சந்தியா ரவிசங்கர் – ஒரு Professional Journalist-ன் வாக்குமூலம்!
Thelede.in என்ற இணைய இதழில் நியூஸ் 18 விவகாரம் குறித்து சந்தியா ரவிசங்கர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதைப் படித்த பிறகுதான் Professional Journalism என்பது பற்றி ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது.
“தேர்தலுக்கு 6 மாதங்களே உள்ள சூழலில், அரசியல் மயமான தமிழ் ஊடகத்துறையில் நுழைகிறது பாஜக…பிரபல ஊடகவியலாளர்களை மதிப்பிழக்கச் செய்வது அதன் முதல் நகர்வு. உண்மை என்ன?” – இதுதான் கட்டுரையின் தலைப்பு. இதைப் பார்த்தவுடன் “கிழிந்தது பாஜக வின் மாஸ்க்” என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? அப்படித்தான் தோன்றும். ஆனால் அவசரப்படாதீர்கள்.

“புதிய தலைமுறை, நியூஸ் 18, காவேரி நியூஸ் போன்ற நிறுவனங்களில் சிறிது காலம் வேலை செய்திருக்கிறேன்” என்ற உண்மையை வாசகர்களுக்கு முதலில் தெரிவித்து விடுகிறார். Proffessionalism!
நியூஸ் 18 விவகாரம் பற்றி அவர் பல தமிழ்ப் பத்திரிகையாளர்களிடம் விசாரித்தாராம். எல்லோரும் ஆத்திரமாய் அவதூறாய்ப் பேசினார்களேயொழிய யாரும் உண்மையைப் பேசவில்லையாம். “தமிழ் ஊடகத்துறையின் பலி கடாவே உண்மைதான்” என்று சொல்கிறார் சந்தியா.
“தமிழ் ஊடகங்கள் மத்திய அரசைத்தான் எதிர்க்கிறார்களே தவிர யாரும் மாநில அரசுகளை எப்போதுமே கேள்வி கேட்பதில்லை” என்று தொடங்குகிறார். எடுத்தவுடனே “துக்ளக் ஸ்மெல்” அடிக்கிறதே என்று எண்ண வேண்டாம். நடுநிலையாக ஒருவர் சிந்திக்கும்போது ஸ்மெல் வரத்தான் செய்யும்.
“தமிழ்நாட்டில் ஊடகங்கள் அரசியல் கட்சிகளோடு பின்னிப் பிணைந்திருப்பதால்தான் ஊடக உலகில் உண்மை செத்துவிட்டது. தமிழகத்தின் முக்கியமான செய்தி சானல்கள், பெரிய பத்திரிகைகளின் ஆசிரியர்கள் தத்தம் கட்சிகளின் சித்தாந்தத்தைப் பிரச்சாரம் செய்வதற்குக் கூச்சப்படுவதில்லை” என்கிறார் சந்தியா. உடனே இது மாரிதாஸின் கருத்து என்று முத்திரை குத்தாதீர்கள். அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை. Great minds think alike.
இருப்பினும், தமிழகத்தின் நச்சுச் சூழலில் இப்படி யாரேனும் முத்திரை குத்தக்கூடும் என்று அம்மையாருக்குத் தெரிந்திருக்கிறது. வெவரமாக முன்னாள் நீதிபதி சந்துருவிடம் ஒரு பேட்டி வாங்கி வைத்திருக்கிறார். “வரலாற்று ரீதியாகவே தமிழ் ஊடக உலகம் அரசியல் சார்ந்தே இருந்து வந்திருக்கிறது. இதில் ரகசியம் ஒன்றும் இல்லை” என்று கூறுகிறார் சந்துரு. இது லெஃப்ட் இலிருந்து ஒரு கருத்து.
அப்புறம் வலதுசாரி. பாஜக வின் நாராயணன் திருப்பதியிடம் பேட்டி. “தமிழ்நாட்டின் 90% தொலைக்காட்சி ஊடகத்துறையினர் தி.க, திமுக சார்புடையவர்கள்” என்கிறார் அவர்.
நாராயணன் சொல்லப் போகிற உண்மைக்கு, நீதிபதி சந்துருவிடம் முன்கூட்டியே ஒரு ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி, கட்டுரையில் தன்னுடைய கருத்துக்கும் நாராயணன் கருத்துக்கும் நடுவில் அதை வெட்டி ஒட்டி விட்டார். இதுக்குப் பேர்தான் நடுநிலை அல்லது Professionalism – கத்துக்கணும்!
