உட்கட்சிப் போராட்டம் || பாகம் – 12

பாகம் – 11

தோழர்களுக்கிடையில் கோட்பாடற்ற தகராறுகளைத் தீர்க்க முயலும்பொழுது, நாம் வெறும் தகராறை பற்றிக் கொண்டு எப்பொழுதுமே ஆரம்பிக்கக் கூடாது; அவர்கள் வேலையை பரிசீலனை செய்து, தொகுத்து, உருப்படியான வழியில் கோட்பாட்டின் அடிப்படையில் எதிர்காலப் பாதை, வேலைக்கான திட்டம், பின்பற்ற வேண்டிய அரசியல் கொள்கை, திட்டங்கள் முதலியனவற்றை வகுத்து வைக்க வேண்டும். அவர்கள் செய்த வேலையைப் பற்றி தொகுத்துக் கூறும் பொழுதும், எதிர்காலப் பாதை, வேலைக்கான திட்டம், பின்பற்ற வேண்டிய கொள்கை, திட்டங்கள் முதலியனவற்றை வகுத்து வைக்கும் பொழுது, சில தோழர்களின் தவறான கருத்துக்களை நாம் விமர்சனம் செய்யலாம்; அதன் பிறகு இன்னும் அவர்கள் மாறுபட்ட கருத்துக்கள் கொண்டிருக்கிறார்களா என்று அவர்களைக் கேட்க வேண்டும். அவர்களுக்கு அபிப்பிராய பேதமிருக்குமானால் பின் அது கோட்பாடு சமபந்தமான தகராறு ஆகும்.

இவ்வாறு கோட்பாடற்ற தகராறு, கோட்பாடுள்ள தகராறின் மட்டத்திற்கு உயர்த்தப்படும். அவர்களுக்கு கோட்பாடு சம்பந்தமாக தகராறு இல்லையென்றால் பின் அவர்கள் செய்த வேலை பற்றி தொகுத்துக் கூறியது, இந்த எதிர்காலப் பாதை, வேலைக்கான திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒன்று திரண்டு, எதிர்காலப் பாதையையும் திட்டங்களையும் நிறைவேற்றுவதற்கு ஒன்று கூடி போராடும்படியும், எல்லாவிதமான கோட்பாடற்ற தகராறுகளையும் கைவிடும்படியும் கேட்டுக் கொள்ளப்படுவார்கள். கடந்தகால வேலையை தொகுப்பது, இன்றைய லட்சியங்களை வரையறுப்பது, நிகழ்கால வேலையை முன்னேற்றிக் கொண்டு செல்வது ஆகியவை மூலம்தான் கோட்பாடற்ற தகராறுகள் தீர்க்கப்பட வேண்டும். இதுவன்றி வேறு வழிகளில் கோட்பாடற்ற தகராறுகளை தீர்க்க இயலாது.

கோட்பாடற்ற தகராறைத் தீர்ப்பதற்கு நீதிபதி பாத்திரத்தை என்றுமே எடுத்துக் கொள்ளக்கூடாது; ஏனெனில் அதற்கு தீர்ப்போ, முடிவோ சாத்தியமில்லை; தீர்ப்பு பொருத்தமற்றதானால் தகராறில் சம்பந்தப்பட்ட இருசாராரும் அதிருப்தி கொள்வார்கள்; தகராறு தொடரும்.

ஒரு தோழரை மற்றொரு தோழர் முழுக்க நம்புவதில்லை, அல்லது இன்னும் சந்தேகிக்கிறார் எனபன போன்ற விசயங்கள் விவாதத்திற்குக் கொண்டுவரக் கூடாது; ஏனெனில் அம்மாதிரி பிரச்சினைகள் மீது நடத்தப்படும் விவாதம் எவ்வித பலனும் அளிக்காது. இம்மாதிரி விசயங்களைத் தீர்ப்பதோ அல்லது ஒரு குறிப்பிட்ட தோழர் நம்பத் தகுதியானவர் என்று நிரூபிப்பதோ அல்லது மீதிருக்கும் ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்வதோ, அவருடைய வேலையில், போராட்டத்தில், நடைமுறையில்தான் செய்ய முடியும்.

கோட்பாடுள்ள போராட்டங்களில், கோட்பாடற்ற அம்சங்களை தோழர்கள் புகுத்தினால், கோட்பாடுள்ள பிரச்சினையை விவாதிப்பதைத்தான் வலியுறுத்த வேண்டும்; கோட்பாடற்ற அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடாது; இல்லாவிடில் கோட்பாடுள்ள பிரச்சினை பின்னணிக்குத் தள்ளப்பட்டுப் போகும்.

