பாபர் மசூதி இடிக்கப்பட்டு கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில் இப்போதுதான் பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பாஜக / ஆர்.எஸ்.எஸ். தலைவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம்.

இந்தியாவின் கருப்பு நாள் என்று அழைக்கப்படும், டிசம்பர் 6, 1992 அன்று சங்க பரிவார மதவெறி கும்பலால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக இரண்டு வழக்குகள் பதியப்பட்டன. குற்றத்தில் நேரடியாக ஈடுபட்ட ‘கரசேவகர்கள்’ மீது ஒரு வழக்கு மற்றும் சதித்திட்டம் தீட்டிய சங்க பரிவாரக் கும்பல் மீது மற்றொரு வழக்கு என இரண்டு வழக்காகப் பதியப்பட்டது.

சதி செய்த குற்றத்தின் கீழ் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களான, எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங், கிரிராஜ் சிங் கிஷோர், விஷ்ணு ஹரி தால்மியா, சாத்வி ரிதம்பரா, பால் தாக்கரே உள்ளிட்ட பல்வேறு ஆர்.எஸ்.எஸ் – பாஜக தலைவர்கள் மீது கரசேவகர்களைத் தூண்டும் விதத்தில் பேசியதாகவும், முழக்கமிட்டதாகவும், சதித் திட்டம் தீட்டியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தற்போது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவரும் இந்த வழக்கு, கடந்த 1993-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்று வருகிறது.

“கரசேவை பஜனையும் கீர்த்தனை பாடுவதற்காகவும் அல்ல, ஸ்ரீராமனின் ஆலயத்தை அங்கு கட்டுவதையும் உள்ளடக்கியதுதான்” என மசூதி இடிப்பிற்கு முன்னர் அத்வானி வெறிகொண்டு திரும்பத் திரும்ப கூறியதை குறிப்பிட்டுக் காட்டுகிறது அந்த குற்றப் பத்திரிகை.

அதில் முரளி மனோகர் ஜோஷி குறித்துக் குறிப்பிடுகையில், “டிசம்பர் 1, 1992 அன்று அயோத்திக்கு செல்லும் வழியில் மதுராவில் பேசிய முரளி மனோகர் ஜோஷி, ராமர் கோவில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று பேசியதோடு, டிசம்பர் 6, 1992 அன்று பாபர் மசூதி இடிப்பின் போது மேடையில் இருந்து கரசேவகர்களை உற்சாகப்படுத்திக் கொண்டும், தூண்டிவிடும்படியாக முழக்கமிட்டுக் கொண்டும் இருந்தார்” என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

உமா பாரதி மீதான குற்றப் பத்திரிகையில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6, 1992 அன்று, “இன்னும் ஒரே அடி .. பாபர் மசூதி வீழ்ந்துவிடும்” என்றும், “ மசூதியை இடி, கோவிலைக் கட்டு, பாபரின் வாரிசுகள் பாகிஸ்தான் செல்லட்டும்” என்றும், “ஜெய் ஸ்ரீராம் என ஜின்னா சொல்லட்டும்” என்றும் முழக்கமிட்டு கர சேவகர்களை மசூதியை இடிக்கத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

1993-ம் ஆண்டு தொடுக்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணை கீழமை நீதிமன்றங்களில் முடிந்து பின்னர் அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மேல் முறையீட்டுக்கு வந்தது. கடந்த 2010-ம் அண்டு அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் லக்னோ அமர்வு, அத்வானி மற்றும் பிறர் மீதான சதிக் குற்றச்சாட்டை ரத்து செய்து கீழமை நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை உறுதி செய்தது. 9 மாதங்களுக்குப் பின்னர் சி.பி.ஐ இதற்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அச்சமயத்தில் இந்த 9 மாத தாமதத்தைக் காரணம் காட்டி அத்வானி மற்றும் பிறர் மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்யக் கோரினர்.

படிக்க:
அயோத்தி இராம ஜென்மபூமி : வரலாறும் புனைசுருட்டும்
ஊரடங்கு அல்ல, அறிவிக்கப்படாத அவசர நிலை !

இந்த வழக்கு நிலுவையில் நின்ற நிலையில் கடந்த ஏப்ரல் 19, 2019 அன்று அத்வானி மற்றும் பிறர் மீதான குற்றச்சதி வழக்கையும், கரசேவகர்கள் மீதான வழக்கையும் ஒன்றிணைத்து, லக்னோவில் ஒரு சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றத்தை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 13 பேர் மீதான குற்றச்சாட்டை மீண்டும் வழக்கில் சேர்த்துக் கொண்டது.

சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம், கடந்த ஜூன் 4 முதல் வாக்குமூலங்களைப் பெறத் துவங்கியுள்ளது. பிரிவு 313-ன் படி சாட்சியங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் நீதிபதி கேள்விகளைத் தொடுப்பார். அதற்கு அவர்கள் பதில் கொடுக்க வேண்டும்.

