தொழிற்துறை உறவு மற்றும் தொழிலாளர் நலச் சட்டங்களில் மாற்றங்களை முன் வைக்கும் சட்ட மசோதாக்களை கடந்த சனிக்கிழமை (19-09-2020) நாடாளுமன்றத்தில் பாஜக அரசு முன் வைத்துள்ளது.

தமது கார்ப்பரேட் எஜமானர்களுக்குச் சேவை செய்யும் பொருட்டு தொழிற்துறை மற்றும் தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது மத்திய மோடி அரசு.

அதன் ஒரு பகுதியாக மூன்று புதிய மசோதாக்களை கடந்த செப். 19-ம் தேதியன்று நாடாளுமன்ற கீழவையில், பணிப் பாதுகாப்பு சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் விதிமுறைச் சட்டம், தொழிற்துறை உறவு விதிமுறைச் சட்டம், மற்றும் சமூகப் பாதுகாப்பு விதிமுறைச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கேங்வர் அறிமுகப்படுத்தினார்.

சந்தோஷ்குமார் கேங்வர்

மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த மூன்று மசோதாக்கள், தொழிலாளர் நலச் சட்டங்களை மாற்றிக் கொள்வதற்கான சுதந்திரத்தை மாநில அரசுகளுக்கு வழங்குகிறது. இந்தச் சட்ட மசோதாக்களை படிப்பதற்கான கால அவகாசம் கூட வழங்காமல் இதனை நிறைவேற்ற எத்தனித்துள்ளது மத்திய அரசு.

இதுவரையில் 100 தொழிலாளர்களுக்கு அதிகமாக பணியமர்த்தும் நிறுவனங்கள் தமது தொழிலாளர் கொள்கை தொடர்பான நிலை ஆணையைப் பெற்று அதன்படிதான் தொழிலாளர்களுக்கான விதிகளை நிர்ணயிக்க முடியும். 100-க்கு குறைவான தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் தொழிலாளர்கள் குறித்த விதிமுறைகளை நிலை ஆணையின் படி வகுக்க வேண்டிய அவசியமில்லை.

100 தொழிலாளர்களுக்கு குறைவாக பணியமர்த்தும் சிறு நிறுவனங்களுக்கான ‘சலுகை’ என்ற வகையில் இது அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போதைய சட்டத் திருத்தத்தின் படி, இந்த எண்ணிக்கையை 300-ஆக உயர்த்தியுள்ளது மத்திய அரசு. அதாவது 300 தொழிலாளர்கள் வரை பணியமர்த்தும் நிறுவனங்கள்கூட இனி நிலை ஆணைப்படி தொழிலாளர்களுக்கான விதிமுறைகளை வைக்கத் தேவையில்லை. மாறாக தமக்குச் சாதகமான வகையில் தொழிலாளர் நலச்சட்டங்களை மாற்றிக் கொள்ளலாம்.

படிக்க :
♦ விவசாயிகளை காக்க வீதியில் இறங்குவோம் ! மக்கள் அதிகாரம் அறைகூவல் !
♦ பெரியார் 142 : நீட் – NEP-2020 மனுநீதி திட்டங்களை திரும்பப் பெறு ! நெல்லை மக்கள் அதிகாரம் !

நிலை ஆணைக்கு உட்பட்டு இதுவரை செயல்பட்டு வந்த பெரு நிறுவனங்களே பல்வேறு முறைகேடுகளின் மூலம் தொழிலாளர் நலச்சட்டங்களை ஏய்த்து தொழிலாளர்களைச் சுரண்டி வந்தனர். தற்போது அத்தகைய சுரண்டும் உரிமையை சட்டரீதியாக அள்ளிக் கொடுத்திருக்கிறது மோடி அரசு.  இதன் மூலம் இந்நிறுவனங்கள் தொழிலாளர்களை எப்போது வேண்டுமானாலும் பணியில் சேர்த்துக் கொள்ளவோ, பணியில் இருந்து வெளியேற்றவோ முடியும். இது முழுக்க முழுக்க தொழிலாளர்களின் பணிப்பாதுகாப்பையும் உரிமையையும் பறிக்கும் செயலாகும்.

கடந்த 2019-ம் ஆண்டு தொழிற்துறை உறவு சட்ட மசோதா 2019-ஐ மக்களவையில் அறிமுகம் செய்தது மோடி அரசு. இந்த சட்ட மசோதாவில் இருந்த, 300 தொழிலாளர்கள் வரை பணிபுரியும் நிறுவனங்கள் எவ்வித அனுமதியுமின்றி பணியாளர்களை பணி நீக்கம் செய்யலாம் என்ற அம்சத்திற்கு தொழிற்சங்கங்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தன. அந்த வகையில் கடந்த ஆண்டு அந்த மசோதாவில் இருந்து இந்த நீக்கப்பட்டது.

தற்போது கொரோனா ஊரடங்கு சூழலைப் பயன்படுத்திக் கொண்டு இந்த தொழிலாளர் நலச் சட்டத் திருத்தத்தை மேற்கொண்டுள்ளது மோடி அரசு. கடந்த வாரத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையில் மோடி அரசு கொண்டு வந்த சட்டங்களை எதிர்த்து இந்தியா முழுவதும் விவசாயிகளின் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், விவசாய சங்கங்களும், தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து கார்ப்பரேட் பாசிச மோடி அரசை வீழ்த்த களமிறங்க வேண்டிய தருணம் இது !

நந்தன்  
செய்தி ஆதாரம் : ஸ்க்ரோல்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க