சுற்றுச்சூழல் விதிகளில் திருத்தம், கூட்டுறவு வங்கிகளை ஆர்.பி.ஐ-யின் கைகளில் ஒப்படைப்பது, பொதுத்துறை நிறுவனங்களை படிப்படியாகத் தனியாருக்குத் தாரைவார்ப்பது என மோடி அரசின் அடுத்தடுத்த தாக்குதல்களைத் தொடர்ந்து, கடந்த 5 ஆண்டுகளாக நாடே எதிர்த்து வந்த தேசிய கல்விக் கொள்கைக்கும் கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்திக் கொண்டு ஜூலை 29-ல் ஒப்புதல் அளித்துள்ளது.

34 ஆண்டுகளுக்குப் பின்னர் தேசத்தையே புரட்டிப்போடக்கூடிய அம்சங்களைக் கொண்ட கல்விக் கொள்கை என ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலால் தம்பட்டமடிக்கப்படும் இக்கல்விக் கொள்கை உண்மையில் ஒரு தேன் தடவிய விஷம். 2016-ல் வெளியிடப்பட்ட டி.எஸ்.ஆர் சுப்பிரமணியன் குழு அறிக்கை, 2019-ல் வெளியிடப்பட்ட கஸ்தூரி ரங்கன் குழு தலைமையிலான “வரைவு தேசியக் கொள்கை” இவையிரண்டின் சாரமாகவே வெளிவந்துள்ளது தற்போதைய புதிய கல்விக் கொள்கை. ஒரே வேறுபாடு என்னவென்றால், முந்தையவற்றை விட இது நைச்சியமாகவும் தந்திரமாகவும் எழுதப்பட்டுள்ளது என்பதே.

இக்கொள்கையில், இந்தியக் கல்வியை உலகமயமாக்கி அதைத் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் திட்டமும், தங்களின் இந்து சாம்ராஜ்ஜியக் கனவுக்கேற்ப பாடத்திட்டங்களை  அமைப்பது, முதல் மூன்று வயதிலிருந்தே மாணவர்களின் மூளையை வார்ப்பு செய்வது வரையிலான ஆர்.எஸ்.எஸ் கும்பலின் திட்டமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து இருக்கிறது.

***

2015-இல் இந்தியா ஏற்றுக்கொண்ட (காட்ஸின் கீழ் வருகிற) சர்வதேச கல்வி விதிமுறைகளுக்கு ஏற்பத்தான் தற்போதைய கல்விக் கொள்கை மாற்றியமைக்கப் பட்டிருப்பதாக இக்கொள்கையின் முன்னுரையே கூறுகிறது. (பக்.3). “நிலையான வளர்ச்சி இலக்கு (SDG4)” என்று கூறப்படும் இச்சர்வதேச விதியானது, 2030-க்குள் கல்வியை உலகமயமாக்கி அதை தனியாரிடம் ஒப்படைப்பதையும் 21 ஆம் நூற்றாண்டில் சந்தையின் தேவைகளுக்கேற்ப கல்வி முறையை மாற்றியமைப்பதையுமே நோக்கமாகக் கொண்டதாகும்.

மேலும் துடிப்பான கல்வியை அடைய, கொடையாளர்கள் என்ற பெயரில் தனியாரின் முதலீட்டை ஊக்குவிப்பதே இக்கொள்கையின் நோக்கம் என்று வெளிப்படையாகவே கூறுகிறது. (பக்.6).

இன்னொருபுறம் அதே முன்னுரையில், ஆயிரமாண்டு  கால (ஆரிய-பார்ப்பன) மரபையும், சிந்னையையும் வழிகாட்டும் ஒளிவிளக்காகக் கொண்டுதான் இக்கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. மேலும் சரகா, சுஸ்ருதா, சாணக்கியர், பதஞ்சலி  போன்றவர்கள் மருத்துவம், கணிதம், அறுவை சிகிச்சை உட்பட பலதுறைகளைப் பற்றிக் கூறியுள்ள இலக்கியங்கள் இந்தியாவில் இருப்பதாகவும் இப்பொக்கிஷங்களைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டும் என்றும் கூறுகிறது. (பக்.4,6). வேறு வார்த்தையில் சொல்வதானால், “அந்தக் காலத்திலேயே நாங்கள் அறுவை சிகிச்சையெல்லாம் செய்துள்ளோம்” என்ற சங்கிகளின் முட்டாள் கூற்றுகள் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்று கல்விக் கொள்கையாகவே ஆகிறது.