கடந்த 23-ம் தேதி முரளி மனோகர் ஜோஷி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். வீடியோ கான்ஃபெரன்சிங் மூலம், சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ். கே. யாதவ் முன்னிலையில் வாக்குமூலம் அளித்த முரளி மனோகர் ஜோஷி, தனது வாக்குமூலத்தில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் இருந்த மத்திய அரசு, அரசியல் பழிதீர்க்கும் நோக்கோடு தன்னை இவ்வழக்கில் இணைத்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதே போல அரசு தரப்பில் வைக்கப்பட்டுள்ள சாட்சியங்களை பொய்யானவை என்றும் அரசியல் நோக்கங்களால் உந்தப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அந்த சமயத்தில் வெளியான வீடியோ மற்றும் செய்தித்தாள் புகைப்படங்கள் அனைத்தும் சித்தரிக்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளார் ஜோஷி.

இராமர் கோவில் கட்ட தயார் செய்யப்பட்ட கல்தூண்கள். (கோப்புப் படம்)

இந்த விவகாரத்தில் அத்வானி கடந்த 24-ம் தேதி வாக்குமூலம் அளித்தார். அதில் ஜோஷி முன்வைத்த அதே வாதத்தை வைத்துள்ளார் முன்வைத்துள்ளார். அதற்கு முன்னர், கடந்த 22-ம் தேதியே இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசு வழக்கறிஞர்கள் புடைசூழ அத்வானியை சந்தித்துவிட்டு வந்தார். ஒரு வழக்கில் விசாரிக்கப்பட இருக்கும் குற்றம்சாட்டப் பட்ட நபரை ஒரு உள்துறை அமைச்சர் அரசு வழக்கறிஞர்களோடு நேரில் சந்தித்துவிட்டு வருவது எந்த நாட்டிலும் இல்லாத வழக்கம். முரளி மனோகர் ஜோஷியைப் போல தம்மை எதிர்க்காமல் ஒதுங்கி நிற்கும் கிழட்டு நரி அத்வானி தன்னுடைய ஆள்தான் என்பதைக் காட்டி நீதிபதிக்கு ஒரு எச்சரிக்கை விட்டிருகிறார் அமித்ஷா.

எதிர்வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி, பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், ராமன் கோவிலுக்கு பூமி பூஜை செய்து வைக்கவிருக்கிறார் மோடி. இந்த வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றமோ அல்லது அதற்குப் பின்னர் ஒருவேளை மேல்முறையீடு செய்யப்பட்டால் உச்சநீதிமன்றமோ என்ன தீர்ப்பளிக்க முடியும் ? கடந்த நவம்பர் 2019-ல் பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கில் ராமர் கோவில் கட்டுவதற்கு அந்த நிலத்தை உச்சநீதிமன்றம் தாரை வார்த்து தீர்ப்பளித்திருக்கிறது. அதன்படி, ராமர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை இவ்வளவு நாள் ‘ஆக்கிரமிப்பு’ செய்திருந்த பாபர் மசூதியை அரசாங்கத்துக்கு செலவில்லாமல் இடித்துத் தரைமட்டமாக்கிய கர சேவகர்களுக்கும், அத்வானி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். சங்க பரிவாரக் கும்பலுக்கும் இடித்ததற்கான கூலியையும், அதற்காக இந்தியா முழுவதும் ர(த்)த யாத்திரை சென்று ஆட்களைத் திரட்டியதற்கான செலவையும் 28 ஆண்டுகளுக்கு 12% வட்டி கணக்கிட்டு பாக்கியில்லாம ‘செட்டில்’ பண்ணுமாறு நீதிமன்றம் தீர்ப்பளிக்கலாம் !

இது அபத்தமான வாதமாகத் தெரியலாம். இவ்விவகாரம் குறித்து அரசியல் புரோக்கர் சுப்ரமணியசாமி கடந்த 21-07-2020 அன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “அயோத்தி பிரச்சினையில் அத்வானி, ஜோஷியை நீதிமன்றத்துக்கு இழுப்பதற்கு முன்னர், பிரதமர் அல்பத்தனமான (Silly) இந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கை மூட உத்தரவிட வேண்டும்” என்று பதிவிட்டிருக்கிறார். மேலும், “அதில் அவர்களுக்கு பங்கிருக்கிறது என்றால், அவர்கள் மசூதியை இடிக்கவில்லை; மாறாக, ஒரு செயல்படும் கோவிலை மறு கட்டுமானம் செய்திருக்கின்றனர்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ‘மனு’ நீதிமன்றங்களின் நிலை, சட்டமும் வேதமும் படித்த சுப்பிரமணியசாமிக்கு நம்மைவிட அதிகமாகத் தெரியுமல்லவா ?


– நந்தன்
செய்தி ஆதாரம் : த வயர், டைம்ஸ் நவ்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க