கட்சித் தலைமை பற்றிய பிரச்சினைகள்
– தோழர் ஸ்டாலின்
முந்தைய பாகம் : 1
பாகம் – 2
ஆ) விசுவாசமும் கூட்டுத் தலைமையும்
புகாரின் நமது கட்சியின் மத்தியக் குழுவின்பால் கொண்டுள்ள மனப்போக்கில் கட்சி உறுப்பினர்களில் மிகவும் “விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராகவும்” ”விசுவாசமாகவும்” இருப்பவர்களில் ஒருவராவார் என்று இங்கு ரைகோவ் நமக்கு உறுதியளித்துள்ளார்.
நான் அதைச் சந்தேகிக்க நினைக்கிறேன். ரைகோவின் சொற்களை நம்ப முடியாது. நமக்குப் பொருண்மைகள் தேவை. ரைகோவால் அந்தப் பொருண்மைகளை வழங்க முடியவில்லை.
எடுத்துக்காட்டாக, டிராட்ஸ்கியர்களுடன் தொடர்புடைய காமனேவ் குழுவுடன் திரைமறைவில் புகாரின் நடத்திய பேச்சுவார்த்தைகள்; ஓர் உட்கட்சிக் குழுக் கூட்டணியை நிறுவுவது குறித்த பேச்சுவார்த்தைகள்; மத்தியக் குழுவின் கொள்கையை மாற்றுவது குறித்த, அரசியல் தலைமைக் குழுவின் உள்ளடக்கத்தை மாற்றுவது குறித்த, தானியக் கொள்முதல் நெருக்கடியை மத்தியக் குழுவைத் தாக்குவதற்குப் பயன்படுத்திக்கொள்வது குறித்த பேச்சுவார்த்தைகள் போன்ற பொருண்மைகளை எடுத்துக்கொள்வோம். எழுகின்ற கேள்வி: தனது மத்தியக் குழுவின்பால் புகாரின் கொண்டுள்ள “விசுவாசமான” ”விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட” அணுகுமுறை எங்கே?
அதற்கு மாறாக, அத்தகைய நடத்தை அவரது மத்தியக்குழுவுக்கு, அவரது கட்சிக்கு, அரசியல் தலைமைக் குழுவின் ஓர் உறுப்பினர் என்ற வகையிலும், எந்த ஒரு விசுவாசத்தையும் மீறிய செயல் ஆகாதா? இது மத்தியக் குழுவுக்கு விசுவாசமாக இருப்பது என்று குறிப்பிடப்பட்டால், ஒருவர் மத்தியக் குழுவுக்குத் துரோகமிழைப்பதற்கு என்ன பெயர் வைப்பது?
படிக்க:
♦ கட்சியிலிருக்கும் வலதுசாரி ‘பிக்பாக்கெட்’டுகளிடம் எச்சரிக்கை தேவை !
♦ கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ !
புகாரின் விசுவாசத்தைப் பற்றியும் நேர்மையைப் பற்றியும் பேச விரும்புகிறார், ஆனால் அவர் அவரது மத்தியக் குழுவுக்கு எதிராக டிராட்ஸ்கியர்களுடன் இரகசியப் பேச்சுவார்த்தை நடத்துகிற போது, மேலும் அதன் மூலம் அவரது மத்தியக் குழுவுக்குத் துரோகமிழைக்கிறபோது, அவரது மத்தியக் குழுவுக்கான விசுவாசத்தின் அடிப்படைத் தேவைகளை மிகவும் நேர்மையற்ற விதத்தில் அவர் மீறிக் கொண்டிருக்கிறாரா இல்லையா என்பதை அவரது மனச்சாட்சியைக் கேட்டு, ஏன் ஆய்வு செய்து பார்க்க முயற்சி செய்யக்கூடாது?
