நெல்லை

சிய புரட்சியின் 103-வது ஆண்டு நிறைவையொட்டி நெல்லையில் “ரசிய புரட்சி நாளை உயர்த்தி பிடிப்போம், கார்பரேட்-காவி பாசிசத்தை வீழ்த்த உறுதியேற்போம்” என்ற தலைப்பில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களையும் தோழர்களையும் தோழர் வெங்கட் வரவேற்றுப் பேசினார். தோழர் காளிதாஸ் தலைமையேற்று நிகழ்ச்சியை நடத்தினார். அவரது தலைமை உரையில் “அனைவருக்கும் கல்வி என்பது புமாஇமு-வின் கொள்கை, அதை அடைந்து விட்டோமா? ஏன் அடைய முடியவில்லை. மக்களின் சிந்தனை எந்தப் பாதையில் போகிறது என்பதை முதலில் நாம் கண்டறிய வேண்டும். லெனின் அதை கண்டறிந்தார். மக்களை புரட்சிக்கு தயார்படுத்தினார். நாமும் அந்தப் பாதையில் செல்ல வேண்டும்.

இன்றைய நிகழ்ச்சியின் தலைப்பில் உள்ள “கார்பரேட்-காவி பாசிசத்தை வீழ்த்த உறுதியேற்போம்” என்கிற வாசகம் மிகவும் முக்கியமானது. அதை நெஞசில் நிறுத்துவோம், ரசிய புரட்சி நாளை உயர்த்திப் பிடிப்போம்” என்று நிறைவு செய்தார்.

அடுத்ததாக “புதிய இந்தியா” என்ற தலைப்பில் மாணவர்கள் நடித்த நாடகம் அனைவரையும் ஈர்த்தது. தற்கொலையில் இருந்து காப்பாற்றப்பட்ட விவசாயி அவரது பட்டதாரி மகனை கல்விக் கடனுக்காக இழக்கிறார் என்பதே கதை. நாட்டில் நடக்கும் துயரத்தை நாடகம் வெளிப்படுத்தியது. நாடகத்தில் நடித்த மாணவர்களுக்கு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் அரிராகவனும், சிவராஜபூபதியும் புத்தகங்கள் வழங்கி பாராட்டினார்கள்.

ரசிய புரட்சியை நினைவுகூறும் விதமாக “புரட்சியின் தருணங்கள்” ஒளிச்சித்திரம் ஒளிபரப்பப்பட்டது.

“ரசிய புரட்சி நாளை உயர்த்திப் பிடிப்போம், கார்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்த உறுதியேற்போம்”, என்கிற தலைப்பில் தோழர் அன்பு உரையாற்றினார். அவருடைய உரையில், “ரசியாவில் ஜாரின் நிலபிரபுத்துவ ஆட்சிக்குப் பின் அதை வீழ்த்திய முதலாளித்துவம் சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம் என்ற பசப்பு வார்த்தைகள் பேசி மக்களை ஏமாற்றுகையில், அதை வீழ்த்தி பாட்டாளி வர்க்கத்தை அரியணையில் ஏற்றிய நாள் இந்த நாள். உலகம் முழுவதிலும் பாட்டாளி வர்க்கத்தை ஓரணியில் திரட்ட உத்வேகத்தை கொடுத்த நாள் இந்த நாள். அந்த உணர்வை நாம் பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இருப்பதனால்தான் இந்த கூட்டம்.

மேலும் இன்று நமது நாட்டில் வேலையின்றி தற்கொலைகள், விவசாயிகள் தற்கொலைகள், வறுமையில் தற்கொலைகள், பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள், ஊட்டச்சத்தின்மை போன்றவை கொடூரமாக தாண்டவமாடுகின்றன.  இப்படி எண்ணற்ற மரணங்கள் நிகழ என்ன காரணம்? ஏகாதிபத்திய தாசனான மோடியின் ஆட்சியில் அம்பானியின் சொத்து மதிப்பு கூடி, உலக பணக்காரர்களின் வரிசையில் 3வது இடத்தை அடைய முடிகிறது. ஆனால் அதேசமயம் நகரத்தின் சேரிகளில் எலிப் பொந்துகளைப் போன்ற வீடுகளில் மக்கள் வாழ்கின்றனர். இதைத்தான் வளர்ச்சி என்கிறார்கள்.

