• அடாவடியாக நடந்து கொள்ளும் நுண்கடன் நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடு!
  • கடன் செலுத்துவதற்கான அவகாசத்தை இன்னும் 6 மாதம் வரை நீட்டிப்பு செய் !

கொரோனா பேரிடர், ஊரடங்கு காரணமாக மக்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டதையொட்டி நுண்கடன் உட்பட அனைத்து வங்கி கடன்களை ஆகஸ்டு 31 வரை கட்டுவதற்கு ரிசர்வ் வங்கி அவகாசம் அளித்தது.

இதை தஞ்சை மாவட்ட ஆட்சியரும் உறுதிப்படுத்தினார். ஆனால் இதை எந்த நுண்கடன் நிறுவனமும் சிறிதளவுகூட மதிக்காமல் பெண்களை மிரட்டுவது, நெருக்கடி கொடுப்பது, மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தள்ளுவது என தமது அடாவடித்தனத்தை தொடர்ந்து கொண்டே உள்ளனர்.

குறிப்பாக கிராமவிடியல் (IDFC), எக்விடாஸ், கிராமசக்தி, அயன் டிரஸ்டு பவுன்டேஷன், கூபா, ஆசிர்வாதம், Future Finance, முத்தூட், அரைஸ், ஜனா (தனலெட்சுமி), மதுரா, இதயம்ஜீ, சுமங்கலி, சமஸ்தா, மகளிர் மைக்ரோபைனான்ஸ் ஆகிய நிறுவனங்களின் ஊழியர்கள் பல இடங்களில் பெண்களிடம் அடாவடியாக நடந்து கொள்வதாகப் புகார்கள் வருகின்றன.

இந்த நிலையில் பிரதானமாக 3 கோரிக்கைகளை முன் வைத்து “பெண்கள் உரிமைப் பாதுகாப்புச் சங்கம்” சார்பாக பல்வேறு கிராமங்களில் உள்ள பெண்களைத் திரட்டி, (வல்லம், கோரிக்குளம், மனோஜிப்பட்டி, ஆப்பிரகாம் பண்டிதர் நகர்) தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கும், மாநில மனித உரிமை ஆணையத்திற்கும், மாநில மகளிர் ஆணையத்திற்கும், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் புகார் மனுக்கள் நேரிடையாகவும், தபால் மூலமாகவும் அனுப்பப்பட்டன.

படிக்க:
கொரோனா ஊரடங்கால் அவதிப்படும் மக்களுக்கு வேலை கொடு ! சார் ஆட்சியரிடம் மனு !!
நுண்கடன் நிறுவனங்களின் அடாவடிக்கு முடிவு கட்டுவோம் ! மக்கள் அதிகாரம்

கோரிக்கைகள் :

  1. மாவட்ட ஆட்சியர் உத்தரவை மதிக்காமல் நுண்கடன் நிறுவனங்களின் ஏஜென்டுகள், மேலாளர்கள் பெண்களிடம் தவணை கட்டச் சொல்லி நெருக்கடி கொடுப்பது, சட்ட விரோதமாக பெண்களை மிரட்டுவது, அவமானப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  2. வங்கி தவணைகள் கட்ட 6 மாத (ஆகஸ்டு 31 வரை) அவகாசத்தை மேலும் 6 மாதங்கள் நீடிக்க வேண்டும்.
  3. இந்த 6 மாத தவணைகள் கட்டாததற்கு வட்டி மற்றும் வட்டிக்கு மேல் அநியாய வட்டி போடுவதை தடுக்க வேண்டும்.

இன்னும் பல்வேறு கிராம மக்கள் தொடர்ச்சியாக நமது வழிகாட்டுதலின் அடிப்படையில் பல்வேறு விதங்களில் எதிர்கொண்டு போராடி வருகின்றனர். தற்போது பலரும் அடாவடியாக நடந்து கொள்ளும் ஊழியர்களை ஆடியோ, வீடியோ பதிவு செய்து அனுப்பி வருகின்றனர், நாமும் அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயாராகி வருகின்றோம்.

பல்வேறு கிராமங்களில் தொடர் பிரச்சாரம் செய்ததின் விளைவாக இரண்டு தோழர்கள் தொடர் காய்ச்சலில் இருந்து தற்போது தான் மீண்டுள்ளனர். மற்றொரு தோழருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஒரு வாரமாக மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனாலும் மற்ற தோழர்கள் சளைக்காமல் கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்வதிலும் பெண்களைத் திரட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் ஓயாது !

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தஞ்சை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க