இவற்றுக்கெல்லாம் அச்சாரம் வைத்தாற்போல், “எண்ணத்தால் மட்டுமல்ல, சிந்தனையால், செயலால், ஆன்மாவால் ஒருவரை இந்தியப் பெருமிதமுள்ளவராக மாற்றுவதே இக்கொள்கையின் இலக்கு” என்கிறது. (பக்.6). இது வெளியானவுடன், இக்கூற்றுக்களையெல்லாம் மேற்கோள்காட்டி இதைத்தான் நாங்களும் சொல்கிறோம் என்றும் எங்களின் கருத்துக்களில் பெரும்பான்மையானவைதான் இதில் இடம் பெற்றுள்ளது என்றும் கூறியது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு. எனவே, நாம் இப்படித் துணிந்து சொல்லலாம் : எண்ணத்தால் மட்டுமல்ல, சிந்தனையால், செயலால், ஆன்மாவால் ஒரு மனிதனை சங்கியாக மறுவார்ப்பு செய்வதே இக்கல்விக் கொள்கையின் நோக்கம்.

***

பள்ளிக் கல்வி :

குழந்தைகளின் 85% மூளை வளர்ச்சி 3 வயதிலேயே நடப்பதால், தற்போதுள்ள 10+2 என்ற பள்ளிக் கல்விக் கட்டமைப்பை 5+3+3+4 என்று மாற்றுவதோடு 3 வயதிலிருந்தே குழந்தைகளுக்கு மும்மொழிகளை கற்றுக் கொடுக்கப் போகிறார்களாம். இவையெல்லாம் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை என்பது ஒருபுறம். இன்னொருபுறமோ, ஆயிரமாண்டு இந்தியப் பாரம்பரியத்தையும் மரபையும் கதைகள், நாடகங்கள்,  கலைகள், பாடல்கள் மூலமாகச் சொல்லித்தருவது என்ற பெயரில் பள்ளி செல்லும் குழந்தைகளின் மனதில் இந்துத்துவ நஞ்சு விதைக்கப்படும். இப்படிக் கூறுவது மிகையல்ல. பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு ஒரு பள்ளியில், பாபர் மசூதியை இடிப்பது போன்ற நாடகம் நடத்தப்பட்டது நினைவிருக்கலாம்.

இந்தியாவிலுள்ள பெரும்பான்மையான சிறார்கள், அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவற்றவர்களாய் இருப்பது பற்றியும் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது பற்றியும் நீலிக்கண்ணீர் வடிக்கும் இக்கொள்கை, அதைப்போக்க உள்ளூர் தன்னார்வலர்களைக் கொண்டு கல்வி கற்பிக்கப் பரிந்துரைக்கிறது. இதற்கேற்ற வகையில் பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை உருவாக்கி வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ்.-ன் கையாட்களை இனி அதிகாரப்பூர்வமாகவே கல்வி நிலையங்களுக்குள் ஊடுருவ வைக்கும் சதித்தனமே இது.

படிக்க:
மோடி அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து தமிழகம் கிளர்ந்தெழட்டும் !
பாசிச இருளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? | தோழர் வாஞ்சிநாதன் உரை | காணொலி

இடைநிற்றல் அதிகமாகிவிட்டதாகவும் 2035-க்குள் 50% சேர்க்கை விகிதத்தை அடையப்போவதாகவும் கூறும் இவர்கள், அரசு மற்றும் தனியார் கொடையாளர்களின் (கார்ப்பரேட்களின்) ஒருங்கிணைந்த முயற்சியில் இதைச் சரிபடுத்தப் போகிறார்களாம்.

