புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2020
தலையங்கம்

டப்பு நிதியாண்டின் (2020−21) முதல் இரண்டு காலாண்டுகளில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி சுழியத்திற்குக் கீழாக வீழ்ச்சியடைந்திருப்பதையடுத்து, நாடு பொருளாதார மந்த நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்ற எச்சரிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது.

இதற்குச் சற்று முன்னர்தான், உலகப் பட்டினிக் குறியீடு தரவரிசைப் பட்டியலில் இந்தியா, தனது அண்டை நாடுகளைவிடப் பின்தங்கி, 94−ம் இடத்தில் இருக்கும் அறிக்கை வெளியானது. இவற்றுக்கு இணையாகவே வேலையிழப்பு, வேலையில்லா பட்டாளத்தின் எண்ணிக்கை அதிகரிப்பு, ஊதிய வெட்டு, அத்தியாவசிய உணவுப் பொருட்களில் விலை உயர்வு எனப் பொருளாதாரமும் மக்களின் வாழ்நிலையும் அபாயத்தில் இருப்பதைக் காட்டும் அம்சங்கள் யாவும் முதலாளித்துவப் பத்திரிகைகளில் பேசு பொருளாக இருந்து வருகின்றன.

படிக்க :
♦ 101 இராணுவத் தளவாடங்கள் இறக்குமதி ரத்து : ஆத்மநிர்பாரா ? கார்ப்பரேட் நிர்பாரா ?
♦ கார்ப்பரேட்டுகளின் பலிபீடத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு !

இவற்றையெல்லாம் நிவர்த்தி செய்யும் அருமருந்தைப் போல சுயசார்பு இந்தியா திட்டத்தின் (ஆத்ம நிர்பர் பாரத்) மூன்றாவது தவணை குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது, மோடி அரசு. இத்தவணையில் அறிவிக்கப்பட்ட 2.65 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான பொருளாதார திட்டங்களையும் சேர்த்து, மூன்று தவணைகளிலும் 30 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு (நாட்டின் மொத்த உற்பத்தியில் 15 சதவீதம் அளவிற்கு) சிறப்புப் பொருளாதாரத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், இத்திட்டங்களின் விளைவாக, கரோனா பொதுமுடக்கத்திற்குப் பிறகு இந்தியப் பொருளாதாரம் வலுவான வளர்ச்சியைக் கண்டுவருவதாகவும் கூறியிருக்கிறார், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இச்சிறப்புப் பொருளாதாரத் திட்டங்களாலும் அதனால் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படும் வலுவான வளர்ச்சியாலும் இந்திய மக்கள் கை மேல் கண்ட பலன் என்ன? தொழிலாளர் சேமநல நிதித் திட்டத்திலிருந்து சமீபத்தில் 30,800 நிறுவனங்கள் வெளியேறிவிட்டதால், ஏறத்தாழ 18 இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்திருக்கக்கூடும் என்றொரு மோசமான செய்தி வெளியாகியுள்ளது. இப்புள்ளிவிவரம்தான் இந்திய உழைக்கும் மக்கள் எதிர்கொண்டுவரும் துயரத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம்.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இரண்டு தவணைத் திட்டங்களாலும் அடித்தட்டு மக்களுக்குப் புழுத்துப்போன ரேஷன் அரிசியும், கோதுமையும் கிடைத்ததைத் தாண்டி வேறெதுவும் கிடைக்கவில்லை என்ற நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த மூன்றாவது தவணையில் பலனடையப் போகிறவர்கள் யார்?

எலெக்ட்ரானிக்ஸ், மருந்து, கைபேசி உள்ளிட்ட பத்து துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு அவற்றின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக அடுத்த ஐந்தாண்டுகளில் 1.45 இலட்சம் கோடி ரூபாய் ஊக்கத்தொகை மானியம்; ரியல் எஸ்டேட் துறையை மீட்பதற்காக 2 கோடி ரூபாய் வரையிலான மதிப்புகொண்ட வீடுகள் விற்பனையின்போது 20 சதவீதம் வரை வருமான வரி விலக்கு; சிமெண்ட், இரும்பு உள்ளிட்ட கட்டுமான  நிறுவனங்களின் விற்பனையை ஊக்குவிக்க பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 18 இலட்சம் வீடுகளைக் கட்ட 18,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு;

உர மானியம் என்ற பெயரில் உர நிறுவனங்களின் கஜானாவை நிரப்ப 65,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு; சர்க்கரை ஆலை அதிபர்கள் கரும்பு விவசாயிகளுக்குத் தர வேண்டிய நிலுவையைப் பற்றிக் கவலைப்படாமல், அவ்வாலைகளின் ஏற்றுமதியை ஊக்குவிக்க 5,900 கோடி ரூபாய் ஒதுக்கீடு என நீளுகிறது இந்தப் பட்டியல்.

இந்தச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொண்டு தொழில் நிறுவனங்கள் புதிய முதலீடுகளைச் செய்து உற்பத்தியை அதிகரிக்குமாம்; உற்பத்தியை அதிகரிப்பதற்காகப் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுமாம்; வேலைவாய்ப்பு அதிகரிக்கும்போது மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து இந்தியப் பொருளாதாரம் மீட்சிப் பாதையில் நடைபோட ஆரம்பிக்குமாம். கொக்கு தலையில் வெண்ணையை வைத்துப் பிடிக்க முயற்சிப்பதற்கும் இதற்கும் ஏதேனும் வேறுபாடு உண்டா? பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதே, “அரசாங்கம் அளிக்கும் சலுகைகளை கார்ப்பரேட் முதலாளிகள் மக்களுக்குத் திருப்பி அளிப்பதில்லை” எனக் கூறியதை நினைவில் கொண்டால், மோடி அரசு அளித்திருக்கும் சலுகைகளின் விளைவு என்னவாக இருக்கும் என்பதை நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியமேயில்லை.

பொருளாதார மந்தத்தாலும், கரோனா ஊரடங்கு முடக்கத்தாலும் மக்கள் எதிர்கொண்டு வரும் துயரங்களைத் துடைப்பதைவிட, கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் இலாபங்கள் சரியக்கூடாது என்பதில்தான் மோடி அரசு கண்ணும் கருத்துமாக இருக்கிறது. அதனால் அவர்களுக்குச் சலுகைக்கு மேல் சலுகையாக வாரி வழங்கும் இச்சிறப்புப் பொருளாதாரத் திட்டங்களை ஆத்ம நிர்பர் (சுயசார்பு) என அழைப்பதைவிட, கார்ப்பரேட் நிர்பர் என அழைப்பதே பொருத்தமானதாக இருக்கும்.

புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2020 இதழ் தரவிறக்கம் செய்ய : இங்கே அழுத்தவும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க