படிக்க:
♦ யார் இந்த மாரிதாஸ் ? | காணொளி
♦ தமிழக ஊடகவியலாளர்கள் மீதான காவி கும்பலின் தாக்குதல் ! ஃபேஸ்புக்கில் எழும் கண்டன குரல் !
அடுத்தது டிவிட்டர் யுத்தத்தின் பின்புலம் என்ன என்கிற புலனாய்வைத் தொடங்குகிறார். “நியூஸ் 18 தொலைக்காட்சியில் 70% பேர் திக, திமுக ஆதரவாளர்கள்தான் என்று மாரிதாஸ் சொல்கிறார். 70% என்ற கணக்கை வந்தடைந்ததற்கான தரவுகளை மாரிதாஸ் தரவில்லை” என்கிறார் சந்தியா. 67% அல்லது 67.3% என்று துல்லியமாகச் சொல்லாமல் இப்படி குத்துமதிப்பாகப் பேசும்போது ஒரு Proffessional எப்படி அதைப் பொறுத்துக் கொள்ள முடியும்?
“நியூஸ் 18 தொலைக்காட்சியில், அலுவலகத்திலேயே ஒருவரை ஒருவர் தோழர் என்றுதான் அழைத்துக் கொள்வார்கள்” என்று மாரிதாஸ் தவறவிட்ட இன்னொரு ரகசியத்தையும் வெளியிடுகிறார். பிறகு, எஸ்.வி.சேகர் வீட்டில் கல்லெறிந்த சம்பவம் பற்றி மாரிதாஸ் சொல்வதை எழுதிவிட்டு, அந்தப் பிரச்சனை குறித்த தனது கருத்தை மிகவும் நயமாகப் பதிவு செய்கிறார்.
“சேகர் என்ற செல்லாக்காசுப் பேர்வழி, பெண் நிருபர்கள் பத்திரிகை ஆசிரியருடன் படுக்கிறார்கள் என்ற பதிவை முகநூலில் பகிர்ந்திருந்தார்” என்று எழுதுகிறார் சந்தியா. “இதெல்லாம் ஒரு மேட்டரா” என்பது அவர் கருத்து. அதை அப்படிச் சொல்லாமல் எப்படிச் சொல்கிறார் என்பதே அவர் ஒரு Professional journalist என்பதற்கான சான்று.
இவ்வாறாக… மாரிதாஸுக்கு சுமார் 600 வார்த்தைகளில் விரிவான கவரேஜ். அப்புறம் முடிக்கிற இடத்தில் “மாரிதாஸ் மாதிரி ஆட்களெல்லாம் பாஜக வின் சேறடிக்கும் பிரிவினர். ஆனால் பாஜக தலைவர்கள் (அதாவது நாராயணன் திருப்பதி) ரொம்ப கண்ணியமானவர்கள்” என்று தன்னுடைய கருத்தைப் பதிவு செய்கிறார்.
நியூஸ் 18 இன் தலைமை ஆசிரியர் வினய் சாராவாகியை தொடர்பு கொண்டு “ஆயிரக்கணக்கில் உங்களுக்கு இ மெயிலில் புகார்கள் அனுப்பப்பட்டிருப்பதாக மாரிதாஸ் சொல்கிறாரே” என்று கேட்டாராம் சந்தியா. “அப்படி சொல்வது பொய். மாரிதாஸின் ஃபிராடு நடவடிக்கை பற்றி நாங்கள் போலீசில் புகார் செய்திருக்கிறோம்” என்று அவர் பதில் சொன்னாராம். ஃபிராடு என்று தெரிந்த பிறகு மாரிதாசுக்கு அம்மையார் எதற்காக 600 வார்த்தைகளில் கவரேஜ் கொடுத்தார் என்று உங்களுக்கு கேள்வி எழலாம். இதற்கான பதிலை அவருடைய மொழியிலேயே முதலில் கேளுங்கள்.
“The News18 group, after the deluge of emails from Maridhas and his supporters, are said to have conducted an internal enquiry into the allegations.”
“மாரிதாஸின் ஆதரவாளர்களிடமிருந்து வெள்ளம் போல இ மெயில்கள் வந்ததைத் தொடர்ந்து, அந்த குற்றச்சாட்டுகளின் மீது நிர்வாகம் ஒரு உள்ளக விசாரணை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது.”
எந்த குற்றச்சாட்டுகளின் மீது?
முந்தின பாராவில் வினய் சாராவாகி “ஃபிராடு” என்று எந்த மாரிதாசை சொன்னாரோ அந்த மாரிதாசின் குற்றச்சாட்டுகளின் மீது !