கட்சியின் மத்தியக் குழுவில் கூட்டுத்தலைமை இல்லாமல் இருக்கிறது என்பது பற்றி புகாரின் இங்கு பேசினார். மேலும் மத்தியக் குழுவின் அரசியல் தலைமைக் குழுவின் பெரும்பான்மையால் கூட்டுத் தலைமையின் தேவைகள் மீறப்படுகின்றன என்று நம்மிடம் உறுதியாகக் கூறினார்.
உண்மையில், நமது முழு அமர்வுக் கூட்டம் அனைத்தையும் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. புகாரினின் இந்த வெட்கமற்ற பாசாங்குக் கூற்றைக்கூட அதனால் சகித்துக்கொள்ள முடியும். ஆனால் மத்தியக் குழுவின் பெரும்பான்மைக்கு எதிராக முழு அமர்வுக் கூட்டத்தில் இந்த மாதிரி துணிவுடன் பேசுவதற்கு ஒருவர் வெட்க உணர்வு அனைத்தையும் உதறித் தள்ளியிருக்க வேண்டும்.
உண்மையில், அரசின் தலைமைப் பொறுப்பை வைத்திருக்கிற மத்தியக் குழுவின் பெரும்பான்மை அதன் சக்திகள் அனைத்தையும் அதை முன்னேற்றிச் செல்வதற்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறபோது, இந்தக் கடினமான பணியில் புகாரின் குழுவிடம் ஆதரவுக்கரம் அளிக்குமாறு வலியுறுத்திக்கொண்டிருக்கும்போது, அதேநேரத்தில் புகாரின் குழு மத்தியக் குழுவுக்கு ஆதரவுக் கரம் நீட்டாமல், அதற்கு மாறாக அதன் வழியில் இடையூறாக இருந்து கொண்டு, அதன் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறபோது, விலகுவதாக அச்சுறுத்திக்கொண்டு, நமது கட்சியின் மத்தியக் குழுவுக்கு எதிராக, கட்சியின் எதிரிகளுடன், டிராட்ஸ்கியர்களுடன், உடன்பாட்டுக்கு வருகிறபோது, நாம் கூட்டுத் தலைமையைப் பற்றி எப்படிப் பேசமுடியும்?
உண்மையில், புகாரின் கட்சிக்கு எதிராக டிராட்ஸ்கியர்களுடன் ஒரு கூட்டணியை அமைத்துக்கொண்டிருக்கிறார், அவரது மத்தியக் குழுவுக்குத் துரோகம் இழைத்துக்கொண்டிருக்கிறார், நமது கட்சியின் மத்தியக் குழு கூட்டுத் தலைமையை நடைமுறைப்படுத்துவதற்கு விரும்பவில்லை, விரும்ப மாட்டார் என்பதை பாசாங்குக்காரர்கள் தவிர வேறு யாரால் மறுக்க முடியும்?
புகாரின் மத்தியக் குழுவில் கூட்டுத் தலைமை பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோதிலும், மத்தியக் குழுவின் பெரும்பான்மை மீது அவர் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கிறார், அவரது வஞ்சக நடத்தையை மறைக்கும் நோக்கத்துடன் அவர் அவ்வாறு செய்துகொண்டிருக்கிறார் என்பதை குருடர்களைத் தவிர வேறு யாரால் காணாமல் இருக்க முடியும்?