பாடத்திட்டங்கள் மற்றும் கற்பித்தல் முறையைப் பொறுத்தவரை, மனப்பாடக் கல்வியை  ஒழிக்கப் போவதாகவும், செயல் முறைக் கல்வியை வளர்க்கப் போவதாகவும், பாடச் சுமைகளைக் குறைக்கப் போவதாகவும் பேசுகிறது இக்கொள்கை. பாடச்சுமைகளைக் குறைக்கப் போகிறோம் என்று ‘முற்போக்காகப்’ பேசும் இக்கொள்கை ‘இந்தியப் பாரம்பரியம், கலாச்சாரம், மரபு’ ஆகியவற்றை கற்றுத்தருவதற்கு அதிக அழுத்தம் தருகிறது. எனவே, “பாடச்சுமையைக் குறைப்பது” என்ற பெயரில் ஜனநாயக, பகுத்தறிவுக் கருத்துக்களை நீக்கி பாடப்புத்தகங்களை முழுக்கக் காவிமயமாக்குவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. கொரோனா ஊரடங்கை ஒட்டி சமீபத்தில் குறைக்கப்பட்டிருக்கும் சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டத்திலேயே ஜனநாயகம் தொடர்பான பாடப் பகுதிகளை மத்திய அரசு நீக்கியிருப்பதை இதனுடன் ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளலாம்.

அதேபோல, 5 ஆம் வகுப்புவரை தாய்மொழி வழிக் கல்வி என்று கூறுவதெல்லாம் பச்சைப் பொய். இக்கொள்கையின் 4.11 ஆவது அம்சத்தில், “சாத்தியமான இடங்களில்” (Where ever possible) தாய்மொழி வழிக் கல்வியைக் கற்றுக்கொடுக்கலாம் என்றுதான் உள்ளது. மேலும் இக்கொள்கை வெளியான மறுதினமே, தங்கள் பள்ளிகளில் தாய்மொழிக் கல்வியை அமல்படுத்த மாட்டோம் என சி.பி.எஸ்.சி பள்ளிகள் அறிவித்துவிட்டன.

3 வயதிலிருந்தே குழந்தைகள் மீது மும்மொழி திணிக்கப்படுகிறது. 3-வது மொழி இந்தியோ சமஸ்கிருதமோ அல்ல, எதை வேண்டுமானாலும் படிக்கலாம் என்று கூறுனாலும், இக்கொள்கை முழுவதும் சமஸ்கிருதத்துக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மற்ற செம்மொழிகளை பெயரளவுக்குக் குறிப்பிடும் இதில், மொத்தம் 23 இடங்களில் சமஸ்கிருதத்துக்கான முக்கியத்துவம் பற்றி பேசப்பட்டுள்ளது. அதேபோல, 4.17 ஆவது அம்சத்தில், “பள்ளி முதல் அனைத்து நிலைகளிலும் சமஸ்கிருதம் முக்கிய விருப்ப மொழியாக இருக்கும்” என்று வெளிப்படையாகவே கூறுகிறது.

மேலும், 22.15 ஆவது அம்சத்தில், “சமஸ்கிருத மொழியை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வரையறுக்கப்பட்ட ஒற்றை வழியில் அல்லாமல், பள்ளிகளின் வாயிலாகவும் பயிற்றுவிக்கப்படும். மும்மொழிப் பாடத்திட்டத்தில் ஒருமொழியாக மட்டுமின்றி உயர் கல்வியிலும் பயிற்றுவிக்கப்படும். வெறுமனே மொழியாக மட்டுமின்றி புதுமையான சுவாரஸ்யமான முறைகளில் இது மாணவர்களிடம் கொண்டு சேர்க்கப்படும். ….. மாணவர்கள் விரும்பும் பட்சத்தில், சமஸ்கிருதமானது ஒருவகை புனிதத்துவம் மிக்க பல்வேறு படிப்புகளைக் கற்றுக் கொடுக்க முறையாகச் செயல்படத் துவங்கும். அதிக அளவிலான சமஸ்கிருத ஆசிரியர்கள், 4 வருட ஒருங்கிணைந்த பல்துறை கல்வி & பி.எட் பட்டம் பெறுவதன் மூலம் நாடு முழுவதும் பணியமர்த்தப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கூறுகிறது. (பக்.55)