இந்த இடத்தில்தான் அம்மையார் லேசாக ஸ்லிப் ஆகிவிட்டார். “non-partisan, unbiased, apolitical” ஆக இருக்கவேண்டும் என்று எவ்வளவு முயற்சித்தாலும், சில இடங்களில் வழுக்கி விழுவதைத் தவிர்க்க முடிவதில்லை. என்ன செய்வது?
எவ்வளவு நேரம்தான் நடுநிலையா நடிக்க முடியும்?அப்புறம் இறங்கி பொளந்து கட்டுகிறார்.
“குணசேகரனை காப்பாற்ற திமுக ஐடி பிரிவும், திருமாவளவனும் எதற்காகக் களத்தில் குதிக்கிறார்கள். இதிலிருந்தே இது அரசியல்தான் என்று தெரியவில்லையா?”
“மாரிதாஸ் சொல்வது இருக்கட்டும், இப்போ கத்துகிற தமிழ் பத்திரிகையாளர்களெல்லாம் ரொம்ப யோக்கியமா? திராவிட இயக்கத்தின் காரணமாகத்தான் தமிழ்நாட்டின் ஊடகத்துறை நாசமாய்ப் போய்விட்டது”
“முதல்வரின் பிரஸ் மீட் நடந்து கொண்டிருந்தாலும், ‘மாட்டுக்கறி விருந்து, சூரிய கிரகணத்தில் விருந்து’ என்று தி.க காரர்கள் ஏதாவது நிகழ்ச்சி நடத்தினால், உடனே லைவ் யூனிட்டை குணசேகரன் அங்கே போகச் சொல்வார். யாருமே கண்டுகொள்ளாத வீரமணியிடம் பல பிரச்சனைகளைப் பற்றிக் கருத்து கேட்கச் சொல்வார்.”
“விவாதங்களில் பா.ஜ.க-வினரை மற்றவர்கள் சத்தம் போட்டு அடக்குவார்கள், கேலி செய்வார்கள். குணசேகரன் வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருப்பார்.”
“அம்பானியின் மற்ற ஆங்கில இந்தி சானல்களெல்லாம் பாஜக வை விமர்சிக்காமல் எச்சரிக்கையாக இருக்கும்போது, தமிழ் சானல் மட்டும் பாஜகவின் எதிரிகளான திமுக, திகவை ஆதரிக்கிறார்களே என்று பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். டெல்லிகாரன்களுக்குத் தமிழ் தெரியாதில்லையா, அந்த தைரியம்தான் இவர்களுக்கு”
பிறகு சந்தியா வரலாற்றில் குதித்து நீந்துகிறார். தமிழ்நாட்டில் பத்திரிகைத்துறை அரசியல் மயமானதற்கு திராவிட இயக்கம்தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார். அரசியல், நிர்வாகம், நீதித்துறை, ஊடகம் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து துறைகளிலும் கோலோச்சிய பார்ப்பன ஆதிக்கத்தின் எதிர்வினைதான் திராவிட இயக்கம் என்பது பற்றி ஒப்புக்குக் கூட ஒரு வார்த்தை சொல்லவில்லை.
படிக்க:
♦ ‘உயர்’ சாதிக்காரரின் பைக்கை தொட்ட தலித் மீது கொலைவெறித் தாக்குதல் !
♦ உயர்சாதியினரால் நிரம்பிய ஊடக செய்தி அறைகள் !
1881-ல் சுப்பிரமணிய அய்யர் தொடங்கிய இந்து-விலிருந்து, நமது Professional journalist வரையிலான வரலாற்றைச் சொல்லிவிட்டு, முத்தாய்ப்பாக அவர் கூறியிருக்கும் கருத்துதான் மிகவும் கவர்ச்சியானது.
It is clear that in all of the most popular dailies, the DMK and the Congress have had major roles to play. Managements and editors are invariably tied to the ideologies of the DMK, many of them moving between politics and media roles without bothering about conflict of interest.
அதாவது, தமிழ்நாட்டின் எல்லா பிரபல நாளேடுகளும் திமுக – காங்கிரசின் செல்வாக்கில்தான் இருக்கின்றனவாம். தமிழ் இந்து, ஆங்கில இந்து, தினமலர், தினமணி, தினத்தந்தி, எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, டெக்கான் கிரானிக்கிள் உள்ளிட்ட எல்லா பிரபல பத்திரிகைகளும்!
