முகநூல் நிறுவனத்தின் இந்தியப் பிரிவிடம், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தனக்கு எதிராகப் பதிவிடும் 44 முகநூல் பக்கங்களை முடக்குவதற்கு பட்டியலிட்டுக் கொடுத்துள்ளது பாஜக. அப்பக்கங்கள் “எதிர்பார்க்கப்பட்ட தரத்தில் இல்லை” என்றும் “உண்மைக்குப் புறம்பான” செய்திகளைத் தாங்கியிருக்கின்றன என்றும் காரணம் கூறியுள்ளது. அப்படிப் பட்டியலிடப்பட்ட 44 பக்கங்களில் 14 பக்கங்கள் முகநூலில் இருந்து நீக்கப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.
முகநூல் நிறுவனத்தால் நீக்கப்பட்ட 14 பக்கங்களில், பத்திரிகையாளர்கள் ரவீஷ் குமார் மற்றும் வினோத் துவா ஆகியோருக்கு ஆதரவான பக்கங்களும் அடக்கம்.

அதே சமயத்தில், முகநூலில் இருந்து இதற்கு முன்னதாக நீக்கப்பட்ட 17 பக்கங்களை மீண்டும் முகநூல் தளத்தில் அனுமதிக்குமாறு பாஜக கேட்டிருக்கிறது. அதற்கிணங்க அப்பக்கங்களை மீண்டும் இயங்க அனுமதித்திருக்கிறது முகநூல் நிறுவனம். அதே போல தமது வலதுசாரி ஆதரவு இணையதளங்களான சவ்பல் மற்றும் ஓப் இந்தியா ஆகிய தளங்கள் விளம்பர வருவாய் பெறுவதற்கு அனுமதிக்குமாறும் பாஜக கேட்டுள்ளது.
பாஜக ஐடி செல் தலைவர் அமித் மாள்வியாவிடம் பதிலளித்த முகநூல் நிர்வாகம், நீக்கப்பட்ட அந்த 17 பக்கங்களும் தவறுதலாக நீக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. இந்த 17 பக்கங்களும் பாஜகவுக்கு நேரடியாக எந்தத் தொடர்பிலும் இல்லை. ஆனால் பாஜகவின் ஐடி செல்தான் இந்த பக்கங்களை மீண்டும் கொண்டுவருவதற்கு முயற்சித்திருக்கிறது.
தற்போது மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த 17 பக்கங்களும், போஸ்ட்கார்ட் நியூஸ் எனும் வலது சாரி இணையதளத்தின் போலிச் செய்திகளை பரப்பியுள்ளன. இந்த இணையதளத்தின் உரிமையாளர் மகேஷ் வகுப்புவாத பகைமையை தூண்டியதற்காக கடந்த 2018-ம் ஆண்டு பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து போஸ்ட்கார்ட் நியூஸ் தளத்தின் முகநூல் பக்கமும் முகநூல் நிறுவனத்தால் முடக்கப்பட்டது. வலதுசாரி இணையதளாம போஸ்ட்கார்ட் நிறுவனத்தின் தலைவர் மகேஸ்-க்காக வழக்காட பாஜக தலைவரும் எம்/பியுமான தேஜாஸ்வி சூரியா நேரடியாக களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக ஆதரவு முகநூல் பக்கங்களைப் ‘பாதுகாப்பதில்’ பாஜகவின் ஐ.டி. பிரிவு மிகவும் தனிக்கவனம் செலுத்தி முகநூல் நிறுவனத்துடன் மின்னஞ்சல் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. இது குறித்துப் பேசிய முகநூல் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “ ‘பாதுகாப்பது’ என்று எதுவும் இல்லை. சரிபார்த்தல் என்னும் நடைமுறைதான் இருக்கிறது. இதன்படி நீக்கப்பட்ட பக்கங்களையும் கணக்குகளையும் இரண்டாம் கட்ட மறுபரிசீலனைக்கு உட்படுத்தி எங்களது கொள்கைகள் சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டனவா என்பதைச் சரிபார்ப்போம்.” என்று சப்பைக்கட்டு கட்டியிருக்கிறார்.
படிக்க:
♦ டேவிட் ரிக்கார்டோ : தொழில், வர்த்தகத் தத்துவாசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 61
♦ தமிழக ஊடகவியலாளர்கள் மீதான காவி கும்பலின் தாக்குதல் ! ஃபேஸ்புக்கில் எழும் கண்டன குரல் !
பார்ப்பன பாசிச மோடி அரசு, ஊடகங்களையும், சமூக வலைத்தளங்களையும் தமது கட்டுப்பாட்டிற்குள் வளைத்துள்ளதை சமீபத்திய நிகழ்வுகள் அம்பலமாக்கிவருகின்றன. குறிப்பாக முகநூல், பாஜக உள்ளிட்ட வலதுசாரி கும்பலுக்கு ஆதரவாக இருப்பது சமீபத்தில் அம்பலமானது. நாம் என்ன பேச வேண்டும், எவ்வளவு பேச வேண்டும், யார் எதைப் பார்க்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் இடத்தில் முகநூலின் மூலமாக ஆர்.எஸ்.எஸ். பாசிசக் கும்பல் அமர்ந்துள்ளது. காவி பாசிசக் கும்பலோடு கைகோர்க்கும் கார்ப்பரேட் பாசிசக் கும்பலைப் புறக்கணித்து ஒதுக்காமல் தீர்வு இல்லை.
தமிழாக்கம் : நந்தன்
நன்றி : த வயர்