர் தேர்வை நடத்தாதே, ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என அனைவரும் குரலெழுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவண்
த.கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.மா.இ.மு, தமிழ்நாடு.