படிக்க:
நூல் அறிமுகம்: தமிழா ! நீ ஓர் இந்துவா? | மஞ்சை வசந்தன்
புதிய கல்வி கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் | பேராசிரியர் வீ. அரசு

பிற தேசிய இனங்களின் மீதான தங்களது ஆரிய சமஸ்கிருதப் பன்பாட்டுப் படையெடுப்பை இவ்வளவு பச்சையாகவே கூறுகின்றனர். இத்தனைக்கு பிறகும் இதை வெறும் மொழித் திணிப்பு என்று சுருக்கிப் பார்க்க முடியுமா? மேலும், “ஒருவகைப் புனிதத்துவம் மிக்க பல்வேறு படிப்புகள்” என்று கூறுவது சனாதன தர்மத்தை தவிர வேறென்ன.

5+3+3+4 என்பதில் ஒவ்வொரு கட்டத்திலும் மாணவர்கள் தேசிய அளவிலான பொதுத்தேர்வை எழுத வேண்டும். இத்தேர்வுகள் மாணவர்கள் – ஆசிரியர்களின் செயல்திறனை, விருப்பத்தை மதிப்பீடு செய்வதற்காகவே என்று கூறப்பட்டாலும், உண்மையில் ஏழை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை கல்வியிலிருந்து வெளியேற்றுவதையே இது சதித்தனமாக செய்கிறது. இதற்கு இணையாக, 6-வது முதல் 12-வது வரை தொழிற்கல்வி என்ற பேரில் நவீன குலக்கல்வியைப் புகுத்துகிறது இக்கொள்கை. உள்ளூரிலுள்ள தச்சர்கள், குயவர்கள், தோட்டக்காரார்களிடம் மாணவர்கள் இண்டர்ன்சிப் செல்ல வேண்டுமாம். இதற்கு “புத்தகப் பைகளற்ற நாட்கள்” (bagless days) என்று தந்திரமாகப் பெயரும் சூட்டுகிறார்கள். கிராமப்புறங்களின் சமூக சூழ்நிலைமையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இதன் வீரியம் இன்னும் தெளிவாகத் தெரியும். இன்ன சாதி இன்ன தொழிலைத் தான் செய்ய வேண்டுமென வரையறுக்கப்பட்டிருக்கும் நிலையில், காலனியைச் சேர்ந்த மாணவன் ஊருக்குள் நுழைவதே சிக்கல் எனும் நிலையில், அந்த மாணவன் குலத் தொழிலை மட்டும்தானே கற்க முடியும் ?

பல்வேறு மொழி, தேசிய இனங்கள், பண்பாடுகள் நிறைந்த நம் நாட்டில், தேசிய அளவில் ஒரே மாதிரியான பாடத்திட்டங்களும் அதை வரையறுக்க ஒரே அமைப்பும் உருவாக்கப்படும் என்றும் கூறுகிறது இக்கொள்கை. மாநிலங்களிடம் கருத்துக்களைக் கேட்டால் போதுமானது என்று கூறுவதோடு, இவ்வமைப்பு கூறும் வரையறைக்குட்பட்டே மாநிலங்கள் தத்தம் வரலாறுகளையும் சிறப்பியல்புகளையும் பாடத்திட்டத்தில் வைக்க வேண்டும் என்றும் சொல்கிறது. (பக்.16, 17). ஒரே நாடு ஒரே கலாச்சாரம் அது இந்துக் கலாச்சாரம் தான் என்ற ஆர்.எஸ்.எஸ். கொள்கையையே இந்தப் புதிய கல்விக் கொள்கை பறைசாற்றுகிறது.

