உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் ஆதிக்கசாதி கிரிமினல்களால் பாலியல் வன்கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தை சந்திக்கச் சென்ற கேரள பத்திரிகையாளர்களை தேசதுரோக வழக்கில் கைது செய்தது போலீசு. அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்ற காவலை நீட்டித்துள்ளது மதுரா நீதிமன்றம்.
அக்டோபர் மாத தொடக்கத்தில் உத்தர பிரதேச மாநிலம் சென்ற பத்திரிகையாளர் சித்திக் கப்பான் உள்ளிட்ட நால்வரை ஹத்ராஸ் செல்லும் வழியில், ‘அறியக்கூடிய குற்றம் செய்யும் நோக்கத்தோடு’ சென்றதாகக் கூறி ஊபா, ஐடி பிரிவுகளின் கீழ் தேச துரோக வழக்கு பதிவு செய்தது உ.பி. ஆதித்யநாத் அரசாங்கம். அவர்கள் நால்வரும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அனுப்பப்பட்டனர்.
முன்னதாக, கேரள பத்திரிகையாளர் சங்கம், கப்பானை சிறையில் சந்திக்க அனுமதி கோரியிருந்த மனுவை மதுரா நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், பத்திரிகையாளர்களின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
படிக்க :
♦ ஊரடங்கில் மக்களின் துன்பங்களை எழுதிய பத்திரிகையாளர்கள் மீது அரசுகள் வழக்கு !
♦ ஆதித்யநாத் மீதான புகாரை அம்பலப்படுத்திய 3 பத்திரிகையாளர்கள் கைது !
பத்திரிகையாளர் கப்பான் மற்றும் அவருடன் சென்ற அதிகுர் ரஹ்மான், ஆலம் மற்றும் மசூத் ஆகியோர் மீதான தேசத் துரோகம் மற்றும் பயங்கரவாத வழக்கு தொடர்பான விசாரணையை காவல்துறை இன்னும் முடிக்கவில்லை எனக்கூறி நீதிமன்ற காவலை நவம்பர் 2-ம் தேதி வரை நீட்டித்துள்ளது மதுரா நீதிமன்றம்.
10 ஆண்டுகளாக பத்திரிகையாளராக பணியாற்றிவரும் கப்பான், தற்சமயம் அழிமுகம் என்ற செய்தி இணைய தளத்தில் பணியாற்றிவந்தார். ஹத்ராஸ் நிகழ்வு தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற அவரை, வழியிலேயே கைது செய்தது ஆதித்யநாத் அரசாங்கம். கப்பானின் கைது பத்திரிகையாளர்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கிய நிலையில், அவருடைய குடும்பத்தினர் அவர் என்ன குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார் எனத் தெரியாமல் தவிப்பதாக கேரள பத்திரிகையாளர் சங்கம் அவர்களுக்கு உதவ முயற்சித்தது.
ஆனால் நீதிமன்றமோ, பத்திரிகையாளர்களையும் அனுமதிக்கவில்லை, குடும்பத்தினருடன் பேச அனுமதி கோரியதையும் மறுத்திருக்கிறது.

“பத்திரிகையாளர்கள் தங்கள் கடமைகளைச் செய்ததற்காக கைது செய்யப்படுவதும் வழக்கறிஞர்கள் அவர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதும் ஜனநாயகத்துக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் முடிவு கட்டுவதாகும். ஒரு கடும் குற்றவாளிக்குகூட சட்ட சேவைக்கான அணுகலை எவரும் மறுக்க முடியாது” என்கிறார் கேரள பத்திரிகையாளர் சங்கத்தைச் சேர்ந்த மாத்யூஸ்.
“குற்றம்சாட்டப்பட்டவரை அவரது வழக்கறிஞர் சந்திப்பது சட்டத்தின் ஆட்சியின் அடித்தளமாகும். ஆனால், இங்கே அது மறுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அரசியலமைப்பு விழுமியங்களுக்கும் அறத்துக்கும் அது எதிரானது” என்கிறார் அவர்.
செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளருக்கு அடிப்படை உரிமைகளை மறுத்திருக்கும் நீதிமன்றம் அமைந்திருந்திருக்கும் மதுரா நகரில், ஒரு பள்ளிக்கூடத்தை சிறைச்சாலையாக யோகி ஆதித்யநாத் அரசு மாற்றியிருக்கிறது என்பதையும் சேர்த்து அங்குள்ள சூழலைப் பார்க்கவேண்டும். மக்கள் நலனின் கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாத மத – இனவெறி பாசிஸ்டுகளின் ஆட்சியில்தான் பள்ளிகள் சிறைச்சாலைகளாக மாறும்.
தற்சமயம் இந்து ராஷ்டிரத்தின் பரிசோதனைக்கூடமாக மாறியிருக்கும் உத்தர பிரதேசத்தில் சட்டத்தின் ஆட்சி குறித்தோ, அரசியலமைப்பு விழுமியங்கள் குறித்து பேசுவது குரூர நகைச்சுவையாகவே இருக்கும்.
அனிதா
செய்தி ஆதாரம் : தி வயர்