கோட்பாடுள்ள போராட்டம் என்ற திரைக்குப் பின்னால் ஒரு தோழர் கோட்பாடற்ற போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தால், நாம் அவர் சில விசயங்களில் கோட்பாட்டின்படி சரியென்பதை சுட்டிக்காட்ட வேண்டும்; அவர் உபயோகப்படுத்துகிறார் என்பதற்காக அத்தகைய கோட்பாடுகளை மறுக்கக் கூடாது. ஆனால் அவருடைய நிலையும், முறைகளும் தவறானவை என்பதை தக்க முறையில் சுட்டிக்காட்ட வேண்டும். இவ்வாறாக கோட்பாடுள்ள போராட்டம், கோட்பாடற்ற போராட்டமாக மாற்றப்படுவதைத் தடுக்க வேண்டும்.

மொத்தத்தில் உட்கட்சிப் போராட்டம் அடிப்படையில் சித்தாந்தம், கோட்பாடு சம்பந்தப்பட்ட போராட்ட, வாக்குவாத வடிவமாகும். கட்சிக்குள் எல்லாம் பகுத்தறிவுக்கு உட்பட்டிருக்க வேண்டும்; எல்லா விசயங்களும் பகுத்தாராயப்பட வேண்டும்; ஏதொன்றுக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும்; இல்லையெனில் அது பிரயோஜனப்படாது. ஒரு விசயத்தை பகுத்தாராய்ந்துவிட்டோமானால் எதையும் கஷ்டமின்றி செய்துவிடலாம்.

கட்சிக்குள் பகுத்தறிவுக்குக் கட்டுப்படும் பழக்கத்தை வளர்க்க வேண்டும். இந்தக் காரணம் சரியானதா அல்லது அந்தக் காரணம் சரியானதா என்று நிர்ணயிக்கும் அளவுகோல், கட்சியின் நலனும் தொழிலாளி வர்க்கப் போராட்ட நலனுமாகும்; பகுதி நலனை முழுமைக்கு உட்படுத்துவதும், உடனடி நலன்களை நீண்டகால நலன்களுக்கு உட்படுத்துவதுமாகும். கட்சியின் நலனுக்கு, தொழிலாளி வர்க்க போராட்ட நலனுக்கு, கட்சி முழுமையின் நீண்டகால நலனுக்கு, தொழிலாளி வர்க்கப் போராட்ட முழுமையின் நீண்டகால நலனுக்கு, அனுகூலமானால் அக்காரணங்களும் கண்ணோட்டங்களும் சரியானவை; இல்லையெனில் அவை சரியானவையல்ல.

பகுத்தறிவுக்கு உட்படாத எந்தப் போராட்டமும் காரணமற்ற எந்தப் போராட்டமும், கோட்பாடற்ற போராட்டமாகும். பகுத்தறிவுக்கு உட்படாத எதுவும், பகுத்தாராய முடியாத எதுவும் தவறாகத்தானிருக்க வேண்டும். அம்மாதிரியான விசயங்களில் சரியான முடிவுக்கு வரமுடியாது; அதற்கு முடிவான தீர்வு காண முடியாது. பகுத்தாராய்ந்து விட்டபிறகும் இன்னும் நாம் ஒருமைப்பாடு ஏற்படுத்த முடியவில்லையென்றால், கட்சியின் நலனையும் தொழிலாளி வர்க்கப் போராட்ட நலனையும் மீறுவது யார் என்பது தெளிவாகும். அப்பொழுது திருந்தாமல், தவறுகளைத் தொடர்ந்து செய்து வரும் தோழர்கள் விசயத்தில் அமைப்பு முடிவு எடுப்பதென்பது அவசியமாகும்; விவாதத்திற்குள்ளான விசயம் கஷ்டமின்றித் தீர்க்கப்படும்.

விசயங்களைப் பகுத்தாராய ஏதுவாக இருப்பதற்கு உட்கட்சி ஜனநாயகமும், பிரச்சினைகளின் சிக்கலைத் தீர்க்க சாந்தமான விருப்பு, வெறுப்பு இல்லாத விவாதமும் அத்தியாவசியமாகிறது. அடக்கத்துடன் கற்றறிவதும், தோழர்களின் தத்துவப் பயிற்சியை அதிகப்படுத்துவதும், நிலைமையைப் பற்றி தெளிவான போதம் பெறுவதும், சம்பந்தப்பட்ட விசயத்தை துருவித் துருவி ஆராய்வதும், பிரச்சினைகளை வெகு கவனமாக பரிசீலிப்பதும் மிகமிக அவசியம். கவனக் குறைவாகவும், தன் மனப்போக்குடனும், கிளிப்பிள்ளை போன்றும் , நடைமுறையோடு சம்பந்தப்படாமலும் விசயத்தை பரிபூரணமாக ஆராயாமலும், நாம் விசயங்களை என்றுமே பகுத்தாராய முடியாது.