ஆசிரியர்களைப் பற்றிய பகுதியில், பண்டைய குருகுலக் கல்வி முறையை வானளாவப் புகழ்ந்துவிட்டு, தற்போது தகுதியற்றவர்கள் நுழைந்துவிடுகிறார்கள் என்று கூறிவிட்டு, ஆசிரியர்களுக்கும் இனி தேசிய அளவிலான தகுதித்தேர்வு, நேர்முகத் தேர்வுகளை வைக்க வேண்டும் என்றும், பணிமூப்பு அடிப்படையில் நிரந்தரப் பணி தரக்கூடாது அவர்களின் செயல்திறனை மதிப்பிட்டே நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என்றும் இதற்கு இடையில் தற்காலிக “தகுதிகாண்” கட்டத்தை வைத்து சோதிக்க வேண்டும் என்றும் கூறுகிறது. ஆளெடுப்பு நிறுவனங்கள் ஆர்.எஸ்.எஸ் பிடிக்குள் செல்லும் போது அறிவியல் பூர்வமான, ஜனநாயக சிந்தனை கொண்ட ஆசிரியர்களைக் கல்வி நிலையங்களுக்குள் செல்லவிடாமல் தடுக்கவும் அப்படி இருப்பவர்களை வெளியேற்றவுமே இவை பயன்படும். இவ்விதிகளேதான் கல்லூரிப் பேராசிரியர்களுக்கும்.

மேலும், இன்றைய பாடத்திட்டங்கள் உலகத்தரத்தில் இல்லை என்று கூறும் இக்கொள்கை, கார்ப்பரேட்டுகளின் சந்தைக்கேற்ற படிப்புகளான செயற்கை நுண்ணறிவு (AI), மீப்பெரும் தரவுப் பகுப்பாய்வு, coding, உயிரி தொழில் நுட்பம் போன்றவற்றையே 21-ம் நூற்றாண்டின் திறன்களாகச்  சித்தரித்துள்ளது. உயர் கல்வியில் அவற்றைக் கற்பதற்கான அடிப்படைகளைக் கற்றுக்கொடுப்பதற்கே பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் அதிக அழுத்தமும் கொடுத்துள்ளது. இந்தியர்களை கார்ப்பரேட் கூலியாட்களாக மாற்றுவதோடு அவர்களின் சந்தை தேவைகளுக்கேற்ற படிப்பையே நாட்டின் வளர்ச்சியாக இக்கொள்கை தொழிற்கல்வி என்ற பெயரில் சித்தரிக்கிறது.

ஆய்வகங்கள், நூலகங்கள், விளையாட்டு போன்ற வளங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், ஒருங்கிணைந்த பல்துறை கல்வியை அளித்தல் என்ற பெயரில் சிறிய அளவிலான பள்ளிகளை ஒருங்கிணைத்து பள்ளி வளாகங்கள், குழுக்களாக (School complexes and clusters) மாற்றப்படுமென்கிறது இக்கொள்கை. இதை 2025-க்குள் எல்லா மாநில அரசுகளும் செய்யவேண்டும் என்கிறது. “எல்லா வளங்களையும், துறைகளையும் ஒரே இடத்தில் கொண்ட கல்வி நிறுவனங்கள் வேண்டும்” என்ற பன்னாட்டு நிறுவனங்களின் கோரிக்கையான இதில், சிறுசிறு அரசு பள்ளிகளையே படிப்படியாக மூடி ஒழித்துக்கட்டும் மாபெரும் திட்டம் ஒளிந்துள்ளது.

இதற்காக, முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளியுடன் ஒரு அரசுப் பள்ளியை இணைக்கப் போகிறார்களாம். இதனால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் உயர்தர ஆய்வங்கள், நூலகங்கள் கிடைக்கும் என்று காதில் பூச்சுற்றுகிறார்கள். இதன் மூலம் இவர்கள் தெரிவிக்க விரும்புவது, இனி அரசுப் பள்ளிகளுக்கான வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்காது என்பதுதான். இலாப நோக்கம் கொண்ட தனியார் பள்ளிகளின் வளங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்குமா? அல்லது அரசுப் பள்ளிகளின் நிலங்களையும், விளையாட்டுத் திடல்களையும் தனியார் பள்ளிகள் சுருட்டிக்கொள்ளுமா?.