இந்த வறுமையின் தோற்றுவாய் எதுவென்றால் முதலாளித்துவத்தின் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கைதான். ஒவ்வோரு நாட்டிலும், அனைத்து துறைகளிலும் தன்னுடைய ஆட்களை வைத்து ஒழுங்குமுறை ஆணையங்களின் மூலமாக ஆட்சி புரிவது முதலாளித்துவக் கும்பல்தானே ஒழிய, நம்மால் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட’ அரசுகளல்ல. உலகின் நுரையீரலான, இலட்சக்கணக்கான பழங்குடிகளின் வாழ்வாதாரமான அமேசான் காடு கார்பரேட்டுகளின் இலாபவெறிக்காக எரிக்கப்படுகிறது. இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன. மோடி போன்ற பாசிஸ்டுகள் கார்பரேட்டுகளுக்காக நாட்டையே அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதனை எதிர்த்து மக்கள் போராடுகிறார்கள். விவசாய மசோதா, தொழிலாளர் மசோதா, சுற்றுச்சூழலை அழிப்பது, இடஒதுக்கீடு மறுப்பு, கொரோனாவில் வேலையிழப்பு இதை மறைக்க வேல் யாத்திரை நடத்துகிறார்கள். நாம் இவர்களை சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்க வேண்டும். உழைக்கும் வர்க்கமாக நாம் ஒன்றிணைய வேண்டும். கார்பரேட்-காவி பாசிசத்தை வேரறுக்க வேண்டும். இதுதான் இன்றைய சூழலில் முதலாளித்துவத்தை வீழ்த்துவதற்கு முன்நிபந்தனையாக இருக்கிறது. இதை நினைவுறுத்துவதே இந்த ரசிய புரட்சி நாளின் நோக்கம் என்று தனது உரையை முடித்தார்.

வந்திருந்த அனைவருக்கும் தோழர் சந்தீப் நன்றி கூறினார். அனைவருக்கும் புரட்சிகர உணர்வினை நெஞ்சிலேந்திய நிகழ்ச்சியாக நிகழ்வு முடிவுற்றது.

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
நெல்லை

மதுரை

ரஷ்யப் புரட்சி நாளின் 103-ம் ஆண்டு விழா, மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகளின் தலைமையில் மதுரையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மக்கள் அதிகாரம் மற்றும் தோழமை அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள், பொதுமக்கள் உள்ளிட்டு சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு ம.க.இ.க மதுரை பகுதி தோழர் ராமலிங்கம் தலைமை தாங்கினார்.

தனது தலைமை உரையில் ஒரு போல்ஷ்விக் கட்சி எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றியும் கட்சிக்குள் ஏற்படும் சந்தர்ப்பவாத, திரிபுவாத போக்கைக் கண்டறிவது குறித்தும் அதனைக் களைவது குறித்தும் விளக்கிப் பேசினார்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல பொறுப்பாளர் தோழர் குருசாமி சிறப்புரையாற்றினார். தனது உரையில், பாசிசம் நெருங்கிவரும் சூழலில் தோழர் லெனின் சுட்டிக்காட்டியபடி மக்களுடனான நமது ஐக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், தோற்றுப் போன இந்தக் கட்டமைப்புக்கு மாற்று சோசலிசமே என்பதை நாம் மக்கள் மத்தியில் விரிவாக எடுத்துச் செல்லவேண்டும். அப்படி இல்லையெனில், தோற்றுப்போன இந்தக் கட்டமைப்புக்கு மாற்றாக பாஜக பாசிசத்தை முன் வைக்க விளையும். ஆகவே, நாம் தெளிவான ஆழமான மார்க்சிய லெனினிய அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் பல தோழர்கள் உட்கட்சிப் போராட்டத்தில் போல்ஷ்விக் கட்சியின் பாத்திரம் குறித்தும், தற்போதைய இணையவழிக் கல்வியால் மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் உரையாற்றினர்.

இறுதியாக நன்றியுரையுடன், உழைக்கும் மக்களின் மாட்டுக்கறி உணவுடன் விழா நிறைவுற்றது.

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்

மதுரை

கோவை

நவம்பர் – 7 ரஷ்ய புரட்சியின் 103 -ம் ஆண்டு விழா, “கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்துவோம்” என்ற முழகத்தை முன்வைத்து கோவையில் ம.க.இ.க. சார்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தோழர் சங்கர் தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மூத்த தோழர் சம்புகன் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கெடுத்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
கோவை
தொடர்புக்கு : 94889 02202

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க