Monday, April 21, 2025
முகப்புகளச்செய்திகள்போராட்டத்தில் நாங்கள்பெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்து செய் ! திருச்சி...

பெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்து செய் ! திருச்சி – மதுரையில் ஆர்ப்பாட்டம் !

நீட் மற்றும் புதிய் கல்விக் கொள்கையை திணித்து புதிய மனுநீதியை சட்டமாக்கத் துடிக்கும் கார்ப்பரேட்- காவி கும்பலுக்கு முடிவுகட்ட பெரியாரை உயர்த்திப் பிடிப்போம் ! மதுரை - திருச்சி புரட்சிகர அமைப்புகள் போராட்டம் !

-

திருச்சி :

“தந்தை பெரியார் அவர்களின் 142-வது பிறந்த நாளை பார்ப்பன இந்து மதவெறி பாசிச  எதிர்ப்பு நாளாக கடைபிடிப்போம்!

பன்முகத் தன்மையை அழித்து இந்தி-இந்து-இந்தியாவை உருவாக்கத் துடிக்கும் RSS பா.ஜ.க கும்பலை வேரறுப்போம்!

நீட், இந்தி-சமஸ்கிருத திணிப்பு, புதியக் கல்விக் கொள்கை, GST என மாநில உரிமைகளைப் பறிக்கும் மோடி, பாசிக கும்பலை வீழ்த்துவோம்!”

என்ற முழக்கத்தை முன் வைத்து மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக் தொழிலாளர் முன்னணி ஆகிய மூன்று புரட்சிகர அமைப்புகளும் ஒருங்கிணைந்து திருச்சியில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெரியார் பிறந்தநாளான 17.09.2020 அன்று காலை 10 மணி அளவில் சோனா மீனா தியேட்டர் அருகே குடும்பங்களுடன் ஒன்று கூடி குழந்தைகளுக்கு பெரியார் அவர்களின் முகமூடி அணிவித்தும், பெரியவர்கள் அனைவரும் செஞ்சட்டைகள் அணிந்து அதில் பெரியார் கூறிய வாசகங்களை ஒட்டி தாரை தப்பட்டையுடன் விண்ணதிர முழக்கமிட்டவாறு 100-க்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்று மத்திய பேருந்து நிலையத்திலுள்ள தந்தை பெரியார் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

படிக்க:
♦ பெரியார் 142 : நீட் – NEP-2020 மனுநீதி திட்டங்களை திரும்பப் பெறு ! நெல்லை மக்கள் அதிகாரம் !
♦ பெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா ? கருவறை தீண்டாமை ஒழியுமா ?

இந்நிகழ்ச்சிக்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா தலைமை தாங்கினார். இதில் ம.க.இ.க கலைக்குழு, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள், மக்கள் அதிகாரம், திராவிடர் விடுதலைக் கழகம், ஜனநாயக சமூக நலக்கூட்டமைப்பு, மக்கள் உரிமை மீட்பு இயக்கம் ஆகிய அமைப்புகளின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அவற்றை சார்ந்த தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. சிலை முன்பாகவே அமர வைத்து அனைவருக்கும் மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது. இந்த மாட்டுக்கறியை வடநாட்டில் பொது வெளியில் சாப்பிட்டால் அவர்களது உயிர்கள் இந்து மத வெறியர்களால் பறிக்கப்படுகிறது. இங்கு நாம் பிரச்சனைகள் இல்லாமல் பொது வெளியில் சாப்பிடுகிறோம் என்றால் அதற்கு காரணம் தந்தை பெரியார்தான் என தோழர்.ஜீவா அறைகூவல் விடுத்து அனைவருக்கும் மாட்டுக்கறி பிரியாணியை வழங்கினார். ம.க.இ.க கலைக்குழு சார்பாக பெரியாரைப்பற்றி தோழர்.லதா பாடல்களை பாடினார்.

பிறகு கூட்டத்தை கலைக்க வந்த போலீசிடம் தோழர்கள் பெரியார் நமக்கு பெற்று தந்த உரிமைகளைப் பற்றி பேசினர். இன்று பிரதமர் மோடிக்கு பிறந்த நாளை விமர்சையாக பா.ஜ.கவினர் கொண்டாடும் போது மக்களுக்காக அரும்பாடுபட்ட தந்தை பெரியாருக்காக நாங்கள் ஏன் விமர்சையாக பிறந்த நாளை  கொண்டாடக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு முதல் நாள் இரவு சுவரொட்டி ஒட்டச் சென்ற சில தோழர்களிடம் தந்தை பெரியாரின் பிறந்த நாள் சுவரொட்டியை ஒட்ட விடாமல் காவல்துறையினர் மொத்தமாக பறிமுதல் செய்ததை கண்டித்து அத்தனை  சுவரொட்டியையும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும், கடுமையாக நடந்து கொண்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கமிட்டவாறு பெரியார் சிலை முன்பு தோழர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீசு உயர் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். காவல் நிலையம் வந்து புகார் கொடுக்கக் கோரியும், சுவரொட்டியை தந்து விடுவதாகவும் கூறியதை அடுத்து தர்ணா போராட்டத்தை முடித்துக் கொண்டு கோர்ட் அருகே உள்ள செசன்ஸ் போலீசுநிலையத்தில் புகார் மனு கொடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசு அதிகாரிகள் கூறியதை அடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பேரணியாக வந்தது, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தது, முழக்கங்கள் இட்டது, இனிப்புகள் வழங்கியது, பெரியாரைப்பற்றி பாடல்கள் பாடியது, மாட்டுக்கறி பிரியாணி வழங்கியது, ஊடகத்தினருக்கு பேட்டி கொடுத்தது, காவல்துறையினரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டது என தொடந்து நடந்த இந்நிகழ்வுகளில் தோழர்களின் போராட்டகுணத்தை கண்டு  அப்பகுதியில் மக்களிடம் உற்சாகத்தையும் பெரியார் சிலைக்கு மாலை போட வந்த அரசியல் கட்சியினரிடம் வியப்பையும் ஏற்படுத்தியது.

தகவல் : ம.க.இ.க., திருச்சி.

0 | 0 | 0

 மதுரை :

ந்தை பெரியாரின் 142-வது பிறந்தநாளை யொட்டி, மதுரை மாவட்ட மக்கள் கலை இலக்கியக் கழகம்,  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

“நீட் மற்றும் குலக் கல்வியை திணிக்கும் புதிய தேசிய கல்வி கொள்கை ஆகியவற்றை விரட்டியடிக்க கார்ப்பரேட் காவி பாசிசத்தை  வீழ்த்த பெரியார் பாதையில் அணிதிரள்வோம்” என்ற முழக்கத்தை முன்வைத்து மதுரை அவுட் போஸ்ட்டில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கம்  எழுப்பினர்.

இந்நிகழ்வில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர் சினேகா, பெண்களின் தற்போதைய நிலைமையைப் பற்றியும் கல்வி கார்ப்பரேட்மயமாகுதல் மற்றும் காவி மயமாகுதல் பற்றியும் தற்போதைய பாசிச சூழல் குறித்தும் விளக்கி சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் திராவிடர் விடுதலைக் கழகம், திராவிடர் கழகம், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் உள்ளிட்ட முற்போக்கு இயக்கங்களும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சாதி ஆதிக்க காவி பாசிசத்தை முறியடிக்க சூளுரைத்தனர். இந்த நிகழ்வில் சிறுவர்கள், பெண்கள், மாணவர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

தகவல் : புமாஇமு, மதுரை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க