தற்போதுள்ள கல்வித்துறையின் பெயரளவிலான விதிகள்கூட தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளை உள்ளிட்டவற்றை கேள்விகேட்பதாக மறைமுகமாக குறிப்பிடும் இக்கொள்கை, இவற்றை “தொந்தரவுகள்” என்றும் “வளர்ச்சியைத் தடுப்பவை” என்றும் வரையறை செய்கிறது. “பள்ளிகளின் விதிகளிலோ அல்லது செயல்பாடுகளிலோ, பள்ளிகளை ஒழுங்குபடுத்துவதிலோ பள்ளிக் கல்வித் துறை தலையிடாது.” (பக்.31). இவ்விதிகள் அனைத்தையும் தளர்த்திக் கொண்டு தனியார் கல்விக் கொள்ளை நிறுவனங்கள் தங்கள் விருப்பம்போலக் கொள்ளையடிக்க ஏதுவான வழிவகைகளைச் செய்துகொடுக்கிறது. மேலும், ‘இலாப நோக்கற்ற தனியார் நிறுவனங்கள்’ கல்வியில் முதலீடு செய்வதை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறுவதன் மூலம் பள்ளிக் கல்வியின் சந்தையை உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் திறந்துவிடுகிறது.

மேலும், பள்ளிக் கல்வியில் ஆன்லைன் கல்வி, டிஜிட்டல் கற்பித்தல் இவற்றிற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், பன்னாட்டு ஆன்லைன் கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் கடைவிரிக்க விடுக்கும் சமிக்ஞையே ஆகும்.

***

உயர்கல்வி :

பள்ளிக்கல்வி பகுதியில் தங்களின் திட்டங்களை சூசகமாகக் கூறிய மோடி அரசு உயர்கல்வியில் வெளிப்படையாகவே கூறுகிறது.

மிகமுக்கியமாக உயர்கல்வியில் இதுவரை பல்கலை – கல்லூரிகளுக்கு நிதியளிப்பது, அங்கீகாரம் வழங்குவது, தர நிர்ணயம் செய்வது ஆகியவற்றைச் செய்துவந்த UGC, AICTE போன்ற அமைப்புகளைக் கலைத்துவிட்டு மருத்துவம், சட்டத்துறைகளைத் தவிர அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் நிர்வகிக்க, தர நிர்ணயம் செய்ய HECI என்ற ஒற்றைச் சர்வாதிகார அமைப்பைக் கொண்டுவருகிறது.

2000-ம் ஆண்டு வாஜ்பாய் அரசு அமைத்த, பிர்லா-அம்பானி அறிக்கை யு.ஜி.சி யைக் கலைக்கவும், அரசு பல்கலைக் கழகங்கள்-கல்லூரிகளுக்கு நிதியளிப்பதை படிப்படியாக நிறுத்தவும் கூறியது. அதன்படியே கடந்த 2018 டிசம்பரில் HECI மசோதாவை மோடி அரசு வெளியிட்டது. இவ்வமைப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் இல்லை. கல்லூரிகள் தாங்களாகவே, கட்டணங்களை உயர்த்துவதன் மூலம் அல்லது கடன் மூலம் நிதியைத் திரட்டிக் கொள்ள வேண்டும். கல்வி நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவதற்காக அதற்காக உயர்கல்வி நிதி முகமை என்ற அமைப்பே உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இது அரசு கல்வி நிறுவனங்களை நிதி நெருக்கடியில் தள்ளி மூடும் நோக்கத்தைக் கொண்டதாகும். அதுமட்டுமல்ல இந்த HECI அமைப்பில், புரவலர்கள் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிகாரிகள் அமர்வார்கள். அவர்கள்தான் இனி கல்வி தொடர்பான கொள்கை முடிவுகள் எடுப்பார்கள்.