பகுத்தறிவுக்கு நாம் உடன்படவில்லையென்றால் அல்லது விசயங்களை பகுத்தாரயத் தவறினால் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாறாக நாம் பலவந்தம், தந்திரங்கள், கட்சி அளிக்கும் அதிகாரம், ஏன் மோசடியைக் கூட கையாள வேண்டி வரும். அந்த விசயத்தில் உட்கட்சி ஜனநாயகம் இனி அவசியமில்லாது போய்விடும். ஏனெனில் உட்கட்சி ஜனநாயகத்திற்கு நாம் கூடி நடவடிக்கை எடுப்பதற்கு விசயங்களை பகுத்தாராய வேண்டும்.

இங்கு நான் “பகுத்தாராய்தல்” என்று கூறுவதற்கு பொருள் என்ன என்றால், தோற்றத்திற்கு உண்மையான பகுத்தாராய்தல் போன்று காணப்படுகின்ற, வெற்று விசயங்களை அல்ல; நடைமுறையில் பரிசோதிக்கப்பட்ட உண்மையான விசயங்கள், யதார்த்த உண்மைகள் என்பதே ஆகும். சில அறிவாளிகள் வீண் பேச்சுகளிலும் தவறான வாதங்களில் ஈடுபடுவதிலும் பழக்கப்பட்டுள்ளனர். விசயங்களை ஆதாரமாகக் கொள்ளாமல் அவர்களுக்கு நிறைய பேசமுடியும். இந்த பூலோகத்திலுள்ள எந்த விசயத்தைப் பற்றியும், அவர்களுக்குப் பேசமுடியும். அவர்களுடைய பேச்சு வெற்றுப் பேச்சு, கட்சியின் வறட்டுக் கோஷங்கள்; அதனால் எந்தவித பயனும் கிடையாது; கட்சிக்கும் புரட்சிக்கும் தீங்கு விளைவிக்க கூடியது. ஆதலின் பகுத்தறிவுக்கு உடன்பட்டு நடக்கும் நடைமுறையை வளர்ப்பதற்கு வெற்றுப் பேச்சு, வறட்டு கட்சி கோஷங்கள் முதலியவற்றை எதிர்ப்பதும், யதார்த்தத்திலிருந்து எழுகின்ற யதார்த்தமான பௌதீகப் பகுத்தறிவை ஆதரிப்பதும் அவசியமாகிறது. அதாவது “நமது தத்துவங்கள் பௌதீகவாதத்தின் அடிப்படையில் அமைந்தவை.”

எல்லாம் பகுத்தறிவுக்கு உடன்பாடுள்ளதாக இருக்க வேண்டும்; இல்லையெனில் உதவாது! தவறாக ஆராய்ந்தாலும் பயன்படாது! வெற்றுப் பேச்சில் காலங்கழித்தோமானால் அது இதைக்காட்டிலும் விரும்பத்தகாது. இது கொஞ்சம் கடினமான வேலை என்பது என்னமோ உண்மைதான். ஆனால் இந்த வழியாகத்தான் நாம் போல்ஷ்விக்குகள் என்ற தகுதியை பெறுகிறோம்.

போல்ஷ்விக்குகள் பகுத்தறிவுக்கு உடன்பாடுடையவர்கள்; உண்மையை ஆதரிப்பவர்கள்; பகுத்தறிவை தெளிவாக புரிந்து கொண்டிருக்கும் ஒருவித மனிதர்கள் இவர்கள்; பகுத்தறிவிற்கு இணங்க உண்மையான சிரத்தையுடன் மற்றவர்களுடன் பழகுகின்றனர். அவர்கள் பகுத்தறிவற்ற நியாயமற்ற போராட்ட ஸ்பெஷலிஸ்டுகள் அல்ல!

தோழர்களே! உட்கட்சிப் போராட்டங்களை எப்படி நடத்துவது என்பதற்கு நான் யோசனை கூறும் சில முறைகள் இவை.

உட்கட்சிப் போராட்டங்களை நடத்துவதற்கும், கட்சிக்குள் தவறான போக்குகளை எதிர்ப்பதற்கும், ஒவ்வொரு கட்சி அங்கத்தினரின் குறிப்பாக ஊழியர்களின், கட்சி உணர்வை பரிசீலிப்பதற்கும் இந்த முறைகளை தோழர்கள் அமல்நடத்த வேண்டும்; அப்பொழுதுதான் கட்சி மேலும் சித்தாந்த ரீதியாகவும், அமைப்புரீதியாகவும் உறுதிப்படும் என்று நான் அபிப்பிராயப் படுகிறேன். இதுவே நமது லட்சியம்.

(தொடரும்)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க