சுதந்திரமான தொலைக்காட்சியைத் தமிழகத்தில் தொடங்க வேண்டும் என்று ஜீ டிவியும் ஸ்டார் குரூப்பும் முயற்சி செய்தார்களாம். அதை திமுக முறியடித்து விட்டதாம். ஜீ டிவியை “சுதந்திரமான சானல்” என்று அம்மையார் சொல்வதை நாம் வேண்டுமானால் ஒரு நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதன் ஓனர் சுபாஷ் சந்திரா இதைக் கேள்விப்பட்டால் கொந்தளித்துவிடுவார்.
சரி. தமிழ் ஊடக உலகை உய்விப்பதற்கு அம்மையார் காட்டும் வழிதான் என்ன? “பத்திரிகைத் துறையை சித்தாந்தங்களிலிருந்து விடுவிப்பதுதான் இதற்குத் தீர்வு” என்கிறார் சந்தியா. இதற்கு ஆதரவாக சந்த்ருவிடம் இருந்து ஒரு மேற்கோள்.
“தமிழ் ஊடக உலகின் தற்போதைய தரத்தை வைத்துப் பார்க்கும்போது, பத்திரிகையாளர்கள் தொழில்முறையில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கு வலுவான அறம் சார்ந்த விழுமியங்கள் இருக்க வேண்டும் என்றும் கருதுகிறேன்” என்ற சந்துருவின் மேற்கோளுடன் கட்டுரை முடிகிறது.
கட்டுரையோடு நாராயணன் திருப்பதியின் வீடியோ பேட்டியும் இருக்கிறது. நாராயணன் பேசுகிறார், பேசுகிறார், பேசிக்கொண்டே இருக்கிறார். “ஏம்மா.. நானே பேசிக்கிட்டிருந்தா பாக்கிறவங்க நம்ப மாட்டாங்கம்மா. என்னை மடக்கி சூடா ரெண்டு கேள்வியாவது கேளுங்கம்மா” என்று நாராயணனே கெஞ்சுகிறார்.
மொத்தத்தில் ஆங்கிலத்தில் 4200 வார்த்தைகளில் ஒரு வேலை வாய்ப்பு விண்ணப்பம் கொடுத்திருக்கிறார். அப்பவும் புரிய வேண்டியவர்களுக்குப் புரியவில்லை என்றால், ஒரு professional journalist இதற்கு மேல் வெளிப்படையாக எப்படிப் பேச முடியும்?
குறிப்பு :
சங்கிகள் தொடுத்து வரும் தாக்குதலுக்கு எதிரான குரல்கள் வலிமையாக ஒலித்துக் கொண்டிருக்கும் போதே, நியூஸ் 18 இலிருந்து இருவர் விலகியிருக்கின்றனர். நீக்க வேண்டியவர்களிடம் விலகல் கடிதம் எழுதி வாங்குவதுதான் ஊடக நிறுவனங்களின் மரபு என்பதால் இது நீக்கம்தான் என்பதில் ஐயமில்லை.
முகநூலில் பெரியார் படம், நீலச்சட்டை பேரணியில் பங்கேற்பு என்ற காரணங்களுக்காக 5,6 நாட்களுக்கு முன்னரே இளைய பாரதி என்பவர் நீக்கப் பட்டிருப்பதாக ஒரு செய்தி. ஆசிஃப் நீக்கப் பட்டிருக்கிறார் என்று நேற்றிரவு ஒரு செய்தி. பொறுப்பில் குணசேகரன் இருக்கும்போதுதான் இவை நடந்திருப்பதாகத் தெரிகிறது. அவரே பொறுப்பேற்று இவர்களைப் பணியில் இருந்து நீக்கியிருப்பதாகவும் தெரிகிறது. என்ன நடந்தது என்பது குறித்து அவர் பேச வேண்டும்.
தனிப்பட்ட நபர்களின் வேலையைக் காப்பாற்றிக் கொடுப்பதற்காகத் தமிழகம் குரல் கொடுக்கவில்லை. தமிழகத்தைப் பார்ப்பன பாசிசத்திலிருந்து காப்பாற்றும் நோக்கத்துக்காகத்தான், பல்வேறு அரசியல் வேறுபாடு கொண்டவர்களும் குரலெழுப்புகிறார்கள். இருப்பினும், பேச வேண்டியவர்கள் பேசாமல் தொடர்ந்து மவுனம் சாதிப்பது நியாயமல்ல.
நன்றி : ஃபேஸ்புக்கில் – ஊடக கண்காணிப்பு