மேலும் இக்கொள்கை, 15 ஆண்டுகளுக்குள் எல்லா உயர் கல்வி நிறுவனங்களுக்கும் படிப்படியாக, தர அடிப்படையிலான தன்னாட்சியை (Graded Autonomy) அளிக்க வேண்டும் என்கிறது. நிதி ஆயோக் கடந்த 2017-இல் மத்திய அரசிற்கு வழங்கிய பரிந்துரையில் தர தன்னாட்சி பட்டியலில் முதலாம், இரண்டாம் நிலைகளில் வராத கல்லூரி / பல்கலைக்கழகங்களை மூடிவிட வேண்டும் எனக் கூறியுள்ளதை இதனுடன் இணைத்துப் பார்த்தால், அரசு உயர்கல்வி நிறுவனங்களுக்கு நிச்சயம் மூடுவிழாதான்.

“நாளந்தா, தக்சசீலா போன்ற பண்டைய கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டவர் வந்து படித்த பெருமையைக் கொண்டது நமது நாடு” என்று கூறிவிட்டு அதை இப்போது மீட்டெடுக்கப்போவதாக தங்கள் மறுகாலனியாக்க நடவடிக்கைக்கு தேசிய சாயம் பூசுகிறார்கள். உலகளாவிய கல்வியின் தலமாக இந்தியாவை மாற்ற வேண்டும், கற்றல்-கற்பித்தல், ஆசிரியர், மாணவர் பரிமாற்றம் உள்ளிட்ட அனைத்தைப் பற்றியும் உயர்தர பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும், உலகின் சிறந்த 100 கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட வசதி செய்து தரப்படும் என்றெல்லாம் வெளிப்படையாகவே கூறுகிறது இக்கொள்கை. மேலும், பன்னாட்டு நிறுவனங்கள் விருப்பம்போல ஆன்லைன் கல்வி நிறுவனங்களைத் தொடங்கவும் இதில் முழுச்சுதந்திரம் தரப்பட்டுள்ளது. இவையெல்லாம் நடைமுறைக்கு வந்தால் பன்னாட்டு நிறுவனங்களின் கோரப்பிடியில் இந்திய உயர்கல்வித்துறை ஒப்படைக்கப்பட்டு, காசிருந்தால்  மட்டுமே உயர்கல்வி என்ற நிலை ஏற்படும்.

படிக்க:
மூணாறு நிலச்சரிவு : தமிழக தோட்டத் தொழிலாளர்களின் உயிரைக் குடித்த டாட்டாவின் இலாப வெறி !
♦ புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 ! புதிய கலாச்சாரம் நூல் !

பள்ளிக்கல்வியைப் போலவே தரத்தைக் காரணமாகக்கூறி, கல்லூரிகளையும் உயர்கல்வி கூட்டமைப்புகளாக ஒருங்கிணைக்கச் சொல்கிறது. மேலும், 2040-க்குள் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் பலதரப்பட்ட புலங்களைக் கொண்ட (multidisciplinary) கல்வி மையங்களாக (HUB) உருவாக்க வேண்டும் என்று கூறும் இக்கொள்கை ஒற்றைப் புலங்களைக் கொண்ட (single-strem) பல்கலைக் கழகங்களைப் படிப்படியாக மூடிவிட வேண்டும் அல்லது அத்துடன் இணைத்துவிட வேண்டும் என்கிறது. (பக்.34, 35).

நீட் தேர்வைப் போல, கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்துப் படிப்புகளுக்கும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் நடத்துவது ஏழை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை உயர்கல்வியிலிருந்து வடிகட்டி வெளியே தள்ளும். மேலும், கல்வியிலிருந்து எந்த ஆண்டில் வேண்டுமானாலும் வெளியேறலாம் என்பதை “நெகிழ்வுத் தன்மைகொண்டது” எனக் கூசாமல் இக்கொள்கை வரையறுக்கிறது. உயர்கல்வி கற்கும் ஏழை மாணவர்கள் குடும்ப சூழலில் கல்வி கற்க முடியாமல் போனால், அவர்கள் கல்வியை முழுமையாக முடிப்பதற்கு உதவி செய்வது நல்ல கல்விக் கொள்கையா ? காசிருக்கும் வரை படித்ததற்கு ஏற்றவாறு இரண்டாம் தர சான்றிதழ் தருவது நல்ல கல்விக் கொள்கையா ?