நமது கட்சியின் மத்தியக் குழு தொடர்பாக விசுவாசம் மற்றும் கூட்டுத் தலைமையின் அடிப்படைத் தேவைகளைப் புகாரின் மீறுவது இது முதல் முறையல்ல என்பதைக் குறித்துக்கொள்ள வேண்டும். வரலாற்றில் இது போன்ற நிகழ்வுகளை நமது கட்சி அறிந்திருக்கிறது. லெனின் வாழ்நாளிலேயே, பிரெஸ்ட் சமாதானக் காலகட்டத்தில், சமாதானம் குறித்த பிரச்சினையில் சிறுபான்மையாக இருந்த புகாரின் நமது கட்சியின் எதிரிகளாக இருந்த இடதுசாரி சோசலிசப் புரட்சியாளர்களிடம் விரைந்து சென்று, அவர்களுடன் திரைமறைவுப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். மேலும் லெனினுக்கும் மத்தியக் குழுவுக்கும் எதிராக அவர்களுடன் ஒரு கூட்டணியை நிறுவுவதற்கு முயற்சி செய்தார். இடதுசாரி சோசலிசப் புரட்சியாளர்களுடன் அந்த நேரத்தில் அவர் என்ன வகையான உடன்பாட்டை எட்டுவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார் என்பது, துரதிர்ஷ்டவசமாக நமக்கு இன்னும் தெரியவில்லை.
ஆனால் இடதுசாரி சோசலிசப் புரட்சியாளர்கள் அந்த நேரத்தில் லெனினை சிறைபிடிக்கவும், ஒரு சோவியத் எதிர்ப்பு ஆட்சிக் கவிழ்ப்புக்கும் திட்டமிட்டுக் கொண்டிருந்தனர் என்பதும் நமக்குத் தெரியவில்லை. ஆனால், இடதுசாரி சோசலிசப் புரட்சியாளர்களிடம் விரைந்து சென்று அவர்களுடன் சேர்ந்து மத்தியக் குழுவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருந்த அதேநேரத்தில் புகாரின் இப்போது அவர் செய்து கொண்டிருப்பதைப் போலவே கூட்டுத் தலைமையின் தேவை பற்றி உரத்துக் குரல் எழுப்புவதைத் தொடர்ந்து வந்தார் என்பதுதான் மிகவும் வியக்கத்தக்க விடயம் ஆகும்.
லெனின் வாழ்நாளிலேயே, நமது கட்சியின் மாஸ்கோ பிராந்தியக் குழுவில் பெரும்பான்மையையும், “இடதுசாரிக்” கம்யூனிஸ்டுக் குழுவின் ஆதரவையும் பெற்றிருந்தார். அவர் கட்சியின் மத்தியக் குழுவின் நம்பிக்கையின்மையைத் தெரிவிக்குமாறும், அதன் முடிவுகளுக்குக் கீழ்ப்படிய மறுக்குமாறும், நமது கட்சியைப் பிளவுபடுத்தும் கேள்விகளை எழுப்புமாறும் கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார் என்பது நமது கட்சியின் வரலாற்றில் நிகழ்ந்ததாகும். பிரெஸ்ட் சமாதானக் காலகட்டத்தின்போதுதான், பிரெஸ்ட் சமாதானத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது அவசியம் என்று மத்தியக் குழு முடிவு செய்திருந்தது.
புகாரினின் விசுவாசம் மற்றும் கூட்டுத் தலைமையின் தன்மை இப்படித்தான் இருக்கிறது.
கூட்டுப் பணியின் தேவை பற்றி இங்கு ரைகோவ் பேசினார். அதேநேரத்தில் அவரும் அவரது நண்பர்களும் கூட்டுப் பணிக்கு ஆதரவாக இருந்ததாகவும், அதற்குமாறாக அரசியல் தலைமைக் குழுவின் பெரும்பான்மை அதற்கு எதிராக இருந்ததாகவும் கூறி, அரசியல் தலைமைக் குழுவின் பெரும்பான்மை மீது குற்றம் சாட்டினார். இருப்பினும் ரைகோவால் அவரது கூற்றுக்கு ஆதரவாக ஒரே ஓர் உண்மைச் செய்தியைக் கூட எடுத்துக்காட்ட இயலவில்லை.
படிக்க :
♦ பு. மா. இ. மு. அமைப்பிலிருந்து த. கணேசன் நீக்கம் | பத்திரிகை செய்தி
♦ சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக கட்சிக் கோட்டையை பலப்படுத்துவோம் !