பள்ளிக் கல்வியைப் போலவே, கல்லூரிப் பேராசிரியர்களுக்கும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு, தகுதிகாண் கட்டம் இவற்றை அமல்படுத்துவதோடு, அப்பேராசிரியர்கள் இந்திய விழுமியங்கள், கலாச்சாரம், மரபுகள் இவற்றில் ஆழமான அடித்தளத்தைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்றும்  கூறுகிறது இக்கொள்கை. (பக்.42). இனி சிந்தனையாலும், ஆத்மாவாலும் முழு சங்கியாக வாழ்பவர்கள்தான் பேராசிரியர்களாக முடியும் என்பதே இதன் பொருள்.

ஆய்வுகளுக்காக, தேசிய அளவிலான ஆரய்ச்சி மையம் (NRF) உருவாக்கப்படும். பல்கலை, கல்லூரிகளின் ஆய்வுகளுக்கு இந்நிறுவனம்தான் நிதி, அங்கீகாரம், ஒப்புதல் இவற்றை வழங்கும். இதுபற்றிக் கூறும் பகுதியில், கார்ப்பரேட்டுகளின் நலனுக்கான டிஜிட்டல் சந்தை, செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில் நுட்பம், பிக் டேட்டா, சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளிலும் காவிகளின் விருப்பமான நாட்டின் அடையாளம், கலாச்சாரம், கலை ஆகிய துறைகளிலும் ஆராய்ச்சி செய்யத்தான் இனி ஊக்குவிக்கப்படும் என வெளிப்படையாகவே கூறுகிறது. 22.16-இல் “இந்தியக் கலை, கலை வரலாறு, இந்தியத் தத்துவம் – வரலாறு – இலக்கியம் – தத்துவம் – பண்பாடு இவற்றுக்கான கல்வி நிறுவனங்களும் பல்கலைக் கழகங்களும் அமைக்கப்படும். இதில் ஆராய்ச்சியில் ஈடுபட அனைத்து விதமான நிதி உதவிகளும் NRF மூலம் செய்யப்படும்” என்று காவிகளின் நோக்கத்தை வெளிப்படையாகவே கூறுகிறது இந்த புதிய கல்விக் கொள்கை. மேலும் தொழிற்துறை சார்ந்த ஆய்வுகள் அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான தேவையை மையமாகக் கொண்டே நடைபெறும் என்கிறது இந்த புதிய கல்விக் கொள்கை (பக்.45, 46, 55).

ஜனநாயகத்தின் வாசனையோ, மக்கள் நலனின் வாசனையோ அற்ற கார்ப்பரேட் – காவிமயமான ஆய்வுகள்தான் இனி வெளிவரும். சிந்தனையாளர்கள், அறிவியலாளர்கள், மக்கள் நலனில் அக்கறை கொண்டோரெல்லாம் முடக்கப்படுவார்கள்.

***

வ்வாறு, ஏழைகளைக் கல்வியிலிருந்து துடைத்தெறிந்து, ஒட்டுமொத்தமாகக் கல்வியையே கார்ப்பரேட் – காவிமயமாக்கும் நவீன மனுநீதியையே புதிய கல்விக் கொள்கையாக வெளியிட்டுள்ளது மோடி அரசு.

இக்கொள்கை ஏழைகளைக் கல்வியிலிருந்து துடைத்தெறிகிறது என்பதோடு, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலின் இந்து ராஷ்டிரக் கனவுக்கேற்ப மனித மூளையை மூன்று வயதிலிருந்தே வார்ப்பு செய்கிறது. வேறு  வார்த்தைகளில் மீண்டும் சொல்வதானால், எண்ணத்தால் மட்டுமல்ல, சிந்தனையால், செயலால், ஆன்மாவால் ஒருவனைச் சங்கியாகவும் கார்ப்பரேட் அடிமையாகவும்  மாற்றுகிறது என்பதுதான் மிகப்பெரிய அபாயம்.

தீரன்