ரைகோவின் இந்தக் கட்டுக்கதையை அம்பலப்படுத்துவதற்காக, ஒரு சில பொருண்மைகளை நான் இங்கு எடுத்துக்கூறுகிறேன். அவை ரைகோவ் கூட்டுப் பணியை எப்படி மேற்கொள்கிறார் என்பதை உங்களுக்குக் காட்டும்.
முதல் எடுத்துக்காட்டு. அமெரிக்காவுக்கு தங்கம் ஏற்றுமதி செய்தது பற்றிய கதையை நீங்கள் கேட்டிருப்பீர்கள். மக்கள் கமிசார்களின் பேரவை அல்லது மத்தியக் குழுவின் முடிவுப்படி, அல்லது மத்தியக் குழுவின் ஒப்புதலுடன், அல்லது அதற்குத் தெரிந்தவாறு அமெரிக்காவுக்குத் தங்கம் கப்பலில் ஏற்றப்பட்டிருக்கும் என்று உங்களில் பலர் நம்பலாம். ஆனால் அது உண்மையல்ல, தோழர்களே. இந்த விடயத்தில் மத்தியக் குழுவுக்கோ மக்கள் கமிசார்களின் பேரவைக்கோ எந்தத் தொடர்பும் இல்லை. மத்தியக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் தங்கம் ஏற்றுமதி செய்யக் கூடாது என்று ஒரு விதி இருந்தது. அப்படியானால் அந்த ஏற்றுமதிக்கு அனுமதியளித்தது யார்? அந்தத் தங்க ஏற்றுமதி ரைகோவின் உதவியாளர்களில் ஒருவரால், ரைகோவுக்குத் தெரிந்து, அவரது ஒப்புதலுடன் அனுமதி அளிக்கப்பட்டது என்று தெரிய வருகிறது.
இதுதான் கூட்டுப் பணியா?
இரண்டாவது எடுத்துக்காட்டு. இது அமெரிக்காவில் தனியார் வங்கிகளில் ஒன்றுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்புடையதாகும். அந்த வங்கியின் சொத்துகள் அக்டோபர் புரட்சிக்குப் பிறகு நாட்டுடமை ஆக்கப்பட்டது, அது இப்போது அதன் இழப்புகளுக்கு இழப்பீடு கோரிக்கொண்டிருக்கிறது. நமது அரசு வங்கியின் அதிகாரி ஒருவர் அந்த வங்கியுடன் இழப்பீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார் என்று மத்தியக் குழுவுக்குத் தெரிய வந்துள்ளது.

தனியார் கோரிக்கைக்குத் தீர்வு அளிப்பது மிகவும் முக்கியமான பிரச்சினை என்பதும், அது பிரிக்க முடியாதவாறு நமது அயலுறவுக் கொள்கையுடன் தொடர்புடையது என்பதும் உங்களுக்குத் தெரியும். இந்தப் பேச்சுவார்த்தைகள் மக்கள் கமிசார்களின் பேரவை அல்லது மத்தியக் குழுவின் ஒப்புதலுடன் நடத்தப்பட்டன என்று ஒருவர் நினைக்கலாம். இருப்பினும் அப்படி நிகழவில்லை, தோழர்களே. மத்தியக் குழுவுக்கும் மக்கள் கமிசார்களின் பேரவைக்கும் இந்த விடயத்தில் எந்தத் தொடர்பும் இல்லை. அதைத் தொடர்ந்து, இந்தப் பேச்சுவார்த்தைகளைப் பற்றித் தெரிந்து கொண்டு, மத்தியக் குழு அவற்றைத் தடுத்து நிறுத்த முடிவு செய்தது. ஆனால் எழுகின்ற கேள்வி: இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு அனுமதியளித்தது யார்? ரைகோவின் ஒப்புதலுடன் அதற்கு அனுமதியளித்திருந்தது தெரிய வருகிறது.
இதுதான் கூட்டுப் பணியா?
மூன்றாவது எடுத்துக்காட்டு. இது குலாக்குகளுக்கும் நடுத்தர விவசாயிகளுக்கும் வேளாண் இயந்திரங்கள் வழங்குவது தொடர்பானதாகும். ரசிய – சோவியத் சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசின் எகோசோவிற்கு, ரைகோவின் உதவியாளர்களில் ஒருவர் ர.சோ.சோ.கூ.கு. தொடர்பான விடயங்களுக்காகத் தலைமை தாங்கினார். அது நடுத்தர விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் வழங்குவதைக் குறைக்கவும், விவசாய வர்க்கத்தின் உயர் அடுக்கினருக்கு அதாவது குலாக்குகளுக்கு இயந்திரங்கள் வழங்குவதை அதிகரிக்கவும் முடிவு செய்தது. ரசிய – சோவியத் சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசின் எகோசோவின் இந்தக் கட்சி விரோத, சோவியத் ஆட்சி விரோத முடிவின் பிரதி இங்கு தரப்படுகிறது:
“கசாக் மற்றும் பஷ்கிர் சோவியத் சோசலிசக் குடியரசுகள் சைபீரியா மற்றும் கீழ் வால்கா ஆட்சிப்பகுதிகள், நடு வால்கா, யூரல்கள் பிராந்தியங்கள் ஆகியவற்றில், இந்தப் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பண்ணை இயந்திரங்கள் மட்டும் கருவிகளின் விகிதாச்சார விற்பனை விவசாய வர்க்கத்தினரின் உயர் அடுக்கினருக்கு 20 விழுக்காடு அதிகரிக்கப்பட வேண்டும், மேலும் நடுத்தர வர்க்கத்தினருக்கு 30 விழுக்காடு குறைக்கப்பட வேண்டும்.”
இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? கட்சியானது குலாக்குகளுக்கு எதிரான தாக்குதலைத் தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிற நேரத்தில், குலாக்குகளுக்கு எதிராக ஏழை மற்றும் நடுத்தர விவசாய மக்கள் திரளை அமைப்பாக்கிக் கொண்டிருக்கிற நேரத்தில், ர.சோ.சோ.கூ.கு வின் எகோசோ நடுத்தர விவசாயிகளுக்குப் பண்ணை இயந்திரங்கள் வழங்கும் அளவைக் குறைக்கவும், விவசாய வர்க்கத்தினரின் உயர் அடுக்கினருக்கு வழங்கும் அளவினை அதிகரிக்கவும் ஒரு முடிவை மேற்கொள்கிறது.
மேலும் இது ஒரு லெனினிய, கம்யூனிசக் கொள்கை என்று தெரிவிக்கப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, இந்த நிகழ்ச்சி பற்றி மத்தியக் குழு தெரிந்து கொண்ட போது, அது எகோசோவின் முடிவைச் செல்லாததாக அறிவித்தது. ஆனால் இந்த சோவியத் விரோத முடிவுக்கு அனுமதியளித்தது யார்? ரைகோவின் உதவியாளர்களில் ஒருவரால் ரைகோவுக்குத் தெரிந்து அவரது ஒப்புதலுடன் அதற்கு அனுமதியளிக்கப்பட்டது.
இதுதான் கூட்டுப் பணியா?
ரைகோவும் அவரது உதவியாளர்களும் எந்த அளவுக்கு கூட்டுப் பணியை நடைமுறைப் படுத்துகிறார்கள் என்பதற்கு இந்த எடுத்துக்காட்டுகள் போதுமானவை என்று நான் நம்புகிறேன்.
(தொடரும்)
நூல் : ஸ்டாலின் தொகுப்பு நூல் 12
கிடைக்குமிடம் :
அலைகள் வெளியீட்டகம்
5/1 ஏ, இரண்டாவது தெரு, நடேசன் நகர், இராமாபுரம்,
சென்னை – 600 089
தொடர்புக்கு : 98417 75112